நரம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நரம்புகள் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளன

நரம்பணுக்களின் வெளிநீட்டமாக இருக்கும் நரம்பிழைகள் (axons), பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மூடப்பட்ட கட்டுக்களாக புற நரம்பு மண்டலத்தில் இருக்கையில் அவை நரம்புகள் எனப்படும். இந்த நரம்புகளே மின் வேதி கணத்தாக்கங்களை உடலின் பல பாகங்களுக்கும் கடத்துகின்றன. மைய நரம்பு மண்டலத்தில் இருக்கும் இந்த நரம்புகளை ஒத்த அமைப்புக்கள் tract (தமிழ்ச் சொல் தேவை) என அழைக்கப்படுகின்றது[1][2].

நரம்பிழைகளை மூடியிருக்கும் மயலின் உறைகளை உருவாக்கும் சுவான் கலங்களும் (Schwann cells) இந்த நரம்புகளில் காணப்படும்.

உடற்கூற்றியல்[தொகு]

நரம்பொன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

நரம்பிழைகள் (Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் உள்ளாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.

மைய நரம்புத் தொகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்புகளின் இக்குறிப்பிட்ட அமைப்பானது இடையில் உடையாமல் மிக நீளமாகச் சென்று தோல், கண் போன்ற உணர்வு உறுப்புக்களையோ, தசை, சுரப்பி போன்ற வேறு செயற்படு உறுப்புக்களையோ அடையும். இந் நரம்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பொதுவாக இந்த நரம்புகள் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் குருதிக் கலன்களுடன் இணைந்து உடல் பாகங்களுக்குள் செல்லும்.

நரம்புகளின் வகைகள்[தொகு]

கணத்தாக்கம் கடத்தப்படும் திசையையொட்டி[தொகு]

உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்

நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

1. உட்காவும் நரம்புகள் (Afferent nerves) இவை உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves) எனவும் அழைக்கப்படும். இவையே உணர்வு உறுப்புக்களில் இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை மைய நரம்புத் தொகுதியை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான தோலில் இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.

2. வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves) இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.

3. கலப்பு நரம்புகள் (Mixed nerves) இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.

இணைக்கப்படும் இடத்தையொட்டி[தொகு]

நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. முண்ணான் நரம்புகள் (Spinal nerves) இவை முள்ளந்தண்டு நிரலூடாக, முண்ணாணுடன் இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் புற நரம்புத் தொகுதியைச் சார்ந்ததாக இருக்கும்.

2. மண்டை நரம்புகள் (Cranial nerves) இவை தலையிலிருக்கும் பகுதிகளுடன் தொடர்புடையனவாக இருப்பதுடன் மூளையுடன், முக்கியமாக மூளைத் தண்டுப் பகுதியுடன் இணைந்திருக்கும். 12 சோடி நரம்புகள் உரோம எண்களால் அடையாளப்படுத்தப்படும். அத்துடன் மேலதிகமாக 0 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சோடி நரம்புகளும் இருக்கின்றன. 0 உள்ளிட்டம் முதல் மூன்று சோடி நரம்புகளும் பெருமுளைப் பகுதியிலிருந்தும், ஏனைய 10 சோடி நரம்புகளும் மூளைத் தண்டுப் பகுதியிலிருந்தும் வெளியேறும். பல நேரங்களில், இந்த நரம்புகள் தொடர்பு கொள்ளும் குறிப்பிட்ட உறுப்பின் அடிப்படையில், விளக்கமான பெயரீட்டையும் பெறுவதுண்டு. எ.கா. கண் நரம்பு, முக நரம்பு இவற்றில் கண் நரம்புகள் (மண்டை நரம்பு II) தவிர்ந்த ஏனைய நரம்புகள் யாவும் புற நரம்புத் தொகுதியைச் சாரும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Purves D, Augustine GJ, Fitzppatrick D et al. (2008). Neuroscience (4th ed.). Sinauer Associates. பக். 11–20. ISBN 978-0-87893-697-7. 
  2. Marieb EN, Hoehn K (2007). Human Anatomy & Physiology (7th ed.). Pearson. பக். 388–602. ISBN 0-8053-5909-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரம்பு&oldid=1916984" இருந்து மீள்விக்கப்பட்டது