வேணாடு
வேணாடு பண்டைச் சேர நாட்டில் அமைந்திருந்த 18 நாடுகளில் ஒன்றாகும்.
வரலாறு[தொகு]
பாண்டியநாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.இதனை ஆயர் குல மன்னர்கள் ஆயக்குடியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.சங்க காலம் முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை ஆய் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் ஆய்நாடு நீங்கலான உட்பகுதிகளை உள்ளடக்கிய கொல்லத்திற்கு அப்பால் வரை அரச குடியினரின் வலிமையான ஆட்சி நிலவிய நாடாக வேணாடு விளங்கியது. கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் சேரப் பேரரசின் மைய அரசு வலுவிழந்த நிலையில், பிற்காலச் சோழர்களின் தொடர் படையெடுப்பை எதிர்கொள்ளவியலா நிலையிலும், வாரிசில்லா நிலையிலும் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது[1]. இப்படியாக வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.
சேர மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார்[2]. கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் அகதிகளாக வந்து தங்கியிருந்த யூதர்களுக்கு குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்[3].
நடுக் கால வரலாற்றில் (கி.பி 650 முதல் 966 வரை) இப்பகுதி பாண்டியர்களின் படையெடுப்புக்கு உட்பட்டிருந்தது. கி. பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளினி என்பார், பாண்டியனின் பிரதிநிதிகள் வாசனைத் திரவியங்கள் தருவதாகக் கூறி அவ்வரசனின் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சூருக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்குத் தன்னை அழைத்ததாகக் கூறியுள்ளார். ஆய் வேளிர் எனப்பட்டோர் பாண்டிய அரசர்களுக்குக் கீழ்ப்பட்டு இப்பகுதிகளை ஆண்டுவந்தனர்.
இவ்வேணாட்டின் கடைசி மன்னன் பால ராமா உதய மார்த்தாண்ட பெருமாளுக்கு 1810 பின்பு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணியின் இரண்டு பெண்கள் தத்து எடுத்தனர் திருவிதாங்கூர் அரச குடும்பம் மாற்றம் செய்யப்பட்டது.
வேளிர் நாடு ஆகையால், வேள் நாடு எனப்பட்டு வேணாடு ஆனதாகக் கருதப்படுகிறது. தமிழில் யானை வேழம் என்றும் அழைக்கப்படும். எனவே யானைகள் நிறைந்த பகுதியாகிய இந்நாடு வேழ நாடு எனப்பட்டு வேணாடு ஆகியதாகக் கூறுவோரும் உளர்.
வேணாட்டு அரசர்கள்[தொகு]
வேணாட்டை திருவடி என்ற பட்டபெயருடன் கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1758 வரை 42 அரசர்கள் தன்னாட்சியோடு ஆண்டுள்ளனர். கி.பி 849 இல் வாழந்த ஐயனடிகள் திருவடி என்ற மன்னன் துரிசாப் பள்ளிக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். இவர்கள் திற்பாப்பூர் பரம்பரையினராகும்.
மன்னர்கள்[தொகு]
- கோதை வர்மா மார்தாண்டா (1102–1125)
- வீர கேரள வர்மா I (1125–1145)
- கோதை கேரள வர்மா (1145–1150)
- வீர ரவி வர்மா (1161–1164)
- வீர கேரள வர்மா II (1164–1167)
- வீர ஆதித்யா வர்மா (1167–1173)
- வீர உதய மார்த்தண்ட வர்மா (1173–1192)
- தேவதரம் வீர கேரள வர்மா III (1192–1195)
- வீர மணிகண்ட இராம வர்மா (1195–1209)
- வீர இராம கேரளா வர்மா (1209–1214)
- வீர ரவி கேரள வர்மா (1214–1240)
- வீர பத்மனாப மார்த்தண்ட வர்மா (1240-1252)
- பாண்டியர் ஆட்சி
- ஜெயசிம்ம தேவா (1266–1267)
- பாண்டியர் ஆட்சி
- இரவி வர்மா...கேரள சித்திரவல்லி (1299-1313)
- வீர உதய மார்த்தண்ட வர்மா (1313-1333)
- ஆதித்யா வர்மா (1333–1335)
- வீர இராம உதய மார்த்தண்டா வர்மா (1335–1342)
- வீர கேரள வர்மா (1342-1363)
- வீர மார்டண்டா வர்மா III (1363-1366)
- வீர இராம மார்த்தாண்ட வர்மா (1366-1382)
- வீர ரவி வர்மா (1383–1416)
- வீர ரவி ரவி வர்மா (1416–1417)
- வீர கேரள மார்த்தாண்ட வர்மா (1383)
- சேர உதய மார்த்தண்டா வர்மா (1383–1444)
- வீர ரவி வர்மா, (1444-1458)
- சங்கரா ஸ்ரீ வீர ராம மார்த்தாண்ட வர்மா (1458–1468)
- வீர கோதை ஸ்ரீ ஆதித்ய வர்மா (1468–1484)
- வீர ரவி ரவி வர்மா (1484-1503)
மார்த்தாண்ட வர்மா (1503-1504)
- வீர ரவி கேரள வர்மா (1504–1528)
- புலி பூதள வீர உதய மார்த்தாண்ட வர்மன் (1528-1544)
இராமர் திருவடி (1104-1126)[தொகு]
இவர் சிறந்த போர் வீரர். கி.பி. 1102 இல் குலோத்துங்க சோழன் பெரும்படையுடன் வேணாட்டை தாக்கினான். இராமர் திருவடி நாட்டை காப்பாற்றிப் பனங்காவூர் மாளிகையிலிருந்து அரசாண்டார். சோழர்களை விரட்ட சாவேறு படை என்னும் தற்கொலைப் படையையும் அமைத்தார். களரி ஆசான்கள் தலைமையில் தெக்கன் களரியும், ஈழவர்களைத் தலைமையாகக் கொண்டு வடக்கன் களரியும் செயல்பட்டன.
வீர கேரளவர்மன்(1126-1145)[தொகு]
சாவேறுப் படைகளுடன் இணைந்து சோழர்படையை வேணாட்டினின்று முழுமையாக விரட்டினார். ஆரல்வாய்மொழி வரை வேணாட்டின் இறையாண்மை நிலை நிறுத்தப்பட்டது.
சேர உதய மார்த்தாண்டன் / வீர பாண்டியன் (1310-1335)[தொகு]
பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகளைத் திருமணம் செய்து பாண்டியருடன் உறவை வலுப்படுத்தினார். இக்காலத்தில் தான் டில்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் மதுரையை தாக்கி பாண்டிய நாட்டை அலைக்கழித்தான். வேணாட்டு அரசர் பெரும் படையுடன் மதுரையை முற்றுகையிட்டு மாலிக்காபூரை தோற்கடித்து மதுரையை மீட்டார் (கி.பி. 1313). இவர் வேகவதி ஆற்றங்கரையில் மும்மண்டலாதிபதி என முடிசூட்டிக்கொண்டமையால் காஞ்சிபுரம் வரை படையெடுத்து வந்தார் என்பதில் ஐயமில்லை[4]. இவர் கலைகளைப் போற்றினார். கல்குளம் கோட்டையினுள் தாய்க் கொட்டாரம் கட்டினார். இது வேணாட்டுப் பாரம்பரியமான நாலுகட்டு வீடு மாதிரி அமைந்துள்ளது. அரண்மனையிலும் பத்திரகாளியம்மனுக்கு 41 நாட்கள் விழா நடத்தப்பட்டது[5].
புலி பூதள வீர உதய மார்த்தாண்டன் (1522-1544)[தொகு]
இவர் மிகச்சிறந்த போர்வீரர். இவர் காலத்திலே வேணாடு சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதி வரை பரவியது. சுசீந்திரம், தோவாளை, தாழக்குடி, ஊர்களின் கோயில்களுக்கு நிலக்கொடை அளித்தார். கோட்டாறிலிருந்த சமணப்பள்ளிக்கு (தற்போதைய நாகராஜா கோயில்) நிலதானமளித்தார்.
உமையம்மை ராணி (1677-1685)[தொகு]
உமையம்மை ராணியின் கணவர் ஆதித்தியவர்மன் விடம் வைத்து கொல்லப்பட்டார். ஐந்து குழந்தைகளும் களிப்பான் குளத்தில் மூழ்கடித்து பகைவர்களால் கொல்லப்பட்டார்கள். இந்நிலையிலும் துணிச்சலுடன் ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்தினார். இதனால் வேணாடு தமிழர் கட்டுப்பாட்டுக்குள் தொடர்நதது.
வீர கேரளவர்மன்(1685-1718)[தொகு]
இவர் முகலாயர் படையைத் தோற்கடித்து படைத்தளபதி முகிலனைத் திருவட்டாற்று போரில் கொன்று ஒழித்தார். இதனால் வேணாடு முகலாயர் ஆட்சிக்குட்படவில்லை. நாயர் சமுதாயத்தை அழுத்திய சமூக கொடுமையான புலைப் பேடி, வெண்ணான் பேடி வழக்கத்தை தடை செய்தார். 1696ல் இதை குறிப்பிடும் கல்வெட்டு ஆணை பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது.
பால மார்த்தாண்டன் (1728-1758)[தொகு]
வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட எட்டரை யோகக்காரர்கள் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை மாடம்பிகள் தலைமையில் களரி வீரர்கள் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். இவர் அரசனின் சகோதரி மகன். திற்பாப்பூர் பரம்பரையில் வந்தவர். இவர் மருமக்கள் வழி வந்தவர் என்ற கூற்றுமுள்ளது. இவருக்கு முன் வந்த வேணாட்டு அரசர்கள் யாரும் மருமக்கள் வழியில் பதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இவர் சிறந்த போர் வீரர். இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு கொச்சி வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர். யோகக்காரரை அடக்கி நாட்டை வழிநடத்த எட்டுதுரம் களரி ஆசான்களை திருவனந்தபுரத்தில் குடியமர்த்தினார்[6]. மார்த்தாண்டவர்மன் நாட்டை பத்மநாபசாமிக்கு அர்பணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மன்னர் காலத்தில் நாட்டின் தலைநகர் கல்குளம் ஆகும். தான் ஆட்சிக்கு வர உதவியதற்காகவும், நாட்டை விரிவாக்க உதவியதற்காகவும் தலைநகரின் பெயரை பத்மசாமியை கௌரவிக்கும் பொருட்டு பத்மநாபபுரம் என்று மாற்றினார். கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
நிர்வாக முறை[தொகு]
வேணாடு, "நாடு" என்ற பெயரில் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. நாஞ்சில் நாடு, குறுநாடு, முதலநாடு, தொங்கநாடு, படப்பநாடு, வள்ளுவநாடு ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நாஞ்சில் நாட்டில் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கவும், நிர்வாக உதவிக்காகவும் பாண்டியர் ஆட்சி கலத்தில் மதுரை, திருநெல்வேலி பகுதிகளிலிருந்து கூலி ஆட்கள் இப்பகுதியில் குடியேற்றப்ட்டனர்[7]. நிர்வாக பிரிவுகள் கரை என அழைக்கப்ட்டன. அவற்றை நிர்வகித்தோர் கரைகாரர் எனப்பட்டனர். இவர்கள் வரிவசூல் மற்றும் பொது நிர்வாகத்தினை கவனித்தனர். மேல்மட்டத்தில் அரசருக்கு ஆலோசனைக்கூற துரத்துக்காரர் எனும் எண்பர் குழு இருந்தது. இக்கால கட்டத்தில் களரி ஆசான்கள் வர்மக்கலை மற்றும் வர்ம வைத்தியம் ஆகியவற்றில் நிபுணர்களாக விளங்கினர்.
மக்கள் பண்பாடு[தொகு]
வேணாட்டு மன்னர்கள் சமயப் பொறையுடையவர்களாகத் திகழ்ந்துள்ளனர். சமண சமயம் கி.பி 17ம் நூற்றாண்டு வரை மக்கள் ஆதரவுடன் செல்வாக்கோடு திகழ்ந்தது. சைவ, வைணவ கோயில்களுக்கு பெரிய அளவு நிலக்கொடை அளித்துள்ளனர். 1545ம் ஆண்டு குமரி மாவட்டத்துக்கு மறை பரப்பிற்காக வந்த புனித பிரான்சிஸ் சவேரியார் கிறித்தவ கோயில் கட்ட மற்றும் மறை பரப்பிற்கு வேணாட்டு அரசர் அனுமதியும், உதவியும் வழங்கியுள்ளார். இங்குள்ள ஊர்பெயர்கள் விளை என்னும் விகுதியுடன் அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வேணாடு விரிவடைந்த போது அங்கும் மக்கள் குடியிருப்புகள் விளை என்னும் பெயருடன் உருவாக்கப்பட்டன. எ.கா; திசையன் விளை, பேயன்விளை. முத்தாரம்மன் வழிபாடு வேணாட்டின் தனிச்சிறப்பு. முத்தாரம்மனையும், முப்புராதிகளையும் பிராதான தெய்வமாக வணங்குவது தமிழகத்திலேயே வேணாட்டு பகுதியில் தான். ஏற்றுக்கொள்ளாத தமிழர் தாம் என்பதை வேணாட்டு மக்களும் இன்றைய கன்னியாகுமரி மாவட்ட மக்களும் உறுதிபடுத்துவது இவ்வழிபாடு ஆகும். வேணாடு ஆட்சிக்குட்பட்ட நெல்லை பகுதியிலும் முத்தாரம்மன் வழிபாடு[8] தொடர்கிறது.
அந்நியர் ஆதிக்கம்[தொகு]
கி.பி 9ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேரநாடு சிதைவுண்டதால் சோழ. பாண்டிய மன்னர்கள் அப்பகுதிகளை கையகப்படுத்த எண்ணி வேணாட்டில் பலமுனை தாக்குதல் நடத்தினர். பாண்டியர்கள் கன்னியாகுமரி, தோவாளை, பகுதிகளை தவிர மேற்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முடியவில்லை. சோழ மன்னன் முதலாம் பராந்தகன் (கி.பி. 907- 953) தொடங்கி முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1120) வரை பல படையெடுப்புக்கள் நடத்திய போதும் வேணாட்டு அரசர்கள் தொடர்ந்து போராடி தம் இறையான்மையை தக்க வைத்துக் கொண்டனர். விசயநகர பேரரசர்களும், மதுரை நாயக்கர்களும் பலமுறை படை நடத்தியுள்ளனர். ஆயினும் வேணாட்டின் குமரி பகுதிகளில் பாளையங்களோ, நாயக்கதானங்களோ நிறுவப்படவில்லை. டில்லி முகலாயர் தமிழகத்தை ஒரு மாநிலமாக அறிவித்த போதும் வேணாடு அதற்கு அடிபணியவில்லை. குமரி மாவட்ட பகுதிகளில் மதராசாக்கள் இல்லாமையும் உருது முஸ்லீம்களின் குடியேற்றம் இல்லாமையும் இதனை உறுதிபடுத்தும்.
வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் வணிகக் குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் ஆங்கிலேயர், போர்ச்சிகீசியர், டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர்[9]. ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் குளச்சல் சண்டையில் தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர்[10].
கி.பி 10 ம் நூற்றாண்டளவில் சேரநாட்டின் வடபகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாயர்-நம்பூதிரி கூட்டணி பால மார்த்தாண்டவர்மன் காலம் வரை கொச்சிக்கு தெற்கே காலூன்றவில்லை. கி.பி 1758ம் ஆண்டு மார்த்தாண்டவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் தலைநகரை கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இவர் திற்பாப்பூர் பரம்பரையில்லை. ஆட்சியதிகாரம் நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் திருவாங்கூர் என பதிவு செய்யப்பட்டது.
வெளியிணைப்புக்கள்[தொகு]
- ↑ பக். 7, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு
- ↑ பக். 3, A history of Malayalam Language and Literature, கிருட்டிண சைன்யா
- ↑ பக். 6, A History of Kerala
- ↑ பக் 380, கே.கே. பிள்ளை தமிழக வரலாறும்-மக்கள் பண்பாடும்
- ↑ பக் 28, Psmanabapuram Palace (Government of Kerala, Dept of Orchcology)
- ↑ பக் 18, முனைவர் ப. சர்வேசுரன், ஓட்டன் கதை
- ↑ பக். 1-11, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு
- ↑ "முத்தாரம்மன் வரலாறு" இம் மூலத்தில் இருந்து மார்ச் 11, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160311065706/http://www.maalaimalar.com/2012/10/22141455/kulasekarapattinam-mutharamman.html. பார்த்த நாள்: July 14, 2013.
- ↑ கே.கே. குசும்பன், History of Trade and commerce in Travancore
- ↑ R.G. Alexander, Monumental remanis of Dutch East India