கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டொராண்டோவில் அமைந்துள்ள சி. என். கோபுரம். உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.

கோபுரம் என்பது மனிதரால் உருவாக்கப்பட்ட உயரமான அமைப்பு ஆகும். இவை அவற்றின் நீள, அகலங்களைக் காட்டிலும் பல மடங்கு உயரமானதாக இருக்கும். கோபுரங்கள் பொதுவாக அவற்றின் உயரத்திலிருந்து பயன் பெறுவதற்காகவே கட்டப்படுகின்றன. இவை தனியாகவோ அல்லது வேறு பெரிய அமைப்புகளின் ஒரு பகுதியாகவோ அமைக்கப்படலாம்.

வரலாறு[தொகு]

கோபுரங்கள் மிகப் பழைய காலம் தொட்டே மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்காட்லாந்தில் காணப்படும் "புரோச்" எனப்படும் கூம்பு வடிவக் கோபுர வீடுகள் இவற்றுக்கு எடுத்துக்காட்டு ஆகும். சீனர்கள் கிமு 210 ஆம் ஆண்டிலேயே சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியாகக் கோபுரங்களை அமைத்திருந்தனர்.

இந்திய கோபுரங்கள்[தொகு]

குதுப்மினார் கோபுரம்[தொகு]

72.5 மீ (234 அடி) உயரமுடைய 'குதுப் மினார்' தான் தங்கு தடையில்லாமல் நிற்கின்ற உலகின் உயரமான தூபி

குதுப் மினார், இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ளது. இது 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக் கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது. இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவிடமாக [1] அழைக்கப்டுகிறது. தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது.

இந்தக் கோபுரம் எதற்காகக் கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தில்லி சுல்தான்கள் காலத்தில் மக்களை தொழுகைக்காக அழைக்கவே, பள்ளி வாயிலில் தூபியைக் கட்டி இருக்கலாம் அல்லது வெற்றி வாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது இஸ்லாம் மதத்தினரின் படை பலத்தைக் குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்துபுத்தின் ஐபக் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டு கோவில் கோபுரங்கள்[தொகு]

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி." தமிழர் வரலாறு கோவில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பண்டைய காலம் தொட்டே தமிழர்கள் கட்டிடக் கலையில் சிறந்தவர்களாக இருந்திருப்பதை இந்தக் கோவில்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். கோபுரங்கள் கோவில்களின் ஓர் அமைப்பாக மட்டுமல்லாமல் பல விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திருவில்லிபுத்தூர் கோபுரம்[தொகு]

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்

திருவில்லிபுத்தூர் என்பது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற பல சிறப்புகள் கொண்ட 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் புகழ்பெற்ற ஊர். இந்தக் கோவில் கோபுரம் 11 அடுக்குகளைக் கொண்ட கோவில் ஆகும். இந்தக் கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகார பூர்வ சின்னம் ஆகும். இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக இது அதிகம் அறியப்படுகிறது. மேலும் தமிழ் பக்தி இலக்கியத்தில் திருப்பாவை அருளிய ஆண்டாள் பிறந்த ஊர் என்பதற்காகவும் அறியப்படுகிறது.

இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்[தொகு]

கோபுரங்கள், மதுரை

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான நகரம் மதுரை. இந்த நகரத்தில் தான் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது. சைவ சமய பக்தி இலக்கியங்களால் பாடல் பெற்ற நகரமாக உள்ளது. உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் பழமையான நகரங்களில் ரோமிற்கு மேலான மிக்ப் பழமையான நகரமாக மதுரை அறியப்படுகிறது. இந்த நகரத்தின் மையமாக இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். [2] இந்த கோவிலை சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் தமிழ் மாதப் பெயர்களால் அழைக்கபடுகிறது. ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி வீதி மற்றும் மாசி வீதி என்று மாதங்களின் பெயர்களால் அழைக்கபடுகிறது. மேலும் குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் அந்த மாதங்களின் பெயர் கொண்ட வீதிகளில் தான் நடைபெறும். இந்தக் கோவிலை சுற்றி நான்கு திசைகளுக்கு (வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு) ஒன்றாக நான்கு அழகிய கோபுரங்களை கொண்ட நுழைவுவாயில்கள் உள்ளது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம்[தொகு]

சிதம்பரம் நடராசர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் உள்ள அழகிய மிகப் பழைமையான சைவ சமயத்திருக்கோவில். இந்தக் கோவில் பல வரலாற்றுச் சிறப்புகள் கொண்டது. சிவ ஆலயங்களில் முதன்மையானது, 2000 ஆண்டுகள் பழைமையானது, சிதம்பர இரகசியத்திற்கு பெயர் பெற்றது. தமிழ் பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தில் பாடல் பெற்றத் தலம். சிதம்பர இரகசியம் என்று அழைக்கப்படுவது, சிவனாகிய பரம்பொருளின் எல்லைகள் அற்ற ஆரம்பமும் முடிவும் இல்லாத நிலையை உலகிற்கு உணர்த்துவதாகும்.

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.

திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம்[தொகு]

திருவண்ணாமலை கோபுர தரிசனம்

திரு அண்ணாமலையார் கோவில், தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது. இந்தத் தலம் சைவ சமயத்தலங்களில் ஒன்றாகும். இந்தத் தலத்தின் மூலவர் அருணாச்சலேசுவர், அண்ணாமலையார் என்றும் அம்பாள் உண்ணாமுலை என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஊரின் பெயர் கோவிலின் மூலவரான அண்ணாமலையார் பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும்.

24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோவிலாகும். இக்கோவில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள்., கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.[3]

அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.

தமிழ்நாட்டுக் செஞ்சிக் கோட்டை கோபுரம்[தொகு]

கல்யாண மண்டபத்தின் அண்மைத் தோற்றம்.

செஞ்சிக் கோட்டை (Gingee Fort, Senji Fort) [4] தமிழ்நாடுட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி என்றழைக்கப்படும் ஊரில் உள்ளது, மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளது.

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது.

கல்யாண மண்டபத்தில் உள்ள 8 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் உலகப் புகழ் பெற்றதாகும்.

உலகப் புகழ்பெற்ற கோபுரங்கள்[தொகு]

பாரிஸ் ஈபெல் கோபுரம்[தொகு]

ஈபெல் கோபுரம்

ஈபெல் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ளது. இந்தக் கோபுரம் பாரிஸின் ஒரு அடையாளமாக திகழ்கிறது. மேலும் இதன் பொறியியல் வடிவமைப்புக்கு புகழ் பெற்றது. முற்றிலும் இரும்பு எஃகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் பெயர் இதை வடிவமைத்த பொறியாளர் அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் பெயரால் அழைக்கப்படுகிறது.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) [5] உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில், இதுவே உலகின் அதிக உயரமான அமைப்பாக இருந்தது. இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.

பொதுவான பயன்கள்[தொகு]

 • பண்டைய காலங்களில் தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகக் கோபுரம் பயன்பட்டது.
 • இறை வழிபாட்டிற்கு மக்களை அழைப்பதற்காகப் பயன்பட்டது.
 • வெற்றியின் அடையாளமாக அதாவது வெற்றிச் சின்னமாகப் பயன்பட்டது.
 • நவீனக் காலத்தில் தொலைதொடர்புக் கருவியாகப் பயன்படுகிறது.
 • ஒரு சில குறிப்பிட்ட பயன்பாட்டிற்காகத் தனித்துவமிக்க கோபுரங்கள் பின்வருமாறு உள்ளது.
  • தண்ணீர்த் தொட்டிக் கோபுரங்கள் - இவை பெயருக்குத் தகுந்தாற் போல் தண்ணிரை மக்களின் பயன்பாட்டிற்காக ஒரு உயரிய கோபுரத் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் நீரை பூவி ஈர்ப்பு விசையின் மூலம் மக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப் பயன்படுகிறது.
  • மணிக்கூண்டு கோபுரங்கள் - இது ஒரு பொது இடத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக ஒரு உயரிய கோபுரத்தின் உச்சியில் கடிகாரம் வைக்கப்பட்டிருக்கும். [6]
  • கலங்கரை விளக்கம் (கோபுரம்) - கடற்கரையின் அருகில் கப்பல் போக்குவரத்திற்காக மாலுமிகளின் வசதிக்காக ஒரு பெரிய சுழலும் ஒளி விளக்கு இதன் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கும். [7]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://books.google.com/books?id=iFILG_V4hOMC&pg=RA1-PA107&dq=Qutub+Minar+Jain+temples&lr=&ei=O6YcSsGiMoKqzgS_xYnjCQ
 2. http://temple.dinamalar.com/New.php?id=21
 3. http://temple.dinamalar.com/New.php?id=22
 4. C. S. Srinivasachari (1943). History of_Gingee_And_Its_Rulers. Andhra University. pp. 31–32.
 5. Eiffel Tower at CTBUH Skyscraper Database
 6. Clocks, Encyclopædia Britannica 5, 835 (1951).
 7. "Lighthouses: An Administrative History". Maritime Heritage Program – Lighthouse Heritage. U.S. National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2008-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபுரம்&oldid=3651774" இலிருந்து மீள்விக்கப்பட்டது