உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். சண்முகசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். சண்முகசுந்தரம் (1917-1977) தமிழக எழுத்தாளர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய "நாகம்மாள்" என்ற புதினம் இவரின் பெயரை முன் நிறுத்தியது.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பழைய கோவை மாவட்டத்திலிருந்த தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் செல்வாக்குமிக்க, வசதியுள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சண்முகசுந்தரம். இவரது தாயார் ஜானகி அம்மாள், தந்தை பெயர் எம். இரத்தினாசல முதலியார். சண்முகசுந்தரத்தின் மனைவி பெயர் வள்ளியம்மாள். இளம் வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை வழிப் பாட்டியின் அரவணைப்பில் இவரும் இவர் தம்பியும் வளர்ந்தனர்.[2]

இவரது தம்பி ஆர். திருஞானசம்பந்தமும் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.

எழுத்துலகில்

[தொகு]

மணிக்கொடி இதழில் சிறுகதை எழுதத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை "பாறையருகே". பி. எஸ். ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தபோது இது வெளிவந்தது. "நந்தா விளக்கு" என்ற மற்றொரு கதையையும் மணிக்கொடியில் எழுதினார். வசந்தம் என்னும் இதழைத் தம் தம்பியுடன் இணைந்து பல ஆண்டுகள் நடத்தியுள்ளார். இவ்விதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்தார்.[2] ஆர்.சண்முகசுந்தரத்தின் பல சிறுகதைகளும், வசன கவிதைகளும் அதில் வெளிவந்தன.

நாகம்மாள் என்னும் நாவலை எழுதி 1942 இல் வெளியிட்டார். இந்நாவலுக்குக் கு. ப. ராஜகோபாலன் முன்னுரை எழுதியுள்ளார். தமிழகத்தின் மேற்குப் பகுதியான கொங்கு வட்டார வழக்கில் அமைந்த அந்நாவலையே க. நா. சுப்பிரமணியம் தமிழின் முதல் வட்டார நாவல் என்று குறிப்பிடுகின்றார். காந்தியடிகள் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது வெளியிட்ட ‘கிராமத்தை நோக்கித் திரும்பு’ என்ற கருத்தை மையமாக வைத்து தான் அறிந்திருந்த கிராமச்சூழலை மையமாக வைத்து பெரும்பாலான கதைகளை எழுதினார். “மீண்டும் கிராமத்திற்குப் போய் விடுவோம் என்ற கொள்கையின் பின்னணியிலேயே சண்முக சுந்தரம் புதினங்களை ஆராய்தல் தகும்” [3]என்று க. கைலாசபதியும், “கிராமப் பொருளாதார வாழ்க்கையைத் தவிர வேறெதையும் அவரது நாவல்களில் காணமுடியாது”[4] என்று எஸ்.தோத்தாத்ரியும், “நகரிய ஆக்கத்தால் கிராம வாழ்க்கை மதிப்புகள் சிதைவதைக் காட்டுகிறார்”[5]என்று இவரது படைப்புகள் குறித்து சபா. அருணாசலமும் குறிப்பிடுகின்றனர். ஆர். சண்முகசுந்தரத்தின் மற்றொரு சிறப்பு தமிழில் ரீஜினல் நாவல் எனப்படும் வட்டார நாவலை தன் முதல் நாவலிலேயே தோற்றுவித்தது. ஒரு வட்டாரத்தைத் தனியே பிரித்துக் காட்டுவது அங்கு வாழும் மக்களின் வட்டார மொழியும், பேச்சு மொழியும் ஆகும். வட்டார இலக்கியம் பற்றி கி. இராஜநாராயணன், “தொழிற்புரட்சிக்குப் பின் மக்கள் வாழ்வில் பொதுத்தன்மை நிலவி மண்ணுடன் மக்களுக்கு இருந்த தொடர்பு மறுக்கப்பட்ட போது சில எழுத்தாளர்களிடம் எனது மண், எனது ஊர் எனது மக்கள் என்று தோன்றிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடே வட்டார இலக்கியம் தோன்றக் காரணமாயிற்று” என்கிறார்.[6]

வட்டாரம் என்பது பெருநிலப்பரப்புக்குள் அடங்கிய சிறுபகுதியாகும். குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் சமூகப்பழக்க வழக்கம்,கட்டுப்பாடு மற்றும் நீர், நில வள அமைப்பு, மொழி பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றில் ஒற்றுமை காணப்பட்டு, அவர்களிடையே பொதுத்தன்மை நிலவினால் அப்பகுதியை வட்டாரம் என்று குறிப்பிடலாம். அப்பகுதி மக்களைப் பற்றி எழுதப்படும் இலக்கியங்கள் வட்டார இலக்கியங்கள் ஆகின்றன. உலகத்தைப் பிரதிபலிக்கும் சிறுபனித்துளிகளாக இவற்றைக் கூறலாம். அவ்வகையில் தமிழின் முதல் வட்டார புதினத்தைப் படைத்த ஆர். சண்முகசுந்தரம் புதினத்துறையில் மட்டுமின்றி சிறுகதை, நாடகம், கவிதை, மொழியெர்ப்பு தளங்களிலும் படைப்புகளைத் தந்துள்ளார்.

சண்முகசுந்தரம் 18 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை பூவும் பிஞ்சும், தனிவழி, அறுவடை, சட்டிசுட்டது ஆகியவை. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் ஆகியவை குறுநாவல்கள். இவை இரண்டும் ஒரே நூலாக வெளியாயின. பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க புதின ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆனந்த விகடனில் இவர் மொழிபெயர்த்த "சந்திரநாத்" என்ற சரத் சந்திரரின் புதினம் தொடராக வெளிவந்தது. பதேர் பாஞ்சாலி இவரது மொழிப்பெயர்ப்பில்தான் தமிழுக்கு வந்தது.

எழுதியுள்ள நூல்கள்

[தொகு]

புதினங்கள்

[தொகு]
  1. நாகம்மாள் 1942
  2. பூவும் பிஞ்சும் 1944
  3. பனித்துளி 1945
  4. அறுவடை 1960
  5. இதயதாகம் 1961
  6. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் 1963
  7. அழியாக்கோலம் 1965
  8. சட்டிசுட்டது 1965
  9. மாலினி 1965
  10. காணாச்சுனை 1965
  11. மாயத்தாகம் 1966
  12. அதுவா இதுவா 1966
  13. ஆசையும் நேசமும் 1967
  14. தனிவழி 1967
  15. மனநிழல் 1967
  16. உதயதாரகை 1969
  17. மூன்று அழைப்பு 1969
  18. வரவேற்பு 1969

சிறுகதைகள்

[தொகு]
  1. நந்தா விளக்கு (சிறுகதைத் தொகுப்பு)
  2. மனமயக்கம் (சிறுகதைத் தொகுப்பு)

நாடகங்கள்

[தொகு]
  1. புதுப்புனல் (நாடகத் தொகுப்பு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. பதேர்பாஞ்சாலி
  2. கவி - தாராசங்கர் பானர்ஜி, 1944, அல்லயன்ஸ், சென்னை
  3. சந்திரநாத்
  4. பாடகி
  5. அபலையின் கண்ணீர்
  6. தூய உள்ளம்
  7. இந்திய மொழிக் கதைகள் (1964)

இவரைப் பற்றி வெளிவந்த நூல்கள்

[தொகு]

ஆர்.சண்முகசுந்தரம் பற்றி வந்துள்ள முக்கிய நூல்கள் வருமாறு:

  • கொங்கு மணம் கமழும் நாவல்கள் - டி.சி.ராமசாமி
  • ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - பெருமாள்முருகன்
  • இலக்கியச் சிற்பிகள் வரிசை : ஆர்.சண்முகசுந்தரம் - சிற்பி பாலசுப்பிரமணியன்

கட்டுரைகள்

[தொகு]
  • தமிழ்நாவல் 50 - (தி.க..சிவசங்கரன் நாகம்மாள் என்னும் தலைப்பில் கட்டுரை )பத்தினிக்கோட்டப்பதிப்பகம்
  • தமிழ்நாவல்கள் ஒரு மதிப்பீடு (சண்முகசுந்தரத்தின் நாவல்கள் - தா.வே.வீராசாமி)என்.சி.பி்எச்.
  • ஆர்.சண்முகசுந்தரம் படைப்புகள் குறித்து 'ஆர்.ஷண்முகசுந்தரத்தின் கிராமங்கள்' என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
  • தமிழியல் (சண்முகசுந்தரத்தின் நாவல்களில் சமூக மாற்றம்,தா.வே.வீராசாமி)
  • பெண்ணியம் (நாகம்மாள் என்னும் தலைப்பில் ஜ.பிரேமலதா எழுதிய கட்டுரை) கலைஞன் பதிப்பகம்

மேற்கொள்ளப்பட்டுள்ள முனைவர் பட்ட ஆய்வுகள்

[தொகு]
  1. ஆர்.சண்முகசுந்தரத்தின் மொழிநடை -இ.முத்தையா - மதுரைப்பல்கலைக்கழகம்
  2. ஆர்.சண்முகசுந்தரத்தின் நாவல்கள் ஓர்ஆய்வு -மு.ஜான்சிராணி - சென்னைப்பல்கலைக்கழகம்.
  3. ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை -பெருமாள்மருகன்-சென்னைப்பல்கலைக்கழகம்.
  4. கொங்கு வட்டார நாவல்கள் -ப.வே.பாலசுப்ரமணியன்-சென்னைப்பல்கலைக்கழகம்.
  5. ஆர்.சண்முகசுந்தரத்தின் புதினங்களில் மகளிர் நிலை- ஒரு பெண்ணிய நோக்கு -ஜ.பிரேமலதா-அன்னை தெரசாபல்கலைக்கழகம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இந்திய இலக்கியச் சிற்பிகள் ஆர். சண்முகசுந்தரம் புத்தகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://books.google.co.in/books?id=173pAAAAIAAJ&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjg5sHLpebsAhUVdCsKHYR-AqM4HhDoATAIegQIBRAC
  2. 2.0 2.1 "நாகம்மாள் "நாகம்மாள்' படைத்த ஆர். சண்முகசுந்தரம்[தொடர்பிழந்த இணைப்பு], கலைமாமணி விக்கிரமன், தினமனி, அக்டோபர் 24, 2010
  3. க.கைலாசபதி,1986,தமிழ்நாவல்இலக்கியம்,என்.ச்.பி.எச்,
  4. எஸ்.தோத்தாத்ரி, 1997,தமிழ்நாவல் சில அடிப்படைகள்,அகரம் வெளியீடு.சிவகங்கை.
  5. சபா.அருணாசலம்,1981,தமிழ்நாவல்களில் காந்தியத் தாக்கம், காளத்தி நலகம், தேவகோட்டை
  6. விஜயலட்சுமி,1995,வட்டார இலக்கியமும் கி.இராஜநாராயணனும்,அன்னம்,சிவகங்கை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சண்முகசுந்தரம்&oldid=3638899" இலிருந்து மீள்விக்கப்பட்டது