பட்டுப்புழு
வேளாண்மைக்குட்படுத்தப்பட்ட பட்டுப் பூச்சி | |
---|---|
![]() | |
ஐந்தாம்நிலை பட்டுப்புழு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | கணுக்காலி |
வகுப்பு: | பூச்சி |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | Bombycidae |
பேரினம்: | Bombyx |
இனம்: | B. mori |
இருசொற் பெயரீடு | |
Bombyx mori L, 1758 | |
வேறு பெயர்கள் | |
Silkworm |
பட்டுப்புழு என்பது வேளாண்மை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பட்டுப்பூச்சி இனமான Bombyx mori யின் குடம்பிப்புழு நிலையாகும். பட்டு நூலை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றிருப்பதனால், இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பூச்சியினமாக உள்ளது. துத்தி (அல்லது வெண் முசுக்கட்டை மரம்) என்றழைக்கப்படும் ஒரு தாவரத்தின் இலைகளே இதன் மிக முக்கியமான உணவாக இருக்கிறது.
குறிப்பிட்ட இந்த இனமானது வட இந்தியா, வட சீனா, கிழக்கு உருசியா, யப்பான் போன்ற நாடுகளில் வன இனமாகக் காணப்பட்ட Bombyx mandarina என்ற பட்டுப் பூச்சி இனத்தை வேளாண்மை வளர்ப்புக்கு தொடர்ந்து உட்படுத்தி வந்தபோது உருவாகிய இனமாகும். அனேகமாக இது சீன வகைப் பட்டுப்பூச்சியிருந்து உருவான வேளாண்மைக்குட்பட்ட இனமாகும்[1]. இது பல்லாண்டு காலமாக பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பட்டுப்புழு வளர்ப்பு நடை முறையிலுள்ளது. இந்த இனமானது தனது இனப்பெருக்கத்திற்கு, மனித வளர்ப்பிலேயே முற்று முழுதாய் தங்கியிருப்பதுடன், தாமாக காட்டு இனமாக இருக்க முடியாத நிலையிலுள்ளது.
வளர்நிலைகள்[தொகு]
முட்டைகள் பொரிப்பதற்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும். பொரித்து வந்த பட்டுப்புழுக்கள் தொடர்ந்து உணவை உண்ணும். அவை விரும்பி உண்பது துத்தி (அல்லது வெண் முசுக்கட்டை மர இலைகளை. ஆனாலும், இவை மொரேசியே (Moraceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் வேறு சில இனங்களையும் உண்ணக்கூடியவை. பட்டுப்பூச்சிகள் இடும் முட்டை பொரித்து உருவாகும் இரண்டாம் நிலையான புழுக்கள் கேகோ ('kego') என்றும், இந்தியாவில் சாவ்க்கி ('chawki') என்றும் அழைக்கப்படும். இவற்றின் உடலில் கறுப்பு நிற மிகக்குறுகிய மயிர்கள் காணப்படும். இந்த முதலாம் நிலை பட்டுப்புழுவின் தலையானது கூடிய கருமை நிறமாக வரத் தொடங்கும் பொழுது, புழுவானது தனது வெளித் தோலை இழந்து, தனது இரண்டாம் வளர்நிலைக்கு போவதற்கு ஆயத்தமாகும். அடுத்த வளர்நிலைகள் வெள்ளை நிறமானவையாகவும், மயிர்களற்ற உடலைக் கொண்டும், முதுகுப் பகுதியில் ஒரு கொம்பு போன்ற அமைப்பைக் கொண்டும் காணப்படும்.
நான்காவது தோல்கழற்றல் நடைபெற்று குடம்பியானது ஐந்தாவது வளர்நிலைக்கு வரும்போது, அதன் நிறம் மென்மஞ்சள் நிறமாகி, தோலிலும் இறுக்கம் ஏற்படும். குடம்பியின் உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து சுரக்கும் பட்டின் மூலப் பொருளைக் கொண்டு குடம்பியானது தனக்கான ஒரு கூட்டை உருவாக்கும். இந்தக் கூடே அசையாத நிலையில் இருக்கப்போகும் கூட்டுப்புழுவுக்கு பாதுகாப்பை வழங்கும். செதிளிறகி (Lepidopter) வரிசையிலுள்ள பல பூச்சிகள் இவ்வகையான கூட்டை உருவாக்குபனவாக இருந்தாலும், பட்டுப்பூச்சி போன்ற ஒரு சில மட்டுமே, ஆடை உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டுப்புழுவிற்கான கூடானது கிட்டத்தட்ட 300 - 900 மீற்றர் நீளமான பட்டு நூலினால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த நூல்போன்ற நாரானது மிகவும் மெல்லியதாகவும், விட்டம் அண்ணளவாக 10 மைக்ரோமீற்றராகவும் இருப்பதுடன், மிகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஒரு இறாத்தல் நிறையுள்ள பட்டு தயாரிக்க 2000 - 3000 புழுக்கூடுகள் தேவைப்படும்.
வழமையாக கூட்டுப்புழுக்கள் தாம் உருவாக்கிய கூட்டில் சில புரதச்சிதைப்பை ஏற்படுத்தும் நொதியத்தைச் சுரந்து, அவை அந்துப்பூச்சியாகும் நிலையில் கூட்டிலிருந்து வெளியேறுவதற்காக கூட்டில் துளைகளை ஏற்படுத்தி வைக்கும். அவ்வாறு நிகழுமாயின் நூலானது வெட்டப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பட்டின் தரம் குறையும். ஆதலால், இந்த நொதியங்கள் வெளியேறி, கூட்டை சிதைப்பதைத் தவிர்க்கும் நோக்குடன், கூடானது கூட்டுப்புழுவுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்படும். இதனால் நூல் இலகுவாக பிரிந்து வருவதற்காக கூடானது கொதிக்க வைக்கப்படும்போது, கூட்டுப்புழுக்களும் இறந்து விடுகின்றன.
பட்டுப்பூச்சியின் இறுதி முதிர் பருவம், அந்துப் பூச்சியாகும். இவற்றின் செட்டை விரித்த நிலையில் அகலம் 3–5 cm ஆகவும், வெள்ளை மயிர்கொண்ட உடலாகவும் இருக்கும். இவற்றால் பறக்க முடியாது. இவற்றில் பெண் பூச்சிகள் முட்டைகளை சுமப்பதனால், ஆண் பூச்சிகளை விட 2-3 மடங்கு பாரமானதாக இருக்கும். இவற்றின் வாயுறுப்பு மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதுடன் இவை அதிகம் உணவை உண்பதில்லை.
இனங்கள்[தொகு]
பட்டுப்புழுவின் 443 இனங்கள் (மூலவுயிர்முதலுரு) தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள மத்திய பட்டு வளர்ச்சி மற்றும் ஆரய்ச்சி கழகம் கண்காட்சி வளாகத்தில் உள்ளது.[2]
காட்சியகம்[தொகு]
-
பெண் பூச்சிகளின் முட்டையிடல்
-
பட்டுப்புழு முட்டை பொரிப்பு முதல் நிலை
-
7ஆம் நாள் (இரண்டாம் வளர்நிலை) kego
-
நூலை நூற்கும் பட்டுப்புழு
-
பட்டுப்புழு (ஐந்தாம் வளர்நிலை)
-
இலையொன்றில் கூட்டமாக உள்ள ஐந்தாம் வளர்நிலையிலுள்ள பட்டுப்புழு குடம்பிகள்
-
பட்டுப்புழு கூடுகள்.
-
பட்டுப்புழு வாழ்க்கைச்சுழற்சி
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Maekawa et al. 1988, Arunkumar et al. 2006
- ↑ http://www.silkgermplasm.com/
இவற்றையும்கான்க[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
- [1] பரணிடப்பட்டது 2009-10-12 at the வந்தவழி இயந்திரம் பட்டுப்புழு
- [2] பட்டுப்புழுபற்றிய மாணவர்களுக்கான பக்கம்
- WormSpit பரணிடப்பட்டது 2006-04-12 at the வந்தவழி இயந்திரம் பட்டுப்புழு, பட்டுப்பூச்சி, பட்டு தொடர்பான பக்கம்
- [3] படங்களுடன் கூடிய பட்டுப்புழு தொடர்பான தகவல்கள்
- SilkBase பரணிடப்பட்டது 2007-06-26 at the வந்தவழி இயந்திரம் பட்டுப்புழுவின் முழுநீள cDNA தரவுத்தளம்
- பட்டுப்புழு வாழ்க்கைச்சுழற்சி படிமங்கள் பரணிடப்பட்டது 2012-11-08 at Archive.today
- பட்டுப்புழு வாழ்க்கை சுழற்சி