காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐதரோகுளோரிக் அமிலம் நாகத்துடன் தாக்கமடைந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகின்றது.

காடி, அமிலம் அல்லது புளிமம் என்பது, நீரில் கரைத்தால் ஐதரச மின்மவணுக்கள் (அயனிகள்) தூய நீரில் இருப்பதைக்காட்டிலும் கூடுதலாக இருக்குமாறு செய்யக்ககூடிய ஒரு வேதிப் பொருள். அப்படி கூடுதலான ஐதரச மின்மவணுக்கள் இருப்பதல் ஐதரோனியச் சுட்டெண் (pH) 7.0 ஐ விடக் குறைவாக இருக்கும் (அதாவது ஐதரோனியக் மின்மவணு (H
3
O+
) அதிகமாக இருக்கும்; சுட்டெண் கழித்தல் மடக்கை அடிப்படையில் ஆனதால்). காடிகள் புளிப்புச் சுவை கொண்டவையாக இருக்கும். ஆகவே காடியைப் புளிமம், அமிலம் என்றும் கூறுவர். பல காடிகள் தோலில் பட்டாலும் 'சுறுசுறு' என்று எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு (Johannes Nicolaus Brønsted), மார்ட்டின் லோரி (Martin Lowry) என்னும் வேதியியலாளர்கள், காடி என்பதற்கு தந்த தற்கால வரையறையின்படி ஒரு வேதிப்பொருளுக்கு ஐதரசை மின்மவணுவை (hydrogen ion (H+)) கொடுக்கும் பொருளுக்கு காடி என்று பெயர். புளிக்கரைசல், எலுமிச்சை சாறு, வினிகர், கந்தகக் காடி போன்ற இவை எல்லாம் காடிகளுக்கு எளிய எடுத்துக்காடுகள். பல காடிகள் செப்பு, துத்தநாகம் போன்ற மாழைகளைக் கரைக்கவல்லவை. நீல லிட்மசுத் தாளை சிவப்பாக்கும் பண்பு கொண்டது. காரப்பொருட்கள் (Bases) காடிகளின் தன்மையை நீர்த்து விடும்.காடிகள் தனியாகவோ கரைசலாகவோ இருக்கலாம்.மேலும் இவற்றை திட, திரவ, அல்லது வாயுக்களில் இருந்து பெற முடியும். கார்போரேன் மற்றும் போரிக் அமிலம் தவிர்த்து மற்ற வலுவான அமிலங்கள் மற்றும் சில பலவீனமான அமிலங்களின் அடர்த்தியான கரைசல்கள் அரிக்கும் தன்மையுடையதாக இருக்கின்றன

மாற்று விளக்கம்[தொகு]

காடிகள் எதிர்மின்னிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை.

காடி நீரில் எப்படி கலக்கிறது?[தொகு]

காடிகள் நீரில் கரையும் போது ஐதரசன் மின்மவணுக்களை (அயனிகளை (H+)) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஐதரசனின் எதிர்மின்னியை ஈர்த்துக் கொண்டு நேர்மின்னியை (புரோடானை) தனியாக விட்டுவிடுகிறது. (ஐதரசன் ஒரேயொரு நேர்மின்னியும் எதிர்மின்னியும் கொண்ட எளிய அணு. ஓர் எதிர்மின்னி பிரிந்தால் H+ என்னும் ஐதரசன மின்மவணுவாக மாறிவிடுகின்றது.

இதனால் காடி - 'கரைசலில் நேர்மின்னியை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும், ஐதரசன் இல்லாத காடிகளும் உண்டென்பதால், மேற்ச் சொன்ன விளக்கமே பொதுவான விளக்கமாகிறது.

காடியின் வலிமை:[தொகு]

காடி எந்த அளவுக்கு கரைசலில் ஐதரசன் மின்மவணுக்களை தன்னிடமிருந்து பிரித்துக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து காடியின் வலிமை தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக - ஐதரோ குளோரிக் காடியின் (HCl) ஒவ்வொரு மூலக்கூற்றுகளும் (சேர்மங்களும்) கரைசலில் ஐதரசன் மின்மவணுக்களை விடுவிக்கிறது. அதனால் இது வலிமையான காடியாகவும். அசிட்டிக் காடி (வினிகரில் இருப்பது) ஒரு சில மின்மவணுக்களை மட்டுமே விடுவிப்பதால் மென்மையான காடி என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

பயன்கள்[தொகு]

அமிலங்கள் பல பயன்களை கொண்டுள்ளன.அவை

  • உலோகங்களில் துரு மற்றும் பிற அசுத்தங்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
  • நீர்ம மின்கலத்தில் கந்தக அமிலம் மின்னாற்பகு பொருளாக பயன்படும்.
  • வலுவான அமிலங்கள் குறிப்பாக கந்தக அமிலம் பரவலாக கனிமங்களை பயன்படுத்தப்படுத்தி வினை பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பாஸ்பேட் தாதுடன் கந்தக அமிலம் சேர்த்து பாஸ்பேட் உரங்கள் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் தயாரிக்கப்படுகின்றன. மற்றும் துத்தநாகம் தயாரிப்பின் போது துத்தநாக ஆக்ஸைடு கந்தக அமிலத்தில் கரைத்து துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • இரசாயன துறையில் உப்புக்களை உற்பத்தி செய்ய அமிலங்கள் நடுநிலையாக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நைட்ரிக் அமிலத்துடன் அம்மோனியா வினைபுரிந்து அம்மோனியம் நைட்ரேட் என்ற உரமாகப்பயன்படும் உப்பை உற்பத்தி செய்கிறது.மேலும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆல்கஹாலுடன் வினைபுரிந்து ஈதர் தயாரிக்கப்படுகிறது.
  • அமிலங்கள் பானங்கள் மற்றும் உணவுகளில் அவற்றின் சுவையை மாற்றவும் நிலைப்படுத்தும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பாஸ்பாரிக் அமிலம் கோலா பானத்தின் ஒரு அங்கமாகும். அசிட்டிக் அமிலம் வினிகர் என்ற பெயரில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும்.கார்பானிக் அமிலம் சில கோலா பானங்கள் மற்றும் சோடாவின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. சிட்ரிக் அமிலம் சுவையூட்டிகள் மற்றும் ஊறுகாய்களில் நிலைப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது.

  • டார்டாரிக் அமிலம் மாம்பழம், புளி போன்ற உணவுகளில் ஒரு முக்கியமான பகுதிப்பொருள் ஆகும்.மேலும் இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளும் அமிலங்கள் கொண்டிருக்கின்றன.

சிட்ரிக் அமிலம் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்களில் உள்ளது.ஆக்ஸாலிக் அமிலம் தக்காளி, கீரை போன்ற உணவுப்பொருட்களில் காணப்படுகின்றது. அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி) மனித உடலில் ஒரு அத்தியாவசிய வைட்டமின் மற்றும் நெல்லிக்காய், எலுமிச்சை, சிட்ரஸ் பழங்கள், மற்றும் கொய்யா போன்ற உணவுகள் இருக்கிறது.

  • மனித உடலில் அமிலங்கள் முக்கிய பங்குவகிக்கின்றது.மனித வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் பெரிய, சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து செரிமானத்தை எளிமையாக்குகின்றது.

அமினோ அமிலங்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைக்க தேவையான புரதங்களின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.கொழுப்பு அமிலங்களும் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது.சந்ததியினருக்கு மரபு பண்புகளை கடத்தும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ களை உருவாக்க நியூக்ளிக் அமிலங்கள் பயன்படுகின்றது.உடலில் கார சமநிலையை பராமரிக்க கார்பானிக் அமிலம் அவசியமாகும்.

அமில வினையூக்கியின்[தொகு]

அமிலங்கள் தொழில்துறை மற்றும் கரிம வேதியியல் துறைகளில் அதிக அளவில் வினையூக்கியாக பயன்படுத்தப்படுகின்றன.உதாரணமாக, கந்தக அமிலம் பெட்ரோல் உற்பத்தியின் போது அல்க்கைல் ஏற்ற செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது.கந்தக, பாஸ்போரிக் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற வலுவான அமிலங்கள் நீர்நீக்க மற்றும் ஒடுக்க எதிர்வினைகளில் முக்கிய பங்காற்றுகிறது. உயிர்வேதியியல் துறையில் பல என்சைம்கள் அமிலங்களை வினையூக்கியாக பயன்படுத்துகின்றது.

கனிமக் காடிகள் (In-Organic Acids)[தொகு]

பொதுவாக கார்பன் அணுக்களைக் கொண்டிராதவை. பல கனிம (in-organic) அமிலங்கள் மிக வலிமையானவை. வெடிமருந்துகள், உரங்கள், மாழைகள் (உலோகங்கள்), நிறச்சாந்து (பெயிண்ட்), நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் செய்சேர் (செயற்கை) இழைகள் முதலியவை உருவாக்க உதவுகின்றன.

ஊர்திகளில் மின்கல அடுக்குகளில் ( பேட்டரிகளில்) பயன்படுத்தப்படும் கந்தகக் காடி ஒரு கனிமக் காடியாகும். ஐதர்ரோ குளோரிக் காடி, நைட்ரிக் காடி ஆகியவை பிற முக்கிய கனிமக் காடிகள்.

கரிமக் காடிகள் (Organic Acids)[தொகு]

நீரில் கரைக்கப்பட்ட அசெற்றிக் அமிலம்

இவை கார்பன் அணுக்களைக் கொண்டவை. பானங்கள், உடலழகுப் பொருட்கள், டிட்டர்ச்செண்ட், சோப்புகள், உணவு, மருந்துகள், நெகிழிகள் படைக்க உதவுபவை.

சிட்ரிக் காடி, அசுகார்பிக் காடி (விட்டமின் C), அசிட்டைல் சாலிசைலிக் காடி (ஆஸ்பிரின்) மற்றும் அமினோக் காடிகள் போன்றவை பரவலாக அறிந்த கரிமக் காடிகள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடி&oldid=2106344" இருந்து மீள்விக்கப்பட்டது