நாளமில்லாச் சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாளமில்லாச் சுரப்பிகள்
Illu endocrine system-ta.svg
முக்கியமான நாளமில்லாச் சுரப்பிகள்:

1 பீனியல் சுரப்பி 2 பிட்யூட்டரி சுரப்பி 3 தைராய்டு அல்லது கேடயச் சுரப்பி 4 தைமஸ் சுரப்பி 5 அட்ரினல் சுரப்பி 6 கணையம் 7 அண்டகம் (பெண்) 8 விதைப்பை (ஆண்)

இலத்தீன் glandulae endocrinae

நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது நாளமில் சுரப்பிகள் (இலங்கை வழக்கு: காணில் சுரப்பிகள் அல்லது அகஞ்சுரக்கும் சுரப்பிகள், ஆங்கிலம்: endocrine glands) என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, குழாய்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும். இவை அகச்சுரப்பித் தொகுதி யின் அங்கங்களாகும். கூம்புச் சுரப்பி, கபச் சுரப்பி, கணையம், சூலகம், விந்தகம், கேடயச் சுரப்பி, இணைகேடயச் சுரப்பி, ஐப்போத்தலாமசு, அண்ணீரகச் சுரப்பி ஆகியன நம் உடலில் உள்ள முக்கிய நாளமில்லாச் சுரப்பிகள் ஆகும்.

வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்கள் போன்ற உடற் தொழிற்பாடுகளை நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீர் கட்டுப்படுத்துகின்றது. இயக்குநீரின் அளவு கூடினாலோ குறைந்தாலோ நாளமில்லாச் சுரப்பி நோய்கள் உருவாகின்றன.


முக்கிய நாளமில்லாச் சுரப்பிகள்[தொகு]

கபச் சுரப்பி[தொகு]

மூளையின் அடிப்பகுதியில் ஒரு சிறிய தண்டு நீட்டமாக எலும்புகளால் சூழப்பட்ட எலும்புக் குழியில் அமைந்துள்ளது. இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: இயக்குநீர் உற்பத்தி செய்யும் சுரப்புப்பகுதி (முன்கபச்சுரப்பி அல்லது சுரப்பியக் கபச்சுரப்பி), ஐப்போத்தலாமசின் தொடர்ச்சியான நரம்பியப் பகுதி (பின்கபச்சுரப்பி அல்லது நரம்பியக் கபச்சுரப்பி). கபச் சுரப்பி முதன்மைச் சுரப்பி என்று அழைக்கப்படுகின்றது, எனினும் கபச் சுரப்பியைக் கட்டுப்படுத்துவது ஐப்போத்தலாமசு ஆகும்.

ஐப்போத்தலாமசால் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்சிடோசின் மற்றும் வாசோபிரெசின் ஆகிய இயக்குநீர்களை நரம்பியக் கபச்சுரப்பி குருதியுள் வெளிவிடுகின்றது, இங்கு இயக்குநீர் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் முன்கபச்சுரப்பி உடலின் ஏனைய சில இயக்குநீர்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நான்கு இயக்குநீர்களை உற்பத்தி செய்து சுரக்கின்றது. ஏனைய நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் இயக்குநீர், சுரப்பூக்கி இயக்குநீர் என அழைக்கப்படுகின்றது. பெரும்பான்மை முன்கபச்சுரப்பி இயக்குநீர்கள் நித்தமும் சீரான ஒழுங்கில் பகற்பொழுது சுரக்கப்படுகின்றன என்றாலும் அதன் சீர்மை ஐப்போத்தலாமசு தூண்டப்படல் மூலம் மாற்றியமைக்கப்படுகின்றது.

முன்கபச்சுரப்பியின் இயக்குநீர்கள்: வளர்ச்சி இயக்குநீர், கேடயச் சுரப்பூக்கி இயக்குநீர், அண்ணீரகப்புறணி சுரப்பூக்கி இயக்குநீர், மூலவுயிரணுத் தூண்டும் இயக்குநீர், மஞ்சள் உடலமாக்கு இயக்குநீர், புரோலாக்டின்.

வளர்ச்சி இயக்குநீர் உடலின் இழையங்களின், குறிப்பாக வன்கூட்டுத்தசை, எலும்பு போன்றனவற்றின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வளர்மாற்ற இயக்குநீர் ஆகும். இது நேரடியாகவோ அல்லது இன்சுலின்-போன்ற வளர்சிக் காரணி மூலம் மறைமுகமாகவோ செயற்படலாம். கொழுப்பு நகர்மை, புரதத்தொகுப்புத் தூண்டல், குளுக்கோசு உள்ளெடுப்பைத் தடுத்தல் ஆகிய செயல்களை வளர்ச்சி இயக்குநீர் மேற்கொள்கின்றது. ஐப்போத்தலாமசு இயக்குநீரான வளர்ச்சி இயக்குநீர் வெளிவிடும் இயக்குநீர் மற்றும் வளர்ச்சி இயக்குநீர் தடுப்பு இயக்குநீர் ஆகியன வளர்ச்சி இயக்குநீர் சுரத்தலைக் கட்டுப்படுத்துகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளமில்லாச்_சுரப்பி&oldid=2505096" இருந்து மீள்விக்கப்பட்டது