உள்ளடக்கத்துக்குச் செல்

புறத்திறனீட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பந்த சேவை அமர்த்தம் / புறத்திறனீட்டம் (outsourcing) என்பது தயாரிப்பு பொருள் வடிவமைப்பு அல்லது உற்பத்தி போன்று, ஒரு சேவையை துணைஒப்பந்த பணியாக மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றுக்கு அளிப்பதாகும்.[1] ஒப்பந்த சேவை அமர்த்துவதா அல்லது நிறுவனத்தளத்திற்குள்ளேயே செய்வதா என்பதன் மீதான முடிவு பெரும்பாலும் குறைவான உற்பத்தி செலவு, இருக்கும் ஆதாரங்களை மேம்பட்ட வகையில் பயன்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட துறையின் மைய போட்டித்திறன்களுக்குள் நிறுவனத் திறனைக் குவிப்பது ஆகியவற்றை சாதிப்பதற்கோ, அல்லது வெறுமனே உழைப்பு, மூலதனம், தகவல் தொழில்நுட்பம் அல்லது நில வள ஆதாரங்களின் திறம்பட்ட பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தோடோ செய்யப்படும் ஒன்றாகும்.[சான்று தேவை] அடிப்படையில் இது உழைப்பை வகுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் ஒன்றாகும். ஒப்பந்த சேவை அமர்த்தம் என்பது 1980களில் வர்த்தக அகராதியின் ஒரு பாகமாக ஆனது.

சுருக்கம்

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம், ஒரு ஒட்டுமொத்த வர்த்தக செயல்பாட்டின் நிர்வாகத்தை மற்றும்/அல்லது அன்றாட செயலாக்கத்தை ஒரு வெளியிலான சேவை வழங்குநருக்கு மாற்றியளிப்பதை அடக்கியிருக்கும்.[2] மாற்றப்படும் சேவைகளை வரையறை செய்யும் ஒரு ஒப்பந்த உடன்பாட்டை சேவையை வழங்கும் மற்றும் பெறும் நிறுவனங்கள் செய்து கொள்கின்றன. ஒப்பந்தப்படி வழங்குநர் உற்பத்தி சாதனங்களை சேவைபெறும் நிறுவனத்திடம் இருந்து ஊழியர்கள், சொத்துகள் மற்றும் பிற வள ஆதாரங்களின் வடிவில் பெற்றுக் கொள்கிறார். ஒப்பந்த காலம் வரை வழங்குநரிடம் இருந்து சேவைகளை கொள்முதல் செய்து கொள்ள சேவை நுகர்வு நிறுவனம் உடன்படுகிறது. பொதுவாக ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்படும் வர்த்தக பிரிவுகளில் தகவல் தொழில்நுட்பம், மனித வள ஆதாரங்கள், ஆலைவசதிகள், நில விற்பனை நிர்வாகம், மற்றும் கணக்கியல் ஆகியவை அடங்கும். பல நிறுவனங்கள் தொலைபேசி விளம்பரம், வாடிக்கையாளர் சேவை, சந்தை ஆய்வு, உற்பத்தி, வடிவமைப்பு, வலை வடிவமைப்பு, புனைபெயர் எழுத்துகள் மற்றும் பொறியியல் ஆகிய வாடிக்கையாளர் உதவி மற்றும் அழைப்பு மைய செயல்பாடுகளுக்கும் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்கின்றன.

ஒப்பந்த சேவை அமர்த்தத்தில் ஒப்பந்தம் பெறும் அமைப்பு இன்னொரு நாட்டைச் சேர்ந்ததாய் இருந்தால் அதனை அயலக ஒப்பந்த சேவை அமர்த்தம் (Offshoring) என்கிறோம். முக்கியமான தொழில்நுட்ப வித்தியாசங்கள் இருந்தாலும், ஒப்பந்த சேவை அமர்த்தம் மற்றும் அயலக ஒப்பந்த சேவை அமர்த்தம் ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளும் வழக்கத்தில் ஒன்றுபோல் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஒப்பந்த சேவை அமர்த்தம் என்பது ஒரு வழங்குநருக்கு ஒப்பந்தப் பணி அளிப்பதாகும். அது கொஞ்சம் அயலக ஒப்பந்த சேவையை அடக்கியோ அல்லது அடக்காமலோ இருக்கலாம். அயலக ஒப்பந்த சேவை அமர்த்தம் என்பது ஒரு நிறுவன செயல்பாட்டை இன்னொரு நாட்டிற்கு மாற்றுவதாகும். இதில் இந்த வேலை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்படுவதாகவும் இருக்கலாம் அல்லது அதே பெருநிறுவனம்/நிறுவனத்திற்கு உள்ளேயே நிகழ்வதாயும் இருக்கலாம்.[3][4][5] ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் நிறுவனங்கள் பெருகிய அளவில் உலகமயமாகி வருவதை அடுத்து, ஒப்பந்த சேவை அமர்த்தம் மற்றும் அயலக ஒப்பந்த சேவை அமர்த்தம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் காலப்போக்கில் இன்னும் தெளிவின்றிப் போகலாம். இந்திய ஒப்பந்த சேவை அமர்த்த நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அதிகமான அளவில் இடம்பிடித்திருப்பதில் இதனை வெளிப்படக் காணலாம். ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்படும் ஒரு முக்கியமான வேலையாக கணக்கியல் மற்றும் வரித் தாக்கல் தயாரிக்கும் வேலைகள் அமைகின்றன.[6][7]

பல சேவை ஒப்பந்த அமர்த்தம் (Multisourcing) என்பது பெரிய சேவை அமர்த்த ஒப்பந்தங்களைக் குறிப்பிடுகிறது (பிரதானமாக தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள்).[8] பல சேவை ஒப்பந்த அமர்த்தத்தில் சேவைபெறும் வர்த்தகத்தின் பல்வேறு பகுதிகளும் வெவ்வேறு வழங்குநர்களிடம் இருந்து ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்து கொள்ளும் வகையிலமைந்த ஒரு கட்டமைப்புக்கு வழிசெய்கிறது. இதற்கு உத்தியை தெரிவிக்கிற, பொறுப்புகளை தெளிவாய் வரையறை செய்கிற மற்றும் முனை-முதல்-முனை வரையான ஒருங்கிணைப்பு கொண்டிருக்கிற ஒரு ஆளுகை மாதிரி அவசியமாய் இருக்கிறது.[9]

உத்திரீதியான ஒப்பந்த சேவை அமர்த்தம் என்பது, நிறுவனங்கள் சிறப்பு செயல்திறன்களுக்கு இடைஊடக சந்தைகளை நம்ப வேண்டிய சந்தர்ப்பங்களில் எழும் அமைப்புரீதியான ஏற்பாடு ஆகும்.[10] இத்தகையதொரு ஏற்பாடு, செலவு பொருளாதாரங்களின் மூலம் சாதிக்கப்படும் அனுகூலங்களைக் கடந்து நிறுவனங்களின் வழங்கல் சங்கிலிகளுக்குள் மதிப்பை உற்பத்தி செய்கிறது. இதில் சிறப்பு செயல்திறன்களில் நிபுணத்துவமுற்ற இடைஊடக சந்தைகளும் எழுச்சியுறுகின்றன.

வேலை வரையறை, அவசியப்பாடுகளை குறியீடாக்கல், விலை நிர்ணயம், மற்றும் சட்டப்பூர்வ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, சேவை பெறுநர்கள் ஒப்பந்த சேவை அமர்த்த ஆலோசகர்கள் அல்லது ஒப்பந்த சேவை அமர்த்த இடைஊடகத்தினரின் ஆலோசனை சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஒப்பந்த சேவை அமர்த்தத்திற்கான நடவடிக்கைகள்

[தொகு]

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

[தொகு]

நிறுவனங்களுக்கு சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான புதிய தயாரிப்புகளை அதிதுரித வேகத்தில் கொண்டுவர வேண்டிய போட்டி அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன [சான்று தேவை]. இதேபோல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையிலும் (R&D) அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. அழுத்தத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், இந்த நிறுவனங்கள் ஒன்று ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான (R&D) பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது வள ஆதாரங்களின் உற்பத்தித் திறனை இன்னும் அதிகரிக்க[சான்று தேவை] வழி காண வேண்டும். ஒரு நிறுவனம் தனது R&D வேலையை ஒப்பந்த அடிப்படையில் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களுக்கோ ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் நேரலாம். ஒரு நிறுவனம் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்ய வேண்டிய அவசியத்தை பரிசீலனை செய்வதற்கான காரணங்கள்:

  • புதிய தயாரிப்பு வடிவமைப்பு சரியாய் வேலை செய்யவில்லை
  • திட்டப்பணி நேரம் மற்றும் செலவு மிகையுற்று செல்கிறது
  • முக்கிய ஊழியர்கள் இல்லை
  • போட்டிக்கான மறுமொழி
  • தரம்/விளைச்சல் பிரச்சினைகள்.

பாரிய சந்தைகளின் வளர்ச்சியும் இத்துறையில்[சான்று தேவை] நிபுணத்துவம் கிடைக்கத்தக்கதாய் இருப்பதும் தான் R&D ஒப்பந்த சேவை அமர்த்தத்தின் முக்கிய உந்துநர்களாய் உள்ளன. இந்த பொருளில், உலகின் இரு பெரும் மக்கள்தொகை மிகுந்த நாடுகளான இந்தியாவும் சீனாவும், திறமைகளைக் கண்டறிவதற்கான மிகப் பெரிய இடத்தை அளிக்கின்றன. இரண்டு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் 200,000 பொறியாளர்கள் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. மேலும் இரண்டு நாடுகளும் குறைந்த செலவு வைக்கும் ஒப்பந்த சேவையளிக்கும் நாடுகளாகும்.

உற்பத்தி

[தொகு]

பெரும்பாலும் நிறுவனங்கள் தயாரிப்புகளை உருவாக்கி அவற்றை சந்தைப்படுத்தும். ஆனால் உற்பத்தியை அதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களிடம் விட்டு விடுகின்றன [சான்று தேவை]. இதனால் ஒரு ஆலை பல நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்பதோடு, ஒரு பெரிய ஆலை தனியொரு ஒப்பந்தத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

இணையவழி வர்த்தக துறை

[தொகு]

பெரும்பாலான இணையவழி வர்த்தகர்கள் பொருள்களை அனுப்புவதற்கும் அல்லது கொள்முதலை பூர்த்தி செய்வதற்கும் ஒப்பந்த சேவையை அமர்த்திக் கொள்கின்றனர். ஏனென்றால் வர்த்தகத்தின் இந்த பிரிவுக்கு அவசியமாய் இருக்கும் திறன்கள் அநேக இணைய சில்லறை விற்பனையாளர்களின் அன்றாட வேலைகளுக்கு முழு நேரெதிரான ஒன்றாய் அமைந்திருக்கின்றன.[சான்று தேவை] நாட்டில் நூற்றுக்கணக்கான கிட்டங்கிகள் சேமிப்பு இடத்தையும் மலிவான கூலியுழைப்பையும் வழங்குகின்றன என்றாலும், இந்த கிட்டங்கிகள் எல்லாம் தொடர்ந்து தரவுத்தளத்தை புதுப்பிக்க வேண்டியதும், அத்துடன் பொருள் கையிருப்பு மற்றும் அனுப்புதல் பெறுதல்களை அவ்வப்போது பார்த்துக் கொள்ளும் வகையில் இணையவழி அணுகலை வழங்க வேண்டியதும் அவசியமாகும்.[சான்று தேவை]

தகவல் தொழில்நுட்பத் துறை

[தொகு]

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த சேவை அமர்த்தம் என்பது இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது.[11] ஒன்று, ஒரு பயன்பாட்டை, அந்த பயன்பாட்டை உருவாக்குவதற்கு பெயர்பெற்ற ஒரு நிறுவனத்திற்கு உருவாக்கித் தருவதற்கு இன்னொரு நிறுவனத்தை ஏற்பாடு செய்வது. இன்னொன்று, ஒரு நிறுவனத்தின் ஒரு தகவல் தொழில்நுட்பப் பிரிவு கையாண்டிருந்திருக்கக் கூடிய சேவைகள் முழுமையையும் அல்லது அவற்றின் ஒரு பகுதியை நிர்வகிக்க இன்னொரு நிறுவனத்தின் சேவைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்வது. இந்த இரண்டாவது கருத்தாக்கம் புதிய பயன்பாடுகள் உருவாக்குவதை உள்ளடக்காமல் இருக்கலாம்.

ஒப்பந்த சேவை அமர்த்த காரணங்கள்

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் அமைப்புகள் ஆதாயத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன அல்லது பின்வரும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன:[12][13][14]

  • செலவு மிச்சப்படுத்தல் . நிறுவனத்திற்கு ஒட்டுமொத்த செலவு குறைகிறது.[15]
  • மைய வர்த்தகத்தில் கவனம் குவித்தல் . வள ஆதாரங்கள் (உதாரணமாக முதலீடு, ஊழியர்கள், உள்கட்டமைப்பு) மைய வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதில் கவனம் குவிக்கப்படுகின்றன. உதாரணமாக பெரும்பாலும் நிறுவனங்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப பின்புலத்தை நிபுணத்துவம் பெற்ற தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த சேவை மூலம் ஏற்பாடு செய்து கொள்கின்றன.
  • செலவு மறுகட்டமைப்பு . நிலையான செலவுகளை மாறும் செலவுகளாய் மாற்றுவது மற்றும் மாறும் செலவுகளை கூடுதலான அளவில் கணிக்கத்தக்கதாய் ஆக்குவது ஆகியவற்றுக்கான ஒரு நடவடிக்கையின் மூலம் ஒப்பந்த சேவை அமர்த்தமானது இந்த விகிதத்தின் சமநிலையை மாற்றியமைக்கிறது.
  • அறிவு . அறிவுசார் சொத்து மற்றும் பரந்த அனுபவம் மற்றும் அறிவுக்கான அணுகல்.[16]
  • ஒப்பந்தம் . சேவைகள் ஒரு சட்டப்பூர்வமாக கடமைப்பாடு கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் நிதிரீதியான அபராதங்கள் மற்றும் சட்டப்பூர்வமான குறைநிவர்த்தி வழிமுறைகளுடன் வழங்கப்படுகின்றன. இந்த ஏற்பாடுகள் எல்லாம் நிறுவனத்திற்குள்ளான சேவைகளில் எதிர்பார்க்க முடியாது.[17]
  • செயல்பாட்டு நிபுணத்துவம் . நிறுவனத்திற்குள்ளேயே உருவாக்குவதற்கு ரொம்பவும் கடினமாய் இருக்கிற அல்லது மிகுந்த நேரமெடுக்கிற சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளுக்கான அணுகல்.
  • திறமைக்கான அணுகல் . ஒரு பெரிய திறமைக் கூட்டம் மற்றும் ஒரு தொடர்ந்து நம்பிக்கை கொள்ளத்தக்க திறமைகளின் மூலாதாரத்திற்கான அணுகல், குறிப்பாக அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில்.[3][18]
  • செயல்திறன் மேலாண்மை . உபரி செயல்திறனை வழங்குகிற அபாயத்தை வழங்குநர் ஏற்றுக் கொள்ளும் வகையில், சேவை மற்றும் தொழில்நுட்ப செயல்திறன் மேலாண்மையில் ஒரு மேம்பட்ட வழிமுறை.
  • மாற்றத்திற்கான வினையூக்கி . ஒரு அமைப்பு தன்னால் தனியாக சாதிக்க முடியாத ஒரு பெரிய படி மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக ஒரு சேவை அமர்த்த ஒப்பந்தத்தை பயன்படுத்த முடியும்.
  • புதுமைகளுக்கான செயல்திறனை மேம்படுத்துதல் . தயாரிப்புகளில் புதுமைத் திறன்களை உருவாக்க நிறுவனத்திற்குள்ளேயே இருக்கும் வரம்புபட்ட திறன்களுக்கு துணைபுரியும் வகையிலான வெளியிலிருந்தான அறிவுசார் சேவை வழங்குநர்களை நிறுவனங்கள் அதிகமான அளவில் பயன்படுத்துகின்றன.[19][20]
  • சந்தைக்கான நேரத்தை குறைத்தல் . வழங்குநரால் பெறப்படும் கூடுதல் செயல்திறன் மூலம் தயாரிப்பு பொருளின் உருவாக்கம் அல்லது உற்பத்தியை முடுக்கி விடுதல்.
  • பண்டமயமாக்கல் . வர்த்தக நடைமுறைகளை, தகவல் தொழில்நுட்ப சேவைகளை, மற்றும் பயன்பாட்டு சேவைகளை தரநிர்ணயம் செய்யும் போக்கு சரியான விலையில் அவற்றைப் பெற வழிவகை செய்திருப்பதோடு, பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே கிட்டத்தக்கதாய் இருந்த சேவைகளுக்கும் வர்த்தகங்களுக்கு அணுகல் கிட்டச் செய்திருக்கின்றன.
  • அபாய மேலாண்மை . சில வகை அபாயங்களுக்கு, அந்த அபாயத்தை தணிப்பதில் மேம்பட்ட திறன் கொண்டிருக்கும் ஒரு ஒப்பந்த சேவை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கொள்வது தான், அதற்கான அபாய மேலாண்மை வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது.[21]
  • துணிகர முதலீடு . சில நாடுகள், தங்கள் நாட்டில் வணிகத்தை துவங்கும் நிறுவனங்களுக்கு தனியார் துணிகர மூலதனத்துடன் சேர்த்து அரசாங்க நிதிய துணிகர மூலதனத்தையும் பொருத்துகின்றன.[1]
  • வரி ஆதாயம் . இன்னொரு நாட்டுக்குள் இருக்கும் உயர்ந்த பெருநிறுவன வரிகளுக்கு எதிர்நடவடிக்கையாக தங்களது நாட்டிற்கு உற்பத்தி செயல்பாடுகளை நிறுவனங்கள் நகர்த்தும் வகையில் சில நாடுகள் வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
  • அளவீட்டுத் திறன் . ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்பட்ட நிறுவனம் பொதுவாக உற்பத்தியில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக அதிகரிப்பை அல்லது குறைப்பை நிர்வகித்துக் கொள்ளத்தக்க தயாரிப்பு கொண்டிருக்கும்.

ஒப்பந்த சேவை அமர்த்தம் மீதான விமர்சனம்

[தொகு]

தர அபாயங்கள்

[தொகு]

செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒரு தயாரிப்பு அல்லது சேவை குறைபாடுள்ளதாய் ஆவதை தர அபாயம் என்கிறோம். ஒப்பந்த சேவை அமர்த்தத்தில் தர அபாயம் பல காரணிகளால் விளைகிறது. வாங்குபவருக்கும் வழங்குநருக்கும் இடையிலான சீரமையா ஊக்கத்தொகைகள், தகவல் ஒத்தமைவின்மை, உயர்ந்த சொத்து குறிப்பிடல் அல்லது உயர்ந்த வழங்குநர் மாற்ற செலவுகள் ஆகிய காரணங்களை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு வழங்குநர்கள் வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதம் இத்தகைய காரணிகளில் ஒன்று. ஒப்பந்த சேவை அமர்த்தத்தில் தர அபாயத்திற்கு பங்களிக்கும் பிற காரணிகளில் வாங்குபவர்-வழங்குநர் இடையே மோசமான தகவல்தொடர்பு, வழங்குநர் செயல்திறன்கள்/வள ஆதாரங்கள்/செய்திறன்கள் பற்றாக்குறை, அல்லது வாங்குபவர்-வழங்குநர் ஒப்பந்த அமலாக்க இயலுமை ஆகியவை அடங்கும்.

தரம் தேய்வு என்பது ஆதாய வரம்புகளை உயர்த்துவதற்காக திட்டமிட்டு ரகசியமாக உழைப்பு தரத்தை குறைப்பதாகும். மனித மூலதனத்தில் சரிவுறும் மாற்றங்கள் நுட்பமாய் இருக்கும் ஆனால் அதிகரித்து செல்வதாய் இருக்கும். பொதுவாக இது ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனம்/வாடிக்கையாளரால் கவனிக்கப்படாது போகும். ஆரம்ப நேர்காணல் அவசியப்பாடுகளைப் பூர்த்தி செய்வதாய் இருக்கும். ஆயினும் அடுத்தடுத்த கட்டங்களில், பின்புல ஆதரவுக் குழுவின் இன்னும் அதிகமான பேர் புதியவர்கள் அல்லது குறைந்த அனுபவமுற்ற தொழிலாளர்களால் இடம்பெயர்க்கப்படுகின்றனர். சில தகவல் தொழில்நுட்ப வர்த்தகங்கள், தொழிலாளர் கிடைப்புத்தன்மை குறைவது மற்றும் மேல்நோக்கி உயரும் ஊதியங்கள் ஆகிய நெருக்குதல்களின் கீழ், தொடர்ந்து மனித மூலதனத்தின் தரத்தைக் குறைத்துக் கொள்கின்றன. இத்தகைய செயல்பாடுகளை கண்டறிவது கடினம். ஏனெனில் உதவிப் பிரிவில் இருந்து உதவி கோரும் முயற்சியிலேயே வாடிக்கையாளர்கள் நம்பிக்கையிழந்து விடலாம். ஆயினும், காலப்போக்கில்[சான்று தேவை], ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி என்பது நிச்சயமாக குறைந்து விடும். நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர் திருப்தி கருத்துக்கணிப்புகளை நடத்தா விட்டால், அவர்கள் வாடிக்கையாளர் அதிருப்தியைக் கண்டு இறுதியாய் அதிர்ச்சியுற நேரலாம். மூலக் காரணத்தை அவர்கள் கண்டறியும் போது, காலம் கடந்தும் இருக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில், ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனத்துடனான சட்டப்பூர்வ ஒப்பந்தம் கொண்டும் சண்டையிடுவது சிக்கலானதாய் இருக்கும். ஏனெனில் அவர்களின் ஊழியர்கள் தான் இப்போது இந்நிகழ்முறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு உண்மையான நிறுவன ஊழியர்கள் உபரியாக்கப்பட்டு விட்டனர். இறுதியில், ஒப்பந்த சேவை அமர்த்த நிறுவனம் தான் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்வதற்கு முன்பிருந்ததை விட மோசமான நிலையில் இருப்பதாகவும் உணரலாம்.

சேவையின் தரம்

[தொகு]

சேவையின் தரம் சேவை அமர்த்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சேவைத் தர உடன்பாடு (SLA) வழியாக அளவிடப்படுகிறது. சரியாய் வரையறுக்கப்படாத ஒப்பந்தங்களில் தரத்திற்கான அந்த அளவீடு வரையறை செய்யப்படாதிருக்கும். ஒரு சேவைத் தர உடன்பாடு இருந்தால் கூட, அது முன்னர் இருந்த அதே அளவில் இல்லாதிருக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் இதில் ஏராளமாய் இருக்கிறார்கள் என்பதோடு தரம் என்பது குறித்த ஒற்றை பார்வை ஏதும் இல்லை. சரியான விலையில் வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்ய தரம் குறைந்தாலும் பரவாயில்லை என ஒரு தலைமை நிர்வாக அதிகாரி கருதலாம். தொடர்ந்து தரம் பராமரித்து வரும் நிர்வாகக் குழு, தான் முன்னர் சாதித்த தர அளவுகளுடன் ஒப்பிட்டு, தரம் வீழ்ச்சியுறுவதாய் கருதலாம். ஒப்புக்கொள்ளப்பட்ட சேவைத் தர உடன்பாட்டுக்குள்ளாக சேவை மாறியிருக்கிறது, ஆனாலும் அது தரம்போதாத நிலையாய் இருக்கிறது எனக் கருதத்தக்க ஒரு சேவையை சேவையின் இறுதி நுகர்வோர் பெறலாம். தரம் எவ்வாறு உணரப்படுகிறது அல்லது எவ்வாறு மேம்படுத்தப்பட முடியும் என்பதைப் பற்றிய அக்கறை அவசியமின்றி சேவைத் தர உடன்பாடுகளைப் பூர்த்தி செய்வது மட்டும் தான் தரம் என வழங்குநர் கருதலாம்.

இறுதி நுகர்வோர் அனுபவத்தில் தரம் என்பது தொழில்முறை ரீதியாக தரம் குறித்த பாரபட்சமற்ற பார்வையை பெறும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி கருத்துக்கணிப்பு வினாத் தாள்கள் கொண்டு சிறந்த முறையில் அளவிடப்படுகிறது. ஆராய்ச்சியில்[22] ஒருவகையாக புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளும் இருக்கலாம். காலம் நகர்கையில் தரத்தை பின்தொடர்ந்து கண்காணித்து வருவதற்கும் திருத்த நடவடிக்கையை அடையாளம் கண்டு மேற்கொள்வதற்கும் இது அனுமதிக்கிறது.

மொழித் திறன்கள்

[தொகு]

அழைப்பு மையத் துறை அனுபவத்தில் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்படும்போது இறுதிப் பயனர் அனுபவம் தரம் குறைந்ததாய் உணர்வதாய் இருக்கிறது. ஒப்பந்த சேவை அமர்த்தத்துடன் சேர்த்து முதல் மொழி மற்றும் கலாச்சாரம் மாறுபடுகிற பிராந்தியங்களுக்கு அயலக ஒப்பந்த சேவை அமர்த்துவதும் சேர்கையில் இந்த தர வீழ்ச்சி மேலும் மோசமுறுகிறது. பொதுமக்களுக்கு சேவையளிக்கும் அழைப்பு மையங்கள் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யப்படுகிறது, அயலக ஒப்பந்த சேவை அமர்த்தப்படுகிறது என்பதில் தரத்தின் மீதான கேள்விக்குறி வெளிப்படையாய் நிற்கிறது.[சான்று தேவை]

தங்களின் மாறுபட்ட வார்த்தை உச்சரிப்பு அழுத்தங்கள், வார்த்தை பயன்பாடு மற்றும் வாக்கியப் பிரயோகம் போன்ற மொழி அம்சங்களை எல்லாம் அழைப்பு மைய முகவர்கள் புரிந்து கொள்ள சிரமமுறுவதாக பொதுமக்கள் பொதுவாக உணருகின்றனர். நேருக்கு நேர் சந்திக்கையில் இருக்கும் காட்சிப் பரிமாற்றங்களும் இல்லையென்பதால், அழைப்பு மைய பரிவர்த்தனைகள் இன்னும் சிக்கலுற்று தவறான புரிதல்கள் மற்றும் சிரமங்களுக்கு இட்டுச் செல்கின்றன.[23] மொழி மற்றும் உச்சரிப்பு வித்தியாசங்களுடன் சேர்த்து, பிராந்திய சமூக மற்றும் புவியியல் அறிவு பற்றாக்குறையும் பல சமயங்களில் இருக்கிறது. இதுவும் தவறான புரிதல்களுக்கும் தவறான பரிவர்த்தனைகளுக்கும் இட்டுச் செல்லக் கூடும். [சான்று தேவை]

பொதுக் கருத்து

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம் (குறிப்பாக அயலக ஒப்பந்த சேவையுடன் சேருகையில்) உள்நாட்டு தொழிலாளர் சந்தையை சேதாரப்படுத்துகிறது என்பது தான் ஒப்பந்த சேவை அமர்த்தம் குறித்த வலிமையான பொதுக் கருத்தாக இருக்கிறது. ஒப்பந்த சேவை அமர்த்தம் சேவை விநியோகங்களை இடம்மாற்றுவதால் வேலைகள் மற்றும் மனிதர்கள் இரண்டையும் பாதிக்கிறது. வேலை இழப்பையும் வேலையில் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ளும் மனிதர்கள் விஷயத்தில் ஒப்பந்த சேவை அமர்த்தம் ஒரு சீரழிவான விளைவைக் கொண்டிருக்கிறது என்கிற கருத்தை மறுப்பது கடினம்; ஆயினும் ஒப்பந்த சேவை அமர்த்தம் விலைகளைக் கீழே கொண்டு வருவதால், பெரும் பொருளாதார ஆதாயத்தை எல்லோருக்கும் பரவலாய் கிட்டும்படி செய்ய முடிவதாக அதன் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளில் வேலை பாதுகாப்பு குறித்த சட்டப்பூர்வ பாதுகாப்புகள் உள்ளன. அமெரிக்காவின் தொழிலாளர் சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அளவுக்கு பாதுகாப்பு அளிப்பனவாக இல்லை.[24] ஜூன் 26, 2009 அன்று ஜெனரல் எலெக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் இம்மெல்ட் கூறும்போது, அமெரிக்கா தனது உற்பத்தி அடிப்படையிலான வேலைவாய்ப்பை 20% ஆக உயர்த்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அமெரிக்கா அளவுகடந்து ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்து விட்டது என்றும் இனியும் தேவையை உந்தித் தள்ள நுகர்வோர் செலவினத்தை நம்பியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.[25]

சமூகப் பொறுப்புடைமை

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம் குறைந்த வருவாய் பகுதிகளுக்கு வேலைகளை அனுப்புகிறது என்பதால், அந்த பகுதிகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டி ஒட்டுமொத்த சொத்து பகிர்வில் ஒரு மொத்த சமநிலைப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கிறது. வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்வது (குறிப்பாக அயலக ஒப்பந்த சேவையை அமர்த்துவது) மலிவு ஊதிய தொழிலாளர்களை சுரண்டுவதாகும் என சிலர் வாதிடுகின்றனர். இதற்கு மாறான கருத்தோ அதிகமான மக்கள் வேலைவாய்ப்பும் ஊதிய உழைப்பு மூலமான ஆதாயமும் பெறுகின்றனர் என்கிறது.

கம்ப்யூட்டர் நிரலாக்கம் போன்ற உயர் திறன் தொழிலாளர்கள் பிரச்சினையில், வெளிநாட்டு ஊதிய விகிதம் குறைவாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்வதென்பது இருநாட்டு நிரல் வல்லுநர்களுக்கும் உகந்ததல்ல என சிலர் வாதிடுகின்றனர். இன்னொரு பக்கத்தில், உள்நாட்டில் நிரல் வல்லுநர்களுக்கு அதிகமான ஊதிய விகிதம் அளிப்பது என்பது வெறுமனே வீணானது, அல்லது உபகார சேவை வகையானது, அல்லது வெறுமனே மிகைஊதியமளிப்பதானது ஆகும் என்று ஒருவர் வாதிடக் கூடும். வாங்குவோரின் இறுதி இலக்கு தாங்கள் வாங்கும் பொருளுக்கு மிகக் குறைந்த அளவாய் கொடுப்பது தான், விற்பவருக்கு தாங்கள் விற்கும் பொருளுக்கு அதிகமான விலையைப் பெறுவது தான் என்கிற நிலையில், இருவேறு தயாரிப்புகள், சேவைகள், அல்லது ஊழியர்களிடையே மலிவானதை தேர்வு செய்வதில் தானாகவே எதுவும் அநீதியாவது இல்லை.[26]

தொழிலாளர் நல செலவுகளிலும் சமூக பொறுப்புடைமை பிரதிபலிக்கிறது. வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் நிறுவனங்கள் ஓய்வு மற்றும் மருத்துவ நல செலவுகளைத் திறமையாக ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் நாடுகளுக்குக் கடத்தி விடுகின்றன. இது ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் நிறுவனத்திற்கு மொத்த தொழிலாளர் செலவில் குறிப்பிடத்தக்க குறைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த போக்கின் ஒரு பக்க விளைவாக, சொந்த நாட்டில் ஒப்பந்த சேவை அமர்த்தத்தால் நேரடி பாதிப்புக்கு உள்ளாகும் துறைகளில் தொழிலாளர் ஊதியங்கள் மற்றும் ஆதாயங்கள் குறைந்து விடுகின்றன.

ஊழியர் எண்ணிக்கைவிகிதம்

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட பணியாளர்களின் ஊழியர் எண்ணிக்கைவிகிதம் நிறுவனங்களுக்கு கவலை தரும் அம்சமாக உள்ளது. ஊழியர்களைத் தக்கவைப்பது என்பது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியே சென்று விடுவதால் முக்கியமான நிறுவனத் திறன்கள் தொலைந்து போகலாம். அயலக ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்கையில், ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனங்களின் அழைப்பு மையங்களில் ஊழியர் எண்ணிக்கைவிகித பிரச்சினை இருக்கிறது. ஒரு அழைப்பு மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் அது தனது மொத்த ஊழியர்களையும் மாற்றுவதென்பது இத்தகைய நிறுவனங்களில் சாதாரணமாய் நிகழும் ஒன்று.[27] இது ஊழியர் அறிவு கட்டியெழுப்பப் பெறுவதை தடுப்பதோடு தரத்தை கீழ் அளவில் பராமரிக்கிறது.

நிறுவன அறிவு

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம் இடமாற்றப்பட்ட ஊழியர்களுடன் தகவல்தொடர்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். உதாரணமாக, மாற்றப்படும் முன்னதாக ஊழியர்களுக்கு நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள், நடைமுறைகள் போன்றவற்றை தெரிவிக்கும் நிறுவன மின்னஞ்சல் சுற்றறிக்கைகளுக்கு அணுகல் இருக்கும். ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனத்திற்குள் சென்றதும் இந்த அணுகல் இல்லாது போய் விடலாம். அத்துடன் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, சில ஒப்பந்த சேவை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அணுகலே கூட இல்லாது போகலாம். ஆனால் புதியதான எந்தவொரு தகவல் மட்டும் குழுக் கூட்டங்களில் கிடைக்கத்தக்கதாய் இருக்கும்.

ஒப்பந்த சேவை அமர்த்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் பணித்தகுதிகள்

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனங்கள் பணித் தகுதி குறைந்த ஊழியர்களையோ அல்லது மாறுபட்ட சமமில்லாத தகுதிகளுடனான ஊழியர்களையோ கொண்டு நிரப்பக் கூடும்.[28]

பொறியியல் துறையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற பெரிய பொருளாதாரங்களால் உருவாக்கப்படும் பொறியாளர்களின் எண்ணிக்கை குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஒரு பொறியியல் பட்டதாரி என்பதற்கான வரையறை மற்றும் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு இந்த வாதங்கள் நிகழ்கின்றன. நான்கு வருட பட்டப் படிப்புகளில் வருடாந்திர பட்டதாரிகளின் எண்ணிக்கையில் நெருக்கமாய் ஒப்பிடத்தக்க அளவில் இருப்பவை அமெரிக்கா (137,437) , இந்தியா (112,000) மற்றும் சீனா (351,537) தான்.[29][30]

வணிக உருமாற்றத்தை வழங்குவதில் தோல்வி

[தொகு]

ஒப்பந்த சேவை வழங்குநர்கள் உறுதியளிக்கும் வர்த்தக உருமாற்றம் பல சமயங்களில் நடக்காமல் போய் விடுகிறது. பண்டமயமாகி விட்ட சந்தையில், பல சேவை வழங்குநர்களும் நேரம் மற்றும் பணம் மிச்சப்படுத்தும் சலுகைகளை வழங்குகின்றனர். புத்திசாலித்தனம் மிக்க வழங்குநர்கள் வாடிக்கையாளரின் வர்ததக விளைவுகளை மேம்படுத்துகிற இரண்டாம் சுற்று ஆதாயங்களை உறுதியளிக்கின்றனர்.

தோல்விக்கு வழங்குநர்கள் தங்களது செயல்திறன்களை மிகைப்படுத்திக் கூறிவிடுவது தான் காரணம் என்று சில சமயங்களில் கூறப்பட்டாலும், சில சமயங்களில் ஒப்பந்த சேவை அமர்த்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் சமயத்தில் உருமாற்றத்திற்கு முதலீடு செய்வதில் வாடிக்கையாள நிறுவனங்கள் விருப்பமற்று உள்ளனர்.[31][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

உற்பத்தித் திறன்

[தொகு]

செலவை மிச்சப்படுத்தும் நோக்கில் அயலக ஒப்பந்த சேவையை அமர்த்துவது பல சமயங்களில் நிறுவனத்தின் உண்மையான உற்பத்தித் திறனில் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கிறது. உற்பத்தித் திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, உள்நாட்டில் குறைவான ஊழியர்களை பணியமர்த்தி, அயலகங்களில் இருக்கும் உற்பத்தித் திறன் குறைந்த ஆனால் தொழிலாளர்களுக்கு மலிவு ஊதியத்தின் காரணமாக உற்பத்தித் திறன் மிகுந்ததாய் காட்சியளிக்கும் ஆலைகளுக்கு வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்து உண்மையல்லாத உற்பத்தித்திறனையே நிறுவனங்கள் அடைகின்றன. சில சமயங்களில், ஒரு வளரும் நாட்டில் கையால் கையாளும் கருவிகளைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் அமெரிக்காவில் முன்னேறிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் கருவிகளின் துணை கொண்டு வேலை செய்யும் தொழிலாளரை விடவும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்டிருப்பது போன்ற விந்தையான முரண்பட்டை இது காட்டும். இதற்குக் காரணம் அமெரிக்க டாலர்களில் அவர்களின் ஊதியம் மிகக் குறைந்ததாய் தோன்றுவதே.

இதற்கு மாறாய், உண்மையான உற்பத்தித் திறன் அதிகரிப்பு என்பது கூடுதல் உற்பத்தித் திறன் தரும் கருவிகள் அல்லது செயல்பாட்டு வழிமுறைகளின் மூலமாகத் தான் கிட்ட முடியும். உண்மையல்லாத உற்பத்தித் திறன் ஆதாயங்கள் தான் வேலையை குறைவான ஊதிய தொழிலாளர்களுக்கு மாற்றுவதன் மூலம் கிட்டும். உண்மையான உற்பத்தித் திறனை விட்டு விட்டு உண்மையல்லாததை தெரிவு செய்வதன் நிகர விளைவு என்னவென்றால் நிறுவனம் பின் தங்கி விடுவதோடு, உண்மையான உற்பத்தித் திறனில் முதலீடுகள் செய்வதை விட்டுவிட்டு காலப் போக்கில் தன்னையே காலாவதி நிலைக்கு கொண்டு செல்கிறது.

ஊழியர்கள் நிலைப்பாடு

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தத்தால் எதிர்மறை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளின் தொழிலாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், இது ஒரு புதிய அச்சுறுத்தலாய் எழுந்து தொழிலாளர் பாதுகாப்பின்மை உணர்வுக்கு பங்களிக்கிறது, அத்துடன் உலகமயமாக்கலின் பொதுவான நிகழ்முறையையும் பிரதிபலிக்கத்தக்கதாய் இருக்கிறது.[32] “ஒப்பந்த சேவை அமர்த்தம்” வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு அல்லது மொத்தமாய் உலகளாவிய சமூகத்திற்கு அதிகரிக்கும் ஊதியங்கள் அல்லது அதிகரிக்கும் வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றின் ஒரு வடிவம் அல்லது அளவில் ஆதாயங்களை வழங்கலாம் என்றாலும், இந்த ஆதாயங்கள் எல்லாம் நிரந்தர பாதுகாப்புற்றவை அல்ல. மேலும், இந்த ஒப்பந்த சேவை அமர்த்தம் என்கிற பிரயோகம், ஒரு நிறுவனத்திற்குள்ளான துறை, சாதனம் அல்லது மனிதர்களை சேவை வழங்குநருக்கு விற்று விட்டு, அவர்கள் இந்த ஊழியர்களை மோசமான நிலைமைகளின் கீழ் தொடர அனுமதிக்க அல்லது குறுகிய காலத்தில் அவர்களை வெளியேற்றி விட வகை செய்யும் நிகழ்முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தொழில்வாழ்க்கை பாதிப்பு
துறை பாதிப்பு

பாதுகாப்பு

[தொகு]

ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்யும் முன்பு, ஒரு நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களின் செயல்பாடுகளுக்கும் பொறுப்பானதாய் இருப்பதோடு கடமைப்பாடுற்றதாயும் இருக்கிறது. இதே ஊழியர்கள் ஒரு ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனத்திற்கு இடமாற்றப்படும்போது அவர்கள் அதே பணியைச் செய்யலாம் ஆனால் அவர்களது சட்டப்பூர்வ அந்தஸ்து மாறி விட்டிருக்கிறது. அவர்கள் அதன்பின் நேரடி பணியமர்த்தம் பெற்றவர்களில்லை என்பதோடு நிறுவனத்துக்கும் பொறுப்பானவர்கள் இல்லை. இது, வாடிக்கையாளர் மற்றும் வழங்குநர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படத்தக்கதாய் இருக்கும் சட்டப்பூர்வ, பாதுகாப்புரீதியான மற்றும் இணக்க பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இது தான் ஒப்பந்த சேவை அமர்த்தத்தின் மிகச் சிக்கலுற்ற பகுதிகளில் ஒன்றாய் இருப்பதோடு நிபுணத்துவம் பெற்ற மூன்றாம் தரப்பின் ஆலோசனையையும் கோருவதாய் அமைந்திருக்கிறது.

மோசடி என்பது ஊழியர்கள் மூலமானாலும் சரி அல்லது பின்புல ஆதரவு ஊழியர்கள் மூலமானாலும் சரி அது ஒரு குற்ற செயல்பாடாக அமையும் குறிப்பான பாதுகாப்பு பிரச்சினை ஆகும். ஆயினும், ஒப்பந்த சேவை அமர்த்தும் நிறுவனங்கள் சம்பந்தப்படுகையில் மோசடிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என வாதிடப்படுகிறது, உதாரணமாக கடன் அட்டை திருட்டு மோசடி நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 2005 ஏப்ரலில், நான்கு சிட்டிபேங்க் வாடிக்கையாளர்களிடம் இருந்து 350,000 டாலர் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில், அழைப்பு மைய ஊழியர்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான கடவுச் சொற்களைப் பெற்றுக் கொண்டு அவர்களது கணக்குகளில் இருந்து பணத்தினை போலியான பெயர்களில் திறக்கப்பட்ட தங்களது சொந்த கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டார்கள். தங்களின் கணக்குகளில் குழப்பம் நிலவுவதை அமெரிக்க வாடிக்கையாளர் கவனித்து வங்கிக்கு தெரிவிக்கும் வரை சிட்டிபேங்க் இந்த பிரச்சினையைக் கண்டறியவில்லை.[33]

நாடுரீதியாக

[தொகு]

அமெரிக்கா

[தொகு]

2004 அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் ‘ஒப்பந்த சேவை அமர்த்தம்’ என்பது ஒரு பிரபலமான அரசியல் பிரச்சினை ஆனது. உள்நாட்டு அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒப்பந்த சேவை அமர்த்தத்தால் விளையும் பின்விளைவுகளைச் சுற்றி அரசியல் விவாதம் எழுந்தது. அமெரிக்க அதிபருக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரி, வெளிநாடுகளில் வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்து கொள்கிற அமெரிக்க நிறுவனங்களையும் அல்லது வரி வருவாயில் அமெரிக்காவுக்கு வந்து சேர வேண்டிய “நியாயமான பங்கினை” செலுத்துவதை தவிர்த்து வரி ஏய்ப்பு நாடுகளில் வைப்பு செய்வோரையும் தனது 2004 தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சித்தார். அமெரிக்க குடிமக்களின் பார்வையில் இருந்து ஒப்பந்த சேவை அமர்த்தத்திற்கான பெரிய விமர்சனம் என்பது, தொழிலாளர் நடைமுறைக் கட்டுப்பாட்டை இன்னொரு நாட்டில் உள்ள ஒரு வெளி அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாகத் தான் இருக்கிறது. 2004 ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட ஸோக்பி சர்வதேச கருத்துக்கணிப்பு ஒன்று, அமெரிக்க வாக்காளர்களில் 71% பேர் “வெளிநாடுகளுக்கு வேலைகளை ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்வது” பொருளாதாரத்தை பாதிக்கிறது என நம்புகின்றனர் என்றும், உள்நாட்டு வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு அதிகரித்த வரி என்பது போன்ற சில சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஒப்பந்த சேவை அமர்த்த நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதிக்க வேண்டும் என்று இன்னுமொரு 62% வாக்காளர்கள் நம்பினர் என்றும் கண்டறிந்தது.[34] இதற்கு சொல்லப்படும் நியாயங்களில் ஒன்று மற்ற OECD நாடுகளுடன்[35][36][37] ஒப்பிடுகையில் அமெரிக்காவில் நிலவும் மிக அதிக பெருநிறுவன வருமான வரி விகிதம் மற்றும் அமெரிக்க நீதியெல்லைக்கு வெளியில் சம்பாதிக்கப்படும் வருவாய்க்கும் வரிவிதிக்கும் ஒரு விந்தையான, பொதுவாக வேறெங்கும் காணமுடியாத ஒரு நடைமுறை ஆகியவை ஆகும். பெருநிறுவன வருமான வரி விகிதத்தை குறைப்பது மற்றும் அந்நிய நாட்டில் ஈட்டப்படும் வருவாய்க்கு இரட்டை வரி விதிப்பதற்கு (வருவாய் ஈட்டப்படும் நாட்டில் ஒரு முறையும், அமெரிக்காவில் ஒருமுறையும் வரி விதிக்கப்படுகிறது) முடிவு கட்டுவது ஆகியவை பெருநிறுவனங்கள் ஒப்பந்த சேவை அமர்த்தம் செய்வதைக் குறைத்து அமெரிக்காவை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் ஈர்ப்பு மிகுந்த நாடாக ஆக்கும் என்று வாதிடப்படுகிறது. சர்பனேஸ்-ஆக்ஸ்லி சட்டமும் பெருநிறுவனங்கள் அமெரிக்க நீதியெல்லையில் இருந்து விலகிச் செல்வதற்கான ஒரு காரணியாகக் காட்டப்படுகிறது. ஒப்பந்த சேவை அமர்த்தத்திற்கான கொள்கை தீர்வுகளும் விமர்சிக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "Terms and Definitions". ventureoutsource.com. Archived from the original on 2007-12-23. பார்க்கப்பட்ட நாள் 2007-10-05.
  2. Overby, S (2007) ABC: An Introduction to Outsourcing பரணிடப்பட்டது 2007-06-30 at the வந்தவழி இயந்திரம். CIO.com.
  3. 3.0 3.1 Manning et al. (2008) A Dynamic Perspective on Next-Generation Offshoring: The Global Sourcing of Science and Engineering Talent அகாடமி ஆஃப் மேனேஜ்மெண்ட் பெர்ஸ்பெக்டிவ்ஸ் 22.3: 35-54.
  4. Norwood et al. (2006) Off-Shoring: An Elusive Phenomenon பரணிடப்பட்டது 2007-09-25 at the வந்தவழி இயந்திரம். பொது நிர்வாகத்திற்கான தேசிய அகாதமி
  5. பாபு, M. (2005) Myth: All Outsourcing Is Offshoring www.computerworld.com
  6. McCue, A. (2006) Indian outsourcers to launch European invasion www.silicon.com.
  7. கிப்சன் (2006) India 2.0 Aims to Sustain Its Global IT Influence[தொடர்பிழந்த இணைப்பு] eWeek
  8. (Q4 2006)Mandatory Multisourcing Discipline பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் Business Trends Quarterly
  9. (2006) Mandatory Multisourcing Discipline
  10. see Holcomb & Hitt, 2007
  11. Management Information Systems 5e, Oz - ©2006 Course Technology
  12. கேரிஸ், R (2002, 18 Nov) Analyzing The Outsourcers [தொடர்பிழந்த இணைப்பு]. இன்பர்மேஷன் வீக்.
  13. ட்ரெஸ்னர், D.W. (2004) The Outsourcing Bogeyman பரணிடப்பட்டது 2009-01-19 at the வந்தவழி இயந்திரம் www.foreignaffairs.org
  14. எங்கார்டியோ, P. (2006) Outsourcing: Job Killer or Innovation Boost? பிசினஸ் வீக்
  15. எங்கார்டியோ, P. & அர்ண்ட், M. & ஃபவுஸ்ட், D. (2006) The Future Of Outsourcing பிசினஸ் வீக்
  16. எங்கார்டியோ, P. & கிருபாளினி, M. (2006) The Rise Of India பரணிடப்பட்டது 2009-08-25 at the வந்தவழி இயந்திரம் பிசினஸ் வீக்
  17. ரோத்மேன், J. (2003) 11 Steps to Successful Outsourcing: A Contrarian's View www.computerworld.com
  18. லெவின், A.Y. & கௌடோ, V. Next Generation Offshoring: The Globalization of Innovation பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம் Offshoring Research Network பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today 2006 சர்வே அறிக்கை
  19. லெவின், A.Y. & கௌடோ, V. Next Generation Offshoring: The Globalization of Innovation பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம்Offshoring Research Network பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today 2006 சர்வே அறிக்கை
  20. Couto et al. Offshoring 2.0: Contracting Knowledge and Innovation to Expand Global Capabilities பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம் Offshoring Research Network பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today 2007 சேவை வழங்குநர் அறிக்கை
  21. ரோரிக், P (2006) Bet On Governance To Manage Outsourcing Risk பரணிடப்பட்டது 2018-09-01 at the வந்தவழி இயந்திரம். பிசினஸ் ட்ரெண்ட்ஸ் காலாண்டிதழ்
  22. மடோக், B. & வாரென், C. & ஒர்ஸ்லி A. (2005) விக்டோரியன் பள்ளிகளில் உணவகங்கள் மற்றும் உணவு சேவைகள் குறித்த சர்வே
  23. ஆல்ஸ்டர், N (2005) Customer Disservice. பரணிடப்பட்டது 2007-07-02 at the வந்தவழி இயந்திரம் www.CFO.com.
  24. கணேஷ், S. (2007). பரணிடப்பட்டது 2009-08-20 at the வந்தவழி இயந்திரம்Outsourcing as Symptomatic. பரணிடப்பட்டது 2009-08-20 at the வந்தவழி இயந்திரம்Class visibility and ethnic scapegoating in the US IT sector. பரணிடப்பட்டது 2009-08-20 at the வந்தவழி இயந்திரம். ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட், 11.1: 71-83.
  25. பெய்லி, டேவிட் மற்றும் சோயங் கிம் (ஜூன் 26, 2009).GE's Immelt says U.S. economy needs industrial renewal.UK கார்டியன். . ஜூன் 28, 2009 அன்று பெற்றது.
  26. சாரா பாஸெ, "A Gift of Fire: Social, Legal, and Ethical Issues for Computing and The Internet. மூன்றாம் பதிப்பு. 'Work'" (2008)
  27. கோபயாஷி-ஹிலாரி, M. (2007) India faces battle for outsourcing news.bbc.co.uk
  28. ஸ்டெய்ன், R (2005) Hospital Services Performed Overseas. www.washingtonpost.com
  29. வாத்வா, V (2005) About That Engineering Gap. www.businessweek.com
  30. கெரெஃபி, G. & வாத்வா, V. Framing the Engineering Outsourcing Debate: Placing the United States on a Level Playing Field with China and India. ட்யூக் பல்கலைக்கழகம்
  31. ப்ரே, P (2009) Mutual aspiration பரணிடப்பட்டது 2011-04-14 at the வந்தவழி இயந்திரம். www.outsourcingandoffshoring.com
  32. க்ரக்மேன், பால் (2006). "Feeling No Pain." நியூயார்க் டைம்ஸ், மார்ச் 6, 2006)
  33. ரிபெய்ரோ, J (2005) Indian call center workers charged with Citibank fraud. www.infoworld.com
  34. ஸோக்பி சர்வதேச சர்வே முடிவுகள் zogby.com பரணிடப்பட்டது 2008-05-06 at the வந்தவழி இயந்திரம் தளத்தில்
  35. "Veronique de Rugy on Corporate Flight & Taxes on NRO Financial". Archived from the original on 2009-01-08. பார்க்கப்பட்ட நாள் 2010-02-05.
  36. The Tax Foundation – U.S. Lagging Behind OECD Corporate Tax Trends
  37. "John Tamny on Hillary Clinton Economics on NRO Financial". Archived from the original on 2009-01-09. பார்க்கப்பட்ட நாள் 2010-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறத்திறனீட்டம்&oldid=3718388" இலிருந்து மீள்விக்கப்பட்டது