உள்ளடக்கத்துக்குச் செல்

சமணர் கழுவேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[1][2] ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.[சான்று தேவை]

அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது.[3] ஆயினும் இந்நிகழ்வின் உண்மைத் த‌ன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

சான்றுகள்

[தொகு]

[4] எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப்பரணி எனும் நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் இதனைக் குறிப்பிடுகிறது.[5] மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.[6]

கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எக்கல்வெட்டும் எழுதப்படவில்லை. இந்த இடைவெளி இப்பகுதியில் சமண ஆதிக்கத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், கழுவேற்றம் பற்றிய செய்தி இவ்வீழ்ச்சியின் குறியீடாக இருக்கலாம் என்றும் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[5][6][7]

பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள சமணர் கழுவேற்றம்

[தொகு]

தமிழில் இயற்றப்பட்ட பெரியபுராணத்தின் படி நின்றசீர்நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண மதத்தினை ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள்.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார். அக்கோபம் வெப்பு நோயாக பாண்டியன் மன்னனைத் தாக்கியது. மருத்துவர்களும், சமணர்களும் முயன்றும் வெப்பு நோய் தீரவில்லை.

பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம் மன்னனின் வெப்புநோய் தீர்க்க வேண்டினார். அதனையடுத்து திருஞான சம்மந்தர் திருநீற்றை தந்து மன்னனின் நோயை குணமாக்கியதால் மன்னன் சைவமதத்தை தழுவினான். இதனால் கோபம் கொண்ட சமணர்கள், திருஞான சம்மந்தரை வாதத்திற்கு அழைத்தனர்.

அனல் வாதம் எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. அதனையடுத்து புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள். அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது. திருஞான சம்மந்தர் வென்றார்.

இந்நிகழ்வினை அடுத்து சமணர்கள் கழுவேறியதாக பெரியபுராணம் கூறுகிறது.

விமர்சனங்கள்

[தொகு]

பெரிய புராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், மேற்குறிப்பிட்ட பாடலைப் பற்றி “இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது.” என்று சொல்லி சமணர் கழுவேற்றத்தை நிறுவும் விதமாகச் சில ஆதாரங்களைத் தந்துள்ளார்.[8] தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில் திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.

"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.[9]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்
  2. தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754
  3. சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்
  4. சேக்கிழார் (1898). பெரியபுராணம். பாடல் எண் - 2751.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link)
  5. 5.0 5.1 John Cort (1998). Open Boundaries: Jain Communities and Culture in Indian History. SUNY Press. pp. 181–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-9985-6. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.
  6. 6.0 6.1 Steven Paul Hopkins Associate Professor of Religion Swarthmore College in Pennsylvania (25 March 2002). Singing the Body of God : The Hymns of Vedantadesika in Their South Indian Tradition: The Hymns of Vedantadesika in Their South Indian Tradition. Oxford University Press. pp. 81–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-802930-4. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.
  7. Paul Dundas (2002). Jains. Routledge. pp. 127–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-26606-2. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.
  8. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் 01 May 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் (2006). பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் 1, 2 (முன்னுரை பகுதியில் எண்ணாயிரம் நூல் எதை பற்றியது என்பதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம்). சென்னை: மீனாகோபால் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

[தொகு]

திருப்புடை மருதூர் கோயில் ஓவியம் - சமணர் கழுவேற்றம்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணர்_கழுவேற்றம்&oldid=3705963" இலிருந்து மீள்விக்கப்பட்டது