உள்ளடக்கத்துக்குச் செல்

பாரத ஸ்டேட் வங்கி

ஆள்கூறுகள்: 22°01′57″N 74°53′47″E / 22.0325°N 74.8965°E / 22.0325; 74.8965
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத ஸ்டேட் வங்கி
நிறுவுகைகொல்கத்தா, 1806 (கல்கத்தா வங்கி என)
தலைமையகம்குழும மையம்,
மேடம் காமா சாலை,
மும்பை 400 021 இந்தியா
முதன்மை நபர்கள்பிரதீப் சவுத்ரி, தலைவர்
தொழில்துறைவங்கி
காப்பீடு
மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள்
கடனட்டைகள்,
சேமிப்பு
முதலீட்டு சாதனங்கள்
ஆயுள் காப்பீடு முதலியன.
வருமானம்Increase US$ 32.44 பில்லியன்(2011)
நிகர வருமானம்Increase US$ 2.34 billion (2011)[1]
மொத்தச் சொத்துகள்Increase US$ 369.56 billion (as of 2011)
பணியாளர்222,933 ("2011")
இணையத்தளம்பாரத ஸ்டேட் வங்கி


பாரத ஸ்டேட் வங்கி அல்லது பாரத ஸ்டேட் பாங்கு (State Bank of India, சுருக்கமாக SBI) (முபச500112 , தேபசSBIN ) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய அரசு வங்கி[2] என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

இந்த வங்கி இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமைவாய்ந்த வங்கியாகும். 1806ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. 1955ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.

ஸ்டேட் வங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச்சேவைகளையும் அளித்து வருகிறது. 16000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். $250 பில்லியன் பெறுமான சொத்துக்களும் $195 பில்லியன் பெறுமான வைப்புகளும் கொண்டு பெரும் வங்கியாக உள்ளது. நாட்டில் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன்களில் 20% இந்த வங்கியினுடையதாகும். [3]

மிகப்பழைமையான வங்கியாகவும் மிகப்பெரிய வங்கியாகவும் இருந்தபோதும் தனது செயல்பாடுகளை கணிணிமயமாக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்து வருகிறது. தனது கூடுதல் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க தங்க கைகுலுக்கல் திட்டத்தை நிறைவேற்றிய நேரத்தில் பல திறமை வாய்ந்த மேலாளர்களை புதியதாக வந்த வங்கிகளுக்கு இழந்தது.

உலக அளவில் இது 29 ஆம் இடத்தில் உள்ளதாக ஃபோர்பசு தரவரிசை அறிக்கை கூறுகிறது.[4]

இந்தியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இது ஒன்றே அரசு வங்கி. மற்றவை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி முதலியனவாம்.[5]

தாய்வீடு

இந்த வங்கியின் தாய்வீடு என்று அழைக்கப்பட்ட சென்னையின் ராஜாஜி சாலையில் அமைந்திருந்த ஜார்ஜ் டவுன் கிளை 14.07.2014 அன்று தீப்பற்றிக்கொண்டது.[6]

இணை வங்கிகள்

ஸ்டேட் வங்கியின் கட்டுப்பாட்டில் ஆறு இணைவங்கிகள் செயல்படுகின்றன;இவையனைத்தும் சேர்ந்து ஸ்டேட்வங்கி குழுமம் ஆகின்றன. இவை அனைத்துமே ஒரே சின்னமாக நீலநிற சாவித்துளையைக் கொண்டுள்ளன.பெயரிலும் ஒரே சீராக ஸ்டேட் வங்கி என்ற ஒட்டைக் கொண்டுள்ளன. முன்னாள் சமத்தானங்களின் அரசு வங்கிகள் ஏழும் அக்டோபர் 1959 மற்றும் மே 1960 ஆண்டுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்டப்போது இவை பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளாயின. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கிராம வளர்ச்சிக்காகக் கிராமங்களில் வங்கி பரவலைக் கூட்ட இவ்வாறு செய்யப்பட்டது.

மாறிவரும் பொருளியல் மாற்றங்களுக்கொப்ப இந்த இணைவங்கிகளை முதன்மைவங்கியடன் இணைத்து மிகப்பெரும் வங்கியை உருவாக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகத்து 13,2008 அன்று சௌராஷ்டிர ஸ்டேட் வங்கி பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்தது.

சூன் 19,2009 அன்று ஸ்டேட் வங்கியின் ஆட்சிக்குழு இந்தூர் ஸ்டேட் வங்கியை தன்னுடன் இணைத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 98.3% பங்கும் பிறருக்கு 1.77% பங்கும் உள்ளது. இவர்கள் இந்த வங்கி அரசுடைமையாவதற்கு முன்னமே இந்தப் பங்குகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். இந்த இணைப்பின் பிறகு பாரத ஸ்டேட் வங்கியின் 11,448 கிளைகளுடன் 470 கிளைகள் கூடுதலாகும். இவற்றின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு மார்ச் 2009 கணக்கின்படி ₹ 998,119 கோடிகளாகும்.

தற்போதுள்ள இணை வங்கிகள்:

ஊழியர்கள்

2014 மார்ச் 31 அன்றைய நிலவரப்படி 222,033 ஊழியர்களைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவில் அதிக ஊழியர்களைக் கொண்டு செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஊழியர்களில் 45,132 பெண் ஊழியர்களும் (20%) மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2,610 (1%) ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். அதே தேதியில், இவ்வங்கி 42.744 அட்டவணை வகுப்பினர் (19%) மற்றும் 17.243 அட்டவணை பழங்குடியினர் (8%) பணியாளர்களையும் கொண்டிருந்தது. மற்றும் அதே நாளில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் விழுக்காடுகள் முறையே 36%, 46%, 18% விழுக்காடுகளாக இருந்தன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற கிளைகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்யவும், தனது நிறுவனத்தின் கிளைகளை அதிகரிக்கவும் 2013 - 2014 நிதியாண்டில் 1,776 உதவியாளர்கள் மற்றும் 1,394 அதிகாரிகளை புதிதாக பணியமர்த்திக் கொண்டது. 2013-14 நிதியாண்டின் ஆண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் இந்நிறுவனத்திற்கு ரூபாய் 4.85 லட்சம் நிகர லாபமாக ஈட்டித் தந்துள்ளனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_ஸ்டேட்_வங்கி&oldid=3907082" இலிருந்து மீள்விக்கப்பட்டது