கள்ளழகர் கோயில், மதுரை
| திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில் | |
|---|---|
| ஆள்கூறுகள்: | 10°04′29″N 78°12′47″E / 10.0748°N 78.2131°E |
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம் |
| பெயர்: | கள்ளழகர் சுந்தரராச பெருமாள் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ் நாடு |
| மாவட்டம்: | மதுரை |
| அமைவு: | அழகர்கோவில், அழகர்கோவில் ஊராட்சி, மேலூர் வட்டம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
| ஏற்றம்: | 285 m (935 அடி) |
| கோயில் தகவல்கள் | |
| சிறப்பு திருவிழாக்கள்: | ஆடி மாத தேரோட்டம், சித்திரைத் திருவிழா |
| உற்சவர்: | சுந்தரராசப்பெருமாள் (எ) கள்ளழகர் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டிடக்கலை |
| இணையதளம்: | https://alagarkoilkallalagar.hrce.tn.gov.in/ |
கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தின் அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் (விஷ்ணு) கோயிலாகும்.
விவரங்கள்
[தொகு]தமிழ் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில், பொ.ஊ. 6-லிருந்து 9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது. இது விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது.
கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏழடுக்கு ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயில் ஒரு பெரிய கோட்டையால் சூழப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பாழடைந்துள்ளது.
துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் தென்கலை வழிபாட்டு முறையை பின்பற்றுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[2]
அழகர் கோயில் (ஆங்கிலம்: Alagar Koil) என்ற 'திருமாலிருஞ்சோலை' என்று ஆழ்வார்களால் பாடப் பெற்ற அருள்மிகு சுந்தர ராசப் பெருமாள் (எ) கள்ளழகர் திருக்கோவில், மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இது உலகளவில் பிரசித்தி பெற்ற ஓர் திருமால் கோவிலாகும். 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் இதுவே ஆகும்.
தமிழ் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், போற்றும் இத்திருத்தலம்
சோலை மலை, திருமாலிருஞ்சோலை, பழமுதிர் சோலை, மாலிருங்குன்றம், அழகர்மலை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நங்கள் குன்றம் என்று அழைக்கப்படும் வட்ட வடிவ கருவறையில் (கேரள கோவில்கள் போன்ற அமைப்பு) இறைவனாகிய பெருமாள் ஸ்ரீபரமசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி அழகர் பெருமாள், அல்லது சுந்தரராச பெருமாள் எனப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகிய பல மன்னர்கள் இத்திருக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர்.
மலைக்குன்றுகளில் வாழும் சமணர்கள் (ஜைனர்கள்) மதுரையைச் சுற்றிலும் இருந்த யானைமலை, கீழவளவு, அரிட்டாபட்டி, பெருமாள் மலை (நாகமலை புதுக்கோட்டை அருகில் முத்துப்பட்டி) எனப் பல இடங்களில் வாழ்ந்தது போன்று அழகர் மலையில் இருந்து 3 மைல் தொலைவிலும் சிறிய அளவில் வாழ்ந்துள்ளனர்.[3]

தல புராணம்
[தொகு]
இந்து புராணத்தின்படி, ஒரு சமயம் சுதபஸ் முனிவர் என்பவர் அழகர் மலையில் உள்ள நூபுர கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற துர்வாச முனிவரைக் அவர் கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், சுதபஸ் முனிவரை தவளையாக மாறுமாறு சபித்தார். கள்ளழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் அவதரித்து இச்சாபத்தில் இருந்து சுதபஸ் முனிவரை மீட்டெடுப்பார் என்றும் கூறி மறைந்தார். தவளை வடிவம் காரணமாக ‘மண்டூக மகரிஷி’ என்று பெயர் பெற்ற சுதபஸ் முனிவர், தேனூரில் வேகவதி என்று அழைக்கப்படும் வைகை நதிக்கரையில் தவம் செய்தார். மண்டூக மகரிஷியினை சாபத்திலிருந்து விமோசனமளிக்க எண்ணி பெருமாள் அழகர் மலையில் உள்ள தனது உறைவிடத்திலிருந்து இறங்கி வந்தார். அதுமுதல் மலைப்பட்டி, அலங்காநல்லூர், வயலூர் வழியாக கள்ளழகர் தேனூருக்கு வருவதாக நம்பப்படுகிறது. தேனூர் மண்டபத்தில் இறைவன் முனிவருக்கு சாப விமோசனம் தந்து அவரை மீட்டபின்னர் தனது இருப்பிடத்திற்குச் திரும்பிச் செல்வதாக ஐதீகம். திருமலை நாயக்கர் ஆட்சியின் போது (பொ.ஊ. 1623–1659), மண்டூக மகரிஷியின் சாப விமோசன நிகழ்ச்சிகள் வண்டியூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. 1653-ம் ஆண்டு முதல் அங்கு திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட தேனூர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.[4]
கள்ளழகர் மரணத்தின் கடவுளான யமனால் வணங்கப்பட்டார் என்கிறது மற்றொரு இந்து புராணம். அவர் அந்த இடத்தில் பெருமாளை நிரந்தரமாகத் தங்கும்படி வேண்டிக் கொண்டார் என்றும் தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவின் உதவியுடன் அங்கு ஒரு கோயிலைக் கட்டினார் என்றும் நம்பப்படுகிறது.[5]
சமய நடைமுறைகளும் திருவிழாவும்
[தொகு]வைணவ மரபின் தென்கலை பிரிவின் மரபுகளைப் பின்பற்றி வைகானசம் ஆகமத்தைப் பின்பற்றும் முறை இக்கோயிலில் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற விஷ்ணு கோயில்களைப் போலவே, அர்ச்சகர்கள் பிராமண வகுப்பில் பாதுகாக்கப்பட்ட தனிப்பிரிவான ஆதிவைஷ்ணவர் எனும் வைகாநஸ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோயிலில் தினசரி ஆறுகாலப் பூஜை நாளின் பல்வேறு நேரங்களில் நடத்தப்படுகின்றன மற்றும் பல விழாக்களும் கோவிலில் நடத்தப்படுகின்றன, இதில் தெப்பத் திருவிழா தமிழ் மாதமான மாசியிலும் (பிப்ரவரி–மார்ச்), செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நவராத்திரியும் மற்றும் மார்கழியின் (டிசம்பர்–ஜனவரி) போது வைகுண்ட ஏகாதசியும் நடைபெறுகிறது. கோவிலில் வாராந்திர, மாதாந்திர மற்றும் இரண்டு வார சடங்குகள் செய்யப்படுகின்றன. [4] மலையின் உச்சியில் உள்ள நூபுர கங்கை என்ற ஏரியிலிருந்து வரும் நீரைக் கொண்டு மட்டுமே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.[6]
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான சித்திரையில்(ஏப்ரல்–மே) சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழா என்பது அழகரின் சகோதரி என நம்பப்படும் மீனாட்சியின் திருமணத்தின் ஆண்டு நிகழ்வாகும்.[7] கள்ளழகர் வைகை ஆற்றைக் கடப்பது முக்கிய நிகழ்ச்சியாகும். எதிர் சேவை என்பது அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாகும், இது நான்காம் நாளில் தொடங்குகிறது. இந்த நாளில், அழகர் அல்லது விஷ்ணு தனது தோற்றத்தை கள்ளராக மாற்றிக் கொண்டு கள்ளர் நாடு வழியாக பயணித்து மதுரையில் நுழைகிறார், நகரவாசிகள் அவரை வரவேற்கிறார்கள்.[8] இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்துள்ளனர். கள்ளழகர் ஆற்றில் நுழையும் போது, அவர் தனது சகோதரியின் திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டதை அறிந்து, கருப்பராயர் மண்டபத்திற்குத் திரும்புகிறார், பின்னர் அவர் பத்து அவதாரங்கள் எடுத்து இறுதியாக அழகர் கோவிலுக்குத் திரும்புகிறார். இந்தக் கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் கிடைத்தது, 15 கைவினைஞர்களைக் கொண்ட குழுவைக் கொண்டு வேங்கை மர மரத்தையும், சிற்பங்களுக்கு பர்மா தேக்கு மரத்தையும் பயன்படுத்திக் கட்டப்பட்டது. சோதனை ஓட்டம் 6 ஜூலை 2015 அன்று நடைபெற்றது.[9] இக்கோயில் இப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.[10]
காவல் தெய்வம்
[தொகு]இக்கோயில் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஆவார்.
கோயில் கலைச் சிறப்புகள்
[தொகு]


மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. ஆர்யன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை, அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]மதுரை மாநகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அருகில் அமைந்த கோயில்கள்
[தொகு]அழகர் மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் மற்றும் ராக்காயி அம்மன் கோயில் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்த நூபுர கங்கை தீர்த்தத்திற்கு ராக்காயி அம்மன் காவல் தெய்வம் அவார்.[11] நூபுர கங்கை தீர்த்தம் மலையின் ஒரு வற்றாத ஊற்று பெருகெடுத்து ஓடும் இடத்தில் உற்பத்தி ஆகின்றது. அங்கு பக்தர்கள் கூடி வரிசையில் நின்று நீராடி, குடுவையில் பிடித்துக்கொண்டும் செல்வர்.
மதுரை சித்திரைத் திருவிழா
[தொகு]புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.[12] கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.[13] அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார்.[14] வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று, அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.
சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை[15] என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கள்ளழகருக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர்கள் தொன்று தொட்டு சீர்பாத சேவை செய்து வருகின்றனர்.[16][17]
தேரோட்டம்
[தொகு]ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.
தலவரலாறு
[தொகு]சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
சிலப்பதிகாரத்தில்
[தொகு]அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு
என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றிக் கூறுகிறார்.
மேலும், "விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணி யோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு"
என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
ஜுவாலா நரசிம்மர்
[தொகு]கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மர் பிரசித்தி பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவை கொண்டு திருமஞ்சனம் நடைபெறுகிறது. யோக நரசிம்மரின் கோபத்தைத் தணித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது. மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்.
தலத் தகவல்
[தொகு]- மூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
- தாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
- காட்சி - மாண்டூக முனிவர், தர்மதேவன், மலையத் துவசப் பாண்டியன்
- திசை - கிழக்கே திருமுக மண்டலம்
- தீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு
- விமானம் - சோமசுந்தர விமானம்
- உற்சவர் - கள்ளழகர்
மூலவர் சிறப்பு
[தொகு]மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் பரமசுவாமிக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.[18]
நைவேத்தியம்
[தொகு]அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.[19]
பாடல்கள்
[தொகு]- பெரியாழ்வார் - 24 பாடல்கள்
- ஆண்டாள் - 11 பாடல்கள்
- பேயாழ்வார் - 1 பாடல்
- திருமங்கையாழ்வார் - 33 பாடல்கள்
- பூதத்தாழ்வார் - 3 பாடல்கள்
- நம்மாழ்வார் - 36 பாடல்கள்
உதாரணமாக
சிந்துரச் செம்பொடிப் போல்
- திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
- எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
- மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
- சுழலையினின்று உய்துங் கொலோ!
ஆக மொத்தம் 108 பாடல்கள். இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
சங்க இலக்கியத்தில்
[தொகு]இக்காலத்தில் இம்மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்
| பாடல் (மூலம்) | செய்தி |
| கள்ளணி பசுந்துளவினவை | கருந்துளசி மாலை அணிந்தவன் |
| கருங்குன்று அனையவை | கருங்குன்றம் போன்றவன் |
| ஒள்ளொளியவை | ஒளிக்கு ஒளியானவன் |
| ஒரு குழையவை | ஒரு காதில் குழை அணிந்தவன் |
| புள்ளணி பொலங்கொடியவை | பொலிவுறும் கருடக்கொடி உடையவன் |
| வள்ளணி வளைநாஞ்சிலவை | மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன் |
| சலம்புரி தண்டு ஏந்தினவை | சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன் |
| வலம்புரி வய நேமியவை | சங்கும், சக்கரமும் கொண்டவன் |
| வரிசிலை வய அம்பினவை | வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன் |
| புகர் இணர் சூழ் வட்டத்தவை | புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன் |
| புகர் வாளவை | புள்ளி போட்ட வாள் ஏந்தியவன் |
குறிப்புகளுள்ள நூல்கள்
[தொகு]- வாமன புராணம்
- வராக புராணம்
- ஆக்னேய புராணம்
- ஜகன்னாத சேத்திர மகாத்மியம்
- ஹலாஸ்ய மான்மியம்
- சனத்குமார சம்ஹிதை
- பிரம்ம சம்ஹிதை
- கோதா பரிணயம்
- சுந்தரபஹூஸ்தவம்
- மகாபாரதம் வனபர்வதம்
- ஸ்கந்த புராணம்
- ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்தல புராணம்
- திருப்புகழ்
- அழகர் அந்தாதி
- அழகர் பிள்ளைத்தமிழ்
- அழகர் கலம்பகம்
- அழகர் கிள்ளை விடு தூது
- அழகர் வருகைப்பத்து
- அழகர் அகவல்
- அழகர் பெருமாள் வண்ணம்
- திருமாலிருஞ்சோலைமலை அழகர்மலை
- சோலை மலைக்குறவஞ்சி
- திவ்ய சூரி சரிதம்
- சுந்தர ராஜ ஸ்தோத்திரம்
- நுாற்றியெட்டு திருப்பதி அந்தாதி
- கோயில் ஒழுகு
- அழகர் வர்ணிப்பு
- பதினெட்டாம்படி கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு
- ராக்காயி வர்ணிப்பு
- கருப்பசாமி சந்தனம் சாற்றும் வர்ணிப்பு
- நம்மாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இவற்றையும் பார்க்க
[தொகு]- பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி
- பழமுதிர்சோலை முருகன் கோயில்
- அழகர் கோயில் தேரோட்டம்
- ராக்காயி அம்மன் கோயில்
- நூபுர கங்கை தீர்த்தம்
- அழகர்கோவில் ஊராட்சி
- மதுரை கள்ளழகர் கோயில் கட்டுமான வழக்கு
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ M. S., Ramesh (1993). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. Tirumalai-Tirupati Devasthanam.
- ↑ "Hindu Religious and Charitable Endowments Act, 1959". Archived from the original on 2018-12-06. Retrieved 2022-05-23.
- ↑ "நாகமலை", தமிழ் விக்கிப்பீடியா, 2019-06-12, retrieved 2024-11-21
- ↑ 4.0 4.1 "Kallazhagar temple". Dinamalar. 2014. Retrieved 31 May 2014.
- ↑ Dalal, Roshan (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. p. 18. ISBN 9780143414216.
- ↑ V., Meena. Temples in South India. Kanniyakumari: Harikumar Arts. pp. 15–16.
- ↑ Anantharaman, Ambjuam (2006). Temples of South India (second ed.). East West. p. 127. ISBN 978-81-88661-42-8.
- ↑ "Chithirai festival". hindustantimes. 2020-05-04. https://www.hindustantimes.com/india-news/divine-wedding-under-lockdown-chithirai-festival-at-madurai-meenakshi-temple/story-qZotuPYKznlpKznD1LGg4O.html. பார்த்த நாள்: 2023-07-06.
- ↑ "Alagarkoil gets new car after 300 years". The Hindu. 7 July 2015. http://www.thehindu.com/news/cities/Madurai/alagarkoil-gets-new-car-after-300-years/article7393575.ece.
- ↑ Karkar, S.C. (2009). The Top Ten Temple Towns of India. Kolkota: Mark Age Publication. p. 21. ISBN 978-81-87952-12-1.
- ↑ நூபுரகங்கை: ராக்காயி அம்மனே காவல் தெய்வம்!
- ↑ மு.முத்துக்குமரன் (2019-04-17) (in ta). 7 நாள்கள்.. 30கி.மீ.. 445 திருக்கண்கள்.. 'புறப்பட்டார் மாயழகன்'!. https://www.vikatan.com/spiritual/gods/155371-this-story-about-chithirai-thiruvizha-festival. பார்த்த நாள்: 2025-05-13.
- ↑ அழகர் ஆற்றில் இறங்குவது. ஆனந்த விகடன். 21 ஏப்ரல் 2016. https://www-vikatan-com.cdn.ampproject.org/v/s/www.vikatan.com/amp/story/spiritual%2Ftemples%2F62887-why-kallalagar-steps-down-into-vaigai?amp_js_v=a3&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D.
- ↑ "கள்ளழகர் தரிசனம்". குங்குமம். 2013-04-01.
- ↑ "Etir Sevai". The Hindu (Chennai, India). 18 April 2011 இம் மூலத்தில் இருந்து 10 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110810233742/http://www.hindu.com/2011/04/18/stories/2011041861280400.htm.
- ↑ தினமலர். "தினமலர் தமிழ் செய்திகள் | Tamil News | Latest News in Tamil | Tamil Breaking News | சமீபத்திய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள்" (in ta). https://www.dinamalar.com.
- ↑ அழகர் கோயில்.
- ↑ மு.முத்துக்குமரன் (2019-02-06) (in ta). அழகர் மலையில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் தைலப்பிரதிஷ்டை வைபவம்!. https://www.vikatan.com/spiritual/148977-thaila-pradistai-in-madurai-alagarmalai-temple. பார்த்த நாள்: 2025-05-13.
- ↑ "வித்தியாசமான நைவேத்தியம்". தினமலர். Retrieved 2025-05-13.
வெளியிணைப்புகள்
[தொகு]- வேங்கடம் முதல் குமரி வரை 4/அழகர் கோயில் அழகன்
- அழகர் திருக்கோயில் பரணிடப்பட்டது 2015-08-11 at the வந்தவழி இயந்திரம்
- தினமலர் இணையதளத்தில் இக்கோவில்
- விக்கிமேப்பியாவில் அழகர் கோவில் அமைவிடம்
- http://www.divyadesam.com/hindu/temples/madurai/maalirunsolai-temple.shtml
- வேங்கடம் முதல் குமரி வரை 4/அழகர் கோயில் அழகன்
- அழகர் திருக்கோயில் பரணிடப்பட்டது 2015-08-11 at the வந்தவழி இயந்திரம்
- தினமலர் இணையதளத்தில் இக்கோவில்
- விக்கிமேப்பியாவில் அழகர் கோவில் அமைவிடம்
- http://www.divyadesam.com/hindu/temples/madurai/maalirunsolai-temple.shtml
- அழகர் வருகைப்பதிகம்
- அழகர்பேரிற் கமலவிடு தூது
