இரைப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரைப்பை
உடலில் இரைப்பையின் அமைவிடம்
Diagram from cancer.gov:
* 1. இரைப்பையின் உடல்
* 2. அடிக்குழி
* 3. வெளிச்சுவர்
* 4. பெரிய வளைவு
* 5. சிறிய வளைவு
* 6. இதயத் துவாரப் பகுதி
* 9. குடல் வாயிறுக்கி
* 10. குடல் வாய்ப்பகுதி
* 11. குடல் வாய்
* 12. கோண முடிச்சு
* 13. இரைப்பைக் குழாய்
* 14. மடிப்புகள்

இலத்தீன் Ventriculus
கிரேயின்

subject #247 1161

நரம்பு celiac ganglia, vagus[1]
நிணநீர் celiac preaortic lymph nodes[2]
ம.பா.தலைப்பு இரைப்பை

இரைப்பை (Stomach) என்பது முதுகெலும்பிகள், பூச்சிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியில் மிக முக்கியமான சமிபாட்டை நிகழ்த்தும் ஓர் அகன்ற அறையாகும். இது உணவுக்குழாய் (அல்லது களம்) (Oesophagus), சிறுகுடல் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது. இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும். இரைப்பையின் இயக்கம் குடல் அலைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு அலைவும் இரைப்பையின் மைய உடற்பகுதியிலிருந்து தோன்றிப் பின்னோக்கிச் செல்லும். பின்னோக்கிச் செல்லும் முதல் அலைவு இரைப்பைக்கும், சிறுகுடலின் தொடக்கப் பகுதியான முன்சிறுகுடல் (Duodenum) பகுதிக்கும் இடையில் உள்ள பைலோரஸ் சுருக்குத் தசைகளைச் சுருங்கச் செய்யும். இரைப்பையின் உள்சுவற்றில் பல இரைப்பை நீர்ச் சுரப்பிகள் உண்டு. ஏறக்குறைய 40 மில்லியன் நுண்ணிய சுரப்பிகள் உள்ளன. இவற்றில் முதன்மையான உயிரணுக்கள் (chief cells) நொதிகளையும், சுவர் உயிரணுக்கள் (parietal cells) எனப்படும் ஆக்ஸின்டிக் (Oxyntic) உயிரணுக்கள் ஐதரோகுளோரிக் காடியையும் (HCl) சுரக்கின்றன. ஐதரோகுளோரிக் காடியினால் நொதியச் செயல்பாட்டிற்கு தேவையான அமிலத்தன்மை கிடைக்கிறது. இரைப்பையின் பெப்சின், ரெனின் போன்ற நொதியங்கள் சுரக்கப்படுகிறன.

கட்டமைப்பு[தொகு]

உணவுக்கால்வாயின் விரிவடைந்த பகுதி இரைப்பையாகும். இது J ஆங்கில எழுத்தைப் போன்ற வடிவமுடையது. வயிற்றறைக் குழியில் மேலுதரப்பகுதி, கொப்பூழ்ப்பகுதி, இடது உபமணிப்பகுதி என்பவற்றில் வியாபித்தபடி இரைப்பை அமைந்திருக்கும். உணவுக்குழாய் முடிவு இரைப்பையில் மூலம் திறக்கும். இரைப்பை முன்சிறு குடலுடன் குடல் வாய் மூலம் தொடர்பு கொள்ளும். இரைப்பை இரு வளைவுகளைக் கொண்டது. அவை சிறிய மற்றும் பெரிய வளைவுகளாகும். இரைப்பை மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை அடிக்குழி, உடல், குடல்வாய்க்குழி என்பனவாகும். இதயத் துவாரத்துக்கு மேலுள்ள பகுதி அடிக்குழியெனவும், பிரதான பகுதி உடல் எனவும், கீழ்ப்பகுதி குடல்வாய்க்குழி எனவும் அழைக்கப்படும். குடல் வாய்க்குழியின் சேய்மை முடிவில் இறுக்கி காணப்படுகின்றது. இது குடல்வாயிறுக்கி அல்லது குடல்வாய்ச்சுருக்கி எனப்படும். இது குடல்வாய்த் துவாரத்தின் பருமனைக் கட்டுப்படுத்தி இரைப்பையை விட்டு வெளியேறும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தும்.

இரைப்பைக்கான குருதி வழங்கலைக் காட்டும் வரைபடம்

குழிக்குடல் நாடியின் ஒரு பகுதி இரைப்பைக்குக் குருதியை வழங்கும். இரப்பையிலிருந்து குருதியைச் சேர்க்கும் உதர நாளம் குருதியை ஈரல்வாயி நாளத்தினுள் செலுத்தும்.

இழையவியல்[தொகு]

உணவுச் சுவட்டின் ஏனைய பாகங்கள் போலவே இதிலும் (வெளியிலிருந்து உள் நோக்கி) சிரோசா, வெளிப்புறத் தசைப்படை, உப சீதமுளிப் படை, சீதமுளிப் படை எனும் நான்கு இழையப்படைகள் இதன் சுவரில் உள்ளன. இதன் சீதமூளிப் படையின் அகவணியில் கம்பக் கலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவ் அகவணியில் உள்ள விசேட தற்காலிகமான மடிப்புக்கள் ருகேயின் மடிப்புக்கள் எனப்படும். இவை உணவைத் தேக்குவதற்கு உதவும். உணவு சேகரிக்கப்படும் போது இம் மடிப்புக்கள் அழுத்தமடைந்து இரைப்பையின் கனவளவை அதிகரிக்கின்றன. அகவணியில் விசேட கலங்களைக் கொண்ட உதரச் சுரப்பி உள்ளது. இது உதரச் சாறைச் சுரக்கும். உதரச் சாறின் ஒரு கூறான சீதம் இரைப்பை அகவணியை வன்னமிலமான HCl இடமிருந்து பாதுகாக்கும். இதனைத் தவிர அகவணியில் Gastrin எனும் ஓமோனைச் சுரக்கும் G- கலங்களும் உள்ளன. வெளிப்புறத் தசைப்படையில் நீள்பக்க மற்றும் வட்டத் தசைகளுக்கு மேலதிகமாக சரிவுத் தசைகளும் உண்டு. இந்த மழமழப்பான தசைகள் உணவைக் கடைதலுக்கு உதவுகின்றன. உதரச் சுரப்பிக் கலங்கள்:

சுரப்பியின் பகுதி பெயர் சுரப்பு இரைப்பையின் பிரதேசம் சாயமேற்றல்
ஆரம்பப் பகுதி/ நுழைவாயில் கழுத்துச் சீதக் கலங்கள் சீதம் அடிக்குழி, இதயவாய், குடல்வாய் தெளிவானது
உடற் பகுதி ஒக்சின்டிக் கலம் HCl அமிலமும் உள்ளீட்டுக் காரணியும் அடிக்குழி அமில நாடி
அடிப்பகுதி ஸைமோஜீனிக் கலம்/ பிரதான கலம் பெப்சினோஜன், உதர இலிப்பேசு அடிக்குழி மூல நாடி
அடிப்பகுதி அகஞ்சுரக்கும் கலங்களும், ஆர்ஜென்டிபின் கலங்களும் கஸ்ரின் ஓமோன், ஹிஸ்டமின், செரோடோனின் அடிக்குழி, இதயவாய், குடல்வாய்

தொழில்கள்[தொகு]

உணவுச் சமிபாடு[தொகு]

இரைப்பை பெப்சின் (புரதச் சமிபாடுக்கு) மற்றும் ரெனின் (பாலைச் சமிபாடடையச் செய்வதற்கு) ஆகிய நொதியங்களைச் சுரக்கும் ஆற்றலுடையது. இவை உணவுக் கால்வாய்த் தொகுதியில் புரதச் சமிபாட்டை ஆரம்பித்து வைக்கும். பெப்ப்சின் சிக்கலான புரத மூலக்கூறுகளை சிக்கல் குறைந்த பொலிபெப்டைட்டுகளாக மாற்றும்; ரெனின் பாலிலுள்ள கரையக்கூடிய கெய்சினோஜன் எனும் புரதத்தை கரையாத கெய்சினாக மாற்றி பாலைத் திரட்சியடையச்செய்யும். இந்நொதியங்கள் சிறப்பாக அமில ஊடகத்திலேயே தொழிற்படுவன. எனவே ஐதரோக்குளோரிக் அமிலத்தை உள்ளடக்கிய உதரச்சாற்றைச் சுரக்கும். இவ்வமிலம் உணவோடு சேர்ந்து வரும் சில பக்டீரியாக்கள் உட்பட்ட கிருமிகளை அழித்து (சில பக்டீரியாக்கள் இவ்வமிலத்திலிருந்தும் தப்பிக்கும் ஆற்றலுடையன) உடலைப் பாதுகாக்கின்றது. இரைப்பையில் இரசாயனச் சமிபாட்டுடன் பௌதிகச் சமிபாடும் நடைபெறும். பெரிய உணவுத்துணிக்கைகள் நன்றாக அமிலத்தில் கரைக்கப்பட்டு, கலக்கப்பட்டு சமிபாடடைய ஏதுவாக்கும். பெப்சின் மற்றும் ரெனினை இரைப்பை நேரடியாக சுரக்காது. பெப்சினை பெப்சினோஜன் என்ற வடிவிலும், ரெனினை புரோரெனின் என்ற வடிவிலும் சுரக்கின்றது. இவை ஐதரோகுளோரிக் அமிலத்தில் பெப்சினாகவும் ரெனினாகவும் மாற்றமடைகின்றன. சிறிது நேரத்தின் பின்னர் குடல் வாயிறுக்கியூடாக உணவுக்கரைசல் முன்சிறுகுடலுக்குள் மேலதிக சமிபாடு மற்றும் அகத்துறிஞ்சலுக்காக மெல்ல மெல்லத் தள்ளப்படும். உதரச் சாறிலுள்ள உதர இலிப்பேசு கொழுப்பின் ஆரம்பச் சமிபாட்டை நிகழ்த்தும்.

உணவைச் சேமித்தல்[தொகு]

இரைப்பையின் பிரதான தொழில் உணவைச் சேமித்தலாகும். இதனால் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வரை உணவைச் சேமிக்க முடியும். இது உணவைச் சேமிக்கும் நேரம் மூளையிலிருந்து வரும் தன்னாட்சி நரம்புகளினாலும், முன்சிறுகுடலினால் சுரக்கப்படும் ஓமோன்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

உணவைக் கடைதல்[தொகு]

களத்திலிருந்து இரைப்பைக்குள் விழும் உணவுத் திரள் உடைக்கப்பட்டு, உதரச் சாற்றுடன் கலக்கப்பட்டு, இரைப்பையிலுள்ள தசைகளின் செயற்பாட்டல் கடையப்படுகின்றது. இது உணவின் சமிபாட்டை வினைத்திறனாக்கும்.

போசணைப் பொருட்களின் அகத்துறிஞ்சல்[தொகு]

பின்வரும் போசணைப் பொருட்கள் இரைப்பையில் அகத்துறிஞ்சப்படுகின்றன:

  • நீர்
  • அஸ்பிரின், பரசிட்டமோல் போன்ற மருந்துப் பொருட்கள்
  • எத்தனோல்
  • கப்ஃபீன்

இரைப்பைச் சாறு சுரத்தல்[தொகு]

இரைப்பைச் சாறு என்பது சீதமுளிப் படை (Mucosa) இல் உள்ள இரைப்பைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் ஐதரோகுளோரிக் அமிலம் (HCl) நிறைந்த சுரப்பு ஆகும். இதில் புரதச் சமிபாட்டுக்குத் தேவையான நொதியங்களும், விற்றமின் B12 ஐ அகத்துறிஞ்சத் தேவையான Intrinsic factor உம் உள்ளன. ஐதரோகுளோரிக் அமிலம் உணவுடன் உட்கொள்ளப்படும் நுண்ணங்கிகளைக் கொல்வதற்கும், பெப்சினோஜன் நொதியத்தை பெப்சின் வடிவத்துக்கு மாற்றவும் பயன்படுகின்றது. இரைப்பைச் சாறு சுரத்தல் ஓமோன்கள் மற்றும் மூளையின் செயற்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. கஸ்ரைன் (Gastrin) ஓமோன் இரைப்பைச் சாறு சுரத்தலை அதிகரிக்கும். வேகஸ் நரம்பு (vagus nerve) மூலம் மூளை இரைப்பைச் சாறு சுரத்தலைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக உணவைப் பற்றி சிந்தித்தல், உணவைப் பார்த்தல், உணவைச் சுவைத்தல், மணத்தல், கேட்டல் ஆகிய தூண்டல்களும் மன அழுத்தமும் இரைப்பைச் சாறு சுரத்தலை அதிகரிக்கும். முன்சிறுகுடலால் சுரக்கப்படும் Secretin, CCK ஆகிய ஓமோன்கள் இரைப்பைச் சாறு சுரத்தலையும், இரைப்பை வெறுமையாவதையும் குறைக்கும்.

மருத்துவ முக்கியத்துவம்[தொகு]

இரைப்பை தொடர்பான நோய்களுள் இரைப்பை அழற்சி முக்கியத்துவம் பெறுகின்றது. இது இரைப்பையில் அதிக அமிலத்தன்மை காரணமாக இரைப்பைச் சுவர் சேதமடைந்து பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்றது. Helicobacter pylori எனும் பக்டீரியாவால் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக்கப்படுகின்றது. உடற்பருமனைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இரைப்பை அறுவைச் சிகிச்சையும் இதன் மருத்துவ முக்கியத்துவங்களுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:GeorgiaPhysiology
  2. வார்ப்புரு:NormanAnatomy

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைப்பை&oldid=3401426" இலிருந்து மீள்விக்கப்பட்டது