சேத்துப்பட்டு ஏரி

ஆள்கூறுகள்: 13°04′27″N 80°14′33″E / 13.07412°N 80.24238°E / 13.07412; 80.24238
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத்துப்பட்டு ஏரி
அமைவிடம்சேத்துப்பட்டு, சென்னை, தமிழ்நாடு  இந்தியா
ஆள்கூறுகள்
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு15 ஏக்கர்கள்
குடியேற்றங்கள்சென்னை

சேத்துப்பட்டு ஏரி சென்னையில் சேத்துப்பட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஒரு ஏரியாகும். இது தான் சென்னை நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஒரே ஏரியாகும். மொத்தமுள்ள 15 ஏக்கரில் 9 ஏக்கர் பரப்பளவிற்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் தண்ணீர் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், இப்பகுதியின் முக்கிய நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஏரி நீரிருக்கும் பெரும்பாலான நேரங்களில் ஆகாயத்தாமரை எனும் ஏதும் பயனற்ற ஒரு களைச்செடியான நீர்த்தாவரத்தால் நிறைந்து காணப்படும். ஏரிக்கு நடுவே தீவு போல ஒரு மணல் திட்டும், மரங்களும் உள்ளது.

தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சிப்பணிகள்[தொகு]

இந்த ஏரியில் குறிப்பாக சேத்துப்பட்டு இரயில்வே நிலையத்தின் அருகே சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் நடந்தது. 1990-களில் இருந்து சேத்துப்பட்டு ஏரியை மறுசீரமைக்கும் விதமாக படகு/பரிசல் மன்றம் (Boat Club), மீன்காட்சியகம் (Aquarium), கடல் உணவு அங்காடிகள், மீன் விற்பனைத் திடல், ஏரியின் நீர்பரப்பைச் சுற்றி நடைபாதை அமைத்தல் போன்ற பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன[1]. கடைசியாக 2005-ஆம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் துறை சேத்துப்பட்டு ஏரி உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள 12 ஏரிகளை மீட்டெடுக்கும் விதமான ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மேற்கொண்ட ஒரு விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநில அரசு, தமிழ்நாடு நகர்ப்புற கட்டுமான நிதிச்சேவை நிறுவனத்தை (Tamil Nadu Urban Infrastructure Finance Services Limited) ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்யப் பணித்தது. அதன்பிறகு, 2007-08-இல் மாநில அரசு 40 லட்சம் ரூபாய்களை ஏரியை தூர்வாரும் நடவடிக்கைகளுக்காகவும், ஆகாயத்தாமரையால் நிரம்பிக் கிடந்த ஏரியை சுத்தம் செய்யவும் அளித்தது[2].

மழைக்காலங்களில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் பொருட்டு, சுமார் 1,475 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் முறையை அமைக்கும் திட்டம் ஒன்றை அமைப்பதற்கு 2012 ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 22.9 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் பருவகாலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீர் சேத்துப்பட்டு ஏரியிலிருந்து கூவம் ஆற்றிற்கு புது பூபதி நகர், பச்சையப்பன் கல்லூரி விளையாட்டுத் திடல் மற்றும் வெங்கடாஜலபதி தெரு வழியாக திருப்பிவிடப்படும்[3]. மேலும், 60 மில்லியன் ரூபாய் மதிப்பில் மீன்வளத்துறை கழகத்திற்கு ஒரு கட்டடமும் ஏரிக்கு அருகிலேயே கட்டப்படவுள்ளது[4].

சீரமைப்புப் பணிகள்[தொகு]

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழைக்கு பிறகு இந்த ஏரியை சீரமைத்து படகு சவாரி மற்றும் வாகன நிறுத்த வசதியுடன் கூடிய சுற்றுசூழல் பூங்கா அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு, செயல்படுத்தபட்டது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சேத்துப்பட்டு ஏரி வளர்ச்சிப்பணிகள்". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 24, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "சேத்துப்பட்டு ஏரி மறுசீரமைப்பிற்காக தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு". தி இந்து. 2009-05-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 24, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "சேத்துப்பட்டு ஏரியிலிருந்து கூவம் ஆற்றிற்கு உபரிநீரை திருப்பிவிடும் திட்டம்". தி இந்து. மார்ச்சு 25, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "மீன்வளத்துறை அமைச்சக கட்டடம்". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச்சு 25, 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்துப்பட்டு_ஏரி&oldid=3699914" இருந்து மீள்விக்கப்பட்டது