எண்ணூர் சிறுகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எண்ணூர் வளைகுடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 13°14′10″N 80°19′00″E / 13.23611°N 80.31667°E / 13.23611; 80.31667

எண்ணூர் சிறுகுடாவில் ஞாயிறு மறைவு

எண்ணூர் சிறுகுடா (Ennore creek) வங்காள விரிகுடாவின் கோரமண்டல் கரையில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள உப்பங்கழி ஆகும். இது உப்பங்கழிகளும் காயல்களும் மிகுந்த பகுதியில் அவற்றை வங்காள விரிகுடாக் கடலுடன் இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. 4 கிமீ2 பரந்துள்ள இப்பகுதியில்[1] இக்குறுங்குடா 2.25 கிமீ2 பரப்பளவில் உள்ளது.[2] இது சென்னை நகரிலிருந்து 20 கிமீ வடக்கிலும் எண்ணூர் துறைமுகத்திற்கு தெற்கே 2.6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இச்சிறு குடா கடலினுள் 3 கிமீக்கு நீண்டுள்ளது; கடலோரமாக 5 கிமீ தொலைவிற்கு பரந்துள்ளது. இதன் அகலம் ஏறத்தாழ 400 மீட்டராக உள்ளது. அலையாத்தித் தாவரங்கள் நிறைந்திருந்த சதுப்புக் காடாக இருந்த இவ்விடம் மாந்தக் குடியேற்றங்களினால் தற்போது திட்டாக உள்ளது. எண்ணூர் சிறுகுடாவின் ஆழம் 1 to 2 மீட்டராக உள்ளது; கடல் முகத்துவாரத்தில் ஆழம் குறைவாக உள்ளது.

இதன் வடக்கு-தெற்கு நீர்ப்பகுதிகள் வடக்கில் பழவேற்காடு ஏரியுடனும் தெற்கில் கொசஸ்தலை ஆறுடனும் இணைகின்றது. இச்சிறுகுடா பகுதியிலுள்ள மணல் வண்டலாகவும் செம்மண்ணாகவும் உள்ளது. கிழக்கோரம் கடற்கரை மணற்குன்றுகளைக் காணலாம். பூண்டி ஏரியின் மிகுநீர் வடியும் போக்கிடமாகவும் இந்தக்குடா விளங்குகின்றது. இந்த சிறுகுடா எண்ணூர் துறைமுகத்தையும் எண்ணூரையும் பிரிக்கிறது. வடசென்னை அனல்மின் நிலையம் இதன் வடக்கிலும் எண்ணூர் அனல்மின் நிலையம் இதன் தெற்கிலும் அமைந்துள்ளன. இதனூடே பக்கிங்காம் கால்வாய் செல்கின்றது. 1991 கடலோரக் கட்டுப்பாட்டு மண்டல அறிவிக்கையின்படி இது சேர்ந்த பழவேற்காடு நீரமைப்பு முழுமையுமே CRZ Iஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3] எண்ணூர் துறைமுகத்தின் தாக்கத்தால் இந்த சிறுகுடாவில் மணற்தேக்கம் ஏற்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணூர்_சிறுகுடா&oldid=2386346" இருந்து மீள்விக்கப்பட்டது