சிதைமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதைமாற்றம் அல்லது அவசேபம் (Catabolism) என்பது வளர்சிதை மாற்றத்தின் ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய வளர்மாற்றங்களுக்கோ[1] பயன்படலாம். சிதைமாற்றங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம்: கூட்டுச்சர்க்கரை, கொழுமியம், கருவமிலம், புரதங்கள்) உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம்: ஒற்றைச்சர்க்கரை, கொழுப்பு அமிலம், கருக்காடிக்கூறு, அமினோ அமிலம்) உருவாக்கும்.

உயிரணுவானது புதிய மூலக்கூறுகளை உருவாக்கும்போது, சிதைவுறுகிற பழைய மூலக்கூறுகளை பயன்படுத்திக்கொள்கிறது அல்லது உயிரணுக் கழிவுகளான லாக்டிக் அமிலம், அசிட்டிக் காடி, கார்பனீராக்சைடு, அமோனியா, யூரியா போன்றவற்றை மேலும் சிதைத்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றிக்கொள்கிறது. இக்கழிவுகள் வெளியேற்றமானது ஆக்சிஜனேற்றம் பெறுவதன் மூலம் வேதித் தன்மையற்ற ஆற்றலை வெளியிடுவதால் கிடைப்பதாகும். இவ்வாறு செய்யும்போது வெப்பமிழப்பு ஏற்படும். ஆனால், வெளிவரும் கழிவுகளால் அடினோசின் ட்ரை பாஸ்பேட்டுகளின் சேர்க்கை தூண்டப்படுகிறது. இவை உயிரணுக்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலையும் வழங்கும். இம்மூலக்கூறுகள் சிதைமாற்றத்தால் வெளிப்படும் ஆற்றலை வளர்மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்ற ஒரு வழிப்போக்கியாகச் செயல்படுகின்றன. சிதைவுறுதல், வளர்மாற்றம், சிதைமாற்றம் ஆகிய அனைத்தும் வளர்சிதைமாற்றமாகவே கொள்ளப்படுகின்றன.

சிதைமாற்றங்களுக்கான எடுத்துக்காட்டுகள்[தொகு]

  1. சர்க்கரைச் சிதைவு
  2. சிட்ரிக் அமில சுழற்சி
  3. கொழுப்பிழையங்களில் உள்ள கொழுப்பு கொழுப்பமிலங்களாக உடைதல்.
  4. தசையிலுள்ள புரதம் உடைவதன் மூலம் உருவாகும் அமினோ அமிலம் பயன்படும் குளுகோனியோஜெனசிஸ் தாக்கம்.
  5. மொனோமைன் ஆக்சிடேசால் நரம்புக்கடத்திகள் மூலம் நிகழ்த்தப்படும் ஆக்சிஜனேற்ற செயல்பாடுகளின் தாக்கம்.

கட்டுப்படுத்தும் காரணிகள்[தொகு]

சிதைமாற்றத்தை பல்வேறு அம்சங்கள் (சமிக்ஞைகள்) கட்டுப்படுத்துகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை இயக்குநீர்களும், வளர்சிதைமாற்றத்தில் தாமாகவே பங்குபெறும் உயிரணு மூலக்கூறுகளும் ஆகும். உட்சுரப்பியல் வல்லுநர்கள் பாரம்பரியமாக வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுவதில் அவற்றின் பங்கினைப் பொறுத்து , இயக்குநீர்களை இருவிதமாக வகைப்படுத்துகின்றனர். ஒன்று சிதைமாற்ற இயக்குநீர்கள், மற்றொன்று வளர்மாற்ற இயக்குநீர்கள். இருபதாம் நூற்றாண்டு வரை கார்ட்டிசால், குளூக்கொகான், அட்ரினலின், காட்கொலமைன் ஆகியவையே முதன்மைச் சிறப்பான சிதைமாற்ற இயக்குநீர்களாக அறியப்பட்டிருந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பல இயக்குநீர்கள் குறைந்த அளவில் சிதைமாற்றத்தில் பங்குகொள்வது கண்டறியப்பட்டது. அவற்றுள் சில, சைட்டோக்கைன், ஓரெக்சின், சைட்டோக்கைன், மெலட்டோனின் ஆகியவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. de Bolster, M.W.G. (1997). "Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Catabolism". International Union of Pure and Applied Chemistry. 2017-01-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதைமாற்றம்&oldid=3586928" இருந்து மீள்விக்கப்பட்டது