கோயம்புத்தூர்

ஆள்கூறுகள்: 11°01′00.5″N 76°57′20.9″E / 11.016806°N 76.955806°E / 11.016806; 76.955806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோயமுத்தூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோயம்புத்தூர்
கோவை (அ) கோயமுத்தூர்
பெருநகர மாநகராட்சி[1]
மேலே இருந்து கடிகார திசையில்: பேரூர் பட்டீசுவரர் கோயில், சிறுவாணி நீர்வீழ்ச்சி, சிங்காநல்லூர் குளம், அவிநாசி சாலை மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம்
மேலே இருந்து கடிகார திசையில்: பேரூர் பட்டீசுவரர் கோயில், சிறுவாணி நீர்வீழ்ச்சி, சிங்காநல்லூர் குளம், அவிநாசி சாலை மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம்
கோயம்புத்தூர் is located in தமிழ் நாடு
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர், தமிழ்நாடு
கோயம்புத்தூர் is located in இந்தியா
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°01′00.5″N 76°57′20.9″E / 11.016806°N 76.955806°E / 11.016806; 76.955806
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
பகுதிகொங்கு நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கோயம்புத்தூர் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்பி. ஆர். நடராஜன்
 • சட்டமன்ற உறுப்பினர்அம்மன் கே. அர்ஜுனன் (கோயம்புத்தூர் வடக்கு)
வானதி சீனிவாசன் (கோயம்புத்தூர் தெற்கு)
 • மாநகர முதல்வர்காலியிடம்
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர் ஜி. எஸ். சமீரான், இ.ஆ.ப.
பரப்பளவு
 • பெருநகர மாநகராட்சி[1]246.75 km2 (95.27 sq mi)
 • Metro642.12 km2 (247.92 sq mi)
பரப்பளவு தரவரிசை2
ஏற்றம்452 m (1,483 ft)
மக்கள்தொகை (2011)
 • பெருநகர மாநகராட்சி[1]10,50,721
 • பெருநகர்21,36,916[2]
 • பெருநகர தரம்16வது
இனங்கள்தமிழர்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ் மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு641 XXX
தொலைபேசி குறியீடு+91-422
வாகனப் பதிவுTN 37 (தெற்கு), TN 38 (வடக்கு), TN 66 (மத்திய), TN 99 (மேற்கு)
சென்னையிலிருந்து தொலைவு532 கி.மீ. (330 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு217 கி.மீ. (135 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு237 கி.மீ. (148 மைல்)
இணையதளம்www.ccmc.gov.in

கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமும் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரமும் ஆகும். இது இந்திய மாநகரங்களின் பட்டியலில் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநகரம் ஆகும். இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்த இந்நகரம், இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால், தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளும் 3.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 1804-ஆம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியில் தான் நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. இதனால் நவம்பர் 24 கோயம்புத்தூர் பிறந்தநாளாக அனைவரும் கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் துவங்கப்பட்ட மாநகரமும் இதுவாகும். தற்போதைய வெரைட்டி ஹால் ரோட்டில் டிலைட் திரையரங்கம் என அறியப்படும் இங்குதான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக 1914-ஆம் ஆண்டு திரையரங்கம் துவங்கப்பட்டது. இந்த நகரத்தை கொங்கு நாட்டின் தலைநகரம் எனவும் கூறுவர்.

பெயர்க்காரணம்

இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால், கோசர்புத்தூர் -> கோசம்புத்தூர் -> கோயமுத்தூர் என பெயர் வந்ததிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3][4] கோவை, வடவள்ளிக்கு மேற்கே இருந்த 'கோனன்' என்ற வேட்டுவர் தலைவனுக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், ஒருவர் பெயர் கோணி, இன்னொருவர் பெயர் முத்தா என்று இருந்ததாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியை 'கோணி முத்து ஊர் -> கோணமுத்தூர் -> கோயமுத்தூர்' என மருவி இருக்கலாம். அவர்கள் நிறுவியதே கோனியம்மன் கோவில்.[5] "கோவன்" எனும் இருளர் தலைவன் இருந்ததாகவும், அவன் பெயரிலே உண்டான ஊரே கோவன்புத்தூர் [6] -> கோனியம்மன் புத்தூர் -> கோணம்புத்தூர் -> கோயமுத்தூர் என மாறிருக்கலாம் என செவி வழி செய்திகள் கூறுகின்றன.[7]

வரலாறு

"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது, இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.[சான்று தேவை]

பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாக கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது.[8][9] கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது.[10] கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.

கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927

உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[9] இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர். 1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள், கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும், மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத் தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801 ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

பொது விபரங்கள்

எல்லைகள்

கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும், தெற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர். சாலைகளின் நீளம் - 7434.8 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042, வங்கிகள் 328, காவல்நிலையங்கள் - 60, காவலர்கள் 5910, தந்தி அலுவலகங்கள் 260, தந்தி அஞ்சலகங்கள் 172, பொதுத் தொலைபேசிகள் - 1134. கோவை மாவட்டத்தின் தலைநகரம் கோயம்புத்தூர் ஆகும். இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ. மக்கள் தொகை 35,08.374 பேர். இதில் ஆண்கள் 17,97,189, பெண்கள் 17,11,185 பேர். எழுத்தறிவு உள்ளோர் 20,75,023 பேர், மக்கள் நெருக்கம், ஒரு ச.கி.மீ.க்கு 473 பேர்.

நாடாளுமன்ற தொகுதிகள்

புவியியல்

கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்கு ஓரத்தில் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும், வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்டக் காடுகளும் உள்ளன. கிழக்குப் பகுதி வறண்ட நிலமாக உள்ளது. மேற்கில் உள்ள பாலக்காட்டு கணவாய் கேரளத்தின் வாயிலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினை அடுத்து உள்ளதால் இம்மாவட்டத்தில் பல விலங்கு வகைகள் காணக்கிடைக்கின்றன.

ஏரிகளும் குளங்களும்

நீருடன் வெள்ளலூர் அணைக்கட்டு

பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.

பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு, நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து–அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.

தவிர, காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்கு, சந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள் முதலியன வளர்கின்றன.

பூங்காக்கள்

நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையான ஒன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா, காந்தி பூங்கா, இராமாயணப் பூங்கா, விவேகானந்தர் பூங்கா ஆகியவைகள் ஆகும்.

மக்கள்தொகை பரம்பல்

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
187135,310—    
188138,967+10.4%
189146,383+19.0%
190153,080+14.4%
191147,000−11.5%
192168,000+44.7%
193195,000+39.7%
19411,30,348+37.2%
19511,98,000+51.9%
19612,86,000+44.4%
19713,56,000+24.5%
19817,04,000+97.8%
19918,16,321+16.0%
20019,30,882+14.0%
201110,50,721+12.9%
ஆதாரங்கள்:
 • 1871–1901:[11]
 • 1911–2001:[12]
 • 1981: சிங்கநல்லூர் நகராட்சி இணைக்கப்படுவதால், மக்கள் தொகை உயர்வாகிறது.
 • 2001:[13]
மதவாரியான கணக்கீடு[14]
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
83.31%
முஸ்லிம்கள்
8.63%
கிறிஸ்தவர்கள்
7.53%
சைனர்கள்
0.28%
சீக்கியர்கள்
0.05%
பௌத்தர்கள்
0.02%
மற்றவை
0.01%
சமயமில்லாதவர்கள்
0.17%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 148 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களையும்,[சான்று தேவை] 282,839 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 1,050,721 ஆகும். அதில் 526,163 ஆண்களும், 524,558 பெண்களும் உள்ளனர்.[15] இந்நகரத்தின் எழுத்தறிவு 91.3% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 102069 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 107,949 முறையே மற்றும் 683ஆகவுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கோவையில் இந்துக்கள் 83.31%, முஸ்லிம்கள் 8.63%, கிறிஸ்தவர்கள் 7.53%, சீக்கியர்கள் 0.05%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.28%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.17% பேர்களும் உள்ளனர்.[16]

2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 105,0721 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 2,136,916 ஆகவும் உள்ளது.

நிர்வாகம்

திவான்பகதூர் சாலை (டிபி ரோட்), ஆர் எஸ் புரம், கோவை

கோவை ஒரு மாநகராட்சியும், மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு 'மேயர்' எனப்படும் மாநகரத்தந்தை தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக மாநகர்மன்ற உறுப்பினர்களும், துணை மாநகரத்தந்தையும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சிமன்ற அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிருவாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.

சட்டம் ஒழுங்கு

அமைதியான தொழில் வணிக நகரான கோவையில் 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை அடுத்து பெருமளவு கடையுடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. ஒற்றுமையாக வாழ்ந்த இந்துக்களுக்கும், இசுலாமியருக்கும் இடையே 1980களில் புகையத் தொடங்கிய பகை 1990களில் கோயம்புத்தூரின் மேற்குப்பகுதியில் பெரும் கலவரமாக வெடித்தது. 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள் இப்பகையை மேலும் வளர்த்தன.[17] ஆயினும் தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்பை அடுத்து, தற்போது குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

அரசியல்

நகரத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன :

நகரத்தின் வடக்கே 20% பகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோவை மேற்கு, கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது கோவை நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 10% நகரப்பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது.[18]

ஊடகங்களில் கோவை

அச்சு ஊடகம்

கோயம்புத்தூர் பதிப்புகளைக் கொண்ட தமிழ் செய்தித்தாள்களில் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன், தி இந்து (தமிழ்), (அனைத்து காலை செய்தித்தாள்களும்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவை அடங்கும்.

மலையாள மனோரமா மற்றும் மாத்ருபூமி ஆகிய இரண்டு மலையாள செய்தித்தாள்களும் நகரத்தில் கணிசமான புழக்கத்தில் உள்ளன. நான்கு முக்கிய ஆங்கில செய்தித்தாள்கள், தி இந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் க்ரோனிகல் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை நகரத்திலிருந்து பதிப்புகளை வெளியிட்டன. வணிக செய்தித்தாள்கள் பிசினஸ் லைன், பிசினஸ் ஸ்டாண்டர்டு மற்றும் தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகியவை கோயம்புத்தூர் பதிப்பை வெளியிட்டன. மேலும் தி பெல்லமெடு டைம்ஸ் மற்றும் தி ரெட்ஃபீல்ட்ஸ் டைம்ஸ் ஆகியவைகளும் குறிப்பிட்ட இடங்களைப் பூர்த்தி செய்கின்றன.

வானொலி தொடர்பு

ஒரு நடுத்தர அலை வானொலி நிலையம் அகில இந்திய வானொலியால் இயக்கப்படுகிறது, பெரும்பாலான நிகழ்ச்சிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து ஐந்து எஃப்எம் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன - அகில இந்திய வானொலியில் இருந்து ரெயின்போ எஃப்எம், சன் நெட்வொர்க்கிலிருந்து சூர்யன் எஃப்எம், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி மற்றும் ஹலோ எஃப்எம். இந்த தனியார் வானொலி நிலையங்கள் அனைத்தும் திரைப்பட இசை உட்பட தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன. இந்த நிலையங்களின் வரம்பு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களை உள்ளடக்கியது. தொலைக்காட்சி ரீல் 1985 இல் டெல்லி தூர்தர்ஷனிலிருந்து தொடங்கியது. 1986 ஆம் ஆண்டில், கொடைக்கானலில் ஒரு ரிப்பீட்டர் கோபுரம் தொடங்கப்பட்ட பின்னர், மெட்ராஸ் தூர்தர்ஷனிலிருந்து ஒளிபரப்பு தொடங்கியது. கோயம்புத்தூர் மக்கள் 1980 ஒலிம்பிக் மற்றும் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வ.ஊ.சி பூங்காவில் ஒரு மாபெரும் திரையில் கண்டனர், அப்போது நகரத்தைச் சேர்ந்த யுஎம்எஸ் செயற்கைக்கோள் சமிக்ஞை வரவேற்புக்காக ஒரு டிஷ் ஆண்டெனாவை உருவாக்கியது. தற்போது தொலைக்காட்சி வரவேற்பு டி.டி.எச் மூலமாகவோ அல்லது கேபிள் மூலமாகவோ உள்ளது, அதே நேரத்தில் தூர்தர்ஷன் வரவேற்பு வெளிப்புற ஆண்டெனாவைப் பயன்படுத்தி கிடைக்கிறது. 2005 ஆம் ஆண்டில், தூர்தர்ஷன் கோயம்புத்தூரில் தனது ஸ்டுடியோவைத் திறந்தது.

திரைத்துறையில் கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மிகப் பழமையான சில திரைப்பட ஸ்டுடியோக்களைக் கொண்டுள்ளது. திரைப்பட கண்காட்சியாளரான சுவாமிகண்ணு வின்சென்ட் நகரில் முதல் திரைப்பட ஸ்டுடியோக்களை அமைத்தார். ரங்கசாமி நாயுடு 1935 இல் சென்ட்ரல் ஸ்டுடியோவை நிறுவினார், எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு 1945 இல் பக்ஷிராஜா ஸ்டுடியோவை அமைத்தார்.

கலாச்சாரம்

"தென்னிந்தியாவின் மான்செசுட்டர்" என்று பிரபலமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரத்தின் கலாச்சாரம் இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிடமிருந்து வேறுபடுகின்றது. ஒரு காசுமோபாலிட்டன் நகரமாக இருப்பதால், நகரத்தின் கலாச்சாரம் அதன் மாறுபட்ட மக்களை பிரதிபலிக்கிறது. பொதுவாக ஒரு பாரம்பரிய நகரமாக கருதப்பட்டாலுங்கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற நகரங்களைவிட வேறுபட்டிருக்கிறது. பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லா கலை வடிவங்களும் நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. பண்டைய கோவில் கட்டிடக்கலையிலிருந்து நவீன உயர் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய இசை, நடனம், பாரம்பரிய உணவிலிருந்து துரித உணவுகள், இரவில் தூங்கா நகரமாக உள்ளது பாேன்ற ஒரு தனித்துவமான கலவையை இந்நகரத்தில் காணலாம். கோயம்புத்தூரும் அதன் மக்களும் தொழில்முயற்சிக்காக புகழ் பெற்றுள்ளனர்.[19][20]

பொருளாதாரம்

நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும், நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும், கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர்.[சான்று தேவை] தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

துவக்க காலத் தொழில் வளர்ச்சி

சர் ராபர்ட் ஸ்டேன்ஸ்

பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர் 1862 ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.

1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், இன்று 'ஸ்டேன்ஸ் மில்' என்று பரவலாக அறியப்படும் கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஒரு குளம்பி சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சி சாலையில் நிறுவினார். இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார்.[21] கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும், பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910 ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும், சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911 ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி, மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.

1900 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார்[22] அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922 ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார்.[23] அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி. பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத் தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத் துவக்கினார்.

கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.

தொழில்துறை இன்று

கோவை அருகே உள்ள ஓர் காற்றாலை.

கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது.[24]

துணித்துறை

கோவையில் சிறிதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.

தகவல் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. [25]

கனரக தயாரிப்பு

பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்.ஜி. எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.

தானி பாகங்கள்

'டெக்ஸ்டூல்', இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு, துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் உள்நாட்டிலேயே வடிவமைத்த, முதல் தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982 ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும், லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.

மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ், கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் 'ஹான்சென் டிரான்ஸ்மிசன்' ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.[26]

ஈரமாவு அரவைப்பொறிகள்

கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர்.[27] 2006 ஆம் ஆண்டு கோவையிலும், அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது.[28] இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.[29]

நீரேற்றிகள் தயாரிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள், கோவை பகுதியிலேயே தயாரிக்கப்படுகின்றன.[30] நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும், பலரைக் கவர்கிறது. கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர் :

 • ஷார்ப் தொழிலகங்கள்,
 • சி. ஆர். ஐ. பம்ப்ஸ்,
 • டெக்ஸ்மோ தொழிலகங்கள்,
 • டெக்கான் பம்ப்ஸ்,
 • கே. எஸ். பி. பம்ப்ஸ்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கோவையில் நான்கு இணைக்கப்பட்ட தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளது. 1990 கள் வரை அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நகரத்தின் ஒரே தொலைதொடர்பு சேவை வழங்குநராக இருந்தது. 1990களில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கின. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஆக்ட் ஆகியவை பிராட்பேண்ட் சேவை மற்றும் நிலையான வரி சேவைகளை வழங்குகின்றன. எம்.டி.எஸ் மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. செல்லுலார் தொலைபேசி முதன்முதலில் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகள் கிடைக்கின்றன. செல்லுலார் சேவை வழங்குநர்களின் தமிழகத்தின் தலைமையகமே கோயம்புத்தூர் ஆகும்.

போக்குவரத்து

சாலை

கோவையின் முதன்மை சாலையொன்று

நகரில் ஆறு பிரதான சாலைகளும், மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன:

கோவை மாநகரில் ஒன்பது பேருந்து நிலையங்கள் உள்ளது. அவைகள் :-

 • காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையம் : (மாநகர் போக்குவரத்துக் கழகம் - கோவை, METRO TRANSPORT CORPORATION - COIMBATORE)
 • திருவள்ளுவர் பேருந்து நிலையம் (அ) விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து நிலையம் : (மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (KARTC) , கேரள மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (KSRTC) மற்றும் பாண்டிச்சேரி மாநிலப் பேருந்துகள் (PRTC) , ஆந்திரப்பிரதேசம் மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் (APSRTC) ஆகிய மாநில பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது.
 • மேட்டுப்பாளையம் சாலை பேருந்துநிலையம் (அ) புதிய பேருந்து நிலையம் : மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான நிலையம் இதுவாகும். மேலும் கருநாட மாநிலத்தில் பல்வேறு நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்து சேவை உள்ளது.
 • வடவள்ளி பேருந்து நிலையம் : இந்த பேருந்து நிலையம் கோவையின் "மாநகர் போக்குவரத்து கழகம் - கோவை" மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மாநகரப் பகுதிகளில் செல்லும் பேருந்துகள் ஆகும்.
 • வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் : இந்த பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட இரு மடங்கு பெரிதாகும். இங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் என அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுல் முதன்மையானவை ஆகும்.
 • மருதமலை பேருந்து நிலையம் : மருதமலை பேருந்து நிலையம் என்பது கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 17 - ல் அமைந்துள்ளது. இங்கிருந்து காந்திபுரம் செல்லவும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லவும் கோவை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை தவிர மேலும் கணபதி, போத்தனூரில் பேருந்து நிலையங்கள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருகிறது.

நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வீதம் மிகக் கூடுதலானது. 1921 ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும் இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை கோட்டத்தின் உள்ளூர்ப் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119 வழித்தடங்களில் சேவை வழங்குகின்றன.[31] 800 நகரப்பேருந்துகள் 228 வழித்தடங்களில் சேவை புரிகின்றன.[32]

கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. புதிதாக இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக விரும்பப்படுகின்றன.

சத்தியமங்கலம், திருச்சிராப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலைகளை இணைக்கும் அரைவட்ட சாலை அமைக்கப்படும் என்றும், வண்டிகளுக்காகப் பல்லடுக்கு நிறுத்தும் வசதியைக் காந்திபுரம், டவுன் ஹால் அடங்களான மூன்று இடங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும், "ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்" வெள்ளளூரில் 125 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுமென, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் கோவை மாநகராட்சியில் மொத்தம் 12 பேருந்து நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.[33]

தொடர் வண்டி

கோயம்புத்தூர் தொடர்வண்டி நிலையத்தின் முன்புறத் தோற்றம்

கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1872 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது போத்தனூர்சென்னை இருப்புப் பாதை போடப்பட்டது. அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது. போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீட்டர்பாதை இருப்புப் பாதை, மே 2009 முதல் மூடப்பட்டு, பாட்டை மாற்றப்படுகிறது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையமாகக் கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது. கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர், பிற முக்கிய தொடர்வண்டிச் சந்திப்புகளாகும்.

வான்வழி

கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம்

கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம். கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் இயக்கப்படுகின்றன. கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் நீளம் 9,760 அடிகள் (2,970 m) 747 SP, A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற "வயிறு அகல" பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும்.[34]

கல்வி

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867 ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் (SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875–76) கல்லூரிகளில் ஒன்றாகும். இன்று கோயம்புத்தூரில் 24க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள், வான்படை நிர்வாகக் கல்லூரி, 75க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000க்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன.

மிகப் பழமையான பள்ளிகளாகத் தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள் உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862), புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910), சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917) ஆகியவை உள்ளன.

வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில் கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்துள்ளது. உடன் கரும்பு (Sugarcane Breeding Institute) மற்றும் பருத்தி (Central Institute of Cotton Research) ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

பொறியியல் கல்வியிலும் 1945 ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல் கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியைத் துவக்கினார். இதுவே பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950களில் நிறுவப்பட்ட பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரி (P.S.G) மற்றும் கோவை தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.

தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர் மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

1978 ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு, சுற்றுவட்டாரத்தின் சட்டக்கல்வித் தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்கக் கோவை மருத்துவக்கல்லூரி 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987 ஆம் ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ. மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது.

கோவையில் பல புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன:

பள்ளிகள்

 • ஜி. ஆர். ஜி. பள்ளி
 • எஸ். பி. ஒ. ஏ. பள்ளி
 • கார்மல் கார்டன் பள்ளி
 • தியாகி என். ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி
 • அவிலா பள்ளி
 • லிஸ்யூ மேனிலைப்பள்ளி
 • பாரதி மேனிலைப்பள்ளி
 • பாரதீய வித்தியா பவன் பள்ளி
 • ஆஸ்ரம் மேனிலைப்பள்ளி
 • ஸ்ரீ நாராயண மிஷன் மேனிலைப்பள்ளி
 • சிந்தி வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி
 • வித்யா நிகேதன் பதின்ம மேனிலைப்பள்ளி.
 • வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி.
 • பி. எஸ். ஜி. பப்ளிக் பள்ளி.
 • விமானப்படை பள்ளி
 • ஸ்டேன்ஸ் பள்ளி
 • கேம்ஃபோர்டு பன்னாட்டுப் பள்ளி
 • டிரினிட்டி பதின்ம மேனிலைப்பள்ளி
 • தேசிய மாதிரிப் பள்ளி
 • கதிரி ஆலை மேல்நிலைப்பள்ளி
 • இராசலக்குமி உயர்நிலைப்பள்ளி
 • தூய காணிக்கையன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி
 • ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி
 • சி. எஸ். ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி
 • கௌமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப் பள்ளி

கல்லூரிகள்

 • அண்ணா பல்கலைக்கழகம்
 • கோவை தொழில்நுட்பக் கல்லூரி
 • கோயம்புத்தூர் மெரைன் கல்லூரி
 • கிருஷ்ணா கல்லூரி
 • தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி
 • குமரகுரு பொறியியல் கல்லூரி
 • சி. பி. எம். கல்லூரி
 • கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
 • அரசு கலை கல்லூரி
 • கலைஞர் கருணாநிதி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
 • கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
 • கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி / கற்பகம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி / கற்பகம் மருத்துவக்கல்லூரி
 • பூ. சா. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு

கரி தானுந்து விரைவுச்சாலையில் ஓர் தானுந்து ஓட்டப்போட்டி

தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை "இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்" என்றும் "இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை" என்றும் விளிப்பர்.[35] கோவையின் தொழிலதிபர்கள் சிலர், கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் பார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்கு தேசிய சாதனைப் பந்தயங்கள், இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன.[36] நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும், கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. பார்முலா ஒன்று பந்தயத்தில் 2005 ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.[சான்று தேவை]

நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.[37] தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர்.[38] கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் [39] 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம்,[40] இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.

முக்கிய இடங்கள்

 • கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
 • வ. உ. சி. பூங்கா: வ. உ. சிதம்பரனார் நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன. அருகில் உள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.

கோவில்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

வானிலை

கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398 மீட்டர் உயரத்தில் உள்ளது. வேனிற்காலத்திலும், குளிர்காலத்திலும் வெப்பநிலை 35 °C முதல் 18°வரை உள்ளது.[41] மிகக் கூடுதலாகப் பதியப்பட்ட வெப்பநிலை 41 °C மற்றும் மிகக்குறைந்த அளவு வெப்பம் 12 °C.[42]

பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின் பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்குப் பருவ மழையைப் பெறுகிறது. சற்றே வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இம்மாவட்டம் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ. மழை பெறுகிறது.[41] நகரின் ஆண்டுமுழுவதற்குமான நீர்த்தேவைகளை எதிர்கொள்ள இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி, அத்திக்கடவு போன்ற குடிநீர்த் திட்டங்கள் நகரின் குடிநீத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

பெரும்பாலும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி கரிசல் மண்ணாக இருப்பதால் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. கோவை 1900 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV வகுப்பில் உள்ளது.[43] கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கையியல் மையம் அமைந்துள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், கோயம்புத்தூர் (கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்) 1981-2010, உச்சம் 1948-2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.9
(96.6)
38.8
(101.8)
40.8
(105.4)
42.6
(108.7)
41.2
(106.2)
38.0
(100.4)
36.2
(97.2)
36.0
(96.8)
37.8
(100)
36.8
(98.2)
34.2
(93.6)
34.4
(93.9)
42.6
(108.7)
உயர் சராசரி °C (°F) 30.8
(87.4)
33.6
(92.5)
36.0
(96.8)
36.7
(98.1)
35.4
(95.7)
32.4
(90.3)
31.6
(88.9)
31.9
(89.4)
32.7
(90.9)
31.9
(89.4)
30.1
(86.2)
29.6
(85.3)
32.7
(90.9)
தாழ் சராசரி °C (°F) 18.8
(65.8)
19.8
(67.6)
21.8
(71.2)
23.7
(74.7)
23.7
(74.7)
22.6
(72.7)
22.0
(71.6)
22.0
(71.6)
22.1
(71.8)
22.0
(71.6)
20.9
(69.6)
19.0
(66.2)
21.5
(70.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 12.2
(54)
12.8
(55)
15.8
(60.4)
18.2
(64.8)
15.6
(60.1)
18.3
(64.9)
16.1
(61)
16.1
(61)
16.7
(62.1)
15.9
(60.6)
14.1
(57.4)
12.4
(54.3)
12.2
(54)
மழைப்பொழிவுmm (inches) 7.5
(0.295)
4.2
(0.165)
25.7
(1.012)
43.6
(1.717)
55.2
(2.173)
23.7
(0.933)
25.3
(0.996)
36.1
(1.421)
52.8
(2.079)
157.5
(6.201)
134.6
(5.299)
33.3
(1.311)
599.5
(23.602)
ஈரப்பதம் 41 33 31 42 56 66 68 68 66 67 64 53 54
சராசரி மழை நாட்கள் 0.4 0.6 1.3 2.9 3.5 2.7 2.9 2.8 3.5 8.2 6.6 2.2 37.6
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை[44]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

 1. Chapter 3, Little Village of India (PDF) (Report). Central Pollution Control Board, Govt of India. Archived from the original (PDF) on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2017.
 2. "INDIA: Tamil Nādu". citypopulation.de. https://web.archive.org/web/20160303165154/http://www.citypopulation.de/India-TamilNadu.html from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. {{cite web}}: |archiveurl= missing title (help)
 3. சி. ஆர். இளங்கோவன், வரலாற்று அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம்: 7
 4. சி. ஆர். இளங்கோவன், கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம் 7
 5. சி. ஆர். இளங்கோவன், எஸ்.பி.நரசிம்மலு நாயுடு, கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், 2008,  : பக்கம்: 7
 6. சி. ஆர். இளங்கோவன், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் கல்வெட்டு, கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம்: 8
 7. சி. ஆர். இளங்கோவன், கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம்: 7
 8. 8870719586, K.Shakthivel, +91. "கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயம்புத்தூர், கோவை, தகவல்கள், பேர், மக்கள், கோவை, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, வால்பாறை, கொங்கு, பொள்ளாச்சி, சங்க, தமிழ்நாட்டுத், பரப்பு, districts, - , வருவாய், வடக்கு, தெற்கு, coimbatore, மேட்டுப்பாளையம், information, சூலூர், மாவட்டமும், தொகை, நெருக்கம், பெண்கள், ஆண்கள், தலைநகரம், ஊர்கள், எழுத்தறிவு, மாவட்டத்தின், என்பது, தந்தி". www.tamilkalanjiyam.com. {{cite web}}: no-break space character in |title= at position 274 (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
 9. 9.0 9.1 "கோயமுத்தூர் மாவட்டம்".
 10. "404". Dinamani. {{cite web}}: Cite uses generic title (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 11. Hunter, William Wilson (2015). Imperial Gazetteer of India, Volume 10. BiblioBazaar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-343-35262-9. 
 12. Elangovan, K (2006). GIS: Fundamentals, Applications and Implementations. New India Publishing. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89422-16-5. https://archive.org/details/gisfundamentalsa0000elan. 
 13. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 June 2004. பார்க்கப்பட்ட நாள் 1 January 2008.
 14. "Population By Religious Community – Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. https://web.archive.org/web/20150913045700/http://www.censusindia.gov.in/2011census/C-01.html from the original on 13 September 2015. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015. {{cite web}}: |archiveurl= missing title (help)
 15. "Coimbatore Population Census 2011 - 2020".
 16. கோயம்புத்தூர் மாநகர மக்கள்தொகை பரம்பல்
 17. [1] 1998 serial bomb blasts
 18. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.
 19. "Is Coimbatore the next BPO city?". CNBC-TV18. 5 July 2008. http://www.moneycontrol.com/news/business/is-coimbatorenext-bpo-city_345659.html. பார்த்த நாள்: 23 June 2010. 
 20. "German state keen to share expertise with Coimbatore". Business Line. 22 June 2007. http://www.thehindubusinessline.com/2007/01/22/stories/2007012200821500.htm. பார்த்த நாள்: 23 June 2010. 
 21. Remembering Coimbatore's pioneer பரணிடப்பட்டது 2010-04-05 at the வந்தவழி இயந்திரம், The Hindu
 22. "Page not found News" – via www.thehindu.com. {{cite web}}: Cite uses generic title (help)
 23. Coimbatore's wealth creators பரணிடப்பட்டது 2008-12-29 at the வந்தவழி இயந்திரம், The Hindu
 24. http://www.hindu.com/2007/08/20/stories/2007082053110600.htm பரணிடப்பட்டது 2008-01-28 at the வந்தவழி இயந்திரம் First pillar free trade complex
 25. "Indian cities among global outsourcing cities – retrieved on 16 April 2009". Economictimes.indiatimes.com. http://economictimes.indiatimes.com/quickiearticleshow/3566253.cms. பார்த்த நாள்: 2009-09-23. 
 26. Rs 940 cr investment in Coimbatore, The Hindu
 27. "http://www.thehindubusinessline.com/2005/03/24/stories/2005032401051700.htm". பிசினஸ் லைன். 2005-03-24. http://www.thehindubusinessline.com/2005/03/24/stories/2005032401051700.htm. பார்த்த நாள்: 2009-09-20. 
 28. "Coimbatore wet grinder gets GI certification". தி இந்து. 2006-03-28 இம் மூலத்தில் இருந்து 2007-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070806023456/http://www.hindu.com/2006/03/28/stories/2006032801840200.htm. பார்த்த நாள்: 2009-09-20. 
 29. "http://www.hindu.com/2007/08/05/stories/2007080559430300.htm". தி இந்து. 2007-08-05 இம் மூலத்தில் இருந்து 2007-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071027103719/http://www.hindu.com/2007/08/05/stories/2007080559430300.htm. பார்த்த நாள்: 2009-09-20. 
 30. "Review of the irrigation equipment manufacture and supply sector in India, C.R.S. Sundaram". www.fao.org.
 31. Moffusil bus routes பரணிடப்பட்டது 2010-05-10 at the வந்தவழி இயந்திரம், TNSTC, CBE.
 32. Town bus routes, TNSTC, CBE.
 33. "Tamil Nadu Government Gives Big Infrastructure Push to Coimbatore".
 34. "Front Page : Extended runway ready at Coimbatore Airport". The Hindu. 2008-04-20 இம் மூலத்தில் இருந்து 2008-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080423214311/http://www.hindu.com/2008/04/20/stories/2008042057760100.htm. பார்த்த நாள்: 2009-09-23. 
 35. "City of speed". The Hindu. 2006-04-24. Archived from the original on 2007-01-21. பார்க்கப்பட்ட நாள் 2007-01-03.
 36. "The Hindu : To Kari, WITH LOVE". Hinduonnet.com. 2003-12-01 இம் மூலத்தில் இருந்து 2009-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090910162639/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/12/01/stories/2003120102260100.htm. பார்த்த நாள்: 2009-09-23. 
 37. [2] பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம் Synthetic track works over
 38. "Nirupama Vaidyanathan". Hinduonnet.com. 2001-01-13 இம் மூலத்தில் இருந்து 2009-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090917184357/http://www.hinduonnet.com/2001/01/13/stories/0713102h.htm. பார்த்த நாள்: 2009-09-23. 
 39. Location of golf club பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம், Coimbatore Golf Club,
 40. "100 year old club of Coimbatore". Hinduonnet.com. 2006-09-25 இம் மூலத்தில் இருந்து 2009-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090903152956/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/09/25/stories/2006092500760100.htm. பார்த்த நாள்: 2009-09-23. 
 41. 41.0 41.1 "Coimbatore Corporation – SHB002" (PDF). Coimbatore Corporation. Archived from the original (PDF) on 2010-03-31. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
 42. "Historical Weather for Coimbatore, India". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 2009-09-23.
 43. Dams and earthquakes பரணிடப்பட்டது 2010-08-11 at the வந்தவழி இயந்திரம், Frontline, Volume 16 – Issue 27, December 25, 1999 – 7 January 2000
 44. "Station: Coimbatore (Peeamedu) Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. இந்திய வானிலை ஆய்வுத் துறை. சனவரி 2015. pp. 203–204. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்புத்தூர்&oldid=3843890" இலிருந்து மீள்விக்கப்பட்டது