சிலந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிலந்திகள்
Orb weaver spider day web2.jpg
an Orb-weaver spider, Family: Araneidae
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: Chelicerata
வகுப்பு: அராக்னிடுகள்
வரிசை: Araneae
Clerck, 1757
Suborders

Mesothelae
Mygalomorphae
Araneomorphae
 See table of families

உயிரியற் பல்வகைமை
110 குடும்பங்கள், c.42,751 இனங்கள்

சிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை நூலாம்பூச்சி [1] என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையா. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751  வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு  [2] விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.[3]. சிலந்திகள் அராக்னிடா (Arachnida) என்னும் வகுப்பில், சிலந்திப்பேரினம் அல்லது அரனியே (Araneae) என்று அழைக்கப்படும் வரிசையில் உள்ள உயிரினம்.

உடல் கூறு இயல்[தொகு]

சிலந்தியின் புற உடற்கூறு:
(1) எட்டுக்கால்கள் - நான்கு இணை கால்கள்
(2) உடலின் முன்பகுதியாகிய தலை-நெஞ்சகம் (cephalothorax). இது புரோசோமா (prosoma) என்றும் கூறப்படும்
(3) உடலின் பின்பகுதியாகிய வயிறு. இது ஓப்பிசுத்தோமா (opisthosoma) என்றும் அழைக்கப்படும்.

சிலந்திகளின் உடல், வழக்கமாக கணுக்காலிகளில் காணப்படும், பல்பகுதி உடலமைப்பு கொண்டது எனினும் பிற கணுக்காலிகளில் இல்லாதவாறு, இதன் இருபகுதியான உடற்பகுதிகள் இணைந்து இருக்கின்றன. கணுக்காலிகளில் அறுகால் பூச்சிகளில் காணப்படுவது போன்ற உணர்விழைகள் சிலந்திகளுக்குக் கிடையா. சிலந்திகளுக்கு நஞ்சு பாய்ச்சும், கொடுக்கு போன்ற வாய்ப்பகுதி உண்டு. இதனைக் கெலிசெரே (Chelicerae) என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர் (கிரேக்கச் சொல் keras என்றால் கொம்பு என்று பொருள் (cera <keras)). சிலந்துகளின் இருபகுதி உடலமைப்பு என்பதை இரு டாக்மாட்டா (tagmta) என்று கூறுவது வழக்கம்.[4]. இந்த இரு உடற்பகுதிகளும் ஒருங்கிணைந்து ஒட்டிய வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், செஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் தலை-நெஞ்சகம் அல்லது செபாலோ-தோராக்ஃசு (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை வயிறு (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். தலை-நெஞ்சகமும், வயிற்றுப்பகுதியும் ஆன இவ்விரு பகுதிகளையும் மெல்லிய உருளை வடிவான இணைப்புத் தண்டு இணைக்கின்றது. இந்த இணைப்புத்தண்டை பெடிசெல் (pedicel) என்பர். இதன் குடல் மிகமிகச் சிறியதாகையால் சிலந்திகள் பெரிய கெட்டியான பொருளை உட்கொள்ள இயலாது. சவைக்கும் வாய்ப்பகுதியும் கிடையாது. எனவே, சிலந்திகள் தான் உண்னும் கெட்டியான பொருளை தன் உடலில் உருவாகும் நொதிகளைக் கொண்டு நீர்மமாக்கிவிடுகின்றது. சிலந்தி இன வகைகளின் எளிமையான மெசொத்தெலே (Mesothelae) என்னும் வகையைத் தவிர, மற்ற எல்லா வகையான சிலந்திகளிலும், மற்ற கணுக்காலிகளைப் போல் அல்லாமல், சிறப்பாக நடுவிருந்து கட்டுப்படுத்தும் நரம்புமண்டலம் உள்ளது. மற்ற கணுக்காலிகளில் இருப்பதைப் போன்று தன் கால்களில் வெகுவாக மடக்கி நீட்டக்கூடிய தசைகள் இல்லை. ஆனால் அவற்றுக்கும் மாறாக, வயிற்றுப் பகுதியில் உள்ள நூலிழை நூற்கும் சுரப்பிகள் உள்ளன. தன் உடலில் ஒன்று முதல் ஆறுவகையான நூல்நூற்கும் சுரப்பிகள் வயிற்றுப்பகுதியில் உண்டு. சிலந்திநூல் மிகவும் மெலிதாக இருந்தாலும், அதன் அளவை ஒப்பிடும்பொழுது அது மிகுந்த வலிமையும், மிகுந்த நீட்சித்திறனும் (elasticity) கொண்டது . செயற்கையாக செய்யப்படும் நூலிழைகள் யாவற்றினும் வலிமை முதலான பண்புகளில் சிறந்தது.

சிலந்தியின் உள் உடலமைப்பு. 1) நச்சுக்கொடுக்கு, 2) நஞ்சுச் சுரபி, 3) மூளை, 4) வயிறு 5)முன் இரத்தக்குழாய், 6)செரிக்கும் பெருங்குடல், 7)இதயம், 8)நடுக்குடல், 9)கழிமுகக் குழாய் (Malpighian tubules), 10)கழித்துளைப் பை 11) பின் இரத்தக்குழாய், 12) நூல்நூற்பியகம், 13) நூற்சுரபி, 14) மூச்சுக்குழல், 15) கருப்பை (பெண்பால்)16 மடிபுத்தகவடிவு வளிபரிமாற்றகம் (Book lung), 17) நரம்பு தண்டு, 18) கால்கள், 19) கொடுக்கு (Pedipalp)

2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊனுண்ணா ஒரேயொரு சிலந்தியைத்தவிர மற்றவை எல்லாம் பிற சிறு பூச்சிகளையும், பிற சிறு உயிரினங்களையும், பிற சிலந்திகளையும் கொன்றுண்டு வாழும் வகையைச் சேர்ந்தவை. ஒரு சில சிலந்திகள், பறவைகளையும், பல்லி போன்ற ஊர்வன வகைகளையும் உண்ண வல்லன.

பொரித்த சிலந்திகளை, கம்போடிய மக்கள் உணவாக உட்கொள்கின்றனர்
எட்டுக்கால் பூச்சி, தமிழ்நாடு
தன்இனத்தையே உண்ணும் பட்டுசிலந்தி(silk spider)

சிலந்திகளின் படிவளர்ச்சி[தொகு]

சிலந்திகளின் உடல் மெலிதான உடற்பகுதிகளால் ஆனதால் தொல்லுயிர் எச்சம் அல்லது புதை படிவங்கள் கிடைப்பது அரிது. சிலந்தி போன்ற அராக்னிடுகளின் வகையான நூலிழை விடும் பூச்சிகள் 386 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னிருந்த தெவோனியன் (Devonian) காலப்பகுதியில் இருந்தன, ஆனால் அவற்றுக்கு நூலிழை விடும் தனி உறுப்புகள் இல்லை. உண்மையான சிலந்தி வகைகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அம்பரில் புதியுண்ட ஏறத்தாழ 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேத்தேசியஸ் காலத்து தொல்லுயிர் எச்சங்கள் இடைத்துள்ளன்.

சிலந்தி அம்பர்

ஆய்வுகள்[தொகு]

மிக்காரியா சொசியாபிலிஸ் (Micaria sociabilis) என்னும் இனத்தைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளுடன் உடலுறவு கொள்ளாமல் அதனை கொன்று உணவாக்கி கொள்கிறது என சிக் குடியரசில் உள்ள மசாரைக் பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்காவின் ஆய்வு கூறுகிறது.[5]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+&matchtype=exact&display=utf8. 
  2. Platnick, N. I. 2012. The world spider catalog, version 12.5. American Museum of Natural History, online at http://research.amnh.org/iz/spiders/catalog. DOI: 10.5531/db.iz.0001. பார்க்கக் கிடைக்கும் தளம் (பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2012) [1]
  3. Kuhn-Nentwig, Lucia, Stocklin, Reto, Nentwig, Wolfgang, "Venom Composition and Strategies in Spiders: Is Everything Possible?" in Jerome Casas (Ed), Advances in Insect Physiology - Spider Physiology and Behaviour: Physiology, Volume 40, Academic Press 2011
  4. டாக்மா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு "ஒன்றை ஒழுங்கமைக்கப்பட்டது", "something arranged" என்று பொருள். டாக்மா (tagma) என்னும் சொல் ஒருமை வடிமம். டாக்மாட்டா என்பது டாக்மா என்பதன் பன்மைச் சொல்வடிவம். உசாத்துணை Oxford English Dictionary, Second Edition, 1989
  5. ஆண் சிலந்திகள் தன்னின உண்ணிகளாக செயல்படுகின்றன, புதிய அறிவியல், மே 15, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்தி&oldid=2059675" இருந்து மீள்விக்கப்பட்டது