திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை
திராட்சை தோட்ட வேலையாட்கள் இயேசு விண்ணரசின் தன்மையை விளக்குவதற்காக தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமான கதையாகும். இது விவிலியத்தின் மத்தேயு 20:1-16 இல் காணப்படுகிறது.[1][2][3]
சொல் விளக்கம்
[தொகு]தெனரியம் (denarius) எனப்து பழைய உரோமை இராச்சியத்தின் ஒரு வெள்ளிக்காசு ஆகும். 25 வெள்ளி காசுகள் ஒரு பொற்காசுக்கு சமனாகும். இங்கே குறிப்பிடப்ப்பட்டுள்ள மணித்தியாலங்கள் அக்காலத்தில் யூதா நாட்டில் வழக்கில் இருந்த நேர முறையின் படியானவையாகும். இவை சூரிய உதயத்திலிருந்து கணக்கிடப் பட்டவையாகும்.
உவமை
[தொகு]நிலக்கிழார் (பண்ணையாளர்) ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். பின்பு மூன்றம் மணிவேலையில் அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம்,"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஒன்பதாம் மணிவேலையிலும் வெளியே சென்று அப்படியே செய்தார். பதினோராம் மணிவேளையிலும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம்,"நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து," எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம்,"நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்கிய கூலி கொடும்" என்றார். எனவே பதினோராம் மணிவேளையில் வந்தவர்கள் ஒரு தெனரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து,"தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதாய் உமக்குப் பொறாமையா?" என்றார்.
பொருள்
[தொகு]இதில் திராட்சைத்தோட்டம் விண்ணரசாகவும்,பண்ணையாளர் கடவுளாகவும் கிறிஸ்தவர் பணியள்களாகவும் உவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் பொருள் விண்ணரசிற்கு வேலை செய்பவர்கள் யாவரும் இறுதியில் பெறப்போகும் ஊதியம் சமன் என்பதே. இவ்வுலகில் கடவுளுக்கு சிறிய அளவில் வேலை செய்தவனும் பாரிய வேலைகளை செய்தவனும் விண்ணரசில் ஒரே மாதிரியாகத்தான் நோக்கப்படுவார்கள். அதாவது விண்ணரசில் தலைவர் சீடர் சிறியவர் பெரியவர் என்ற பேதம் கிடையாது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- தமிழ் விவிலியம் மத்தேயு நற்செய்தி
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்
- யாகூ அகராதி[தொடர்பிழந்த இணைப்பு] தெனரியம்
வெளியிணப்புகள்
[தொகு]- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2006-10-07 at the வந்தவழி இயந்திரம் உவமைகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meyer, H. A. W., Meyer's NT Commentary: Matthew 20, accessed 29 September 2019
- ↑ Alford, H., Greek Testament Critical Exegetical Commentary - Alford on Matthew 20, accessed 10 December 2022
- ↑ Complete Commentary on the Whole Bible, Matthew Henry, (1706).