பத்துக் கட்டளைகள்
பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது.[1] கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" [2] என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்படிக்கை என்ற பதத்தைப் பாவிக்கிறது.[3]
முன்னாயத்தம்
[தொகு]விவிலியத்தின் படி, பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.[4] அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:
- உடைகளை கசக்கி தூய்மைப்படுத்தல் (19:10)
- உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)
மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.
விவிலிய வசனங்கள்
[தொகு]பின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20:1-17 மற்றும் இணைச் சட்டம் 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.
விடுதலைப் பயணம் 20:2-17 | இணைச் சட்டம் 5:6–21 |
---|---|
2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். 3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. 4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். 5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். 6 மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். 7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். 8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. 9 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். 10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். 11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். 12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. 13 கொலை செய்யாதே. 14 விபசாரம் செய்யாதே. 15 களவு செய்யாதே. 16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. 17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. |
6 கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே.
7 என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது. 8 மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. 9 நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்: என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன். 10 மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன். 11 கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார். 12 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி. 13 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய். 14 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும். 15 எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார். 16 தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே. 17 கொலை செய்யாதே. 18 விபசாரம் செய்யாதே. 19 களவு செய்யாதே. 20 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. 21 பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. |
வகைப்படுத்தல்கள்
[தொகு]மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.[5] எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.
இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன:
கட்டளை | யூதம் | ஆங்கிலிக்கம், சீர்திருத்தத் திருச்சபைகள் | மரபுவழி திருச்சபைகள் | கத்தொலிக்கம், லூதரன் |
---|---|---|---|---|
நானே உன் கடவுளாகிய ஆண்டவர் | 1 | முன்னுரை | 1 | 1 |
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது | 2 | 1 | ||
(...) யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம் | 2 | 2 | ||
உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே | 3 | 3 | 3 | 2 |
ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு | 4 | 4 | 4 | 3 |
உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட | 5 | 5 | 5 | 4 |
கொலை செய்யாதே | 6 | 6 | 6 | 5 |
விபசாரம் செய்யாதே | 7 | 7 | 7 | 6 |
களவு செய்யாதே | 8 | 8 | 8 | 7 |
பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே | 9 | 9 | 9 | 8 |
பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே | 10 | 10 | 10 | 9 |
பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே | 10 |
கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்
[தொகு]- முதலாவது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது. (இறையன்பு கட்டளைகள்: 3)
- நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. (1)
- உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. (2)
- ஆண்டவரின் நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. (3)
- இரண்டாவது தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது. (பிறரன்பு கட்டளைகள்: 7)
- உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. (4)
- கொலை செய்யாதே. (5)
- விபசாரம் செய்யாதே. (6)
- களவு செய்யாதே. (7)
- பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. (8)
- பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே. (9)
- பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. (10)
ஒரே சர்வேஸ்வரனை விசுவசிப்பாயாக
சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள்
[தொகு]சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
முகவுரை: 20:1-2 [6]
இது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.
- வசனம் 20:3 [7]
இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. - வசனங்கள் 20:4-6 [8]
இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது. - வசனம் 20:7 [9]
இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது. - வசனங்கள் 20:8-11 [10]
இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. - வசனங்கள் 20:12 [11]
இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. - வசனங்கள் 20:13 [12]
இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன. - வசனங்கள் 20:14 [13]
இதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன. - வசனங்கள் 20:15 [14]
திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது. - வசனங்கள் 20:16 [15]
இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது. - வசனங்கள் 20:17 [16]
தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.
திரைப்படம்
[தொகு]இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ விடுதலைப் பயணம் 31:18
- ↑ விடுதலைப் பயணம் 34:28
- ↑ விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு
- ↑ விடுதலைப் பயணம் 19:10-16
- ↑ விடுதலைப் பயணம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4
- ↑ விடுதலைப் பயணம் 20:1-2
- ↑ விடுதலைப் பயணம் 20:3
- ↑ விடுதலைப் பயணம் 20:4-6
- ↑ விடுதலைப் பயணம் 20:7
- ↑ விடுதலைப் பயணம் 20:8-11
- ↑ விடுதலைப் பயணம் 20:12
- ↑ விடுதலைப் பயணம் 20:13
- ↑ விடுதலைப் பயணம் 20:14
- ↑ விடுதலைப் பயணம் 20:15
- ↑ விடுதலைப் பயணம் 20:16
- ↑ விடுதலைப் பயணம் 20:17
வெளியிணைப்புகள்
[தொகு]- பத்துக்கட்டளைகள்: விடுதலைப் பயணம் 20 அதிகாரம் (எழுத்து வடிவு, எம்பி3), Deut. 5 version (text, mp3) in The Hebrew Bible in English by Jewish Publication Society, 1917 ed.
- Jewish Encyclopedia: Decalogue
- Catechism of the Catholic Church
- Decalogue in the 1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- The Ten Commandments from the 1908 Catholic Encyclopedia