முசிறித் துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முசிறி என்னும் ஊர் சேரநாட்டின் துறைமுகம். சங்ககாலத்தில் அரபிக்கடலின் கடற்கரையில் இருந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பெரிப்ளஸ் குறிப்பு பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரேக்க, ரோமானிய மக்களைத் தமிழ் நூல்கள் யவனர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கலம் என்னும் கப்பலில் பொன்னோடு வந்து மிளகோடு மீளும் வாணிகம் செய்தனர். முசிறித் துறைமுகத்தில் கடலோடு கலக்கும் ஆறு சுள்ளியம் பேரியாறு. இது இக்காலத்தில் பெரியாறு என வழங்கப்படுகிறது. இந்த ஆற்றின் வழியாக உள்நாட்டுக்குக்கூட கலம் செல்லுமாம். பாண்டிய அரசன் அடுபோர்ச் செழியன் இந்த முசிறியை முற்றுகையிட்டு அங்கு வந்த அழகிய படிமப் பொருள்களைக் கைப்பற்றிச் சென்றானாம். இது புலவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் தரும் செய்தி.[1]

பொலந்தார்க் குட்டுவன் முசிறியின் அரசன். அவ்வூர் மக்கள் அம்பியில் மீனை ஏற்றிச் சென்று பண்டமாற்றாக நெல்லை வாங்கி வருவர். அவற்றில் மிளகு மூட்டைகள் விற்பனைக்கு வரும். கலம் என்னும் கப்பலில் வந்த பொற்குவியல்களை உப்பங்கழித் தோணியால் கரைக்குக் கொண்டுவருவர். அங்குக் குவிந்துகிடக்கும் கடல்வளப் பொருள்களையும், மலைவளப் பொருள்களையும் அவ்வூர் அரசன் குட்டுவன் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்குவான். சங்ககாலப் புலவர் பரணர் இதனைக் குறிப்பிடுகிறார்.[2]

கொடித்தேர்ச் செழியன் (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்) சேரனின் முசிறியை முற்றுகையிட்டு அவனது யானைப்படையை அழித்தபோது சேரநாற்று மக்கள் துன்புற்றது போலத் தலைவன் பிரிவால் தலைவிக்குத் துன்பம் நேர்ந்துள்ளதாம். இது சங்ககாலப் புலவர் நக்கீரர் தரும் செய்தி [3]

முத்தொள்ளாயிரம் என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் இவ்வூர் மக்களை முசிறியார் எனக் குறிப்பிடுகிறார்.[4]

பெரியாறு அரபிக் கடலில் கலக்குமிடம்[தொகு]

முசிறித் துறைமுகம் சேர நார நாட்டின் துறைமுகம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது [5].[6]

தாலமி[தொகு]

தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர் குறிப்பிடும் பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ரோமானியப் பேரரசன் அகஸ்டஸ் நாணயங்கள் சேரநாட்டுப் பகுதியில் கிடைத்துள்ளன. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் ஆகிய நூல்களும் இதனைக் குறிப்பிடுகின்றன.

வஞ்சி[தொகு]

வஞ்சி சேரநாட்டின் தலைநகரம். பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் வஞ்சி மரங்கள் அடர்ந்திருந்த ஊர்ப் பகுதிதான் வஞ்சி. இது சேரன் செங்குட்டுவனின் தலைநகராக விளங்கியதைச் சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது.

அஞ்சைக் களம்[தொகு]

கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆண்ட சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் வஞ்சி நகரம் அஞ்சைக்களம் என்னும் பெயருடன் விளங்கியது.

கொடுங்கோளூர்[தொகு]

கடற்கோள் ஒன்றுக்குப் பின்னர் இதற்குக் கொடுங்கோள் ஊர் என்னும் பெயர் காரணப் பெயராய் அமைந்து விளங்கியது. தற்போது கேரளாவிற்கு உட்பட்ட கொடுங்கோளூர் மலையாள மொழியில் கொடுங்கல்லூர் (കൊടുങ്ങല്ലൂര്‍) என்று அழைக்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

  • முசிறி (திருச்சி மாவட்டம் காவிரியாற்றங்கரை)

அடிக்குறிப்பு[தொகு]

  1. சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் - அகநானூறு 149
  2. புறநானூறு 343
  3. கொய்சுவல் புரவி கொடித்தேர்ச் செழியன் முதுநீர் முன்றுறை முசிறி முற்றி களிறுபட எருக்கிய கல் என் ஞாட்பின் அரும்புண் உறுநரின் வருந்தினள். அகநானூறு 57
  4. முத்தொள்ளாயிரம் 9
  5. தாயங்கண்ணனார் - அகநானூறு 149
  6. பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் தென்கரையில் இருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசிறித்_துறைமுகம்&oldid=3328722" இருந்து மீள்விக்கப்பட்டது