உள்ளடக்கத்துக்குச் செல்

மதுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுவம் (ஈஸ்ட்)
Saccharomyces cerevisiae இன மதுவம் நுணுக்குக்காட்டியில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
Phyla and Subphyla

மதுவம் எனப்படுவது கிட்டத்தட்ட 1500 இனங்களை உள்ளடக்கிய பூஞ்சை எனப்படும் உயிரியல் இராச்சியத்தைச் சேர்ந்த, ஒருகல மெய்க்கருவுயிரி நுண்ணுயிர்களாகும்[1]. ஏனைய பூஞ்சைகளைப் போலல்லாது இவை தனிக்கலங்களால் ஆன அசையக்கூடிய தனிக்கல உயிரிகளாகும். இனங்களுக்கிடையே கல அளவில் வேறுபாடு இருக்கும். 3-4 µm விட்டத்திலிருந்து 40 µm விட்டம் வரை வேறுபட்டது[2]. மதுவம் மனிதனுக்கு அதிக அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர்களுள் ஒன்றாகும். அற்கஹோல் குடிபான உற்பத்தி, வெதுப்பகத் தயாரிப்புகள், தோசை சமைத்தல், எத்தனோல் எரிபொருள் உற்பத்தி என்பவற்றில் இவ்வங்கி பயன்படுத்தப்படுகின்றது. காற்றின்றிய நிபந்தனையில் மதுவக் கலங்கள் எத்தனோல் நொதித்தல் மூலம் உருவாக்கும் எத்தனோல் எனப்படும் ஒரு வகை அற்கஹோலே இவ்வாறு பல தயாரிப்புகளுக்கும் மூலப்பொருளாக உள்ளது. அனேகமான மதுவ இனங்கள் இழையுருப்பிரிவு மூலம் இலிங்கமில் முறையில் இனம்பெருகினாலும், இவற்றில் இலிங்க முறை இனப்பெருக்கமும் அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து தனிக்கலப் பூஞ்சை இனங்களும் மதுவம் என அழைக்கப்படுவதால் மதுவ இனங்கள் ஒரே கூர்ப்பில் உருவான உயிரினங்கள் அல்ல. இவை வெவ்வேறு- பேசிடோமைக்கோட்டா, அஸ்கோமைக்கோட்டா கணங்களைச் சேர்ந்தவையாஅக உள்ளன.

போசணையும் வளர்ச்சியும்

[தொகு]

இவை இரசாயனப் பிறபோசணி உயிரிகளாகும். இவை தம்மைச் சூழவுள்ள நீர்ச்சூழலில் நொதியங்களை விடுவித்து எளிய உணவுப் பதார்த்தங்களை அகத்துறிஞ்சுகின்றன. குளுக்கோசு போன்ற எளிய வெல்லங்களைப் பிரதான சக்தி முதலாகப் பயன்படுத்துகின்றன. இவை பொதுவாகக் காற்றின்றிய சூழலை நாடுபவையாக உள்ளன. காற்றுள்ள நிலமையிலும் இவற்றால் சீவிக்க முடியும். குளுக்கோசை எத்தனோலாக மாற்றும் நொதித்தலின் மூலம் இவை தமக்குத் தேவையான அனுசேப சக்தியை உருவாக்குகின்றன. நடுநிலையான அல்லது சிறிதளவு அமிலத்தன்மையுள்ள ஊடகத்தில் இவை துரித வளர்ச்சியைக் காண்பிக்கும். பொருத்தமான வளர்ச்சி ஊடகத்தில் இவற்றை வளர்க்கும் போது இவை நன்றாக வளர்ச்சியடைந்தாலும், பின்னர் இவை எத்தனோலின் விஷத்தன்மை காரணமாக இறந்து விடுவதையும் அவதானிக்கலாம். எஞ்சும் எத்தனோல் மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kurtzman CP, Piškur J (2006). Taxonomy and phylogenetic diversity among the yeasts (in Comparative Genomics: Using Fungi as Models. Sunnerhagen P, Piskur J, eds.). Berlin: Springer. pp. 29–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-31480-6.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Walker K, Skelton H, Smith K. (2002). "Cutaneous lesions showing giant yeast forms of Blastomyces dermatitidis". Journal of Cutaneous Pathology 29 (10): 616–18. doi:10.1034/j.1600-0560.2002.291009.x. பப்மெட்:12453301. http://doi.org/10.1034/j.1600-0560.2002.291009.x. பார்த்த நாள்: 2009-11-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுவம்&oldid=3399440" இலிருந்து மீள்விக்கப்பட்டது