பாத்திமா கல்லூரி
மதுரை திண்டுக்கல் சாலையில் உள்ள பாத்திமா கல்லூரியின் முகப்புப் பொன்விழா ஆண்டு நினைவுத் தோரணவாயில் | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1953 |
அமைவிடம் | , , 9°56′57″N 78°05′44″E / 9.9490934°N 78.0954558°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://fatimacollegemdu.org/ |
பாத்திமா கல்லூரி தென்னிந்தியாவில் மதுரை நகரில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும். 1953 ஆம் ஆண்டு கிருஸ்தவ மிஷனரியால் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பெண்கள் கல்லூரி இது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தர நிர்ணயக் குழுவான 'தேசியத் தர நிர்ணயக்குழுவின்' தரவரிசையில் ஏ++ ('A++') பிரிவு பெற்று இயங்கி வருகிறது. இந்தப் பெண்கள் கல்லூரி, மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பெண்களின் கல்வித் தேவையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வருகிறது. இந்தக் கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] கலை அறிவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகள் இக்கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றன.
வரலாறு
[தொகு]பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தூய வளனார் லியோன்ஸ் சகோதரிகள் மூலம் தென்னிந்தியாவின் மதுரை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகப் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னேற்றும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது மதுரை பாத்திமா கல்லூரி ஆகும். சகோதரி. ரோஸ் பெனடிக்ட் அவர்களின் முயற்சியால் ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளியாக மட்டுமே இருந்த கல்வி நிறுவனம் 1953ம் ஆண்டு 63 மாணவர்களுடன் இரண்டாம் நிலை கல்லூரியாக உயர்த்தப்பட்டது. 1964 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி 1990 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவினரால் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. 1999 ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றது. 2004 ஆம் ஆண்டு முதல் முனைவர் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. 2006 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முதல் தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவைகுழுவினரால் ஏ தரச்சான்றிதழ் பெற்றது.[2] கல்வியின் மூலமாக பெண்களின் அதிகாரம் என்ற குறிக்கோளுடன் இயங்கி வரும் இந்த கல்லூரியில் 204 பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 95 அலுவலக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மூலமாக 4510 மாணவிகள் கற்று வருகின்றனர். இந்த பாத்திமா கல்லூரியில் 26 இளங்கலை பட்டப் படிப்புகளும், 14 முதுகலை பட்டப் படிப்புகளும், ஐந்து முனைவர் பட்டப் படிப்புகளும், இரண்டு தொழில் சார்ந்த பட்டப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. சுயநிதி பட்டப் படிப்புகளும் இக்கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது.
கல்வித் துறைகள்
[தொகு]பெண்கள் மட்டும் பயிலும் இந்த கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. காலை 08.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரியில் 12 இளங்கலை படிப்புகளும், 4 முதுகலை படிப்புகளும் மற்றும் சுயநிதி கல்லூரியில் ஒன்பது முதுகலை படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது. மதியம் 12.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை இயங்கும் சுயநிதி கல்லூரியில் ஒன்பது இளங்கலை படிப்புகளும் ஒரு முதுகலைப் படிப்பும் கற்பிக்கப்படுகிறது. [2]
அறிவியல்
[தொகு]கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிர்வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற அறிவியல் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
கலை மற்றும் வணிகம்
[தொகு]பொருளாதாரம், வரலாறு, ஆங்கிலம், தமிழ், கணினி பயன்பாடு, புள்ளியியல் மற்றும் சமூக சேவை போன்ற கலை மற்றும் வணிக பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவை தவிர பல்வேறு தலைப்புகளில் மொழியியல், வரலாறு, இலக்கியம், சட்டம், சமூக நிலை போன்ற தலைப்புகளில் சான்றிதழ் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
சேவைகள்
[தொகு]மதுரை, பாத்திமா கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மட்டுமல்லாது பெண்களுக்காக வேறுபல சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது "புத்தாக்கம் மற்றும் பயிற்சியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்" (Women Empowerment Animation and Training (WEAT))என்ற தலைப்பில் 2004 ஆம் ஆண்டு முதல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவியர் மற்றும் பொருளாதார பிரச்சினையின் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்ட மாணவியர் போன்றவர்களுக்காக திறன் அடிப்படையிலான கல்வி வசதி வழங்கப்படுகிறது. இதன்படி தொழிற்கல்வி தையல் போன்ற படிப்புகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டு சுயதொழில் செய்ய ஊக்குவிக்கப் படுகின்றனர்.[2]மதுரை பாத்திமா கல்லூரியில் 'ரோசா மிஸ்டிகா நூலகம்', 22, 436.13 சதுர அடி பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் பல்வேறு சேவைகள் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள், வார சஞ்சிகைகள், முனைவர்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் வெளிநாட்டு சஞ்சிகைகள் கொண்டதாக நூலக வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளின் வசதிக்காக பாட புத்தகங்களைக் கல்வி ஆண்டு முழுவதும் நூலகத்தில் பயன்படுத்த வசதி உள்ளது. மேலும் இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் மனையியல் போன்ற நான்கு துறை மாணவிகளுக்காக தனியாகவே துறை நூலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.[2] கல்லூரியில் பயிலும் மாணவிகளின் கற்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாக இணையவழி பாடத்திட்டங்கள் படிப்புக் காலம் முழுவதும் வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர மாணவிகளை தனித் திறன் ஊக்குவிப்பு தொடர்பாக பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு தனி நபர் மேலாண்மை, ஒழுக்கம், கல்வி பரிமாற்றம் போன்றவை நடைபெற்று வருகிறன. மேலும் சிறுபான்மையினருக்கான அரசு உதவித்தொகை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான அரசு உதவித்தொகை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான அரசு உதவித்தொகை என பெண்களின் நலனிற்காக வழங்கப்படும் அனைத்து உதவித் தொகைகளும் சரியான மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் மாணவர்கள்
[தொகு]மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவிகள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள மாணவிகளும் இக்கல்லூரியில் பயின்று பயனடைந்துள்ளனர். அவர்களில் பலரும் கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர்கள், அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் தனியார் நிறுவனங்களில் மேலாளர்கள் என சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்து முன்னேறி உள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 20 September 2017. பார்க்கப்பட்ட நாள் 20 September 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "முன்னாள் மாணவியர் =". Archived from the original on 2020-01-12. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.