கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில்
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அல்லது கோட்டை ஈஸ்வரன் கோவில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரத்தின் உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்த சிவன் கோயில் ஆகும். இக்கோயில் மூலவர் மற்றும் அம்பாள் பெயர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆவர். கிழக்கு திசை நோக்கிய இக்கோயிலிலின் கருவறையின் வெளிப்புற சுவரின் பத்திகளில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்கை ஆகிய தெய்வங்களுக்கு கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[1]
கோயிலின் திருச்சுற்றில் அறுபத்திமூவர், சோமஸ்கந்தர், சப்தகன்னியர், கன்னிமூல கணபதி, நீலகண்டேஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சண்டிகேஸ்வரர்,அரசமரத்தடியில் நாகர்களுடன் விநாயகர், பைரவர் மற்றும் நவக்கிரகங்களுக்கான சன்னதிகள் உள்ளன. அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனி சன்னதி கொண்டுள்ளாள். முருகனுக்கு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு இடையே, கிழக்கு நோக்கிய தனி சன்னதி உள்ளது. சுவாமி சன்னதிக்கு முன் யானை வாகனம் உள்ளது சிறப்பு. முருகன் சன்னதிக்கு முன் பலி பீடம், கொடிமரம், மயில் வாகனம் ஆகியன இடம்பெற்றுள்ளன.
வரலாறு மற்றும் கல்வெட்டுக்கள்
[தொகு]இக்கோயிலில் உள்ள 9 கல்வெட்டுக்கள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு, கோவை மாவட்ட கல்வெட்டுகள் எனும் தலைப்பிட்ட தொகுப்பில் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 2006-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள், இக்கோயில் அமைந்த பகுதியை கோவன்புத்தூர் உமா பரமேஸ்வரி சதுர்வேதி மங்கலம் வீரகேரளம் நல்லூர், பேரூர் நாட்டு கோவன்புத்தூர் என்று பதிவு செய்துள்ளன. கோயில் மூலவரை வீர சோழீஸ்வரர், கோவன்புத்தூர் சங்கீச்சபுரம் உடையார் என்றும் கல்வெட்டகள் குறிக்கின்றன. இக்கல்வெட்டுக்கள் கொங்கு சோழர்களான வீர இராசேந்திரன் (1227 - 1230), இரண்டாம் விக்கிரம சோழன்(1265), மூன்றாம் விக்கிரம சோழன் (1285) மற்றும் வீரககேரளர் வீர நாராயணன் ( 13-ஆம் நூற்றாண்டு) காலத்தவை ஆகும்.
13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அன்றாடம் நைவேத்தியத்திற்காக நில வருமானத்தில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது. திருக்கார்த்திகை தீபத் விழாவிற்காக இரண்டு கழஞ்சு தங்க நாணயம் கோயிலுக்கு நன்கொடையாக அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் கல்வெட்டுக் குறிப்பில் உள்ளது.
1792-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான திப்பு சுல்தான் நடத்திய மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போரின் போது இக்கோயில் முழுவதும் அழிந்தது. நான்காம் ஆங்கிலேய மைசூர் போருக்குப் பின்னர் இக்கோயில் மீண்டும் சீரமைக்கப்பட்டது.
கோயில் திறப்பு நேரம்
[தொகு]இக்கோயில் காலை 6.30 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கோயில் எதிரில் குண்டு வெடிப்பு
[தொகு]23 அக்டோபர் 2022 அன்று அதிகாலை 4 மணி அளவில் இசுலாமிய அரசு தொடர்புடையவராக கருதப்படும் ஜமேசா முபின் என்பவர் ஓட்டி வந்த காரில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகளில் ஒன்று, கோயில் எதிரில் வெடித்து சிதறியதில், ஜமேசா முபின் உயிருடன் கொல்லப்பட்டார்.[2] இந்த எரிவாயு உருளை வெடிகுண்டு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு 26 அக்டோபர் 2022 அன்று தமிழக முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.[3]