பெருமாள் முருகன்
பெருமாள்முருகன் | |
---|---|
![]() | |
பிறப்பு | முருகன் 15 அக்டோபர் 1966 கூட்டப்பள்ளி, பிரிக்கப்படாத சேலம் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா |
புனைபெயர் | இளமுருகு |
தொழில் | தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் |
குடியுரிமை | இந்தியர் |
இணையதளம் | |
http://www.perumalmurugan.in/ |
பெருமாள்முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஓராண்டு முதல்வர் பொறுப்பு வகித்தார். பின்னர் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வராக மூன்றாண்டுகள் பணியாற்றி செப்டம்பர் 2023இல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள் முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது பத்து நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிய மொழியிலும் மாதொருபாகன் நாவல் இடாய்ச்சு மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. பூனாச்சி சீனம், இத்தாலி மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன், பூனாச்சி ஆகிய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் விருதுக்கான (International Booker Prize) நெடும்பட்டியலில் பூக்குழி (Pyre) இடம்பெற்றது. இப்பட்டியலில் தமிழ் நாவல் ஒன்று இடம் பெறுவது இதுவே முதல்முறை.
வெளியான நூல்கள்[தொகு]
நாவல்கள்[தொகு]
- ஏறுவெயில் - 1991[1]
- நிழல்முற்றம் - 1993[2]
- கூளமாதாரி-2000[3]
- கங்கணம்-2007[4]
- மாதொருபாகன் - 2010 [5]
- ஆளண்டாப்பட்சி - 2012[6]
- பூக்குழி - 2013
- ஆலவாயன் - 2014
- அர்த்தநாரி - 2014
- பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - 2016
- கழிமுகம் - 2018
- நெடுநேரம் - 2022
சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]
- திருச்செங்கோடு - 1994
- நீர் விளையாட்டு - 2000
- பீக்கதைகள் - 2006
- வேப்பெண்ணெய்க் கலயம் - 2012
- பெருமாள் முருகன் சிறுகதைகள் - 2016
- மாயம் - 2020
கவிதைத் தொகுப்புகள்[தொகு]
- நிகழ் உறவு - 1991
- கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் - 2000
- நீர் மிதக்கும் கண்கள் - 2005
- வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - 2012
- கோழையின் பாடல்கள் - 2016
- மயானத்தில் நிற்கும் மரம் - 2016
அகராதி[தொகு]
- கொங்கு வட்டாரச் சொல்லகராதி 2000
கட்டுரைகள்[தொகு]
- ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - 2000
- துயரமும் துயர நிமித்தமும் - 2004
- கரித்தாள் தெரியவில்லையா தம்பி - 2007
- பதிப்புகள் மறுபதிப்புகள் - 2011
- கெட்ட வார்த்தை பேசுவோம் - 2011
- வான்குருவியின் கூடு - 2012
- நிழல்முற்றத்து நினைவுகள் - 2012
- சகாயம் செய்த சகாயம் - 2014
- நிலமும் நிழலும் - 2018
- தோன்றாத்துணை - 2019
- மனதில் நிற்கும் மாணவர்கள் - 2021
- மயிர்தான் பிரச்சினையா? - 2022
- மாறாது என்று எதுவுமில்லை - 2022
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- Seasons of the Palm 2004 (கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ. கீதா)
- Current Show 2004 (நிழல்முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ. கீதா)
- One Part Woman 2013 (மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்)
- Pyre (பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்) 2015
- A Goat Thief (பத்துச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு: கல்யாண்ராமன்) 2017
- Poonaachi or story of a Block Goat (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : கல்யாண்ராமன்) 2017
- A Lonely harvest (ஆலவாயன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்) 2018
- Trail by silence (அர்த்தநாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அனிருத்தன் வாசுதேவன்) 2018
- A black coffee in a coconut shell (சாதியும் நானும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: அம்பை) 2017
- Amma (தோன்றாத்துணை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: நந்தினி முரளி, கவிதா முரளிதரன்) 2019
- Rising Heat (ஏறுவெயில் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜனனி கண்ணன்) 2020
- Estuary (கழிமுகம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: நந்தினி கிருஷ்ணன்) 2020
பதிப்புகள்[தொகு]
- கொங்குநாடு (தி. அ. முத்துசாமிக் கோனார்)
- நாமக்கல் தெய்வங்கள்
- பறவைகளும் வேடந்தாங்கலும் (மா. கிருஷ்ணன்)
- சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு) - 2012
- கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) -2014
- கருவளையும் கையும் (கு. ப. ரா. கவிதைகள்) - 2022
தொகுப்பாசிரியர்[தொகு]
- பிரம்மாண்டமும் ஒச்சமும்
- உடைந்த மனோரதங்கள்
- சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
- கொங்குச் சிறுகதைகள்
- தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
- உ. வே. சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
- தீட்டுத் துணி (அறிஞர் அண்ணா)
விருதுகள்[தொகு]
- சமான்வே பாஷா சம்மான் 2015
- விளக்கு விருது 2012
- கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013
- கதா விருது 2000
- கனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு 2011
- சிகேகே அறக்கட்டளை விருது
- அமுதன் அடிகள் விருது
- மணல் வீடு விருது
- களம் விருது
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
- லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
- தேவமகள் விருது
சர்ச்சை[தொகு]
இவர் 2010இல் எழுதி பதிப்பித்த மாதொருபாகன் நாவல் பன்னாட்டு நிறுவனமான போர்ட் பௌண்டேஷனுக்குத் தொடர்புள்ள நிறுவனமான இந்தியா பௌண்டேஷன் ஃபார் ஆர்ட்ஸிடம் நிதி பெற்று,[7] வரலாற்றாதாரமற்ற நிகழ்வுகளை வரலாற்று நாவல் என்றெழுதி, திருச்செங்கோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு தரப்பினரும்[8] அமைப்புகளும் அந்நாவலுக்கு 2015இல் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையின் போது நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) முன்னிலையில் பொது மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தார். அதன் பின் இனி எதையும் தான் எழுதுவதில்லை எனவும், மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் முகநூலில் தெரிவித்தார்.[9][10][11][12]
ஒரு சாதியைச் சார்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளான காளி, பொன்னா பற்றியது இக்கதை. குழந்தை இல்லாததால் தேர்த் திருவிழாவில் அடுத்த ஆணுடன் உறவு கொண்டு பொன்னா குழந்தை பெற முயல்வது போல் கதை எழுதப்பட்டுள்ளது.[13]
ஆதரவு[தொகு]
எழுத்தாளர் பெருமாள்முருகனை 2015 சனவரி 12 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்து “மாதொரு பாகன்’’ நூலின் பிற்கால பிரதிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் புதிய பதிப்பு வந்தாலும் திருச்செங்கோடு குறித்த விவரங்கள் இருக்கக்கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. இது அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. ஒப்பந்தம் என்றாலும் உடன்பாடு என்றாலும் அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது.[14].[15] இவ்வழக்கில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் 5 ஜூலை 2016இல் தீர்ப்பு வழங்கினர். (https://www.thehindu.com/news/national/tamil-nadu/Perumal-Murugan-case-full-court-judgment-ordered-on-July-5-2016/article14472664.ece) அத்தீர்ப்பில் இலக்கியப் பிரதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது கருத்துரிமைக்கு எதிரானது என்றும் பெருமாள்முருகன் மீண்டும் எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் எழுதுவதாகப் பெருமாள்முருகன் அறிவித்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பெருமாள்முருகன். ஏறுவெயில். விடியல் பதிப்பகம், 1996 - 287 pages - Google books. பக். 287. http://books.google.com/books/about/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html?id=_pJkPAAACAAJ.
- ↑ காலச்சுவடு - தமிழ்பேப்பர் விமர்சனம்
- ↑ கூளமாதாரி - விளிம்பு நிலை மனிதர் வாழ்வை விலாவாரியாகச் சித்திரிக்கும் பெருமாள் முருகனின் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ காலச்சுவடு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காலச்சுவடு". 2011-11-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காலச்சுவடு ஆறு நூல்கள் வெளியீடு". 2013-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.indiaifa.org/perumalmurugan.html
- ↑ https://m.youtube.com/results?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&sm=3
- ↑ "பெருமாள் முருகன் செத்துவிட்டான்': எழுத்தாளர் உருக்கமான அறிக்கை". தினமலர். 14 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Who 'killed' Indian author Perumal Murugan?". BBC. 14 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "செத்துவிட்டான் பெருமாள் முருகன் : சமூக தளத்தில் எழுத்தாளரின் உருக்கமான அறிக்கை". தினமணி. 14 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Perumal Murugan gives up writing". The Hindu. 14 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Why Perumal Murugan's "One Part Woman" is Significant to the Debate on Freedom of Expression in India". CaravanMagazine. 14 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "எழுத்தாளர் பெருமாள் முருகனை நிர்ப்பந்தம் செய்து போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு". தீக்கதிர். 20 சனவரி 2015. 20 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பெருமாள் முருகனின் ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு