புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித சவேரியார் பேராலயம் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும். கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இது விளங்குகின்றது. 1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இவ் ஆலயம் சிறிப அளவில் நிறுவப்பட்டது. இன்று இது விரிவடைந்து பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் பூதஉடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுவதால் இவ் ஆலயத்தை பொதுமக்கள் கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று அழைக்கின்றனர்.

புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
தேவசகாயம் பிள்ளை

வரலாறு[தொகு]

1542ல் மறைபரப்பிற்காக இந்தியாவிற்கு வந்த சவேரியார் 1544ம் ஆண்டு பூவாரிலிருந்து பள்ளம் என்ற கடற்கரை ஓரமாக வசித்து வந்த முக்குவர் இன மக்களில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரை கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மனம்திருப்பினார். அன்று வணிக நகரமாக இருந்த கோட்டாற்றில் மனம் திரும்பிய மக்கள் வழிபடுவதற்காக ஒரு சிறிய மாதா கோவிலை திருவிதாங்கூர் மன்னனின் உதவியோடு நிறுவினார்.

  • ஆலய ஆவணங்களின் படி இவ் ஆலயம் கி.பி 1600ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
  • கி.பி 1603ம் ஆண்டு இத்தாலியை சார்ந்தி பாதிரியார் அந்திரயோசு புச்சரியோ என்பவரால் மரத்தாலும் களிமன்னாலும் இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்தார்.
  • கி.பி 1713 ம் ஆண்டு இவ ஆலயத்தை மேலும் விரிவாக்கி கல்லினால் கட்டப்பட்டது.
  • கி.பி 1806ம் ஆண்டு கொல்கத்தாவை சார்ந்த பொறியாளரால் நுணுக்கமான வேலைப்பாடமைந்த ஆலய பீடம் உருவாக்கப்பட்டது.
  • கி.பி 1865ம் ஆண்டு இவ் ஆலயம் தற்போதைய நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • மே 26,1930 அன்று இவ் ஆலயம் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கத்தின் போது பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது.
  • சவேரியார் இந்தியாவிற்கு வந்த 400 ம் ஆண்டையொட்டி 1942ம் ஆண்டு மணிக்கூண்டும் லூர்து மாதா கெபியும் திறந்திவைக்கப்பட்டது.
  • கி.பி 1952 ம் ஆண்டு ஆலயத்தை மேலும் சிறிது விரிவாக்கி சவேரியார் கட்டிய மாதா ஆலயம் கோவிலின் உட்பகுதியில் வருமாறு மாற்றியமைக்கப்பட்டது.

இவ் ஆலயம் சாதி, இன மற்றும் மொழியை கடந்து பல்லாயிரகணக்கான மக்களை ஈர்த்து வருகின்றது. இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ம் தேதி முதல்- டிசம்பர் 3ம் தேதி வரையிலான 10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவின் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுவருகின்றது.


சான்றுகள்[தொகு]

https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/25020451/Kottar-St-Savior-Peralaya-Festival-in-Nagercoil-started.vpf