செல்வந்தனும் இலாசரசும் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வந்தனும் இலாசரசும்

செல்வந்தனும் இலாசரசும் இயேசு கூறிய ஒர் உவமானக் கதையாகும். இது லூக்கா நற்செய்தியில் (16:19-31) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. செல்வந்தனது பெயர் தைவிஸ் என்பது மரபு. இது பெருஞ்செல்வந்தன் என்பதற்கான இலத்தீன் மொழிப்பதமான "Dives" என்பதன் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும். இயேசு மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரசும் இக்கதையில் வரும் இலாசரசும் ஒருவரல்ல. இவர்கள் இருவரும் வெவ்வேறு மனிதர்கள். இக்கதை இயேசுவின் பிரபல உவமைகளில் ஒன்றாகும். முக்கியமாக பல ஓவியரது கவனத்தையும் ஈர்த்த உவமை இது.

உவமை[தொகு]

செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். கடைசியில் ஒருநாள் அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் ஒருநாள் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவரோ நரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். இலாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் வெந்து, வறண்டு நான் மிகுந்த வேதனையை அடைகிறேன்" என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் அதே வேளையில் வேதனைப்படுபவனை உன் கண்கள் பார்க்கவில்லை. ஆனால் இலாசர் இன்னல்களையே அடைந்தார், அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும், கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது" என்றார்.

அதற்கு செல்வந்தன், "அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே" என்றார். அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. இறைவாக்கினருக்கு அவர்கள் செவிசாய்க்கட்டும்" என்றார். செல்வந்தரோ, "அப்படியல்ல! தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்" என்றார். ஆபிரகாம் அவருக்கு மறுமொழியாக, "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்" என்றார்.

கருத்து[தொகு]

மற்றைய உவமைகளைப் போலல்லாது இவ்வுவமையில் தெளிவான உட்கருத்து காணப்படுவதாகத் தெரியவில்லை. இதில் இலாசரசு ஏழை என்பதைவிட அவர் உத்தமராக வாழ்ந்தாரா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேலும் செல்வந்தன் நரகத்துக்குச் செல்வதற்கு அவன் செய்த பாவம் என்ன என்பதும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இவ்வுவமை பல ஆய்வாளரின் கவனத்தை ஈர்த்தது. ஆகவே இது உவமை என்ற வகைக்குள் அடங்காது என்பது சிலரின் வாதமாகும். ஆனாலும் இது இப்போது புறக்கணிக்கப்படுள்ளது. புதிய கருத்துகளின் படி இயேசு இக்கதையின் முன்பகுதியை (லூக்கா 16:19-26) உவமையாகவும் மிகுதியைத் தன்னை (இயேசுவை) ஆபிரகாம் மற்றும் மோசேயின் சாட்சியாக விசுவாசிக்காத யூதரைக் கண்டிக்கும் வகையில் கூறிய வாய்மொழியாகவும் கருதுகின்றனர்.

இக்கதையிலிருந்து இறப்பின் பிறகு ஒருவரது ஆத்துமா மோட்சம் அல்லது நரகம் செல்லும் முன்னர் இடைநிலை ஒன்றில் உலக முடிவுவரை தங்குகிறது என்ற கருத்தை இயேசு கூறியதாக கத்தோலிக்கர் நம்புகின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]