இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 12°59′29″N 80°14′01″E / 12.99151°N 80.23362°E / 12.99151; 80.23362

இந்திய தொழில்நுட்பக் கழகம்
மதராசு (சென்னை)
300px-IIT Madras Logo.svg.png
குறிக்கோளுரை சித்திர்பவதி கர்மஜா
நிறுவியது 1959
வகை கல்வி மற்றும் ஆய்வுக்கழகம்
இயக்குனர் பேரா. பாஸ்கர் இராமமூர்த்தி
ஆசிரியர்கள் 360
பட்டப்படிப்பு 2,500
பட்டமேற்படிப்பு 2,000
அமைவிடம் சென்னை, தமிழ் நாடு இந்தியா
வளாகம் ஊரகம், 2.5 கிமீ² வனப்பகுதி
அடையாளம் கஜேந்திரா வட்டம்
இணையதளம் http://www.iitm.ac.in/

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (இ.தொ.க. சென்னை, Indian Institute of Technology Madras, இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ்) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். 1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு செருமனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது.

பொது தகவல்[தொகு]

இ.தொக.சென்னை 2.5 சதுர கிலோமீட்டர் (620 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் கிண்டி தேசியபூங்கா இருந்த வளாகத்தில் அமைந்திருந்தது. முற்றிலும் கல்விக்கூட வளாகத்தில் தங்கிப் படிக்கும் கல்விக்கூடமாகிய இக்கழகத்தில் ஏறத்தாழ 360 ஆசிரியர்கள்,4000 மாணவர்கள் மற்றும் 1,250 நிர்வாகத் துணை அலுவலர்கள் உள்ளனர். 1961 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற ஆணைப் பெற்ற நாளிலிருந்து இ.தொ.க சென்னை நாட்டின் கற்பித்தல்,ஆய்வு மற்றும் தொழில் அறிவுரைத் துறைகளில் முதன்மை மையமாக வளர்ந்துள்ளது. இ. தொ. க வளாகத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருக்கும் கிண்டி தேசிய பூங்காவால் பொலிவுபெறும் இவ்வளாகத்தைப் புள்ளி மான்கள், கலைமான்கள், புல்வாய் மான்கள், குரங்குகள், சில வகை ஆமைகள் மற்றும் சில வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இவ்வளாகத்தில் அமைந்திருக்கும் ஓர் எழில்மிகு ஏரி, அதிக மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டு 1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தூர்வாரப்பட்டது.

வரலாறு[தொகு]

1956 ஆம் ஆண்டு ஜெர்மன் அரசு இந்தியாவிற்குப் பொறியியலில் உயர்கல்வி வழங்கக் கல்விக்கூடம் ஒன்றை நிறுவத் தொழில்நுட்ப உதவி வழங்கியது. இதற்கான முதல் இந்திய-ஜெர்மன் உடன்பாடு 1959 ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனியின் பான் நகரில் ஒப்பந்தம் செய்யப்பட்டு சென்னையில் தொடங்கப்பட்டது. அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் இ.தொ.க தொடங்கப்பட்டது. அச்சமயத்தில் இது ஜெர்மன் அரசால் அவர்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொண்ட மிகப்பெரிய கல்வித்திட்டமாகும். இது பின்வரும் ஆண்டுகளில் ஜெர்மானிய பல்கலைக்கழகங்களுடனும் கல்விநிறுவனங்களுடனும் பல ஒருங்கிணைந்த ஆய்வு திட்டங்களை நடத்த வித்திட்டது.[1] ஜெர்மன் அரசின் அதிகாரப்பூர்வ உதவி முடிந்தாலும் அந்நாட்டின் பிற கல்வித் திட்டங்கள், (DAAD - Deutscher Akademischer Austauschdienst - ஜெர்மன் கல்வி பரிமாற்ற சேவை) ,( அலெக்சாண்டர் வான் அம்போல்ட் பவுண்டேசன்-அம்போல்ட் கல்விக்கொடை) மூலம் பல ஆய்வுத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

1959 ஆம் ஆண்டு இதை மத்திய அறிவியல் ஆய்வு மற்றும் பண்பாட்டு அமைச்சராக இருந்த முனைவர் உமாயூன் கபீர் தொடங்கி வைத்தார்.

1961 இல் தேசிய இன்றியமையா கழகங்களில் ஒன்றாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

2009 ஆண்டு இ.தொ.க சென்னை தனது தங்கவிழாவினைக் கொண்டாடியது.

வளாகம்[தொகு]

அசெண்டாசு தொழில்நுட்பப் பூங்கா(தரமணி நுழைவாயில்) அண்மையிலும் அமைந்துள்ளன.

சென்னை விமானநிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 12.5 கி.மீ தொலைவிலும், புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும் இவ்வளாகம் அமைந்துள்ளது. இந்நான்கு முக்கிய போக்குவரத்து நிலையங்களிலிருந்தும் போதுமான பேருந்து வசதி உள்ளது. பரந்த வளாகத்தினுள்ளே போக்குவரத்திற்குத் துணையாக இந்திய மலைகளின் பெயர்தாங்கிய தொழில்நுட்பக்கழகப் பேருந்துகள் மற்றும் மின்கல குற்றுந்துகள் முதன்மை வாயில், கஜேந்திரா வட்டம், கல்வி வளாகம் மற்றும் விடுதிகள் இடையே விடப்படுகின்றன. முதன்மை வாயிலில் இருந்து ஆசிரியர்கள் வீடுகள் உள்ள பகுதியை மரங்களடர்ந்த இரு இணைச் சாலைகளான, பான் மார்க்கம்(avenue) மற்றும் தில்லி மார்க்கம்(avenue) மூலம் கடந்தால் நிர்வாகக் கட்டடம் அருகில் இருக்கும் கஜேந்திரா வட்டம் என்ற பகுதிக்கு வந்து சேரலாம். கஜேந்திரா சர்க்கிள் என்பதை மாணவர்கள் செல்லமாக ஜிசி (GC) என விளிப்பர். இ.தொ.கவின் தனி அடையாளமாக இது கருதப்படுகிறது. இரு யானைச்சிலைகள் நீரூற்று ஒன்றின் இருபுறமும் ஒரு புல்வெளி வட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நிர்வாகக் கட்டடத்தை அடுத்து கல்வி வளாகக் கட்டிடங்களும் சிறப்பு ஆய்வுக்கூடங்களும் உள்ளன. கசேந்திரா வட்டத்தின் மறுபுறம் நூலகமும் பின்னால் திறந்தவெளி அரங்கமும் உள்ளன. வளாகத்தின் கடைசியில் மாணவர் விடுதிகள் உள்ளன. இவை இந்திய ஆறுகளின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.

அமைப்பு[தொகு]

ஆட்சிப்பொறுப்புகள்[தொகு]

இ.தொ.க. சென்னை தொழில்நுட்பக் கழகச் சட்டத்தின்படி தன்னாட்சி பெற்ற ஒரு நிறுவனம். மற்ற இ.தொ.கழகங்களுடன் இதனையும் இந்திய அரசினால் நியமிக்கப்பட்ட இ.தொ.க அவை (IIT Council) மேலாண்மை செய்கிறது. இந்த அவையின் தலைவராக மத்திய அரசின் மனிதவள வளர்ச்சி அமைச்சர் இருக்கிறார். தவிர ஒவ்வொரு கழகத்திற்கும் நிர்வாகபொறுப்பு மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டிற்கு ஓர் ஆளுநர் குழுமம் (Board of Governors)ஒன்றும் உள்ளது.

கல்விக் கொள்கைகளைக் கழகத்தின் அனைத்து பேராசிரியர்களும் பங்கேற்கும் ஆட்சிப்பேரவை (Senate) முடிவு செய்கிறது. பாடத்திட்டங்கள், பாடத்தொகுதிகள், தேர்வுகள் மற்றும் முடிவுகளை இப்பேரவை கட்டுப்படுத்தி முடிவுகளை எடுக்கிறது. கல்விசார் விடயங்களில் தனிக் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்கிறது. வெவ்வேறு துறைகளின் கற்பித்தல், பயிற்றுவித்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை அவ்வப்போது மீள்பார்வையிட்டு கல்வி வசதிகளையும் தரத்தையும் உயர்த்த முயல்கிறது. கழகத்தின் இயக்குநர் இப்பேரவையின் தலைவராக விளங்குகிறார். திசம்பர் 2001 முதல் ஜூலை 2011 வரை முனைவர் ம,ச, ஆனந்த் இதன் இயக்குநராக இருந்தார். செப்டம்பர் 2011 முதல் பாஸ்கர் ராமமூர்த்தி இதன் இயக்குநராகச் செயல்படுகிறார்.

ஆட்சிப்பேரவையின் துணை குழுக்கள்: மூன்று துணைக்குழுக்கள் - கல்விசார் ஆய்வுக் குழுமம் (The Board of Academic Research), கல்விசார் பாடத்தொகுதிகள் குழுமம் (The Board of Academic Courses) மற்றும் மாணவர் குழுமம் (The Board of Students) - கழகத்தின் கல்விசார் ஆளுமையையும் திறனான செயல்பாட்டையும் நிலைநாட்டுகின்றன. நிதிய குழுமம் நிதிகொள்கை குறித்தும் கட்டிட மற்றும் மராமத்து குழுமம் கட்டிட, கட்டுமானப் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு குறித்தும் அறிவுரை வழங்குகின்றன. நூலக அறிவுரைக் குழுமம் நூலக மேலாண்மையை மேற்பார்வையிடுகிறது. தொழிலகங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் அறிவுரை வழங்கல் ஆகியவற்றை தொழிலக அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு குழுமம் (The Board of Industrial Consultancy & Sponsored Research) கண்காணிக்கிறது.

துறைகள்[தொகு]

இ.தொ.க சென்னையில் உள்ள துறைகள்:

மேலும் இந்தத் துறைகளிலும் படிக்க வசதி தரப்படுகிறது:

 1. வேதியியல்
 2. கணிதம்
 3. இயல்பியல்
 4. மனிதம் & சமூக அறிவியல்
 5. மேலாண்மைபாடங்கள்

கல்வித்திட்டங்கள்[தொகு]

இ.தொ.க சென்னை பொறியியல்,அறிவியல்,மனிதம் மற்றும் மேலாண்மை துறைகளில் 15 பாடதிட்டங்களில் பட்டம், பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குகிறது. அறிவியல், பொறியியல் துறைகளிலும் கழகத்தின் ஆய்வு மையங்களிலிருந்தும் ஏறத்தாழ 360 ஆசிரியர்/பேராசிரியர்கள் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழிலக அறிவுரை பணிகளில் ஈடுபட்டுளனர்.

இக்கழகத்தில் 15 துறைகளும், பல்வேறு பொறியியல் மற்றும் தூய அறிவியல் துறைகளின் மேம்பட்ட ஆய்வு மையங்களும், 100 ஆய்வகங்களும் உள்ளன. கல்வியாண்டு இருபருவங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பருவமும் 72 வேலைநாட்களைக் கொண்டுள்ளது. பயிற்று ஊடகம் ஆங்கிலமாகும். மாணவர்கள் பருவம் நடப்பு முழுவதும் அவர்களது ஆசிரியர்களால் மதிப்பிடப்படுகிறார்கள். ஆய்வு மாணவர்கள் அவர்களது ஆய்வுக்கோவையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்வாளர்களால் மதிப்பிடப்படுகிறார்கள். கல்வித்திட்டத்தைப் பற்றிய முடிவுகளும் தீர்வுகளும் கழகத்தின் உயர்ந்த கல்விக்குழுவான ஆட்சிப்பேரவையால் எடுக்கப்படுகின்றன.

பட்டப்படிப்பு[தொகு]

 • பட்டப்படிப்பு திட்டங்களுக்குச் சேர்க்கைஇ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இ.தொ.க சென்னையின் மனிதம் மற்றும் சமூக அறிவியல் துறை கீழ்வரும் மூன்று பாடதிட்டங்களில் நேரடி முதுகலை பட்டம் பெற ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கல்வித்திட்டம் ஒன்றை அளித்து வருகிறது:

 • வளர்ச்சிக் கல்வி
 • பொருளாதாரம்
 • ஆங்கிலம்

இதற்கான சேர்க்கை இ.தொ.க சென்னையால் இதற்கென நடத்தப்படும் நுழைவுதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

பட்டமேற்படிப்பு[தொகு]

 • பட்டமேற்படிப்பு திட்டங்களுக்குச் சேர்க்கைபட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE) ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டமேற்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அறிவியல் முதுகலைக் கூட்டு சேர்க்கை (JAM) தேர்வின் மூலம் அனைத்து இ.தொ.கழகங்களுக்கும் அறிவியல் முதுகலை திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மேலாண்மை கல்வி[தொகு]

 • மேலாண்மை பாடதிட்டங்களுக்கான சேர்க்கை

ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அடிப்படையில் வணிக மேலாண்மை முதுகலை திட்டங்களுக்கு மாணவர்கள் முதல்நிலையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனையடுத்து குழு செயல்பாடு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மதிப்பீட்டு முறை[தொகு]

மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே இக்கழகத்திலும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட 'வரவுகள்' முறை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடதிட்டத்திற்கும் 'வரவுகள்' (வழமையாக 1 முதல் 4) வழங்கப்படுகிறது. பட்டம் பெறுவதற்கு குறைந்தளவு 'வரவுகள்' வாங்கியிருக்க வேண்டும். இந்த அளவு பாடதிட்டம்,துறை மற்றும் விருப்பத்தேர்வுகளைப் பொறுத்து அமையும். தர எண் சராசரி (GPA) 0 விலிருந்து 10 வரை அளவு கொண்டிருக்கும்.

கீழ்வரும் ஆங்கில எழுத்துக்கள் தர மதிப்பாக ஒவ்வொரு பாடதிட்டத்திலும் வழங்கப்படுகிறது:

தர எழுத்து S A B C D E U W
தர எண் 10 9 8 7 6 4 0 0

'U' பெற்றவர் பாடத்தில் தேறவில்லை என்பதையும் 'W' பாடதிட்டதிற்கு தேவையான வருகை இல்லை எனவும் குறிக்கும். இரண்டுக்குமே அவர் பாடதிட்டத்தில் தவறிவிட்டார் எனக் கொள்வர். தர எண் சராசரி, GPA, வரவுகளுக்குச் சரியான எடை கொடுக்கப்பட்ட தர எண்ணிக்கைகளின் சராசரி.

இங்கு:

 • எடுத்துக்கொண்ட பாடங்களின் எண்ணிக்கை,
 • பாடத்திற்கு வரவுகள்,
 • தர எண்ணிக்கை பாடத்திற்கு, மற்றும்
 • கூட்டு தர எண் சராசரி.

தற்போது ஒரு பாடத்தில் தவறியிருந்து அடுத்த தேர்வில் வெற்றி பெற்றால் தோற்ற தரவெண் இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தவிர மதிப்பெண் சான்றிதழிலும் தவறிய தரங்கள் எடுக்கப்பட்டு அவரது முயற்சியின் எண் மட்டுமே அடிக்குறிப்பாகக் கொடுக்கப்படும். சில பாடங்கள் பாடதிட்டத்தில் இல்லாவிடினும் மாணவரின் தேவைக்காக அவராலோ அவரது ஆசிரியராலோ கண்டறியப்பட்டு எடுத்துக் கொள்ளக்கூடும். அத்தகைய பாடங்களில் அவர் தேறினால் போதும். அத்தகைய பாடங்களில் பெற்ற தர எண்ணிக்கையும் இந்தக் கணக்கிடலில் சேர்த்துக்கொள்ள மாட்டாது.

பிற கல்விப் பணிகள்[தொகு]

கல்வி ஆய்வு திட்டங்கள்[தொகு]

இ.தொ.க சென்னை பொறியியல் மற்றும் அடிப்படை அறிவியலில் பல்வேறு பாடதிட்டங்களில் துறைகளும் நவீன ஆய்வுமையங்களும் நூற்றுக்கணக்கான சோதனைச்சாலைகளும் கொண்டு விளங்குகிறது. பன்னாட்டு புகழ்பெற்ற ஆசிரியக்குழு, திறன்மிக்க மாணவர் சமூகம், சிறந்த நுட்ப மற்றும் ஆதரவு பணியாளர்கள், சீர்மையான நிர்வாகம் மற்றும் வெற்றிப்புகழ் நாட்டிய பன்னாட்டு முன்னாள் மாணவர் என அனைவரும் இந்தக் கழகத்தின் சிறப்புநிலைக்கு பங்காற்றியுள்ளனர்.

ஆய்வுகள் செய்யும் அறிஞர்கள் வேண்டிய துறைகளில் சேர்ந்து ஆசிரியக்குழுவின் வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட பொருளில் ஆய்வுகள் நடத்துகின்றனர். ஒவ்வொரு துறையும் தங்களுக்கு ஆர்வமுள்ள ஆய்வு பரப்பினை கல்வி சமூகத்திற்கு சிற்றேடுகள்,கையேடுகள் மூலம் தெரியப்படுத்துகின்றன. இந்தத் தலைப்புகள் அடிப்படை தத்துவமாகவும் இருக்கலாம் அல்லது கள ஆய்வாகவும் இருக்கலாம். வெற்றிகரமாக ஆய்வினை முடித்தவர்களுக்கு அறிவியல் முதுகலை (MS) அல்லது முனைவர் (Phd) பட்டம் வழங்கப்படுகிறது.

பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் பல மாநாடுகள், சுழியம் மற்றும் பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆய்வு கட்டுரைகள் பன்னாட்டு நுட்பவிதழ்களில் வெளியாகின்றன.

பிற பல்கலைக்கழகங்களுடன் பங்கேற்பு[தொகு]

ஆசிரியக்குழு பரிமாற்ற திட்டங்கள் கீழ் உலகளவில் பிற கல்விச்சாலைகளுடன் நட்பு கொண்டுள்ளது. திட்ட ஒத்துழைப்பு மற்றும் ஒருவருக்கொருவர் நன்மை தரும் ஆய்வுபணிகளை பகிர்தலுக்காகப் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு கொண்டுள்ளது.

தொழிலகங்களுக்கு அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு[தொகு]

இ.தொ.க.ம சென்னை தொழிற்சாலை மற்றும் வணிக அமைப்புகளுடன் ஒத்துழைத்து அறிவுரை வழங்கலில் நாட்டில் முன்னோடியாக விளங்குகிறது. கழகத்தின் ஆசிரியக்குழுவும் பணியாளர்களும் தொழிலகங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட வேலைகளை, அவை திட்ட வரைவு, சோதனையோட்டம், மதிப்பிடல் அல்லது புது நுட்பத்தில் பயிற்சியாக இருக்கலாம், எடுத்துக்கொண்டு செய்துகொடுப்பது தொழிலக அறிவுரையாகும். இவை தொழிலக அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு மையம் (ICSR) வழியே ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தேசிய நிறுவனங்கள் ஆசிரியக்குழு நடத்தும் சில ஆராய்வுகளுக்கு நிதியுதவி நல்குகின்றன. இந்த நிதிசார் ஆராய்வுகள் குறித்தகாலம் உடையன.அதனை மேற்கொள்வோர் பட்டத்திற்கும் பதியவியலும். இதனையும் தொழிலக அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு மையம் ஒருங்கிணைக்கிறது. நிதிசார் ஆய்வுகள் துறைகளின் ஆய்வுவசதிகளை பெருக்க உதவுவதுடன் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் துறை பணியாளர் கழகத்திலிருந்து பட்டம் பெறவும் வாய்ப்பளிக்கிறது.

இ. தொ. க. ம. ஆய்வுப் பூங்கா[தொகு]

இ. தொ.க.ம ஆய்வுப் பூங்கா ஸ்டான்ஃபோர்டு மற்றும் எம்.ஐ.டி (MIT) ஆய்வுப் பூங்காக்கள் பாதைகளின் மாதிரியாக உள்ளது. அது புதிய முயற்சியாக நிறுவப்பட்டது. ஆனால் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சி(R & D) மையக் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு உந்துதல் தருவதிலும் கவனம் செலுத்துகிறது. இ. தொ.க.ம ஆய்வுப் பூங்கா வாடகையாளர்கள் / வாடிக்கையாளர்கள் மற்றும் இ. தொ. க. ம இடையில் ஒரு கூட்டு உறவை ஏற்படுத்துகிறது.

ஆராய்ச்சி பூங்கா ஒரு 11 ஏக்கர் வளாகத்தில் இ.தொ.க.ம (சைக்கிளில் செல்லும் தூரத்தில்) அருகில் உள்ளது. 400,000 சதுர அடி (37,000 சதுர மீட்டர்) உடைய முக்கோபுரக்கட்டிடங்களைக் கொண்ட இவ்வளாகத்தில் அலுவலக இடத்திற்கு மட்டும் 1.600.000 சதுர அடி (150,000 சதுர மீட்டர்) ஒதுக்கப்பட்டுள்ளது. 12 மாடி கோபுரங்களின் ஒவ்வொரு தளமும் 36,000 சதுர அடி(3,300 சதுர மீ) கொண்டுள்ளது. ஒவ்வொரு சிறிய அலுவலகமும் 3,000 சதுர அடி (280 சதுர மீ) பரப்பு கொண்டிருக்கின்றது. மேலும் இவற்றில் அடைகாக்கும் தொகுதிகள், கடைகள், உணவகங்கள், விருந்தினர் அறைகள், மாநாடு வசதிகள், கண்காட்சி இடம், மாடியில் தோட்டங்கள் மற்றும் இயற்கைக்காட்சிகளுடனான முன் மற்றும் பின் புல்வெளிகளும் அடங்கும்.

மாணவர் செயல்கள்[தொகு]

சாஸ்திரா[தொகு]

சாஸ்திரா இ.தொக சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப திருவிழா ஆகும். இது பொதுவாக அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெறும். ஐ.எசு.ஓ 9001:2000 சான்றிதழ் பெற்ற உலகின் முதல் மாணவர்விழா இதுவே. சிறந்த விழா அமைப்பு, செயல்பாடுகளின் வீச்சு மற்றும் பொறியாளர் திறனைச் சீர்படுத்தும் பாங்கு எனபவற்றிற்கு இவ்விழா தேசிய அளவில் புகழ்பெற்றது. பயிலரங்குகள்,காணொளி கருத்தரங்கங்கள்,விளக்கவுரைகள், செயல்முறைவிளக்கங்கள் மற்றும் நுட்பவியல் கண்காட்சிகள் இந்தவிழாவிறகு அடிகோலுகின்றன. வரைவு, நிரலாக்கம், உருவகப்படுத்தல்,வினாடி வினா, செயல்பாட்டு பொறியியல், தானியங்கிகள், கண்டுபிடிப்புகள் என்பனவற்றில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

துறைசார் விழாக்கள்[தொகு]

கழகத்தின் பல துறைகள் தங்கள் கல்வி சார்ந்த விழாக்களை நடத்துகின்றன. எடுத்துக்காட்டாகப் பெருங்கடல் பொறியியல் துறை வேவ்சு (Wavez),கணிணி மற்றும் கணிப்பொறியியல் துறை எக்சிபிட்(ExeBit) எந்திரப் பொறியியல் துறை மெக்கானிகா (Mechanica), குடிசார் பொறியியல் துறை CEA ,வேதிப்பொறியியல் துறை கெம்க்லேவ்(Chemclave), உலோக மற்றும் பொருளியல் பொறியியல் துறை அமால்கம் (Amalgam) மற்றும் கணிதத் துறை போரேஸ் (Forays), விழாக்களை நடத்துகின்றன.

விடுதிகள்[தொகு]

பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பதால் கல்வியுடன் கல்விசாரா செயல்களிலும் நேரம் ஒதுக்க இயலுகிறது. வளாகத்தில் மூன்று மகளிருக்கான விடுதிகள் (சரயு, சராவதி. சரயு நீட்டிப்பு(2011-2012 முதல் பட்டமேற்படிப்பு மாணவிகளுக்காகத் தொடங்கப்பட்டது)) உட்பட 18 விடுதிகள் உள்ளன. இவ்விடுதிகள் இந்திய ஆறுகளின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. முன்னர் ஒவ்வொரு விடுதிக்கும் அதற்கான உணவகமும் அதனோடு இணைந்திருந்தது. தற்போது அவை மூடப்பட்டு விட்டன. சராவதி மற்றும் ஏழு மாடிகள் கொண்ட ஆடவர் விடுதிகளும் உணவகத்தைக் கொள்ளவில்லை. தற்போது விந்தியா,இமாலயா என்னும் பொதுவான உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டமேற்படிப்பு மாணவர்களுக்குக் காவேரி,கிருஷ்ணா விடுதிகள் ஒதுக்கப்பட்டாலும் எந்த மாணவரும் எந்த விடுதியிலும் சேர்க்கப்படலாம். முதலாண்டில் சேரும் விடுதியில் படிப்பு முடியும்வரைப் பொதுவாகத் தங்கி இருக்கின்றனர்.

இங்கு விடுதிகளுக்கு ஆறுகளின் பெயரும், பேருந்துகளுக்கு மலைகளின் பெயரும் உள்ளதால், மாணவர்கள், இங்குதான் ஓடும் மலைகளும், ஓடாத நதிகளையும் காணலாம் என்று நகைப்பர்.

இ.தொ.க சென்னையின் விடுதிகள்:

 1. சரசுவதி(சரஸ்)
 2. கிருஷ்ணா
 3. காவேரி
 4. பிரம்மபுத்திரா (பிரம்ஸ்)
 5. தப்தி
 6. கோதாவரி (கோதாவ்)
 7. அலகநந்தா (அலக்)
 8. சமூனா (ஜம்)
 9. கங்கா
 10. நர்மதா (நர்மத்)
 11. மந்தாகினி (மந்தாக்)
 12. சராவதி (ஷரவ்)
 13. சரயு
 14. சரயு நீட்டிப்பு
 15. சிந்து
 16. பம்பா
 17. தாமிரபரணி (தம்பி)
 18. மகாநதி

சிந்து, பம்பா, தாமிரபரணி (தம்பி), மகாநதி ஏழு மாடி கட்டிடங்கள்; இவற்றில் 1500 மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது. மற்றவை மூன்று அல்லது நான்கு மாடிகள் கொண்டவை. இவற்றில் புதிய மாடிகள் அல்லது பழைய உணவகப்பகுதியில் புதிய வளாகம் கட்டும் பணி நடைபெறுகிறது. இப்புதிய வளாகங்கள் விடுதியின் நுழைவுவாயிலாகச் செயல்படும் என்று கருதப்படுகிறது.

கல்விசாரா செயல்கள்[தொகு]

கலை மற்றும் பண்பாட்டு விழா சாரங்க், ஆண்டுதோறும் குளிர்காலத்தில் நடைபெறுகிறது. மாணவர்களின் கலைத்திறனை போட்டிகள் மூலம் வெளிக்கொணரும் இவ்விழா பங்குபெறும் கல்லூரிகளுக்கிடையே மிகவும் புகழ் பெற்றது.

இங்குள்ள திறந்தவெளி அரங்கம் இக்கலைவிழா நிகழ்ச்சிகளுக்கு நிகழ்விடமாகிறது. குளிரூட்டப்பட்ட வேதியியல் விளக்கவுரை கூடம் (CLT) உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு நிகழ்விடமாகிறது. தவிர திறந்தவெளி அரங்கில் ஒவ்வொரு சனிக்கிழமையும் திரைப்படம் இடப்படுகின்றது. இவ்வரங்கில் 7000 பேர் அமர முடியும். சனியன்று மாணவர்கள் தங்கள் விடுதியிலிருந்து படுக்கையுடன் திரைப்படம் காணவருவது வழமையான காட்சி.

ஆண்டுதோறும் நடக்கும் விடுதிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் ஷ்ரோட்டர்(Schroeter) என அழைக்கப்படுகிறது.

மாணவர்களின் பொழுதுபோக்குகளில், விவாதமன்றம், வானியல் மன்றம், நாடக மன்றம், இசை மன்றம், தானியங்கி கருவிகள் மன்றம் என பல மன்றங்கள் உள்ளன.

தத்துவ விசாரம் நடத்தும் இரு மாணவர் சங்கங்கள்: விவேகானந்தா கல்வி வட்டம் (VSC) மற்றும் ரிப்லெக்சன்சு (Reflections)

இ.தொ.க சென்னை தன் வட இந்திய ஒத்தநிலையினருடன் மொழி பழக்கத்தில் மிகுந்து வேறுபட்டுள்ளது. அங்கு இந்தி மட்டுமே பழகிவரும் வேளையில் இங்கு ஆங்கிலம் வழங்குசொற்களில் கூடுதலாகக் கலந்து வருகிறது. இங்கு பயின்றுவரும் சொல்லாட்சியினைக் கொண்டு ஒரு முதுகலை ஆய்வுக்கோவை பரணிடப்பட்டது 2010-02-15 at the வந்தவழி இயந்திரம் எழுதும் அளவு இது பலராலும் விரும்பப்படுகிறது.

வசதிகள்[தொகு]

இ.தொக சென்னை மாணவர்கள், ஆசிரியர்கள்,ஆய்வு அறிஞர்கள், ஆட்சிபொறுப்புகள் மற்றும் ஆதரவளிக்கும் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் வசிக்க இடம் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிற்றூராகத் திகழும் இந்த வளாகத்தில் விடுதிகளுக்கான உணவகங்களைத் தவிர வெளிமாணவர்களுக்கும் வருநர்களுக்கும் உணவுவிடுதிகள் உள்ளன. தங்கியுள்ள குடும்பங்களின் சிறுவர்களின் தேவைக்காகப் பள்ளிகள உள்ளன. வங்கிகள், கடைகள், மருத்துவமனை, உடற்பயிற்சியகம், நீச்சல் குளம், கிரிக்கெட், உதைபந்து, ஆக்கி மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்குகள் உள்ளன.கல்வி வளாகத்தில் அதிவேக இணைய இணைப்பு உள்ளது.

உணவு[தொகு]

விடுதி உணவகங்களின் போதாமையை நீக்க வளாகத்தில் வணிக உணவகங்கள் உள்ளன.

சரசுவதி விடுதியின் எதிரே உள்ள பசேரா, மாலை 6 மணியிலிருந்து இரவு 2 மணிவரை வட இந்திய உணவுவகைகளை வழங்குகிறது. மாணவர் வசதிமையத்தில் (Students Facilities Center, SFC) உள்ள குருநாத் பட்டிசரி (The Gurunath Patisserie) நள்ளிரவு வரை இயங்குகிறது. இங்கு அடுமனை வகைகளைத் தவிர பழச்சாறுகள்,நொறுக்குத்தீனிகள் கிடைக்கின்றன.

மகளிர் விடுதியின் மேலுள்ள டிஃபனிசு (Tifanys) காலை உணவு வழங்குகிறது. இரவு 12 மணிவரை திறந்துள்ளது.இங்கு அர்ச்சனா ஸ்வீட்ஸ் இனிப்புகள் கிடைக்கும். மேலாண்மை கல்வி துறை அருகே உள்ள கஃபே காபி டே கிளை இரவு 2 மணிவரை திறந்துள்ளது. கல்வி வளாகத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கேம்பஸ் கஃபே பணியாளர் உணவகமாகக் குறைந்தவிலையில் தயாரித்தளிக்கிறது. வாரநாட்களில், சனி உட்பட, காலை 8 முதல் மாலை 8 வரை இயங்குகிறது.

பள்ளிகள்[தொகு]

இ.தொ.க சென்னை வளாகத்தில் ஆசிரியர் குழுமம் மற்றும் பணியாளர்களின் சிறுவர்களுக்கு மட்டுமன்றி சுற்றுப்புறத்தில் உள்ள வேளச்சேரி , அடையார் பகுதி சிறுவர்களுக்குமாக இரண்டு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கசேந்திரா வட்டத்தின் அருகாமையில் உள்ள கேந்திரிய வித்யாலயா (மத்திய அரசுப் பள்ளி, Central School) மத்திய இடைநிலைக் கல்வி இயக்ககம், புதுதில்லி ஆட்சியின் கீழ் இயங்குகிறது. இப்பள்ளியின் பரந்த விளையாட்டு திடலில்தான் ஒவ்வொரு ஆண்டும் நுட்பவிழா சாஸ்திரா நடைபெறுகிறது. இது ஐஐடி கேவி என சென்னை கல்வி வட்டத்தில் புகழ் பெற்றுள்ளது.

ஆசிரியர் வீடுகள் உள்ள பான் அவென்யுவில் வனவாணி பள்ளி அமைந்துள்ளது. இது தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பாடதிட்டத்தை பின்பற்றுகிறது.

வங்கிகள்/வணிக வளாகம்[தொகு]

பாரத ஸ்டேட் வங்கி கஜேந்திரா வட்டம் அருகே அமைந்துள்ளது. இதற்கு 2 தானியங்கி பணவழங்கிகள் ஒன்று வங்கிக் கிளையிலும் மற்றது விடுதி வளாகத்தில் தரமணி விருந்தினர் விடுதி (Taramani Guest House) கட்டடத்திலும் உள்ளது. கனரா வங்கி ஆசிரியர் விடுதிகள் வளாகத்தில் உள்ள வணிக மையத்தில் உள்ளது. இதற்கும் 2 தானியங்கி பணவழங்கிகள் - ஒன்று வங்கிக் கிளையிலும் மற்றது விடுதி வளாகத்தில் குருநாத் வணிக மையமருகிலும் உள்ளது. தவிர ஐசிஐசிஐ வங்கி தானியங்கி பணவழங்கி விடுதிநிர்வாக வளாகக் கட்டடத்தில் உள்ளது.

டாடா புத்தக இல்லம் (Tata Book House) கஜேந்திரா வட்டம் அருகே கஃபே காபி டே கட்டடத்தின் மாடியில் உள்ளது. பெரும்பான்மையும் பொறியியல் பாடப் புத்தகங்களையும் சில மிக விரும்பப்படும் நாவல்களையும் இது இருப்பில் வைத்துள்ளது.

மாணவர் வசதி மையம் விடுதிகள் வளாகத்தில் உள்ளது. இங்குள்ள குருநாத் வணிக மையத்தில் மாணவர்களுக்குத் தேவையான எழுதுபொருட்கள், தினசரி பொருட்கள், மெத்தை,தலையணைகள்,வாளிகள், குவளைகள், டி சட்டைகள் மற்றும் கணிப்பொறி சாதனங்கள் கிடைக்கின்றன. தவிர குருநாத் கிஃப்ட் & ஜெம்ஸ் கடை இ.தொ.கவின் சின்னம் பொறித்த நினைவுப்பொருட்களையும் வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருட்கள், புத்தகங்கள், குறுவட்டுகளையும் விற்கிறது. இ.தொ.க நினைவுப் பொருட்கள் கோதாவரி விடுதியின் எதிரே உள்ள முன்னோர் சங்க அலுவலகத்திலும் கிடைக்கிறது.

மாணவர் வசதி மையம் ஒரு அனைத்திந்திய பயண முகவர் கிளையையும் கொண்டுள்ளது. மாணவர்களின் தொடர்வண்டி,விமான முன்பதிவுகளையும் கடவுச்சீட்டு பெற உதவிகளையும் இம்முகவர் வழங்குகிறார். மாணவர் வசதி மையத்திலும், வணிக மையத்திலும் தலா ஒரு முடிதிருத்தும் நிலையமும் உள்ளது.

ஆசிரியர் வளாகத்தில் உள்ள வணிக மையத்தில் மளிகை,காய்கனி, சலவையகம் முதலியன உள்ளன.

கோவில்கள்[தொகு]

வளாகத்தில் மூன்று பழமைவாய்ந்த கோவில்கள் உள்ளன. அவை இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த காலத்திலிருந்து உள்ளன.

சிவன் கோவிலான சலகண்டேசுவரர் ஆலயம் முதன்மை வாயில் அருகே ஆசிரியர் வலயத்தில் தில்லி அவென்யுவில் உள்ளது.

துர்கா பீலியம்மன் கோவில் முதன்மை வாயிலில் இருந்து கசேந்திரா வட்டம் செல்லும் தில்லி அவென்யுவில் மத்தியில் உள்ளது.

விடுதிகள் வளாகத்தில் தரமணி விருந்தினர் விடுதி பின்புறம் பழைய பிள்ளையார் கோவில் ஒன்றும் உள்ளது.

படித்த முன்னோர்[தொகு]

இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். முன்னாள் மாணவர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்புமிக்க முன்னோர் என 1996 முதல் விருதுகள் வழங்கி வருகிறது.[2] நாளது வரை 65 பேர் இவ்விருது பெற்றுள்ளனர்.

இவர்களில் சிலர்:

வணிகம்/தொழில்[தொகு]

 • அசித் கே பர்மா (துணை தலைவர், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், சென்னை)
 • கோபாலகிருஷ்ணன் (இணை நிறுவனர், செயல் இயக்குநர் மற்றும் தலைவர்இன்போசிசு) [MS77 PH] [MT79 CS]
 • குருராஜ் தேஷ்பாண்டே (நிறுவனர், சைக்காமோர் நெட்வொர்க்ஸ்) [BT73 EE]
 • பி முத்துராமன் (செயல் இயக்குநர்,டாடா ஸ்டீல்) [BT66 MT]
 • சதீஷ் பாய் (துணை தலைவர், ஷ்லம்பெர்கர் ஆயில்பீல்ட் டெக்னாலஜிஸ்)
 • பி சந்தானம் (தலைவர், செயின்ட் கோபின் இந்தியா) [BT78 CV]
 • முனைவர் கிருஷ்ண பாரத் (கூகிள் செய்திகள் உருவாக்கியவர், முதன்மை அறிவியலார், கூகிள்)
 • பானேஷ் மூர்த்தி (தலைவர் ஐகேட்; முன்னாள் இன்போசிசு உலக வணிக தலைவர்)
 • சுனில் வாத்வானி (நிறுவனர், ஐகேட்) [BT74 ME]
 • கே.என். இராதாகிருஷ்ணன் (தலைவர், டிவிஎசு மோட்டார் கம்பனி) [BT86 MT]
 • ராஜ் ஸ்ரீகாந்த் (செயல் இயக்குனர், டாஷ்ச் வங்கி அலெக்ஸ் பிரௌன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா)

மேற்கோள்கள்[தொகு]

 1. சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகம் (2006-01-18). "கழகம்". 2006-05-14 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 2. "சிறப்புமிக்க முன்னோர்". 2009-08-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
IIT Madras
என்பதின் ஊடகங்கள் உள்ளன.