உள்ளடக்கத்துக்குச் செல்

அ. வைத்தியநாத ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அ. வைத்தியநாதய்யர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வைத்தியநாதய்யரின் நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை

மதுரை வைத்தியநாத ஐயர் என அறியப்படும் அ வைத்தியநாத ஐயர் (A. Vaidyanatha Iyer, 16 மே 1890 – 23 பெப்ரவரி 1955) ஓர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புடன் நாடார் தாழ்த்தப்பட்ட பறையர், சக்கிலியர் போன்ற ஆதி திராவிட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவினை 8 சூலை 1939 இல் நிகழ்த்திக் காட்டினார.

இளமைப்பருவம்

[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் வழக்கறிஞராக மாறினார்.

விடுதலைப் போராட்டத்தில்

[தொகு]

புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர் செல்வம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தபோதும் அதை விடுத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டார். வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது புளியமர விளாரால் அய்யரை ஆங்கிலேயர் தாக்கினர். மேலும், வைத்தியநாதையரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலமுறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்திற்கான செலவிற்காக தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர் ஆவார். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தில் குடும்பம்

[தொகு]

இவர் தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார். சங்கரனும் பலமாதம் சிறையில் வாடினார். வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. இவரது மகளின் திருமணம்கூட சிறை தண்டனை பரோல் காலத்திலேயே நடந்து முடிந்தது.

தீண்டாமை ஒழிப்பு

[தொகு]

அரிசனசேவக சங்கத்தின் தலைவராகத் திகழ்ந்த மதுரை நகர காங்கிரசு தலைவர் வைத்தியநாதய்யர் வீட்டில் சானார் (நாடார்) மற்றும் ஆதி திராவிட மாணவர்கள் தங்கியிருந்தனர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தார்.

1934ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு நாடார் (சானார்) மற்றும் ஆதி திராவிட மக்களை தம்மோடு அழைத்துச் சென்ற இவர் நாகநாதசுவாமி கோயிலை தரிசனம் செய்யவைத்தார். இதுபோல பல கோயில்களுக்கும் மக்களை இவர் அழைத்துச் சென்றார்.

சானார் (நாடார்) மற்றும் ஆதி திராவிடர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை என்றொரு நிலை இருந்து பின்னர் 1939ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 1937ல் மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, இந்து அரிசனங்களையும், சானார் சமூகத்தினரையும் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து, அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார். காங்கிரசாரிடமும், ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வு மகாத்மா காந்தியின் மறுப்பு ஆகும். 1930க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள் நுழைவது குறித்து வலியுறுத்தும் எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது.

வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தொடர்புகொண்டு சானார் மற்றும் ஆதி திராவிட மக்களின் ஆலய பிரவேசதுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டியதை மகிழ்வுடன் ஏற்றுகொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரை முழுவதும் துண்டு பிரசுரங்கள் விடுத்து மேல் ஜாதி மக்களை எக்காரணம் கொண்டும் சாணார் மற்றும் ஆதி திராவிட மக்களின் ஆலய பிரவேசிப்பதற்கு பிரச்சனை கொடுக்காது ஒதுங்கி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தார். அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

8 சூலை 1939ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புடன் எதற்கும் அவர் சானார் மற்றும் ஆதி திராவிட மக்களுடன் தனது ஆதரவாளர் படை சூழ ஆலயப் பிரவேசம் செய்தார்.[1] ஆனால் இதற்காக அவர் பிராமணர்களால் சாதி விலக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் மக்களின் உரிமைக்காக அவர் தீவிரமாகப் போராடினார்.

ராஜாஜி ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார். குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று கூறி, மதுரைத் தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி கோவில் அமைத்து அங்கு பூசையும் நடத்தியுள்ளனர். 1945 வரை இக்கோவிலில் பூசை நீடித்து பிறகு சிதைந்து போனது. பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோவிலுக்கே அர்ச்சகர்கள் திரும்பினர்.

மறைவு

[தொகு]

நாட்டுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த வைத்தியநாதய்யர் மேலூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் நலப்பணிகளைச் செய்துள்ளார். தியாகச் சீலரான வைத்தியநாதய்யர் 1955 பிப்ரவரி 23ம் திகதி உயிர்துறந்தார்.

அஞ்சல் தலை

[தொகு]

வைத்தியநாதய்யரின் நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வைத்தியநாத_ஐயர்&oldid=4037346" இலிருந்து மீள்விக்கப்பட்டது