மனித இரையகக் குடற்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமிபாட்டுத்தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித இரையகக் குடற்பாதை (சமிபாட்டுத் தொகுதி)
Stomach colon rectum diagram-ta.png
வயிறு, பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றைக் காட்டும் படம்
தொகுதி சமிபாட்டுத்தொகுதி

மனித இரையகக் குடற்பாதை (Human digestive system) என்பது, மனிதனின் வயிறும், குடலும் சேர்ந்த மனித சீரண மண்டலத்தின் ஒரு பிரதானப் பகுதியாகும் [1]. பொதுவாக சீரணமண்டலம் என்பது வாயில் தொடங்கி மலக்குடல் வரை நீண்டிருக்கிறது. இவற்றுக்கிடையில் உள்ள கல்லீரல், கணையம், உட்பட பல உறுப்புகளும் சீரணமண்டலத்தில் இடம்பெறுகின்றன [2]. இம்மண்டலத்தில் செரித்தல் என்பது பல நிலைகளில் நிகழ்கிறது. முதலாவது சீரணச் செயல்முறை வாயில் தொடங்குகிறது. பெரிய உணவு மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாக, மனித உடலால் ஈர்க்கப்படும் வரை அல்லது தன்வயமாக்கப்படும் வரை மேலும் மேலும் சிறிய மூலக்கூறுகளாக உடைக்கப்படுகின்ற செயல்முறையே செரித்தல் எனப்படுகிறது.

உண்ணப்படும் உணவு உமிழ்நீருடன் கலக்கப்படவேண்டும் என்பதற்காக வாய்க்குள் பற்களால் நன்றாக மெல்லப்படுகிறது. நாக்கால் நன்றாகக் கலக்கப்படுகிறது. சீரண நடைமுறைகள் ஆரம்பமாகின்றன. இதன் பின்னர் இவ்வுணவு சிறுசிறு கவளங்களாக உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் விழுங்கப்படுகிறது. முன்சிறுகுடலுக்குள் செல்லும் வரையிலும் உணவுடன் இரைப்பைநீர் சேர்க்கப்படுகிறது. முன்சிறுகுடலில் கணையத்தால் சுரக்கப்படும் பல்வேறு நொதிகளுடன் கலக்கப்படுகிறது. வாய்க்குழியில் உணவுடன் கலக்க சுரக்கப்படும் உமிழ்நீர் நாளமுள்ள சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படுகிறது. இந்நொதியில் வினையூக்க நோதியான அமைலேசு என்ற நொதி உண்ணும் உணவின் மீது முதலாவது வினையைத் தொடங்குகிறது. இதைத்தவிர மேலும் நாக்குச் சுரப்பிகளாலும், பிரதான உமிழ்நீர் சுரப்பிகளாலும் லைப்பேசு என்ற சீரண நொதியும் சுரக்கப்படுகிறது. உணவுப்பொருள்களை கிழித்து அரைத்து உண்ண பற்களும், அலை இயக்கம் மூலம் உணவைச் செலுத்த வாய்த்தசைகளும், வயிற்றிலுள்ள இரைப்பை நீர் செரிமானத்திற்கும் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

உணவுக்குழாயிலுள்ள தசைகளால் தோன்றும் அலை இயக்கம் வயிற்றுச்சுவர் வழியாக மனித இரையகக் குடற்பாதையின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. இதன் விளைவாக உணவுச் செரிகலவை உண்டாகி இது முழுவதும் சிறுகுடலில் உடைக்கப்படுகிறது. இங்கு செரிக்கப்பட்ட உணவாகி நிணநீர் மண்டலத்தால் ஈர்க்கப்படுகிறது. பெரும்பாலான சீரணம் முழுவதும் சிறுகுடலிலேயே நிகழ்கிறது. பெருங்குடலில் நீர் மற்றும் கனிமச் சத்துகள் மீள ஈர்க்கப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றன. செரிக்கப்படாதவையும் கழிவுப்பொருட்களும் மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன.

உட்கூறுகள்[தொகு]

17 ஆம் நூற்றாண்டுக்கால சீரணமண்டலத்தைக் காட்டும் படம்

இரையகப்பாதையில் நிகழும் உணவின் செரிமானத்தில் பல உறுப்புகள் மற்றும் சீரண மண்டல கூறுகள் இடம் பெற்றுள்ளன. கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் முதலியன துணை செரிமான சுரப்பிகள் எனப்படுகின்றன, வாய், உமிழ்நீர் சுரப்பிகள், நாக்கு, பற்கள் மற்றும் குரல்வலை ஆகியவை பிற சீரண மண்டல கூறுகளில் அடங்கும். வளர்ந்த உயிருள்ள மனித ஆணில் இரையகக் குடற்பாதை 5 மீட்டர் (16 அடிகள்) வரை நீளமுள்ளதாகவும், தசை முறுக்கு இல்லாதவிடத்து இந்த நீளம் 9 மீட்டர் (30 அடிகள்) வரையும் இருக்கும். இதுவே சீரணமண்டலத்தின் மிகப்பெரிய அமைப்புடன் காணப்படுகிறது. குடற்பாதையின் ஒவ்வொரு பகுதியியையும் தோன்றியதன் அடிப்படையிலான தோற்றத்தைக் குறிக்கும் வகையில் இப்பாதையை முன்குடல், நடுக்குடல், பின்குடல் எனப் பிரிப்பது உண்டு.வாய் முதல் குதம் வரை நீண்டுள்ள இப்பாதை சுமார் 9 மீட்டர்கள் நீளம் கொண்டுள்ளது [3].

சீரணமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய பகுதி பெருங்குடல் அல்லது பெரிய குடல் ஆகும். நீர் இங்கு உறிஞ்சப்படுகிறது மற்றும் மீதமுள்ள கழிவுப்பொருட்கள் நீக்குவதற்காக இங்கு சேமிக்கப்படுகின்றன [4].

சீரணத்தின் பெரும்பகுதி சிறுகுடலில் நிகழ்கிறது.

பிரதானமான சீரண உறுப்பு வயிறு ஆகும்.

வயிற்றின் சளிப்படலம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும், சிவந்த நிறத்துடனும் காணப்படுகிறது. இதன் இறுதிப்பகுதியில் ஏராளமான சளிச்சவ்வு மடிப்புகள் காணப்படுகின்றன.

சமிபாட்டுச் செயல்பாட்டை ஒழுங்கமைப்பதற்காக, இரையகக் குடற்பாதை எப்பொழுதும் ஓமோன்களைச் சுரந்தபடி இருக்கும். காசுட்ரின் (gastrin), செக்ரிட்டின் (secretin), கொலெக்கிசுட்டொக்கினின் (cholecystokinin), கிரேலின் (Ghrelin) போன்றவற்றை உள்ளடக்கிய ஓமோன் உட்சுரப்பு அல்லது தன்சுரப்பு முறைமூலம் செலுத்தப்படுகின்றன.[5]

மனித சமிபாட்டுத் தொகுதியும் அதன் பாகங்களும்[தொகு]

சமிபாட்டுத் தொகுதி

வாய்[தொகு]

உணவுக் குழாயின் முதல் பகுதி வாயாகும். செரிமானத்தின் முதல் செயல்முறை இங்குதான் தொடங்குகிறது. உமிழ்நீர் சுரப்பிகள், பற்கள், நாக்கு போன்ற பல சீரணமண்டலக் கட்டமைப்புகள் வாயில் உள்ளன [6]. வாய், வாய்க்குழி என்ற இரண்டு பகுதிகள் வாய்ப்பகுதியில் உள்ளடக்கியுள்ளன.பற்கள், உதடுகள் மற்றும் கன்னங்கள் ஆகியனவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளி வாய்குழியாகும் [7], வாய் உதடுகளில் ஆரம்பமாகித் தொண்டை வரை நீடிக்கிறது, வாய்க்குழிப்பகுதிக்கு பற்கள் அரணாக அமைந்துள்ளன. வாய்க்குழியின் மேற்பகுதி அன்னமாகவும் கீழ்ப்பகுதி நாக்கும் ஆக்ரமித்துள்ளன. வாய்க்குழியைச் சுற்றிலும் உமிழ்நீர் சுரப்பிகள் புதைந்து கிடக்கின்றன. வாய்க்குழியைச் சுற்றிச் சளிச்சவ்வுப் படலம் படர்ந்துள்ளது.

உமிழ்நீர்ச் சுரப்பிகள்[தொகு]

வாய்க்குழி

நமது உடலின் வாய்க்குழியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மூன்று சோடி பிரதான உமிழ்நீர் சுரப்பிகளும் 800 முதல் 1000 வரை நுண்ணிய உமிழ்நீர் சுரப்பிகளும் லாணப்படுகின்றன, இவை யாவும் வாய்க்குழிப்பகுதியை எப்போதும் ஈரமாக வைத்துக் கொள்ளவும் பற்கள் மற்றும் ஈறுகளை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், வாயில் அரைக்கப்படும் உணவை செரிக்கச் செய்யவும் உமிழ்நீரைச் சுரக்கின்றன. இவையில்லாவிட்டால் பேச்சு என்பதே இயலாததாகிவிடும் [8]. பிரதானச் சுரப்பிகள் அமைத்தும் புறச் சுரப்பிகளாகும். இவை அமைத்தும் வாயில் திறக்கின்றன. உமிழ்நீர்ச் சுரப்பிகளில் மிகப்பெரியது பரோட்டிட் சுரப்பியாகும். இது பெரும்பாலும் சீரம் சார்ந்த திரவத்தையே சுரக்கிறது. தாடைக்கு அடியில் ஒரு சோடி உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படுகின்றன, இவை கீழ்தாடை கீழ் உமிழ்நீர் சுரப்பி எனப்படுகிறது. இதைத்தவிர நாக்கின் அடியில் ஒரு சோடி உமிழ்நீர் சுரப்பிகளும் காணப்படுகின்றன.

உமிழ்நீர்[தொகு]

மூன்று சோடி உமிழ்நீர் சுரப்பிகளும் தினந்தோறும் ஏராளமான உமிழ்நீரைச் சுரக்கின்றன. இவ்வுமிழ்நீரில் டயலின் அல்லது ஆல்பா அமைலேசு என்ற நொதியும். நாக்குச்சுரப்பிகளால் லைப்பேசு என்ற நொதியும் சுரக்கப்படுகின்றன. உமிழ்நீரில் உள்ள இந்நொதிகள் பல்வேறு செயல்கலைச் செய்கின்றன.
1. வாயையும் பற்களையும் இவை பாதுகாக்கின்றன[9].
2. வாயை ஈரமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
3. உதடுகளும் நாக்குகளும் அசையவும், சுவை அரும்புகளைத் தூண்டவும், உணவை வழவழப்பாகவும் இவை உதவுகின்றன.
4. உணவிலுள்ள மாவுச் சத்தை சிதைக்க உதவுகின்றன.

நாக்கு[தொகு]

நாக்கு என்பது சுரப்பிகள்ம் நிணநீர்த் திசுக்கள், கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தசைப்பகுதியாகும். வாய்க்குழியிலுள்ள இரண்டு பாகம் முன்பகுதி என்றும் தொண்டைக் குழியில் உள்ள ஒரு பாகம் பின்பகுதி என்றும் இரண்டு பகுதிகளாக நாக்கு பிரிக்கப்படுகிறது. முன்பகுதி தடித்த சளிச்சவ்வால் ஆனது. இங்கு சுரப்பிகள் ஏதும் இல்லை. பின் பகுதியில் சளிச்சுரப்பிகள், சீரச்சுரப்பிகள் முதலியன காணப்படுகின்றன. உணவைச் சுவைக்கவும், விழுங்கவும், பேசவும் நாக்கு உதவுகிறது.

பற்கள்[தொகு]

உணவைக் கிழித்து, அரைத்து உண்பதற்கு பயன்படுவன பற்களாகும். இவை எலும்பைவிடக் கடினமானவை. ஒவ்வொரு தாடையிலும் 16 பற்கள் என மனிதனுக்கு மொத்தம் 32 பற்கள் காணப்படுகின்றன. செய்யும் வேலையைப் பொறுத்து பற்களின் அமைப்பும் அவற்றின் பெயரும் மாறுபடுகின்றன. வெட்டும் பற்கள், கிழிக்கும் பற்கள், அரைக்கும் பற்கள் என அவைப் பெயரிடப்பட்டுள்ளன.

தொண்டைக்குழி[தொகு]

வாய்க்குழிக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் அமைந்திருப்பது தொண்டைக்குழியாகும். மூக்குத் தொண்டைக்குழி, வாய்த்தொண்டைக்குழி, பெருமூச்சுக்குழாய்த் தொண்டைக்குழி என்று மூன்று வகையாக இதைப் பிரிப்பர்.

உணவுக்குழாய்[தொகு]

உணவுக்குழாய் என்பது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது[10]. இதை கழுத்துப்பகுதி, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

மண்ணீரல்[தொகு]

மண்ணீரல்
Illu spleen.jpg
மண்ணீரல்

பாலூட்டி விலங்குகளில் காணப்படும் முக்கியமான உள்ளுறுப்பு மண்ணீரலாகும். வயிற்றின் இடதுபகுதியில் இது உள்ளது. பழைய இரத்தச் சிவப்பணுக்களைப் பிரித்தெடுத்து அகற்றுவது இதன் பணியாகும். நோய் எதிர்ப்பாற்றல் முறைமையிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது[11]. மண்ணீரலில் சிவப்புக் கூழ், வெள்ளைக் கூழ்[12] என இருவகை நிணநீர் இழையங்கள் உண்டு. இவையே உடம்பின் எதிர்ப்புசக்திக்கு மிகவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல்[தொகு]

உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மையான உறுப்புகளில் ஒன்று கல்லீரலாகும். மனிதர்களின் வயிற்றில் வலது கீழ்புறத்தில் ஆப்பு வடிவத்தில் அமைந்திருக்கும் ஒரு மிகப்பெரியச் சுரப்பியாகும். உடலின் உட்சூழலைக் கட்டுபடுத்தி அதைச் சமன் செய்யும் பணியை இது கவனிக்கிறது. இரத்த ஓட்டத்திலுள்ள சத்துப்பொருட்களின் அளவையும் இதுவே தீர்மானிக்கிறது. மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து முதலியனவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தில் கல்லீரல் பெரும்பங்கு வகிக்கிறது. ஆற்ற்லைச் சேமித்து தேவையான சமயத்தில் உடலுக்கு அளிப்பதும் கல்லீரலேயாகும்.

மேல் இரையகக் குடற்பாதை[தொகு]

மேல் இரையகக் குடற்பாதை என்பது களம், இரைப்பை, முன்சிறுகுடல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்T[13]

கீழ் இரையகக் குடற்பாதை[தொகு]

கீழ் இரையகக் குடற்பாதை என்பது பெரும்பாலான சிறுகுடலின் பாகங்களையும் பெருங்குடலையும் உள்ளடக்கும்.[14].

குடல்[தொகு]

குடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது அல்லது நமதின் வயிற்றில் உள்ளது என்றும் கூறலாம். குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது அகும். குடல் சிறுகுடல், பெருங்குடல் என்று இருவகைப்படும்.

சிறுகுடல்[தொகு]

இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும். சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:
  முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.
  நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.
  பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.

சிறுகுடல், பெருங்குடலிலும் 4 - 5 மடங்கு நீளம் கொண்டு பெரியதாக இருந்தாலும், இதன் விட்டம் சிறியதாக இருப்பதால் சிறுகுடல் என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக, வளர்ந்த மனிதரில் சிறுகுடல் 2.5-3 சமீ விட்டம் கொண்டதாகவும், பெருங்குடல் 7.6 சமீ விட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.

முன்சிறுகுடல்:

இங்கு சதயச்சாறு மற்றும் பித்தநீர் என்பன சுரக்கும். இங்குச் சுரக்கும் நொதியங்கள் புரதத்தைக் கூறுகளாகப் பிரிப்பதுடன் கொழுப்பைச் சிறு கோளங்களாகப் பிரிக்கும். முன்சிறுகுடலில் காணப்படும் புறூனரின் சுரப்பியினால் இருகாபனேற்று உற்பத்தியாகும்.

இடைச்சிறுகுடல்:

இது சிறுகுடலின் நடுப்பகுதியாகும். இது சடைமுளைகளைக் கொண்டிருப்பதால் உணவு அகத்துறுஞ்சப் படுவதற்கான மேற்பரப்பு அதிகரிக்கப்படுகின்றது. இங்கு அமினோ அமிலம், கொழுப்பமிலம், வெல்லங்கள் என்பன அகத்துறிஞ்சப்படுகின்றன.

பின்சிறுகுடல்:இதில் காணப்படும் சடைமுளைகள் முதன்மையாக விட்டமின் B12 மற்றும் பித்த அமிலங்கள் மற்றும் மீந்திருக்கும் போசணைக் கூறுகளை அகத்துறுஞ்சும்.

பெருங்குடல்[தொகு]

பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

 • பெருங்குடல் வாய்: இது சிறுகுடலில் இருந்து பெருங்குடல் தொடங்கும் இடமாகும். இப்பகுதியில் குடல்வளரி எனப்படும் நீட்டம் காணப்படும்.
 • குடற்குறை: இது ஏறுகுடற்குறை, கிடைக்குடல், இறங்கு குடற்குறை மற்றும் வளைகுடல் என பகுக்கப்படும். இதன் முக்கிய தொழிற்பாடு நீரை அகத்துறுஞ்சுவதாகும். இதில் அடங்கியுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் K முதலான பயனுள்ள தொகுப்புகளையும் செய்யக் கூடியது.
 • மலக்குடல் (அ) நேர்குடல்: இது 12 சதம மீட்டர் (4.7 அங்) நீளமானது. மலக்கழிவுகளை தற்காலிகமாகச் சேமிப்பது இதன் தொழிற்பாடாகும். சுவர்களின் தசைகள் அசைவு மூலம் மலம் வெளித்தள்ளப்படும்.

பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்[தொகு]

குடல் நீட்சிகள் இருந்தால் மலக்குடலில் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. இது அல்சரேட்டிவ் கொலிடிஸ் (Ulcerative Colitis ) எனப்படும் . பெருங்குடல் சுவரில் புண் இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய் இருப்பின் அடுத்தவர்களுக்கும் வரவாய்ப்பிருக்கிறது. பெருங்குடலில் பெரிய பகுதி மலக்குடல். பெருங்குடல் வயிற்றுக்கு அருகில் இருக்கும். மலக்குடல் மிகவும் கீழே இருக்கும். இந்த இரண்டிலும் புற்றுநோய் வரக் காரணங்கள் ஒன்றாய் இருக்கின்றன. புற்றுநோயால் மலம் வெளியேறாமல் அடைப்பு ஏறடபடும். மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்கள் அடைப்பு ஏற்படுவதற்கு முன் ஆரம்பநிலையிலேயே தகுந்த முறையில் சிகிச்சையை பெற்றால் நீண்ட நாள் வாழலாம்.

முளையவியல்[தொகு]

குடல் அகத்தோலில் இருந்து விருத்தியடைந்த ஒரு பாகமாகும். முளையவிருத்தியின் கிட்டத்தட்ட 16வது நாளில் முளையம் இரு திசைகளில் மடிப்புறத் தொடங்கும்.

இழையவியல்[தொகு]

General structure of the gut wall

மனித இரையகக் குடற்பாதை பொதுவான இழையவியல் கட்டமைப்புடன் அதன் தனித்துவமான தொழிற்பாடுகளுக்குரிய விருத்திகளையும் கொண்டிருக்கும்.[15] இது பின்வரும் இழையங்களை கொண்டிருக்கும்.

சீதமென்சவ்வு[தொகு]

சீதமென்சவ்வு இரையகக் குடற்பாதையின் உள்ளக அணி ஆகும். இதன் உட்பகுதியில் சமிபாடடைந்த உணவு கொண்டுசெல்லப்படும்.

இது மூன்று மேலணிகளைக் கொண்டிருக்கும்.

 • புறவணியிழையம் -
 • தனித்துவப் படை (Lamina propria)
 • தசைச் சீதச்சவ்வு (Muscularis mucosae)

கீழ் சீதமென்சவ்வு[தொகு]

இது இணைப்பிழையங்கள், குருதிக்குளாய்கள், நிணநீர்க் கலன்கள், மற்றும் நரம்புகளைக் கொண்டு சீரற்ற படையாகக் காணப்படும்.

தசைச் சீதச்சவ்வு[தொகு]

தசைச் சீதச்சவ்வு உள்ளக வட்டத் தசைப் படையையும் நீளத்தசை கொண்ட படையையும் கொண்டிருக்கும். வட்டத் தசை உணவு பின்னேக்கி நகர்வதைத் தடுப்பதுடன் நீளத்தசை உணவுக்குழாய் சுருங்குவதி ஏற்படுத்துகின்றது. ஆயினும் இந்த படை மெய்யான நீள்பக்கத்தசை மற்றும் வட்டத்தசைகள் அல்ல. இவை சுருளியுருவான தசைகள்.

நோயியல்[தொகு]

சமிபாட்டுத்தொகுதியைப் பல நோய்கள் பாதிக்கின்றன. அவையாவன,

மேற்கோள்கள்[தொகு]

 1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் gastrointestinal tract
 2. மெஷ் Gastrointestinal+tract
 3. "Disintegration of solid foods in human stomach". J. Food Sci. 73 (5): R67–80. June 2008. doi:10.1111/j.1750-3841.2008.00766.x. பப்மெட் 18577009. 
 4. "Large intestine". Encyclopedia Britannica (2016). பார்த்த நாள் 1 October 2016.
 5. Nelson RJ. 2005. Introduction to Behavioral Endocrinology. Sinauer Associates: Massachusetts. p 57.
 6. Maton, Anthea; Jean Hopkins; Charles William McLaughlin; Susan Johnson; Maryanna Quon Warner; David LaHart; Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. ISBN 0-13-981176-1. 
 7. Pocock, Gillian (2006). Human Physiology (Third ). Oxford University Press. பக். 382. ISBN 978-0-19-856878-0. 
 8. Ten Cate's Oral Histology, Nanci, Elsevier, 2013, page 275-276
 9. Edgar, WM (1992). "Saliva:its secretion, composition and functions". Br.Dent J. 172: 305–12. doi:10.1038/sj.bdj.4807861. பப்மெட் 1591115. 
 10. Braden Kuo and Daniela Urma (May 2006). "Esophagus - anatomy and development". GI Motility online. doi:10.1038/gimo6. http://www.nature.com/gimo/contents/pt1/full/gimo6.html. 
 11. Mebius, RE and Kraal G. (2005). "Structure and function of the spleen". Nature Reviews Immunology 5: 606-616. http://www.nature.com/nri/journal/v5/n8/full/nri1669.html. 
 12. Nolte, M. A., 't Hoen, E. N. M., van Stijn, A., Kraal, G. and Mebius, R. E. (2000). "Isolation of the intact white pulp. Quantitative and qualitative analysis of the cellular composition of the splenic compartments". Eur. J. Immunol 30: 626–634. doi:30: 626–634. doi: 10.1002/1521-4141(200002)30:2<626::AID-IMMU626>3.0.CO;2-H. 
 13. மெஷ் Upper+Gastrointestinal+Tract
 14. வார்ப்புரு:MeSH name
 15. Abraham L. Kierszenbaum (2002). Histology and cell biology: an introduction to pathology. St. Louis: Mosby. ISBN 0-323-01639-1.