உள்ளடக்கத்துக்குச் செல்

பனியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலேட்ச் பனியாறு, சுவிட்சர்லாந்து
கிறீன்லாந்தின் கேப் யார்க்கில், பனிமலைகள் பனியாறுகளாகின்றன.
வடக்கு பாக்கிஸ்தானில் உள்ள பல்டோரோ பனியாறு. 62 கிலோமீட்டர்கள் (39 mi) நீளமுள்ள இது உலகில் உள்ள மிக நீளமான பனியாறுகளில் ஒன்று.
அர்ஜென்டினாவில் பெரிட்டோ மோரேனோ பனிப்பாறை
பெரு நாட்டில் உள்ள குயெல்க்கய பனியாற்று பகுதி, உலகில் உள்ள மிகப்பெரிய பனியாறு ஓடும் பகுதிகளில் ஒன்று

பனியாறு (Glacier) என்பது மிக மிக மெதுவாக ஓடும் (நகரும்) பனியினாலான ஆறு ஆகும். இதனைப் பனிப் பையாறு என்றும் கூறலாம் (பைய = மெதுவாக). இறுகிய பனிப்படைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் இப் பனியாறுகள் உருவாகின்றன. புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர் இருப்பு பனியாறுகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர் அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர் பனியாறுகளாகவே உள்ளன. துருவப் பகுதிகளில் பெருமளவு பரப்பு பனியாறுகளால் மூடப்பட்டிருக்க, வெப்பவலயப் பகுதிகளிலோ இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. புவிக்கு வெளியே செவ்வாய்க் கோளில் பனியாறுகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. பனியாறுகள் நிலப்பரப்பில் மட்டுமே உருவாகும். இது கடலிலும் ஏரிகளிலும் உருவாகும் மெல்லிய பனியிலிருந்து நன்கு வேறுபடும்.

99% ஆன பனியாறுகள் துருவப் பகுதிகளிலுள்ள பனிவிரிப்புகளில் காணப்படுகின்றது. மற்றவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலை குன்றுகளிலும் உயர் தீவுகளிலும் உள்ளன. புவியில் காணப்படும் நன்னீர் மூலங்களில் மிகப் பெரியதும் இந்த பனியாறுகளே. உலகத்தில் இருக்கும் மக்கள்தொகையின் ஒன்றில் மூன்று மடங்கு மக்களுக்கான நன்னீர்த் தேவை இந்த பனியாறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது[1]. தாவரங்கள், விலங்குகள் மனிதரின் நனீர்த் தேவையை ஈடுசெய்ய முக்கியமாக இந்த பனியாறுகள் பயன்படுகின்றன. பெரும்பாலான பனியாறுகள் குளிர் காலங்களில் நீரை சேமித்து கொண்டு கோடை காலங்களில் உருகி நீரை கொடுக்கும்.

பனியாறுகள் நீண்டகால காலநிலை மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாவதனால், இந்தப் பனியாறுகளில் ஏற்படும் மாற்றமானது காலநிலை மாற்றங்களையும், கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தையும் மிக இலகுவாக காட்டும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது.

உருவாக்கம்

[தொகு]

ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி பொழிவின் வேகம் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருப்பின் அங்கு பனியாறு உருவாகிறது. இன்னும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவே முக்கியமானதாகும். புவிஈர்ப்பின் காரணமாக ஒரிடத்தில் விழும் பனி அழுத்தம் அடைந்து பனியாறு உருவாகிறது. இந்த அழுத்தம் மற்றும் மேலும் விழும் பனியின் எடையால் பனி தகடுகளுக்கு இடையே உள்ள காற்று வெளியேற்றப்பட்டு பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது. இந்த செய்கை தொடர்ந்து நடைபெறும். மிதவெப்ப நிலங்களில் உருவாகும் பனியாறுகள், விறைத்தலும் உருகுதலுமாக மாற்றங்களுக்கு உள்ளாவதால் குருணை போன்ற நிலையை அடையும். பின்பு இவை அழுத்தத்திற்கு உள்ளாகி பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது.

வகைகள்

[தொகு]
அர்ஜென்டீனாவில் உள்ள பனியாறு குகை

புறத்தோற்றம், வெப்ப இயல்பு, ஆகியவற்றை கொண்டு பனியாறுகளை தரம் பிரிக்கலாம்.

  • மலை பனியாறு

இவை மலைகளின் உச்சிகளிலும் சரிவுகளிலும் உருவாகும்.

  • பள்ளத்தாக்கு பனியாறு

ஒரு பள்ளத்தாக்கை நிரப்பும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படும்.

  • பனிக்கவிகை

ஒரு மலைதொடரையோ எரிமலையையோ மூடியிருக்கும் பனியாறு பனிக்கவிகை அல்லது பனிதுறை எனப்படும். இவற்றின் பரப்பளவு 50,000 சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும்.

  • பனி படலம்

50,000 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்டவற்றை பனி படலம் என அழைக்கிரோம். அடியில் உள்ள இட விவரத்தை மறைத்து கொள்ளும் அளவுக்கு இவற்றின் ஆழம் பல கிலோமீட்டருக்கு இருக்கும். தற்காலத்தில் இரண்டு பனி படலங்கள் மட்டுமே உள்ளன. இவை அண்ட்டார்ட்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதியின் மீது உள்ளன. மிக தாராளமான நன்னீர் மூலமாக இவை விலங்குகின்றன. இந்த பனி படலத்தை உருக்கினால் உலக அளவில் கடல் மட்டம் 70 மீட்டர் உயரும்.[2]

  • பனி புகலிடம்

கடற்பகுதிக்குள் நீண்டுருக்கும் படலத்தை பனி புகலிடம் என்போம். இவை மெலிதாகவும் குறைந்த வேகத்துடனும் இருக்கும்.

  • பனி நீரோடை

குறுகிய, வேகமாக நகரும் பனி படலத்தை பனி நீரோடை என்போம். அண்ட்டார்ட்டிக்காவில் பல பனி நீரோடைகள் பனி புகலிடத்தில் முடிவடைந்திருக்கின்றன. ஒரு சில பனி நீரோடைகள் கடலில் முடிவடைவதும் உண்டு. இப்படி கடலில் முடிவடையும் பனியாறுகளில் உள்ள பனிகட்டியானது கடலை நெருங்கியதும் உடைந்து பனிப்பாறைகள் உருவாகிறது.

  • மிதவெப்ப நில பனியாறு

இவை மிதா வெப்ப நிலங்களில் உள்ள உயர்ந்த மலைகளில் இருக்கும். இவை ஆண்டு முழுவதும் உருகி கொண்டே இருக்கும்.

கட்டமைப்பு

[தொகு]

பனியாறுகள் பனியாற்று முகப்பில் தோன்றி பனியாற்று கழிமுகத்தில் முடியும். பனியாறுகள் பனி அமைப்பு மற்றும் உருகும் நிலையை பொறுத்து மண்டலங்களாக பகுக்கப்பட்டுள்ளன.

  • பனிப்பாறை நிகர இழப்பு உள்ள பகுதி நீக்க மண்டலம் எனப்படுகிறது.
  • சமநிலை வரி நீக்க மண்டலம் மற்றும் குவிப்பு மண்டலத்தை பிரிக்கிறது; இங்கே பனி அளவு நீக்கமும், பனி அளவு சேர்க்கை/குவியலும் சமமாக உள்ளது.
  • பனி குவிப்பு நீக்கத்தை விட மிகுதியாய் உள்ள மேல் பகுதி, குவிப்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு பனியாற்றில் குவிப்பு மண்டலம் மிகுதியான பரப்பை கொண்டிருக்கும். இது 60 முதல் 70 % பரப்பை கொண்டிருக்கும். பனி குவிப்பு மண்டலம் உருகும் நிலையை பொறுத்து மேலும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

  • வறண்ட பனிப்பகுதி - இங்கு வெயில் காலத்தில் கூட பனி உருக்குவதே இல்லை.
  • ஊடுருவல் பகுதி - இங்கு குறைந்த அளவில் பனி உருகி கீழுள்ள பனிக்குள் புகுந்து செல்லும்.
  • சமநிலை வரிக்கு அருகில் சில பனிகள் உருகி பின்பு உறையும். இது ஒது தொடர்ச்சியான பனிப்பாறையாக உருவெடுக்கும்.
  • ஈரமான பனி மண்டலம் முந்தைய கோடை முடிந்த காலத்தில் இருந்து சேகரமாகின்றன பனி அனைத்தூம் 0 பாகை செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்தபட்ட பனியாறு ஆகும்.
பனியாற்றை தாண்டுதல்.

நில பண்பியல்

[தொகு]

பனிப்பாறைகள் இரண்டு முக்கிய செயல்முறைகள் மூலம் நிலப்பரப்பை அரிக்கிறது: சிராய்ப்பு மற்றும் பறித்தல். பாறைப்படுக்கையின் மீது பனிப்பாறைகள் ஓடும் பொழுது, அது மென்மயாகி பெயர்தெடுக்கப்படுகிறது. இப்படி பெயர்க்கப்பட்ட பாறைகள் பனியாற்றில் உறிஞ்சப்பட்டு அரிப்புக்குள்ளாகிறது. இந்த பனிப்பாறை மேலும் மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் போல் பணியாற்றி நிலப்பரப்பை அரிக்கிறது.

நகர்தல்

[தொகு]

புவியீர்ப்பு விசை மற்றும் பனிக்கட்டியின் உட்புற சிதைவினால் பனியாறுகள் கீழ் நோக்கி நகர்கின்றன. பனிக்கட்டியானது அதன் அடர்த்தி 50 மீட்டரை தாண்டும் வரை சுலபமாய் முறியத்தக்க திண்மமாய் செயல்படும். இதனால் 50 மீட்டருக்கு கீழே உள்ள பனிக்கட்டி அழுத்தம் காரணமாக நகரும். அடிபாக நழுவு விளைவின் காரணமாகவும் பனியாறுகள் நகரும். பனியாற்றின் அடிபகுதி உராய்வினால் உருகி விட மேல் பகுதி பனிகட்டி எளிதில் சறுக்கி சென்று விடுகிறது.

வேகம்

[தொகு]

பனியாற்றின் நகர்தல் வேகமானது உராய்வினால் நிர்ணயிக்கப்படுகிறது. உராய்வின் காரணமாக பனியாற்றின் அடிப்பகுதி மெதுவாகவும் மேல் பகுதி விரைவாகவும் நகரும். பள்ளத்தாக்கு பனியாற்றில் உராய்வின் காரணமாக பனியாற்றின் ஓரப்பகுதி மெதுவாகவும் நடுப்பகுதி விரைவாகவும் நகரும்.

சராசரி வேகமானது பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது. கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஒரே நாளில் 20 முதல் 30 மீட்டர் வரை நகரும் பனியாறுகளும் உண்டு. அப்பகுதியின் சரிவு, பனிக்கட்டியின் தடிமன், பனிப்பொழிவின் வேகம், வெப்பநிலை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது

செவ்வாய்க் கோளில் பனியாறுகள்

[தொகு]
செவ்வாய்க் கோளின் வட துருவம்

செவ்வாyin துருவ பகுதிகளில் பனிக்கவிகை காணப்படுவது பனியாறுகளுக்கான் சான்றாகும். கணினி மாதிரிகள் இது போன்ற ஏராளமான பனியாறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. 35° மற்றும் 65° வடக்கே அல்லது தெற்கே செவ்வாய்க் கோள் பனியாறுகள் வளிமண்டலத்தினால் பாதிக்கபட்டுள்ளது. புவியை போலவே பல பனியாறுகள் பாறைகளால் மூடப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Molly Elizabeth; Ouyang, Hua; Habib, Shahid; Shrestha, Basanta; Shrestha, Mandira; Panday, Prajjwal; Tzortziou, Maria; Policelli, Frederick; Artan, Guleid; Giriraj, Amarnath; Bajracharya, Sagar R.; Racoviteanu, Adina. "HIMALA: Climate Impacts on Glaciers, Snow, and Hydrology in the Himalayan Region". Mountain Research and Development. International Mountain Society. பார்க்கப்பட்ட நாள் 16 September 2011.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. "Sea Level and Climate". USGS FS 002-00. USGS. 2000-01-31. பார்க்கப்பட்ட நாள் 2009-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனியாறு&oldid=2929581" இலிருந்து மீள்விக்கப்பட்டது