உள்ளடக்கத்துக்குச் செல்

பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்
வியேல் பூங்கா, அடிலெய்டு, ஆத்திரேலியா
சாத் ஜன்கா கிராலா பூங்கா , பிராத்திஸ்லாவா (இசுலோவாக்கியா)

பூங்கா எனப்படுவது மனிதர்களின் மகிழ்விற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இயற்கையாக (அல்லது செயற்கையாக தாவரங்களை நட்டு) ஒதுக்கப்பட்டுள்ள இடமாகும். சிறப்புப் பூங்காக்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களையும் தாவரவினங்களையும் கொண்டதாகவும் அல்லது இயற்கை வாழ்விடங்களாகவும் இருக்கும். நகரியமாக்கலின் தாக்கமாக செயற்கையான பூங்காவிடங்கள் நகரத் திட்டமிடலின்போது ஒதுக்கப்படுகின்றன. பூங்காக்களில் புல் தரைகள், பாறை, மண், மரங்களைக் காணலாம்; தவிரவும் கட்டிடங்களும் நினைவுச் சின்னங்கள், நீரூற்றுக்கள் போன்ற கட்டமைப்புக்களும் விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படலாம். பல பெரிய பூங்காக்களில் கால்பந்து, அடிபந்தாட்டம், கால்பந்தாட்டம் போன்றவையும் கூடைப் பந்தாட்டம் போன்றவற்றிற்கான கட்டமைப்புக்களும் இருக்கும். உடற்பயிற்சி கூடங்களும் நடைப்பயிற்சி தடங்களும் மிதிச்சக்கர வண்டித்தடங்களும் அமைக்கப்பட்டிருக்கும். சில பூங்காக்கள் நீர்நிலைகளை அடுத்து இருக்கும். இவற்றில் நீர் விளையாட்டுக்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். பெருநகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் மிகச் சிறியதாக இருக்கின்றன. இது குடிமக்கள் 10 நிமிட நடையில் சென்றடையக் கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். நகரியப் பூங்காக்களில் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் மகிழுலா மேசைகளும் திறந்தவெளிச் சமையலுக்கான அமைப்புகளும் கட்டமைக்கட்டிருக்கலாம்.

பரந்த இயற்கையிடங்களில் மிகப்பெரும் பூங்காக்கள் பல்லாயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளன. இங்கு மிகுந்த வனவிலங்குகளையும் குன்றுகள், ஆறுகள், அருவிகள் போன்ற இயற்கையான புவியியல் கூறுகளையும் காணவியலும். இவ்விடங்களில் நிகழ்காட்சிகளும் உல்லாசப் பயணச் சுற்றுக்களும் உணவகங்களும் சாகச விளையாட்டுக்களும் கட்டமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பெரிய பூங்காக்களில் கூடாரம் அமைத்துக் கொண்டு முகாமிடுதலும் அனுமதிக்கப்படுகிறது. சில சிறப்புப் பூங்காக்கள் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளன; அவற்றில் பூங்காவின் சட்டவிதிமுறைகளுக்கேற்ப வருகையாளர்களின் நடத்தை கண்காணிக்கப்படுகிறது. திறந்தவெளி தீ மூட்டல், கண்ணாடிப் புட்டிகளை உடைத்தல், நெகிழிக் குப்பைகள் போன்றவை தடை செய்யப்படுகின்றன. பெரிய தேசிய மற்றும் துணைதேசிய பூங்காக்கள் ஓர் பூங்காக் காவலர் (அல்லது வனப்பாதுகாவலர்) தலைமையில் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இப்பெரிய பூங்காக்களில் கோடைகாலத்தில் மலையேறுதல், படகு வலித்தல் போன்றவையும் பனி மிகுந்த மிக வடக்கு நாடுகளில் குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கா&oldid=2545080" இலிருந்து மீள்விக்கப்பட்டது