காரமடை அரங்கநாதசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு அரங்கநாதசாமி கோவில்
கோபுரம்
ஆள்கூறுகள்:11°14′32″N 76°57′37″E / 11.24222°N 76.96028°E / 11.24222; 76.96028
பெயர்
வேறு பெயர்(கள்):ரங்கநாதசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:கிழக்கு ரதவீதி, காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மேட்டுப்பாளையம்
மக்களவைத் தொகுதி:நீலகிரி
கோயில் தகவல்
மூலவர்:அரங்கநாதர்
தாயார்:அரங்கநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:5 சனிக்கிழமைகள், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

காரமடை அரங்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு. இக்கோயிலின் தலவிருச்சமாக காரை மரம் உள்ளது. கரை மரங்கள், நீர் மடைகள் நிறைந்த பகுதியாதலால் இந்த ஊர் கரைமடை என பெயர்பெற்றது.[2]

தொன்மம்[தொகு]

கருடாழ்வாரின் விருப்பத்துக்கு உட்பட்டு இத்தலத்தில் கல்யாணக் கோலத்தில் அவருக்கு காட்சியளித்தார் மகாவிஷ்ணு. பின்னர் இந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நாளடைவில் இப்பகுதி காரை மரங்கள் கொண்ட காடாக மாறியது. இந்தக் காட்டுப் பகுதியில் அருகில் உள்ள சிற்றூர்களைசே சேர்ந்த சில இடையர்கள் மாடுகளை மேய்த்துவந்தனர். அந்த மாடுகளில் ஒரு மாடு திடீரென்று பால் தருவதை நிறுத்திவிட்டது. இந்த மாட்டின் பாலை யாரோ திருடுவதாக ஐயமுற்ற இடையர் அந்த மாட்டை தீவிரமாக கண்காணித்தார்.

காட்டில் மேய்ந்து கொண்டிருந்த அந்தப் பசு ஒரு காரை மரத்தின் அடியில் நின்று அங்கிருந்த ஒரு புதர்மீது பாலை சொரிந்தது. இதனால் கோபமுற்ற இடையர் புதரை கோடாரியால் வெட்டினார். அப்போது அங்கிருந்து குருதி வெளிப்பட்டது. இதைப் பார்த்த இடையரின் கண்பார்வையும் இல்லாமல் போனது.

தகவல் அறிந்து ஊர்மக்கள் திரண்டுவந்து பார்த்தபோது, குருதி பீரிட்ட இடத்தில் பெருமாள் சுயம்புவாக இருக்கிறார் என அசரீரி ஒலித்தது. பின்னர் இடையரின் பார்வை திரும்ப வந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் கோயில் எழுப்பினர் என்ற தொன்மக்கதை உள்ளது.[2]

== கோயில் அமைப்பு ==

இக்கோயிலில் மூலவராக உள்ள அரங்கநாதர் சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். தொன்மக் கதையில் கூறப்படடதன்படி கோடாரில் வெட்டப்பட்ட சுயம்பு மூர்த்தியின் மேல் வெட்டுத் தழும்பு தற்போதும் உள்ளது என கூறுகின்றனர்.[2] இக்கோயிலில் அரங்கநாதர், அரங்கநாயகி சன்னதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், அரங்கநாயகிதாயார். ராமானுஜர், ஆழ்வார்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

வழிபாடு[தொகு]

பொதுவாக பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரியை வைத்து ஆசிர்வதிப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் பெருமாளின் இரம்பாணத்தை வைத்து ஆசர்வதிக்கின்றனர்.[2] இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மாசிமகம் 7வது நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி மாதம் மாசிமகம் 9வது நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 ராம்பாணத்தால் அருளும் ரங்கநாதன் (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். பக். 49-50. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.