கலாசேத்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாக்ஷேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

1962 இலிருந்து கலாக்ஷேத்திரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.

1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாக்ஷேத்திரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது[1].

வரலாறு[தொகு]

ருக்மிணி தேவி அருண்டேல்

கலாக்ஷேத்திரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர்.

தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு கற்கை நெறியை முடிப்பவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுக் கல்வியும் வழங்கப்படுகிறது. தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறப்புப் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.

கலாக்ஷேத்திராவின் பழைய மாணவர்கள்[தொகு]

இக்கலைக் கல்லூரியில் பயின்று புகழ் பெற்றவர்கள் சிலர்: ராதா பேர்னியர், சாரதா ஹொஃப்மன், அடையாறு லட்சுமணன், வி. பி. தனஞ்சயன், இன்னும் பலர்[2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசேத்திரா&oldid=2507212" இருந்து மீள்விக்கப்பட்டது