வராக் கடன்
வராக் கடன் அல்லது அறவே வசூலிக்க முடியாத கடன் (Bad Debt) என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கிய கடனை, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க இயலாத கடன் ஆகும். கணக்கீகீடு அல்லது நிதியியலில் இது கடன் பெற்றவர்களிடமிருந்து நீண்டகாலமாக அறவிடமுடியாமல் போன கடன்களின் ஒரு பகுதியைக் குறிக்கும். அவ்வாறு வசூலிக்க இயலாத வராக் கடன் தொகைகளை கணக்கீட்டுப் பதிவின்போது தொடர்புடைய கடனாளியின் பேரேட்டுக்கணக்கு பதிவு அழிக்கப்படுவதுடன் அந்நிதி நிறுவனம் அக்கடனைத் தள்ளுபடி செய்து அவ்வாண்டின் வணிகத்தில் ஏற்பட்ட நட்டமாக நட்டக் கணக்கில் தாக்கல் செய்வர்[1][2]. ஒரு நிதி நிறுவனத்திற்கு வரவேண்டிய மொத்தக் கடன் தொகையில், வராக் கடன் விகிதம் இரண்டு விழுக்காட்டிற்கு மேல் இருப்பின் அந்நிறுவனம் நிதி மேலாண்மையில் தரம் குறைந்த நிறுவனமாக, கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பர்.
வாராக் கடனின் போக்கு
[தொகு]இந்திய வங்கிகளை பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள் என்று மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்த்தால் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த நான்காண்டுகளில் வாராக்கடன் அளவு பொதுத் துறை வங்கிகளில் 1.5 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகவும், தனியார் துறையில் 0.3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாகவும், வெளிநாட்டு வங்கிகளில் 0.4% முதல் 0.9% ஆகவும் இருக்கிறது. 2012-ல் வாராக் கடன் விழுக்காடு பொதுத்துறை வங்கிகளுக்கும் மற்றவைக்கும் உள்ள வேறுபாடு 1 சதவீதத்தைவிட குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று வாராக் கடன் விழுக்காடு இடைவெளி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உள்ளது.
வராக் கடன்களுக்கான காரணங்கள்
[தொகு]வியாபார நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதிலும், கடனை தள்ளுபடி செய்வதிலும், கடன் சீரமைப்பு செய்வதிலும், அரசியல் தலையீடுகளும், லஞ்சமும் இருப்பதாக பல நிகழ்வுகள், கிங்பிஷர் விமான நிறுவனம் வரை, எடுத்துக்காட்டுகளாக உள்ளது.
வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன் வியாபாரத்தின் எதிர்கால போக்கு, வியாபார நிறுவனத்தின் சொத்து, வியாபாரத்துறையில் உள்ள இடர்கள் என பலவற்றை ஆராய்ந்து கடன் கொடுக்கவேண்டும். பெரிய தொகை கடன்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் ஒன்றாக இணைந்து கடன் வழங்க வேண்டும். இதனால் பல வங்கிகள் ஒரு வணிகத்தின் தன்மையை பற்றி ஆராயும்போது அதில் உள்ள சிக்கல்கள் தெரிவதுடன், கடன் கொடுப்பதில் உள்ள இடர்களும் நீக்க வேண்டும்.
வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன், வியாபார நிறுவனம் குறித்த ஆய்வுகளை செய்யத் தவறுகிறது. கடன் வாங்கிய நிறுவனங்களும் கடனை அடைக்காமல் வருவாயை வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, வங்கிகளை ஏமாற்றிவிடுகிறது. இதற்கு அரசியல் தலையீடும், வங்கி அதிகாரிகளும் காரணம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன்
[தொகு]2002-03 முதல் இந்திய பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. வளரும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அதிக லாபத்தை எதிர்பார்த்து, பெரிய அளவில் முதலீடுகள் வரத்தொடங்கின. இதே காலத்தில் அரசின் முதலீட்டு செலவு குறைய ஆரம்பித்தது. இந்திய பொருளாதாரத்தில் தனியார் துறை பங்களிப்பு உயரும் போது, இந்திய பொருளாதாரமும் வேகமாகவே வளரத் தொடங்கியது. பெரும் பகுதி நிதி, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் ஆகும்.
2008-ல் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு பிறகு பொருளாதாரத்துடன் வியாபார நிறுவனங்களின் நிதி வரத்து குறைய ஆரம்பித்தது. 2011 முதல் வங்கிகளின் வராக் கடன் உயர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து வியாபார நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மேலாண்மையை மாற்றுவது, கடனை மறுசீரமைத்து கூடுதல் கடனுடன் அதிக கால அவகாசம் கொடுப்பது என்ற பல வழிகளை கையாண்டன. இந்த மாற்று முறைகள் வராக் கடன் அளவினை குறைக்கவில்லை.
வராக் கடனுக்கான பொருளாதார காரணங்கள்
[தொகு]2012 முதல் பொது துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு உயர்வதற்கு பொருளாதார மந்தநிலை ஒரு முக்கிய காரணம் என்பதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை 2016-17 அழுத்தமாக கூறுகிறது. கிரெடிட் சூயிஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல நிறுவனங்களின் வரிக்கு முந்தைய வருவாயானது அந்நிறுவனங்களின் வட்டியை செலுத்தக்கூட போதவில்லை என்று கூறுகின்றது. எனவே வட்டியை செலுத்தும் அளவிற்குகூட போதுமான விற்பனை வரவை நிறுவனங்கள் பெறமுடியவில்லை என்பதால் வராக் கடன் உயர்கிறது.
வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் இருக்கின்றன. குறிப்பாக மின்சார உற்பத்தி துறையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி வரத்து பெரிய சரிவை சந்தித்துள்ளன. மின்சார உற்பத்தி குறைந்ததுடன், மின்சாரத்தின் விலையும் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.4 ல் இருந்து ரூ. 2.50 ஆகக் குறைந்துள்ளது. நீண்ட கால ஒப்பந்தம் உள்ள மின்சார நிறுவனங்கள் மட்டுமே முழுமையான திறனுடன் மின்சார உற்பத்தி செய்கின்றன. அதிக போட்டியினால் ஏற்பட்ட விலை குறைப்பு என்பதால் தொலை தொடர்பு நிறுவனங்களும் நிதி சிக்கலை சந்திக்கின்றன. கட்டுமான துறையில் உள்ள நிறுவனங்களிலும் இது போன்ற நிதி சிக்கல் நீடிக்கின்றது.
பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் விழுக்காடு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் செயல் திறன், தகுதியற்ற நிறுவனங்களுக்கு கடன் அளித்தல், வட்டி மற்றும் கடனை திரும்பப் பெறுவதில் வங்கி அதிகாரிகள் காட்டிய மெத்தனம், இவை எல்லாவற்றிலும் இருந்து வந்த அரசியல் தலையீடு மற்றும் லஞ்சம் என்று பார்க்கும் போது, வாராக் கடனை திரும்பப் பெறுவதற்கு ஒவ்வொரு கடனையும் தனித்தனியாக ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
வாராக் கடனுக்கு தீர்வுகள்
[தொகு]இந்திய ரிசர்வ் வங்கி இதற்காக பல வழிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கையாண்டுள்ளது. எட்டு முக்கிய அடிப்படை மற்றும் கட்டுமான தொழில்களில் ஒவ்வொரு நிறுவனத்தின் வராக் கடனை 25 ஆண்டு நீண்ட காலக் கடனாக மாற்றி சிலவற்றிற்கு கூடுதல் கடனும் கொடுத்தன. இவற்றால் நிறுவனங்களின் வட்டிச் செலவு கூடி வராக் கடன் பிரச்சினையை பெரிதாக்கியது. அடுத்து சொத்து மீட்பு நிறுவனங்கள் (Asset Reconstruction Company - ARC). இதில் வங்கிகளே முதலீடு செய்தன. நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய கடனை சொத்து மீட்பு நிறுவனங்களே வழங்கும். அதன் பிறகு கடன் கொடுக்கவேண்டிய நிறுவனங்களில் சில மாற்றங்களை செய்து அவற்றின் பங்குகளை விற்று தங்கள் வருவாயைத் தேடிக்கொள்ளும். இதில் உள்ள சிக்கல்களை அறிந்த சொத்து மீட்பு நிறுவனங்கள், கடன் தொகை முழுவதையும் கொடுக்காமல் மிகக் குறைந்த தொகையை கொடுக்க முன்வந்தன. இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஓரளவுக்கு மட்டுமே குறையும் என்பதால் சொத்து மீட்பு நிறுவனங்களிடம் வாராக் கடனை கொடுக்க வங்கிகள் முன்வரவில்லை.
உத்திசார் கடன் மறு சீரமைப்பு (Strategic Debt Restructuring) திட்டம்
[தொகு]உத்திசார் கடன் மறு சீரமைப்பு திட்டத்தில் நிறுவனங்களின் கடனை அந்நிறுவனத்தில் பங்குகளாக மாற்றி அதனை புதிய முதலீட்டாளர்களிடம் விற்கும் முயற்சியும் நடைபெறுகிறது. புதிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தை செம்மையாக நடத்த முன்வருவார்கள் என்ற கருத்து இருந்தது. அதிக கடன் உடைய நிறுவனங்களின் பங்குகளை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் இந்த திட்டமும் தோல்வி அடைந்தது.
இந்தியாவில் வராக் கடன்
[தொகு]இந்திய பொதுத்துறை வங்கிகளின் பலவற்றில் வராக் கடன் விழுக்காடு அதிகரித்துள்ளது. பல தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கிய ஆயிரக்கணக்கான கோடி இந்திய உரூபாய் கடன் தொகை வசூலிக்க இயலாத காரணத்தால் டிசம்பர் 2016-வரை வங்கிகளின் மொத்த வராக் கடன், 6 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு வரவேண்டிய கடன் தொகை மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரம் கோடி.[3]
வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலிலின்படி, கீழ்கண்ட தனியார் நிறுவனங்களின் வராக் கடன் தொகைகள் விவரம்:[4]
- கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
- வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
- எலக்ட்ரோதெர்ம் இந்தியா - ரூ 2,211 கோடி
- ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
- ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
- எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
- சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
- இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
- ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
- ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
- வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி
மேலும் 400 தனியார் நிறுவனங்கள், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளிடருந்து வாங்கிய வசூலாகாத வராக் கடன் தொகை இந்திய ரூபாய் 73,000 கோடியாக உள்ளது.[5]
வராக் கடனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையை களைய நிதியமைச்சகம், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நபர்களின் மீது அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க அனுமதியளித்துள்ளது. [6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.accountingcoach.com/blog/what-is-bad-debts
- ↑ http://www.investopedia.com/terms/b/baddebt.asp
- ↑ "வராக் கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம்! அவசர சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்". தீக்கதிர். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2017.
- ↑ http://www.vinavu.com/2014/05/09/shameless-capitalists-cheat-on-bank-loans/
- ↑ http://timesofindia.indiatimes.com/city/aurangabad/Bank-unions-demand-repeal-of-PJ-Nayak-committee-report/articleshow/35858817.cms
- ↑ http://business.dinamalar.com/news_details.asp?News_id=30164&cat=4
வெளி இணைப்புகள்
[தொகு]- வாராக்கடன்களை வசூலிக்க
- இந்திய வங்கிகளின் வராக்கடன் இன்னும் அதிகரிக்கும்![தொடர்பிழந்த இணைப்பு]
- வங்கிகளின் வாராக் கடனுக்கு அவசரச் சட்டம் தீர்வாகுமா?
- NYSSCPA's glossary of accounting terms
- PSU banks' NPA menace: Union lists top defaulters
- 7 Nagpur-based firms default on Rs 3268cr worth loans from PSU banks
- 400 debtors, who have over Rs 73, 000 crores of bad loans against them.