சௌராட்டிர மொழி
சௌராட்டிர மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | saz |
சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு. எத்னோலாக் # அறிக்கையின்படி இம்மொழி பேசுவோர் 510,000 இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், எத்னோலாக் அறிக்கையின்படி இது 310,000 (1997) ஆகும். சௌராட்டிர மொழிக்கான உலகளாவிய மொழிக் குறியீட்டு எண் 639-3 ஆகும்.¶
வகைப்பாடு[தொகு]
சௌராஷ்டிர மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரியப் பிரிவைச் சேர்ந்தது. இஃது இப் பிரிவில் உள்ள மேற்கு இந்திய-ஆரிய மொழிக் குழுவில் உள்ள பிராகிருத மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆயினும் தற்போதைய குஜராதி மொழிக்கு முன் இருந்த நிலையில் சௌராட்டிரா மொழி பேசப்படுவதால் தனி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
புவியியற் பரம்பல்[தொகு]
இவர்கள் தமிழ் நாட்டின் கோயில் நகரம் எனப்படும் மதுரையில் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நகரில் இச்சமுதாயத்தினரின் மொத்த மக்கள்தொகையில் 20 - 25% வரை வசிக்கிறார்கள் . மேலும் தமிழ் நாட்டில், திண்டுக்கல், பரமக்குடி, எமனேசுவரம், பெரியகுளம், கோவை, ஈரோடு, பழநி, காஞ்சிபுரம், ராஜபாளையம், நிலக்கோட்டை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, தாராசுரம், திருபுவனம், சிதம்பரம், புவனகிரி, அம்மையப்பன், வாலாஜா, திருவண்ணாமலை, வீரவநல்லூர், திருநெல்வேலி, நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு ஆகிய பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவை தவிர ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியிலும் இவர்கள் உள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும் தற்போது குறைந்த அளவில் காணப்படினும், இஃது அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சிறிய அளவிலான இடப்பெயர்வுகளினால் ஏற்பட்டது ஆகும்.
வரலாறு[தொகு]
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இம் மொழி பேசுவோர் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லாவிட்டாலும், மரபுவழித் தகவல்களும், தற்கால மொழியியல் ஆய்வுகளும் இதனை ஓரளவுக்கு உறுதி செய்கின்றன. எனினும் இம் மொழி தற்காலக் குஜராத்தி மொழியைவிட மராத்தி, கொங்கணி போன்ற மேற்கு இந்திய மொழிகளுடனேயே கூடிய ஒப்புமை உடையதாகக் காணப்படுகிறது. இதற்கான காரணத்தை மொழியியலாளர்கள் ஓரளவுக்கு விளக்கியுள்ளனர்.
சௌராஷ்டிர மொழியானது, பண்டைய பிராகிரத மொழியிலிருந்து தோன்றிய, ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் பேசப்பட்ட சௌரஸேனி மொழியின் கிளையே சௌராஷ்ட்ரீ மொழியாகும். தற்போது குசராத்து மாநிலத்தில் பேசப்படும் குஜராத்தி மொழிக்கும், சௌராட்டிர மொழிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சமசுகிருதம் பேசுவது போன்ற ஒலி வடிவினை சௌரஷ்ட்ரீ மொழி பெற்று உள்ளது.[மேற்கோள் தேவை] எனினும் இம்மொழி பேசுவோரின் படிப்படியான இடப் பெயர்வு வேறு பல மொழிகளின் தொடர்புகளை அதற்கு ஏற்படுத்தியது. மராத்தி, கொங்கணி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் சௌராட்டிர மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
லண்டன் இந்தியா ஆபீஸ் நூலகர் டாக்டர் எச்.என்.ரேண்டேல் (Dr.H.N.Randle), என்பவர் இம்மொழியை ஆராய்ந்து இது குஜராதி மொழியின் வட்டார வழக்கு என்று கூற முடியாது என்று தனது கட்டுரையில் கூறியுள்ளார்.[1]
இந்திய அரசு தனது ஜனத்தொகை 1961 அறிக்கையில் ஸௌராஷ்ட்ர மொழியை குஜராத்தியின் கிளை மொழியாக காண்பித்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக் மேலும் ஆய்வை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் பின்பு 1971 ஜனத்தொகை அறிக்கையில் அகில இந்திய அளவில் 68-வது நிலையில் (Rank) ஸௌராஷ்ட்ர மொழியை தனி மொழியாக காட்டப் பட்டுள்ளது. ஆனால் 1991 மற்றும் 2001 ஆண்டு அறிக்கைகளில் ஸௌராஷ்ட்ர மொழியை குஜராத்தின் வட்டார வழக்கு மொழியாக காண்பித்து விட்டு, தமிழ்நாட்டில் குஜராத்தி மொழி பேசுவோரின் எண்ணிக்கையில் சேர்த்துவிட்டு ஸௌராஷ்ட்ரர்கள் எல்லோரும் குஜராத்திகள் என்று கூறியுள்ளது.
எழுத்து வடிவம்[தொகு]
பல நூற்றாண்டுகளாக இம் மொழிக்குத் தனியான எழுத்து வடிவம் இருந்து வந்ததுடன், இம் மொழியில் பல இலக்கியங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் சில அண்மைக்கால இலக்கியங்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. இம் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப்படாததால், இது ஒரு பேச்சு மொழியாக மட்டுமே இருந்து வருகிறது. அண்மையில் இந்திய மொழிகளுக்கான மத்திய அரசு நிறுவம் மைசூர் - தேவநாகரி எழுத்துகளை சௌராட்டிரா மொழிக்கு பயன்படுத்த வரை முறைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. [மேற்கோள் தேவை] அதன் படி உயிர் எழுத்தில் இரு குறில் எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது. மெய் எழுத்தில் நான்கு சௌராட்டிரா மொழிக்கே உரிய எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துரு இந்திய மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[மேற்கோள் தேவை]
மேலும் தமிழ் எழுத்துகளில் பக்தி இலக்கியங்கள், இதிகாசங்கள் மற்றும் பல நூல்கள் வெளிவந்துள்ளது. எடுத்துக்காட்டாக கசின் ஆனந்தம் அண்மையில் சௌராஷ்ட்ர மொழியில் எழுதிய பாண்டவுந் கெதோ எனும் பாண்டவர்களின் கதை பற்றிய சௌராட்டிர மொழி இதிகாசத்தை தமிழ் எழுத்து வடிவத்தில் எழுதியுள்ளார்.
சௌராட்டிர மொழி அறிஞர்கள்[தொகு]
சௌராட்டிரர்களில், சௌராட்டிர மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகக்குறைவே. இருப்பினும் இம்மொழியில் புலமை பெற்றவர்களில் சிலரின் விவரம்.
- நடனகோபாலநாயகி சுவாமிகள்
- வேங்கட சூரி சுவாமிகள்
- வேங்கடரமண பாகவதர்
- தொ. மு. இராமராய்
- கசின் ஆனந்தம்
- கே. ஆர். சேதுராமன்
- தா. கு. சுப்பிரமணியன்
- டி. எஸ். சரோஜா சுந்தரராஜன்
- டி. ஆர். தாமோதரன்
- மதுரை. ”விப்ரபந்து” கே. வி. பத்மநாபய்யர்
- ஓபுளா. கே. இராமானந்தம் பி.ஏ.,பி.டி.,
- மதுரை. தாடா. சுப்பிரமணியன்
- மதுரை. தொப்பே. டி. வி. குபேந்திரன்
- ஓபுளா. எஸ். சுப்பிரமணியன்
- மதுரை. டி. எஸ். வி. இராமலிங்கம்
- மதுரை. குங்கா. அ. வெங்கட்ராம்
- மதுரை. வி. கே. நீலாராவ்
- மதுரை. திருமதி. ஜெனாபாய்
- குடந்தை. ஜில்லாடி. வெ. பத்ருசாமி
- சேலம். பி. என். அழகரய்யர்
- சென்னை. வி. கே. நன்னய்யர்
- சேலம். ஜி. எம். அரங்கன்
- மதுரை. ஆர். எச். குபேந்திரன்
- மதுரை. சி. சி. குபேந்திரன்
- மதுரை. சூர்யா. டி. ஞானேசுவரன்
- சேலம். காந்திமாதவன்
- மதுரை. பி. ஆர். கணேசன்
- கும்பகோணம். பி. ஆர். கோவிந்தசாமி
- குடந்தை. ஜில்லாடி. வெ. பத்ருசாமி
- மதுரை. சொட்டல்லு.எஸ். பி. கீதாபாரதி
தமிழ் மொழிப்பற்று[தொகு]
தற்போது இம் மொழி பேசுவோர் தமது மற்றொரு கண்ணாகத் தமிழையே கொண்டுள்ளனர். எல்லாவித நடைமுறைத் தேவைகளுக்கும் தமிழைப் பேசவும் எழுதவும் இவர்கள் வல்லவர்களாக உள்ளனர்.
உசாத்துணை[தொகு]
- சௌராட்டிரர் வரலாறு, அன்னாச்சாமி சாத்திரியார்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 'The Sourashtrans of South India' By H.N.Randle, in the Journal of Royal Asiatic Society, London (October 1944) [under the chapter 'The Language'].
வெளி இணைப்புகள்[தொகு]
- சௌராஷ்டிர மொழி கற்க பரணிடப்பட்டது 2015-02-19 at the வந்தவழி இயந்திரம்
- (எத்னோலாக்) #
- சௌராஷ்ட்டிர மொழிக்கான உலகளாவிய குறியீட்டு எண் ¶
- சௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில் கேட்க
- Documentation for ISO 639 identifier: saz
- Saurashtrian Script Traced as far as Rig Vedic Period
- சௌராட்டிர எழுத்து வடிவம்