உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றாலக் குறவஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்குற்றாலக் குறவஞ்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றித் தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

நூலாசிரியர்[தொகு]

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார் - இவரைத் தலைவராகக் கொண்டு நெஞ்சுவிடு தூது என்ற இலக்கிய படைப்பையும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

கதை அமைப்பு[தொகு]

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள் முழங்கக் குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காணப் பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லிப் பரிசு பெறுகிறாள் குறத்தி தலைவி. அவள் கணவன் தலைவன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட தலைவன் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.

நூலின் சிறப்புகள்[தொகு]

குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதால் திரிகூடராசப்பக் கவிராயரின் இந்நூல் 'கவிதைக் கிரீடம்' என்று அழைக்கப்படுகிறது இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும் இன்று பலரும் விரும்பிப் படிப்பது அவருடைய குறவஞ்சி ஒன்றே. குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது. சான்றாக வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே

என்ற பாடலைக் கூறலாம். இதைப்போல் சந்தநயம் கொண்ட இன்னும் பலபாடல்கள் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டுள்ளன.

குற்றாலக் குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும் செடியினங்களைப் பற்றியும் மிகப்பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.[1]

நூலின் காலம்[தொகு]

கொல்லம் ஆண்டு 887-இல் பாண்டிய அரசன் குற்றாலநாதரின் சித்திரசபைக்கு ஓடு வேய்ந்த செய்தியைச் சின்னணஞ் சாத்தேவன் என்பவன் செப்பேடு செய்து செய்திருக்கிறான், என்று இந்த நூலிலுள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[2] கொல்லம் 824 + 887 = 1711-ஆம் ஆண்டினை இந்த நூல் குறிப்பிடுவதால் இந்த நூலின் காலம் 18-ஆம் நூற்றாண்டு எனத் தெரியவருகிறது.

உசாத்துணைகள்[தொகு]

 1. புலியூர் கேசிகன் (உரையாசிரியர்), திருக்குற்றாலக்குறவஞ்சி, பாரி நிலையம், சென்னை. (மறுபதிப்பு 2000)
 2. மு. வரதராசன், தமிழ் இலக்கியவரலாறு, சாகித்திய அகாதமி, 18ஆம் பதிப்பு, 2003.
 3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஏழு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மே.1998.
 4. இணையதளம்- www.tamilvu.org

மேற்கோள்கள்[தொகு]

 1. "சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - 3". சொல்வனம் (57). 2011-10-05. http://solvanam.com/?p=16827. பார்த்த நாள்: 2012-01-13. "குறத்தி தனது நாட்டுவளம் கூறும் பாடல்கள் நயம் மிக்கவை. தமிழ்நாட்டின் காடு, நீர்நிலைகள், மருத நிலம் எத்தகு வளமோடும் வனப்போடும் இருந்தன என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.". 
 2. நன்னகர்க் குற்றாலந் தன்னில் எங்கும்
  நாட்டும் எண்ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில்
  பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
  பாண்டிய னார்முதற் சிற்றோடு மேய்ந்த
  தென்னாரும் சித்ரசபையை எங்கள்
  சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
  முன்னாளிலேகுறி சொல்லிப் பெற்ற
  மோகன மாலைபார்
  திருக்குற்றாலக் குறவஞ்சி - புலியூர்க் கேசிகன் உரை - பாரி நிலையம் வெளியீடு - 2013 பதிப்பு - பக்கம் 109
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றாலக்_குறவஞ்சி&oldid=3696826" இலிருந்து மீள்விக்கப்பட்டது