உள்ளடக்கத்துக்குச் செல்

மாரிகாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மழைக்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மழை

மாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது.[1]. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், தகுதிச் சொல்வழக்கின்படி, இக்காலத்தை பசுமைக்காலம் என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக மரம், செடி, கொடிகள், மற்றும் பயிர்கள் பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் பருவப் பெயர்ச்சிக் காற்று மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.

இலங்கையில் மாரிகாலம்

[தொகு]

இலங்கையில் இந்தியப் பெருங்கடல், மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது.[2]. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.[3].

மே நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட்[4] -செப்டம்பர்[3][5] -ஒக்டோபர்[2][6] வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், தென்மேற்குப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வறண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் கச்சான் காற்று என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை.

பொதுவாக அக்டோபர், நவம்பர் இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது.[2][3]. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் சூறாவளிக் காற்று, தீவின் தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.

அக்டோபர்[5] -நவம்பர்[4] -டிசம்பரில்[2][3][6] இருந்து பெப்ரவரி[3][4][5][6] -மார்ச்[2] வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.

மீண்டும் மார்ச்[2][3] இலிருந்து ஏப்ரல்[3][6] -மே[2] நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.

இந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய உணவுக்கான நெல் பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்.[7]. இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில மாவட்டங்களில் இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் பயிர் விளைச்சலைப் பெற முடிகின்றது[7]

இந்தியாவில் மாரிகாலம்

[தொகு]

தென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும்.


  1. Glossary of Meteorology (2009). Rainy season. பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம் American Meteorological Society. Retrieved on 2008-12-27.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 [1]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 [2][தொடர்பிழந்த இணைப்பு] Jayawardene,H.K.W.I., Sonnadara,D.U.J., Jayewardene.D.R. (2005). "Trends of Rainfall in Sri Lanka over the Last Century". Sri Lankan Journal of Physics, (Department of Physics, University of Colombo, Sri Lanka: Institute of Physics - Sri Lanka) 6: 7-17. 
  4. 4.0 4.1 4.2 [3]
  5. 5.0 5.1 5.2 [4][தொடர்பிழந்த இணைப்பு] Suppiah,R. and Yoshino.M.M. (1984). "Rainfall Variations of Sri Lanka Part 1: Spatial and Temporal Patterns". For Meteorology, Geophysics, and Bioclimatology (Institute of Geoscience, The University of Tsukuba, Sakura-mura, Niihari-gun,Ibaraki-ken, 305 Japan: Springer-Verlag) 34: 329-340. 
  6. 6.0 6.1 6.2 6.3 [5] Wickramagamage,P. (2010). "Seasonality and spatial pattern of rainfall of Sri Lanka:Exploratory factor analysis". INTERNATIONAL JOURNAL OF CLIMATOLOGY (Department of Geography, University of Peradeniya, Peradeniya, Sri Lanka: RMetS (Royal Meteorological Society) 30: 1235-1245. 
  7. 7.0 7.1 [6]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரிகாலம்&oldid=3932048" இலிருந்து மீள்விக்கப்பட்டது