கிருதுமால் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிருதுமால் ஆறு, மதுரை வைகை ஆற்றின் கிளையாறாகும். கிருதுமால் ஆறு, நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகி, மதுரை மாநகர் பகுதிகளான விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக 15 கிலோ மீட்டர் பாய்ந்து, பின்னர் சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் குண்டாற்றில் கலக்கிறது. [1]

கிருதுமால் ஆறு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்கிறது. முன்னர் கிருதுமால் ஆற்றுப் பாசானத்தால் 18,500 ஏக்கர் விளைநிலம் பயன்பெற்றது. 25 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால் ஆறு, சென்னையின் கூவம் ஆறு போன்று சாக்கடை நீர் பாய்கிறது. [2]

25 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாநகரில், 120 அடி அகலத்தில் பாய்ந்து கொண்டிருந்த கிருதுமால் ஆறு, ஆக்கிரமிப்புகளால், தற்போது 10 அடி அகல சாக்கடை நீர் வடிகாலாக சுருங்கி விட்டது.

மாநகராட்சி நிர்வாகம், விராட்டிபத்தில் உள்ள கொக்குளப்பியில் பாதாளச் சாக்கடை கழிவுகளை கிருதுமால் ஆற்றில் திறந்துவிட்டுள்ளது. [3]

பண்டைய வரலாறு[தொகு]

கி.பி. 690-ம் ஆண்டு பாண்டிய மன்னன் அரிகேசரியால் வைகை ஆற்றில், சோழவந்தான் அருகே கால்வாய் வெட்டபட்டு, நாகமலையில் உற்பத்தியாகி ஓடும் காட்டாறான கிருதுமாலுடன் இணைத்தார். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே ஓடிய கிருதுமாலின் தண்ணீரில்தான் கூடலழகருக்கு நாள்தோறும் அபிசேகம் செய்யப்பட்டது என கூடற்புராணம், கிருதுமாலை கூடலழகர் அணிந்த மாலை என்று போற்றுகிறது.

‘வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்தார்
ஆகலால் கிருதுமாலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ’

- என்கிறது அந்தப் பாடல். அதாவது வேகமாக பாய்வதால் வேகவதி என்றும், திருமாலின் ஒரு திருவடி சத்தியலோகம் சென்று அங்கிருந்து நீர் வையத்தில் விழுந்ததால் வையை என்றும், அதன் ஒரு பிரிவு கூடலழகருக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது.


அறுப்புத் திருவிழா[தொகு]

மதுரையில தைப்பூசத்துக்கு முதல் நாள் அறுப்புத் திருவிழாவின் போது மதுரை மீனாட்சி அம்மனுடன், சுந்தரேஸ்வரரும், கோயிலில் இருந்து புறப்பட்டு சிந்தாமணிப் பகுதியில் பாயும் கிருதுமால் ஆற்றங்கரைக்கு எழுந்தருளுவார்கள். கிருதுமால் ஆற்றின் கரை பக்கத்து வேளாண் நிலங்களில் மீனாட்சி அம்மனே நேராக வந்து நெல் அறுவடை செய்கிறாள் என்பதை உணர்த்தும் சடங்காகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "In search of a legendary river" (ஆங்கிலம்). தி இந்து. 19 மே 2012. 2021-01-26 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 பிப்ரவரி 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "மதுரையின் கூவம் கிருதுமால் நதி!". 16 ஜனவரி 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. பாதாள சாக்கடை நீரால் அழிக்கப்படும் கிருதுமால் நதி கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருதுமால்_ஆறு&oldid=3575123" இருந்து மீள்விக்கப்பட்டது