கோயம்புத்தூரின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1960களில் கோவை தொடர்வண்டி நிலையம், கோபாலபுரம் சாலை சந்திப்பு

கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். [1][2][3] கோயம்புத்தூரின் வரலாறு, சங்க காலத்தில் தொடங்குகிறது. கொங்கு நாட்டின் அங்கமாக இருந்த இப்பகுதியில் துவக்கத்தில் பழங்குடிகளான கோசர்கள் ஆட்சி புரிந்தனர்; இவர்கள் தலைநகரமாக கோசம்பத்தூர் என்ற பெயரிலான இந்த நகரம் கோயம்புத்தூராக மருவியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. [4]

தற்போது முதன்மையான வணிக, தொழில் மையமாக விளங்கும் இம்மாநகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அழைக்கப்படுகின்றது.[5] இந்த இடைப்பட்டக் காலத்தில் கோயம்புத்தூர் பல போர்கள், பிளேக் நோய்த்தாக்கம், பெரும் பஞ்சங்கள், நூற்பாலைகளின் வளர்ச்சி, கல்வி நிறுவனங்களின் பெருக்கம் ஆகியவற்றை கண்டுள்ளது.

வரலாற்றின் துவக்கம்[தொகு]

சங்க காலத்தில் கொங்குநாட்டின் அங்கமாக இருந்த இப்பகுதியை சேர இராச்சியத்தின் கீழ் தன்னாட்சி பெற்றிருந்த சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர். உரோமானியர் நாணயங்களும் பிற கலைப்பொருட்களும் இங்கு கிடைத்துள்ளதைக் கொண்டு உரோமானியர்களுடன் வணிகம் நடத்தப்பட்டிருப்பது புலனாகிறது. "உரோமானியர்களின் வழி எனப்படும்" முசிறியிலிருந்து அரிக்கமேடு செல்லும் வழியில் நடுவில் கோயம்புத்தூர் பகுதி உள்ளது.[6][7] சங்க காலத்தின் முடிவில் இப்பகுதி மேலைக் கங்கர் ஆளுகைக்கீழ் வந்தது.[8][9][10]

இடைக்காலச் சோழர்கள் இப்பகுதியை 9ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தனர். அவர்கள் காலத்தில் "ராசகேசரி பெருவழி" அமைக்கப்பட்டது.[11][12] இக்காலகட்டத்தில் கோயம்புத்தூரின் சிற்றரசர்களாக இருளர் ஆண்டு வந்தனர். இவர்களின் தலைவன் கோவன் என்பான் இந்நகரை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது; பேரூரிலுள்ள பட்டீசுவரர் கோவிலுக்கு, சுந்தரமூர்த்தி நாயனாருடன் புனிதப் பயணம் வந்த சேர மன்னன் இந்நகரை உருவாக்க கோவனுக்கு ஆணையிட்டதாகவும் குறிக்கப்படுகிறது. [13] சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கோவை பகுதியை பாண்டியர், மதுரை சுல்தான்கள், போசளர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் மதுரை, தஞ்சை நாயக்கர்களும் ஆண்டு வந்தனர்.[14] நாயக்கர்கள் இப்பகுதியில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினர். கொங்குநாடு முழுவதும் 24 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டன.[15]

ஆங்கில-மைசூரு போர்கள்[தொகு]

ஆங்கில-மைசூரு போர்களின் போது கோயம்புத்தூரை தங்கள் வசம் வைத்திருக்க மைசூரு சுல்தான்களும், பிரித்தானியரும் என இரு பாலரும் விரும்பினர்.[16] 1768இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் கோவை நகரைக் கைப்பற்றின. ஆனால் துரோகச் செயலால் அவர்களால் அதை வைத்துக் கொள்ள இயலவில்லை.[16] மீண்டும் இதை 1783இல் கைப்பற்றிய பிரித்தானியர் மங்களூர் உடன்படிக்கையின்படி திப்பு சுல்தானுக்குத் திருப்ப வேண்டியதாயிற்று.[16] மூன்றாவது ஆங்கில மைசூரு போரின்போது, கோயம்புத்தூரை பிரித்தானியர் மீண்டும் கைப்பற்றினர்.[16] திப்பு சுல்தான் இருமுறை முற்றுகையிட்டு, முதலில் தோல்வியடைந்தாலும், இரண்டாம் முறை அக்டோபர் 1791இ்ல் கோவையைக் கைப்பற்றினார். கோட்டைக் காவல்தலைவர்களான லெப்.சால்மர்சும் லெப். நாஷும் சிறைபிடிக்கப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கொண்டு செல்லப்பட்டனர்.[16] போரின் இறுதியில் பிரித்தானியர் வென்றாலும் போர் முடிவடைந்ததும் திப்பு சுல்தானுக்கே திருப்பப்பட்டது.[16] 1799இல் திப்பு சுல்தானின் தோல்விக்கும் இறப்புக்கும் பிறகு கோயம்புத்தூர் பிரித்தானியர் கீழ் வந்தது.

1865இல் கோயம்புத்தூர் அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராயிற்று.[16]

அரசி விக்டோரியா காலம்[தொகு]

1885இல் வரையப்பட்ட கோயமுத்தூர் கடைத்தெரு.
சேர் ராபர்ட்டு இசுடேன்சு.

கோயம்புத்தூர் நகராட்சி 1866இல் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக இராபர்ட் இசுடேன்சு பதவியேற்றார்.[16][17] இசுடேன்சு பல நூற்பாலைகளை நிறுவி கோயம்புத்தூரின் விரைவான தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கினார். 1871இல் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூரின் மக்கள்தொகை 35,310 ஆக இருந்தது; சென்னை மாகாணத்தின் பத்தாவது பெரிய நகரமாகவும் இருந்தது.[16]

1876-78இன் பெரும் பஞ்சத்திலும் 1891-92ஆம் ஆண்டு வறட்சியிலும் கோயம்புத்தூர் பாதிக்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 30 பேர் உயிரிழந்தனர்; கோயம்புத்தூர் மத்திய சிறை, கத்தோலிக்க திருச்சபை தேவாலயம் மற்றும் பல கட்டிடங்கள் சேதமுற்றன.[18]

விரைந்த வளர்ச்சி[தொகு]

1920களில் கோயம்புத்தூரில் துணித் தயாரிப்புத் தொழில் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டது. 1930களில் மும்பையில் துணித் தயாரிப்பாலைகள் முடங்கியதும் பகுதியான வளர்ச்சிக்கு அடிகோலிட்டது. 1934இல் கட்டபட்ட மேட்டூர் அணை வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது. தொடர் வண்டி, சாலை இணைப்புகள் மேம்படுத்தப்பட்டதால் சரக்குப் போக்குவரத்து எளிதாயிருந்தது. 1911-1921 காலகட்டத்தில் அரசு உதவிய கடன்களுடன் கட்டப்பட்ட 15,000க்கும் மேலான பாசனக் கிணறுகள் பெரும் வறண்ட நிலப்பகுதிகளை வேளாண்மைக்குத் தகுதியாக்கிற்று. [19] தென்னிந்தியாவில் திரைப்படத்துறை துவங்கிய காலத்தில் கோயம்புத்தூரில் பல படம்பிடி தளங்கள் துவங்கப்பட்டன. 1935இல் இரங்கசாமி நாயுடு சென்ட்ரல் படம்பிடி தளத்தையும் 1945இல் எஸ். எம். சிறீராமுலு நாயுடு பட்சிராசா படம்பிடி தளத்தையும் நிறுவினர்.[20]

1910இல் காளீசுவரா மில்லும் சோமசுந்தா ஆலைகளும் நிறுவப்பட்டன. 1911இல் பெரியநாயக்கன்பாளையத்தில் லட்சுமி ஆலைகள் நிறுவப்பட்டன. 1930களில் பல துணித்தயாரிப்பு மற்றும் நூற்பாலைகள் நிறுவப்பட்டிருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Tamil Nādu - City Population - Cities, Towns & Provinces" (PDF). censusindia.gov.in. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Tamil Nādu - City Population - Cities, Towns & Provinces - Statistics & Map". Citypopulation.de. 23 September 2009 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Tamil Nādu - Bill to expand madurai and kovai". Deccan Chronicle.de. 10 பிப்ரவரி 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 மே 2011 அன்று பார்க்கப்பட்டது.
 4. "A Trip down memory lane". http://www.coimbatore.com/. pp. வரலாறு கீற்று. 21 மே 2018 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
 5. "Governor congratulates "Manchester of South India"". The Indian Express. 27 June 1936. https://news.google.com/newspapers?id=EMA-AAAAIBAJ&sjid=XkwMAAAAIBAJ&pg=6189,9133960&dq=manchester+of+south+india+coimbatore&hl=en. பார்த்த நாள்: 9 May 2011. 
 6. "Kovai’s Roman connection". The Hindu. 8 January 2009. Archived from the original on 25 ஜனவரி 2009. https://web.archive.org/web/20090125005240/http://hindu.com/mp/2009/01/08/stories/2009010850970100.htm. பார்த்த நாள்: 9 June 2010. 
 7. "On the Roman Trail". The Hindu. 21 January 2008. Archived from the original on 10 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121110160411/http://www.hindu.com/mp/2008/01/21/stories/2008012150370500.htm. பார்த்த நாள்: 9 June 2010. 
 8. Adiga, p 97
 9. Adiga p 100
 10. From the Cakra-Kedara grant, Kodunjeruvu grant (Adiga 2006, p99
 11. Vanavarayar, Shankar (21 June 2010). "Scripting history". The Hindu. Archived from the original on 10 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121110160431/http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm. பார்த்த நாள்: 9 May 2011. 
 12. M, Soundariya Preetha (30 June 2007). "Tale of an ancient road". 
 13. Allirajan, M. (19 May 2005). "Know more about Coimbatore". The Hindu. Archived from the original on 18 ஆகஸ்ட் 2006. https://web.archive.org/web/20060818183230/http://www.hindu.com/thehindu/mp/2005/05/19/stories/2005051901310300.htm. பார்த்த நாள்: 9 June 2010. 
 14. Playne, Somerset (2004). Southern India: its history, people, commerce, and industrial resources. பக். 397. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-1344-7. https://books.google.com/books?id=8WNEcgMr11kC&pg=PA397. 
 15. "The land called Kongunad". The Hindu. 19 November 2005. Archived from the original on 10 ஆகஸ்ட் 2007. https://web.archive.org/web/20070810161112/http://www.hinduonnet.com/thehindu/mp/2005/11/19/stories/2005111902090200.htm. பார்த்த நாள்: 9 June 2010. 
 16. 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 16.6 16.7 16.8 Imperial Gazetteer of India. 10. Clarendon Press. 1908. பக். 371–372. 
 17. சு. முத்தையா (14 April 2003). "'Golden Tips' in the Nilgiris". The Hindu. Archived from the original on 1 ஜூலை 2003. https://web.archive.org/web/20030701133607/http://www.hindu.com/thehindu/mp/2003/04/14/stories/2003041400090300.htm. பார்த்த நாள்: 9 June 2010. 
 18. "The perils of the past". தி இந்து. 28 May 2005. Archived from the original on 10 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121110161035/http://www.hindu.com/mp/2005/05/28/stories/2005052802450300.htm. பார்த்த நாள்: 29 December 2010. 
 19. Krishnakumar, Asha (17–30 January 2004). "The cotton classic". Frontline 21 (2). http://www.frontlineonnet.com/fl2102/stories/20040130004511000.htm. 
 20. M. Allirajan (17 November 2003). "Reel-time nostalgia". The Hindu (Chennai, India). Archived from the original on 14 ஏப்ரல் 2004. https://web.archive.org/web/20040414162717/http://www.hindu.com/thehindu/mp/2003/11/17/stories/2003111700890100.htm. 

உசாத்துணை[தொகு]

 • Adiga, Malini (2006) [2006]. The Making of Southern Karnataka: Society, Polity and Culture in the early medieval period, AD 400-1030. Chennai: Orient Longman.