உள்ளடக்கத்துக்குச் செல்

சிலந்தி (வகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அராக்னிடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிலந்திதேள் வகுப்பு (அல்) அராக்னிடா
Arachnida
எர்ணசுட்டு எக்கல்லின் Kunstformen der Natur, 1904 என்னும் நூலில் சிலந்திதேள் (அராக்னிடா, Arachnida" )
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
சிலந்திதேள் வகுப்பு
(அராக்னிடா, Arachnida)

Georges Cuvier, 1812
இன்றுள்ள வரிசைகள்

உண்ணி வரிசை (Acarina)
கூழைத் தேள் வரிசை (Amblypygi)
சிலந்தி வரிசை (Araneae)
நெட்டெண்காலி வரிசை (Opiliones)
உணரிக் குறுந்தேள் வரிசை (Palpigradi)
போலித்தேள் வரிசை (Pseudoscorpion)
முகமூடி எண்காலி வரிசை (Ricinulei)
பிளவுச்சிலந்தி வரிசை (Schizomida)
தேள் வரிசை (Scorpiones)
ஒளிப்பகை எண்காலி வரிசை (Solifugae)
உணரித்தேள் வரிசை (Uropygi)

சிலந்திப் பேரினம்,சிலந்திதேள் வகுப்பு அல்லது அராக்னிடா (Arachnida) என்பது முதுகெலும்பில்லா விலங்கு வகையில், காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்த, கணுக்கொடுக்கிகள் (Chelicerata) துணைத் தொகுதியில் உள்ள, இறக்கைகளும், உணர்விழைகளும் இல்லாத, "எண்கால் பூச்சி"கள் எனப்படும் உயிரினங்கள். காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் நிகழ்வு இவற்றின் மூச்சுக்குழல்கள் வழியாகவோ அல்லது மூச்சுப்பைகள் வழியாகவோ நடக்கும். சிலந்திதேள் வகுப்பில் பல்வேறு சிலந்திகளும், தேள்களும், உண்ணிகளும் (mites, ticks), பல்வேறு வகைப்பட்ட எண்காலிகளும் அடங்கும். அறிவியல் வகைப்பாட்டில் அராக்னிட் ( arachnid) அல்லது அராக்னிடா (Arachnida) என்று அழைக்கபடுகின்றது. கிரேக்க மொழியில் அராக்னி (άράχνη, arachne) என்றால் சிலந்தி என்று பொருள்[1].இதன் வழி பிரான்சிய மொழியில் arachnide என்றாகி, ஆங்கிலத்தில் அராக்னிடா (Arachnida) என்றும் இடாய்ச்சு மொழியில் Spinnentiere என்றும் வழங்குகின்றது.

அராக்னிடுகள் அல்லது சிலந்திதேள் வகுப்பிகள் பெரும்பாலும் நிலத்தில் அல்லது தரைமீது வாழ்வன என்றாலும், பல வகைகள் நன்னீரிலும், கடல்நீர்லிலும் (உவர்நீரிலும்) வாழ்கின்றன. சிலந்திதேன் வகுப்பு, மொத்தம் 100,000 உக்கும் மேலான இனங்கள் கொண்டுள்ள, பெரும் வகுப்பு.

நாற்புள்ளி சிலந்தி(Araneus quadratus). படத்தில் உள்ளது பெண் சிலந்தி. இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்கின்றன. ஆண்சிலந்திகளைவிட பெண் சிலந்திகள் உருவில் பெரியன

பொதுவாக சிலந்திதேள் வகுப்பிலுள்ளவை நான்கு இணையான கால்கள் (எட்டு கால்கள்) கொண்டவை, இதனால் இவை ஆறுகால்கள் கொண்ட (மூன்று இணையான கால்கள் கொண்ட) பூச்சிகளில் இருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியவை. சிலந்திதேள் வகுப்பிகள் எட்டு கால்கள் கொண்டவை என்றாலும் அவை பொதுவாக 6 இணையான கை-கால் போன்று உடம்பில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் இணைப்புறுப்புகளாக மொத்தம் 12, கொண்டவை. இவற்றுள் 8 கால்கள் போக, மீதம் உள்ள 4 இணைப்புறுப்புகள் இரையைப் பற்றவும், தற்காப்புக்காகவும், சுற்றுச்சூழலை உணரவும் தேவைப்படும் கொடுக்கு, உணர்விழை போன்றவையாக (ஆனால் உணர்விழை அல்ல) வளர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் முதல் இரண்டும் கணுக்கொடுக்காகவும் (chelicerae, செலிசெரே), அடுத்த இரண்டும் உணரிகளாகவும் (பெடிபால்ப்புகள்[2] pedipals, உணரும் முன்கைகளாக) உள்ளன. செலிசெரே எனப்படும் முன்கொடுக்கு அல்லது கணுக்கொடுக்கு, இரையைப் பற்றவும், தன் பகையினத்திடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. உணரிகள் எனப்படும் இரண்டும், இரையைப் பற்றவும், நகர்ந்து செல்லவும், இனப்பெருக்க உறுப்பாகவும் செயல்படுகின்றன. ஒளிப்பகை எனப்படும் எண்காலிகளில் முன்னிருக்கும் இரண்டு உணரிகளும் காலகள் போல் தென்படுவதால், பத்து கால்களை உடைய ஓரினம் போல் காட்சியளிக்கும்.

உணரிகள் என்னும் இணைப்புறுப்பு இருந்த போதும், இவை ஆறுகால் பூச்சிகளில் இருக்கும் உணர்விழைகள் அல்ல. சிலந்திதேள் அல்லது அராக்னிடுகளின் சிறப்பான வேறுபாடு இவற்றிற்கு உணர்விழைகளும் இறக்கைகளும் கிடையாது என்பதே. இவற்றின் புற உடல் இருபகுதி உடலமைப்பு கொண்டது. இந்த இருபகுதி உடலமைப்பு என்பதை இரு டாக்மாட்டா (tagmta) என்று கூறுவது வழக்கம்.[3]. இந்த இரு உடற்பகுதிகளும் ஒருங்கிணைந்து ஒட்டிய வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், நெஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் தலை-நெஞ்சகம் அலலது செபாலோ-தோராக்சு (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை வயிறு (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். இந்த தலை-நெஞ்சகம் அல்லது புரொசோமா என்பது, தலையும் (செஃவலான், cephalon), நெஞ்சகமும் (thorax) சேர்ந்தபகுதி. வயிறு எனப்படும் ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) முன்வயிறு, பின்வயிறு என்று பல உள்ளினங்களில் பிரிக்கப்படும். என்றாலும் உண்ணி (அக்காரி, Acari) போன்ற வகைகளில் இவ்விரு வயிற்றுப்பகுதிகளும் ஒன்றாக இணைந்தும் இருக்கும் [4]

வகைப்படுத்தல்

[தொகு]
  • உண்ணி வரிசை (Acarina)
  • கூழைத் தேள் வரிசை (Amblypygi)
  • சிலந்தி வரிசை (Araneae) (40,000 இனங்கள்)
    • மெசோதேளி - அரிதான இனம். (Mesothelae)
    • ஒபிசுதோதேளி - (Opisthothelae)
      • அரனிமொர்பேய் - அதிகமாக காணப்படும் இனங்கள் (Araneomorphae)
      • மைகலொமொர்பேய் - (Mygalomorphae)— இடரன்டுலா சிலந்திகளும் அவை போன்று தோற்றமளிக்கும் சிலந்திகளும் இந்த வரிசையில் அடக்கம் அடக்கம்.
  • † பாலங்கிடர்பிடா - அழிந்து விட்ட இனம்
  • நெட்டெண்காலி வரிசை - நீண்ட கால்களை உடையவை (6,300 இனங்கள்)(Opiliones)
  • உணரிக் குறுந்தேள் வரிசை - (80 இனங்கள்)(Palpigradi)
  • போலித்தேள் வரிசை - (3,000 இனங்கள்) (Pseudoscorpion)
  • முகமூடி எண்காலி வரிசை - (Ricinulei) (60 இனங்கள்)
  • பிளவுச்சிலந்தி வரிசை - (220 இனங்கள்) (Schizomida)
  • தேள் வரிசை - (2,000 இனங்கள்) (Scorpiones)
  • ஒளிப்பகை எண்காலி வரிசை - (900 இனங்கள்) (Solifugae)
  • † ஹப்டபொடா - அழிந்துவிட்ட இனம் (Haptopoda)
  • தெளிபொனிடா - (100 இனங்கள்)(Thelyphonida)
  • உணரித்தேள் வரிசை (Uropygi)
  • அகரி - (Acari) (30,000 இனங்கள்)
    • அகரிபொம்சு (Acariformes)
      • சர்கொப்டிபொம்சு (Sarcoptiformes)
      • இடுரொம்பிடிமொம்சு (Trombidiformes)
    • ஒபிலியொகரிபொம்சு (Opilioacariformes)
    • பரசிடிபொம்சு (Parasitiformes)

ஏறக்குறைய இலட்சம் இனங்கள் உயிரியல் அட்டவணைப் படுத்தப்பட்டும் 6 இலட்சம் இனங்கள் இன்னும் அட்டவணைப்படுத்தப்படாமலும் உள்ளன.[5]

இனங்கள்

[தொகு]

சிலந்தி

[தொகு]

சிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை நூலாம்பூச்சி [6] என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையாது. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751  வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு  [7] விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.[8]. சிலந்திகள் அராக்னிடா (Arachnida) என்னும் வகுப்பில், சிலந்திப்பேரினம் அல்லது அரனியே (Araneae) என்று அழைக்கப்படும் வரிசையில் உள்ள உயிரினம்.

தேள்

[தொகு]

தேள் (Scorpion) என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.


குறிப்புகள்

[தொகு]
  1. "arachnid". Oxford English Dictionary (2nd edition). (1989). 
  2. பெடி (pedi) என்றால் கால், பால்ப் (Palp) என்றால் (தொட்டு) உணர்தல்
  3. டாக்மா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு "ஒன்றை ஒழுங்கமைக்கப்பட்டது", "something arranged" என்று பொருள். டாக்மா (tagma) என்னும் சொல் ஒருமை வடிமம். டாக்மாட்டா என்பது டாக்மா என்பதன் பன்மைச் சொல்வடிவம். உசாத்துணை: Oxford English Dictionary, Second Edition, 1989
  4. Ruppert, E., Fox, R., & Barnes, R. (2007) Invertebrate Zoology: A functional evolutionary approach. 7th Edition. Thomson Learning பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-025982-7
  5. Arthur D. Chapman (2005). Numbers of living species in Australia and the world (PDF). Department of the Environment and Heritage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-642-56850-2. Archived from the original (PDF) on 2007-09-21. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  6. சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: date format (link)
  7. Platnick, N. I. 2012. The world spider catalog, version 12.5. American Museum of Natural History, online at http://research.amnh.org/iz/spiders/catalog. DOI: 10.5531/db.iz.0001. பார்க்கக் கிடைக்கும் தளம் (பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2012) [1]
  8. Kuhn-Nentwig, Lucia, Stocklin, Reto, Nentwig, Wolfgang, "Venom Composition and Strategies in Spiders: Is Everything Possible?" in Jerome Casas (Ed), Advances in Insect Physiology - Spider Physiology and Behaviour: Physiology, Volume 40, Academic Press 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்தி_(வகுப்பு)&oldid=3244667" இலிருந்து மீள்விக்கப்பட்டது