கூழைக்கடா
கூழைக்கடா (கூழைக்கிடா) | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: |
கூழைக்கடா (Pelican) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர்.[1] கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.[2]
வகைகள்
[தொகு]இந்தியாவில் புள்ளிவாய்க் கூழைக்கிடா, டால்மில்டன், பெரிய வெள்ளைக் கூழைக்கடா ஆகிய மூவகை கூழைக்கடாக்க காணப்படுகின்றன. ஸ்பாட் பில்டு பெலிக்கன் நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கறுப்பு புள்ளிகளையுடையது. கூழைக்கடா இனத்திலேயே சிறியதான பழுப்புக் கூழைக்கடா 125–152 செ.மீ. நீளமும் 4.1–6 கி.கி. எடையும் உடையவை. தொங்குபை இளஞ்சிவப்பாகவோ ஊதா நிறத்திலோ இருக்கும். தால்மேசியன் கூழைக்கடா என்பதே இவ்வினத்தில் பெரியதெனக் கருதப்படுகிறது. இது 15 கிலோ எடை வரை இருக்கும். சிறகுகள் விரிந்த நிலையில் 11.5 அடி அகலம் இருக்கும். மற்ற கூழைக்கிடாக்களை விடவும் பழுப்புக் கூழைக்கிடாக்கள் சிறியவை; தாடையின் மேல்பகுதியில் புள்ளிகள் தென்படும். பளிச்சென்ற நிறமில்லாததும் பழுப்பு நிறமும் இவற்றை மற்ற கூழைக்கிடாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.
பண்புகள்
[தொகு]கூழைக்கடா நன்றாக நீந்தக் கூடியது. விண்ணில் தாவிப் பறக்க தொடங்கும்போது, நீரில் தேவைக்கேற்ற தூரம் ஓடி (தேவை ஏற்படும்போது குறுகிய தூரம் நீரில் ஓடி அல்லது தரையில் ஓடி) விண்ணில் சாய்தளப் பாதையில் ஏறுகிறது. விண்ணில் தன்னை சமநிலைப்படுத்தியதும், எந்தவித தடுமாற்றமுமின்றி, சீரான சிறகடிப்பில், தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்து பறக்கும். இவ்வாறு பறந்து செல்லும்போது முதலில் பறந்து செல்லும் பறவை அதிக திறனை பயன்படுத்துவதால் ஏற்படும் களைப்பைப் போக்க, பின்னால் பறக்கும் பறவை முதலில் வந்து தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளும். கூழக்கடாக்கள் நீர்நிலைகளை அடையும்போது நேர்கோட்டில் பறந்து வரும். நீரில் இறங்கும்போது வட்டமிட்டு அல்லது ஆர ஒழுங்கில் பறந்து சாய்தளமாக இறங்கி சிறிது தூரம் ஓடி சறுக்கி இறங்கும்.
உடலமைப்பு
[தொகு]பெரிய உடலும் சிறு கால்களும் கொண்டவை கூழைக்கிடாக்கள்; அவற்றின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை. மேல் அலகின் நுனி கீழ் நோக்கி வளைந்தது. முன்பக்கம் கரண்டி போல் அகன்றும், தட்டையான மேல் அலகு கீழ்கை மூடி போல் மூடியிருக்கும். இதன் காலின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்தும். உடலிறகுகள் வெள்ளை. ஆனால், சிறகுகளிலுள்ள நீண்ட இறகுகள் கறுப்புநிறம். வாலும் கறுப்புநிறம். சதுரவடிவம். தலையின் மேல் சிகரம் போல் முடிச்சாக காணப்படும். இதன் அதிக எடை, பரந்த உடல் அமைப்பு பறக்கும் வேகம். இது விண்ணில் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பாக பறக்க உதவும் காரணிகளாகும்.
உட்பிரிவுகள்
[தொகு]கூழைக்கடாக்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. வளர்ந்த நிலையில் வெண்ணிறமாக இருக்கும் பறவைகள் ஒரு வகை. இவை தரையில் கூடு கட்டி வாழ்கின்றன. ஆத்திரேலிய, தால்மேசிய, வெள்ளைக் கூழைக்கடாக்கள் இவற்றுள் அடங்கும். மற்றொரு வகை வளர்ந்த நிலையில் பழுப்பு நிறம் கொண்டிருக்கும். இவை மரத்தில் கூடு கட்டும். பழுப்புக் கூழைக்கடா, புள்ளிவாய்க் கூழைக்கடா போன்றன இவ்வகையைச் சேர்ந்தன. பெருநாட்டுக் கூழைக்கடா கடற்புறங்களில் உள்ள பாறைகளில் கூடு கட்டி வாழும்.
உணவு
[தொகு]இதன் முக்கிய உணவு மீன்களாகும். தனியாக அல்லது கூட்டமாக குளங்களில் இரைதேடும். நீருக்கடியில் சுமார் ஒரு அடி ஆழத்தில் நீந்தி செல்லும் மீன்களைப் பார்க்கும் கூர்மையான கண்களையுடையது. நீருக்கடியில் மீன்களைக் கண்டதும் அலகை நீருக்குள் நுழைத்து பை போன்ற அலகில் மீனை முகர்ந்து பிடிக்கிறது. கூழக்கடாவின் நீண்ட உணவு குழலில் இருக்கும் அரைக்கப்பட்ட முழுமையாக செரிக்கப்படாத உணவு மீண்டும் வாய்க்குள் கொண்டுவரப்படுகிறது. இதைக் குஞ்சுகள் அருந்துகின்றன. கூழக்கடாக்களால் மீன் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் இவை வேட்டையாடும் மீன்கள் பெரிதும் நோய்வாய்ப்பட்ட மீன்களே ஆகும்.
இனப்பெருக்கம்
[தொகு]தெற்காசியாவில் தென் பாகிஸ்தானிலிருந்து இந்தியா உள்பட கிழக்கே இந்தோனேசியா வரை கூழைக்கிடாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. கூழைக்கடாக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. கூழைக்கடாக்கள் டிசம்பர் மாதத்தில் புளியமரங்கள், பனைமரங்களில் குச்சிகளை வைத்து நடுவில் குழிந்த பெரிய மேடை போன்ற கூட்டைக்கட்டும். கூடுகள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். கூட்டை பத்து நாட்களில் கட்டி முடித்துவிடும். கூடுகளைக் கட்டுவதற்கு முன்னர் ஆண், பெண் இருபறவைகளும் உடலுறவு கொள்ளும்.
2 அல்லது 3 முட்டைகள் இடும். ஆரம்பத்தில் வெள்ளைநிறத்தில் இருக்கும் முட்டைகள் நாளாக நாளாக அழுக்கு நிறத்தில் காணப்படும். ஆண்-பெண் இருபறவைகளுமாக சேர்ந்து 21 நாட்கள் அடைகாக்கும். முட்டை பொரித்து ஒரு வாரத்திற்குப் பிறகு குஞ்சுகளுக்கு உணவூட்டும். குஞ்சுகள் முழு வளர்ச்சியடைய ஓராண்டு காலமாகும். கூழைக்கடாக்கள் குஞ்சுகளை தூக்கவரும் பறவைகளை வெறியுடன் தாக்கும்.
இலக்கியக் குறிப்புகள்
[தொகு]பின்வரும் திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல்[3] கூழைக்கடா தென்தமிழகத்தில் அறியப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.
“ | வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே!
வருகினும் ஐயே! திரிகூட நாயகர் வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம் குருகும் நாரையும் அன்னமுந் தாராவும் கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் (வரு) |
” |
சிற்றினங்கள்
[தொகு]-
பழுப்பு கூழைக்கடா Pelecanus occidentalis
-
பெருநாட்டு கூழைக்கடா Pelecanus thagus
-
அமெரிக்க வெள்ளை கூழைக்கடா Pelecanus erythrorhynchos
-
வெள்ளைக் கூழைக்கடா Pelecanus onocrotalus
-
டால்மேசிய கூழைக்கடா Pelecanus crispus
-
செம்முதுகு கூழைக்கடா Pelecanus rufescens
-
சாம்பல் கூழைக்கடா Pelecanus philippensis
-
ஆத்திரேலிய கூழைக்கடா Pelecanus conspicillatus
உசாத்துணை
[தொகு]- ↑ பக்கம் 127, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்
- ↑ "பேர்டு லைப் இண்டர்நேசனல்". Archived from the original on 2009-01-04. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
- ↑ திரிகூடராசப்பக் கவிராயர்; புலியூர்க்கேசிகன் (உரை) (2007). திருக்குற்றாலக் குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். p. 134.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- பொதுவகத்தில் Pelecanus பற்றிய ஊடகங்கள்
- அமுதம் தகவல் களஞ்சியம்
- Pelican videos on the Internet Bird Collection