இராணி மேரிக் கல்லூரி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராணி மேரிக் கல்லூரியின் நுழைவாயில், மரீனா கடற்கரையிலிருந்து

இராணி மேரிக் கல்லூரி (Queen Mary's College) சென்னையில் அமைந்துள்ள ஓர் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகும். 1914ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியே சென்னையில் நிறுவப்பட்ட முதல் மகளிர் கல்லூரியாகும். மேலும் அப்போது இந்தியாவில் இருந்த மூன்று மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகவும் அமைந்திருந்தது.[1] மத்திய 1800களில் லெப்.கர்னல் பிரான்சிஸ் கேப்பரின் இல்லமாக இருந்த இக்கட்டிடம் 1914இல் கல்லூரியாக மாற்றப்படும்வரை ஓர் தங்கு விடுதியாகவும் இயங்கியது. கேப்பர் மாளிகை என அறியப்படும் இக்கட்டிடம் ஓர் பாரம்பரியக் களமாக கருதப்படுகிறது. இக்கட்டிடத்தை இடித்து புதிய நிர்வாகக் கட்டிடம், கலைஞர் மாளிகை, கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிக்கோள்விழா சூலை 2010 அன்று இடப்பட்டது.[1]

இக்கலூரி காமராசர் சாலையும் முனைவர் இராதாகிருட்டினன் சாலையும் சந்திக்கும் இடத்தில் மெரீனா கடற்கரையை எதிர்நோக்கி 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 98 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இக்கல்வி நிலையத்தில் படித்த முன்னாள் மாணவிகள் அரசுப் பணிகளிலும் அரசு சாரா அமைப்புகளிலும் பணியாற்றி தேச அளவிலும் பன்னாட்டு அளவிலும் பெருமை பெற்றுள்ளனர்.

இந்தியாவின் முதல் 20 கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரி பெண்ணியத்தை முன்னிறுத்தி மானுடவியல், சமூகவியல், வாழ்வியல், ஊட்டச்சத்தும் இல்ல மேலாண்மையும், உடற்பயிற்சியியல், இந்திய இசை ஆகிய துறைகளில் கல்வித் திட்டங்களை வழங்கி வருகிறது. மாநிலத்தில் தாவரவியலில் முனைவர் கல்வித்திட்டத்தை வழங்கும் முதல் அரசு மகளிர் கல்லூரியாகவும் விளங்குகிறது. தவிர இசை, தமிழ் மற்றும் புவியியலில் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கி வருகிறது. இந்திய ஆட்சிப் பணி/இந்தியக் காவல் பணிக்கான சேர்க்கைத்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

சான்றுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kalaignar Maaligai unveiled in Queen Mary's college". The Times of India (Chennai: The Times Group). 23 July 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-07-23/chennai/28300937_1_heritage-building-central-rule-new-secretariat. பார்த்த நாள்: 4-Dec-2011. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]