மருதநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்
பாண்டிய சுல்தான்கள்
சையித் இப்ராகிம் கி.பி. 1142 - 1207
செய்யிது சமாலுதீன் கி.பி. 1293 -1306
தில்லி சுல்தானகம்
முகமது பின் துக்ளக் கி.பி. 1323-1335
மதுரை சுல்தான்கள்
ஜமாலுத்தீன் ஹஸன்ஷா
அல்லாவுடீன் உடான்றி
குட்புதீன்
நாசிருதீன்
அடில்ஷா
பஃருடீன் முபாரக் ஷா
அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா
ஆற்காடு நவாப்புகள்
நவாப் சுல்பிகர் அலி கான் கி.பி. 1692 - 1703
நவாப் தாவுத் கான் கி.பி. 1703 - 1710
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் I கி.பி. 1710 - 1732
நவாப் தோஸ்த் அலி கான் கி.பி. 1732 - 1740
நவாப் ஸஃப்தார் அலி கான் கி.பி. 1740 - 1742
நவாப் முகம்மது சதாத்துல்லா கான் II கி.பி. 1742 - 1744
நவாப் அன்வர்தீன் முகம்மது கான் கி.பி. 1744 - 1749
நவாப் சந்தா சாகிப் கி.பி. 1749 - 1752
நவாப் முகம்மது அலி கான் வாலாஜா கி.பி. 1749 - 1795
நவாப் உத்தாத் உல் உம்ரா கி.பி. 1795 - 1801
நவாப் ஆசிமுத்துல்லா கி.பி. 1801 - 1819
நவாப் ஆசம் ஜா கி.பி. 1819 - 1825
நவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் கி.பி. 1825 - 1855
மற்றவர்கள்
முகம்மது யூசுப்கான் கி.பி. 1759 - 1764
திப்பு சுல்தான் கி.பி. 1782- 1799
edit

முகமது யூசுப் கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார்.][1] ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசூப் கான்.

இளமை

சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் பிறந்தார்.[2] பனையூரில் இருந்த பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று.[3][4] இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். இளமை கல்வி அறிவு இல்லாத யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்சேரி சென்றார். அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தார். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தார். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டார். அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி வகித்தார்.

போர்களில் பங்கு பெறுதல்

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் 1751 இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும், சந்தா சாஹிப்பிற்கும் இடையே போட்டியும், போரும் மூண்டன. முகமது அலி வாலாஜா திருச்சிக்குத் தப்பித்துச் சென்று ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். சந்தா சாஹிப்பிற்கு ஆதரவாக பிரஞ்சுப் படைத் தளபதி டியூப்ளே இருந்தார். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினார். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தார். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தா சாஹிப்பின் படை தோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரையிலும் நெல்லையிலும், வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார் நவாபு. யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமைக் கண்டு வியந்த இராபர்ட் கிளைவ், தனது படையுடன் அவனை இணைத்தார். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.

படைத்தளபதி

1752இல் கான்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு கான் சாஹிப் முக்கிய காரணமாக இருந்தார். பிரஞ்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு கான் சாஹிபின் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் கான் சாஹிபை சிப்பாய் படைகளுக்குத் தளபதி ஆக்கி கான் சாஹிப் எனும் பட்டமும் தங்கப் பதக்கம் பரிசும் வழங்கினார். அது முதல் அவர் 'கமாண்டோ கான் சாஹிப்' என அழைக்கப்பட்டார் .

பாளையக்காரர்களை அடக்குதல்

1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டார். கட்டாலங்குளத்தின் மன்னராக இருந்த வீர அழகுமுத்துக்கோனையும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டூரில் முகமது யூசுப்கான் பீரங்கியால் சுட்டுக்கொன்றார். இவரது வீரமரணம் பாளையக்காரர்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. மறவர் பாளையத்தை தாக்கி வெற்றி கொண்டார். பாளையக்காரர் பூலித்தேவனை தோற்கடித்தார். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றார். தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் பேருதவி புரிந்தார்.

ஆளுநராதல்

1757இல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார்.

இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டார். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.

கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறியது. யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தார். யூசுப்கான் சென்னையில் இருந்தபொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உரிய நிலங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினார். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

ஆட்சி

மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினார். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தார். நிதித்துறை, வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினார். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர்.

மதுரை சுல்தானாகப் பிரகடனம்

இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர். பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி, முகமது யூசுப்கானின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சித்தான். கான் சாஹிப் வசூலிக்கும் வரித்தொகையைத் தன்னிடமே செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும், மற்றவர்களும் தன் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் எனவும் நவாபு புதிய உத்தரவைப் பிறப்பித்தான். கம்பெனியரிடம் வாதாடி அனுமதியும் பெற்றான்.

கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தியது. நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7 லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட யூசூப்கான் முன்வந்தார். ஆனாலும் நவாபும், கம்பெனியும் ஏற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை.

தெற்குச் சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், "யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளார்" என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும் நவாபும் யூசுப்கானைக் கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினார் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தார். அவருக்கு ஆதரவாகப் பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

கான் சாஹிபின் இறுதி நாட்கள்

1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர். தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கம்பெனியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கம்பெனியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது. மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன. கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் சாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படையினருக்கும் மக்களுக்கும் சோர்வும் குழப்பமும் ஏற்பட்டன.

யூசுப்கானின் தப்பிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. சரணடைய யூசுப்கானிடம் வேலை பார்த்த பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தார். இந்த அவமானத்திற்குப் பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட். யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினார். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், ஆகியோருடன் தளபதி மார்சன்ட் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமிட்டான்.

1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன்ட், இன்னும் சிலர் யூசுப்கானை அவரது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும் வஞ்சகர்களிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.15-10-1764ல் மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவரது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.[5]

பெயர் சொல்லும் நினைவிடங்கள்

 • திருவில்லிப்புத்தூர் வத்திராயிருப்பு அருகே முகமதுகான்சாகிப்புரம் என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது கான்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.[6]
 • நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறம் ஒரு பெரிய மேடு இருக்கிறது. இப்போது அந்த இடத்தை 'கான்சாமேடு' என்று அழைத்து வருகின்றனர்.[7]
 • முகமது யூசுப்கான் மக்களால் கான்சாகிப் என்று அழைக்கப்பட்டார். மதுரையில் சில தெருக்கள் அவரது பெயரால் அமைந்தன.[8]
 • மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்கு வெளி வீதிக்கும் இடையில் உள்ள கான்சா மேட்டுத்தெரு இவரின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. மதுரை கீழவெளி வீதிக்கும் இராமநாதபுரம் சாலைக்கும் மூன்று சாலைக்கும் இடையில் உள்ள இடம் இவர் பெயரால் 'கான்பாளையம்' என்றழைக்கப்படுகிறது.[9]
 • வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் 'கான்சாகிப் வாய்க்கால்' என்று அழைக்கப்பட்டது.[10]

உசாத்துணை

ஆதாரம்

 1. Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill
 2. Yusuf Khan: The Rebel Commandant by S.C.Hill
 3. Yusuf Khan: the rebel commandant By Samuel Charles Hill
 4. B.C. Law volume By Devadatta Ramakrishna Bhandarkar, pg. 231
 5. எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.
 6. ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116
 7. ந.ராசையா,இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம்,சென்னை,1985,பக்கம் 42.
 8. ஹுசைனி,பாண்டியர்களின் வரலாறு,காரைக்குடி, 1962,பக்கம் 178.
 9. மஹதி, மாவீரர் கான்சாகிப், சென்னை 1161,பக்கம் 77.
 10. எஸ்.பாலசுப்ரமணியம்,தேவி வார இதழ்.

இவற்றையும் பார்க்க

மேலும் படிக்க

 1. கான்சாகிப் சண்டை, நா. வானமாமலை (பதி), மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
 2. கும்மாந்தன் கான்சாகிப், முனைவர் ந. சஞ்சீவி
 3. கான்சாகிப் யூசுப்கான், துர்க்காதாஸ்
 4. பொன்நிலா (கான்சாகிப் பற்றிய நெடுங்கதை), எஸ். பாலசுப்ரமணியம், கலைஞன் பதிப்பகம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதநாயகம்&oldid=2519690" இருந்து மீள்விக்கப்பட்டது