சௌகார்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌகார்பேட்டை (Sowcarpet), இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்தின், வடபகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும். மிகவும் பரபரப்பான வணிக மையமாகத் திகழும் இங்கு பல மொத்த விற்பனை சந்தைகள் அமைந்துள்ளன. சென்னையின் மிகப் பழைமையான பகுதிகளில் ஒன்றான இப்பகுதியில் தொன்மையான கட்டிடங்களையும் குறுகலான தெருக்களையும் காணலாம். இங்கு விற்பனை செய்யப்படாத பொருட்களே இல்லை என்னுமளவிற்கு வணிகச் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன.

இங்கு கணிசமான வட இந்தியர்கள் வசிப்பதால், "சோட்டா மும்பை" எனவும் அழைக்கப்படுகிறது. 1950களில் குசராத், இராசத்தான் மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த மார்வாரிகள், அடகு வியாபாரம், மொத்த விற்பனை முகமைகளில் ஈடுபடுகின்றனர். பல கடைகள் இந்தி அல்லது குசராத்தி பெயர்ப் பலகைகளைத் தாங்கி நிற்கின்றன. நாராயண முதலித் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு மற்றும் இரத்தன் பசார், காசிச் செட்டி தெரு ஆகியன சில முக்கிய சாலைகளாகும்.

சென்னை கந்தக்கோட்டம், ஏகாம்பரேசுவரர் ஆலயம், ரேணுகா பரமேசுவரி ஆலயம் இங்குள்ள சிறப்பான கோவில்களாகும். சமண வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. தேவாலயம் ஒன்றும், மசூதி ஒன்றும் உள்ளன.

சௌகார்பேட்டையின் கிழக்கில் பாரிமுனை, மேற்கு எல்லையில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம் ஆகியவை உள்ளன."https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகார்பேட்டை&oldid=3853054" இலிருந்து மீள்விக்கப்பட்டது