பசுமைவழிச் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுமைவழிச் சாலை (ஆங்கிலம்:Greenways Road) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் சாலையும் நகரப்பகுதியும் ஆகும்.இதே பெயரில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயங்கும் விரைவான கூட்ட நகர்வு அமைப்பு தடத்தில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அடையார் ஆற்றினை ஒட்டியமைந்துள்ள இச்சாலையில் தமிழக அரசு அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் போன்ற உயரதிகாரிகளுக்கு மாளிகைகள் அமைந்துள்ளன. மைலாப்பூர் - திருவல்லிக்கேணி வட்டத்தின் மாவட்ட நீதிபதி / தாசில்தார் அலுவலகங்களும் இச்சாலையில் அமைந்துள்ளன.

இங்குள்ள குறிபிடத்தக்க வளாகங்கள்: டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவுப் பூங்கா, தமிழ்நாடு இயல் இசை நாடக கல்லூரி, குச்சிப்புடி ஆர்ட் அகாதெமி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், அண்ணா மேலாண்மைக் கழகம். இங்கு யேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூடமும் சபரிமலைக் கோவிலை யொட்டி வடிவமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலும் அமைந்துள்ளன. இவற்றையொட்டியப் பகுதி டாக்டர் டி. ஜி. எஸ். தினகரன் சாலை என அண்மையில் மறுபெயரிடப்பட்டுள்ளது.

இச்சாலையினையும் அடையார் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள (எல்பின்ஸ்டன் பாலம்) திரு.வி.க பாலத்திற்கும் இடையே உள்ள அடையார் பாலச்சாலை தற்போது டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை என்று அழைக்கப்படுகிறது. இச்சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சினிடோன் என்ற சென்னையின் மிகப் பழமையான திரைப்பிடிப்புக் கூடம் ிருந்தது. இது பின்னர் நெப்ட்யூன் இசுடூடியோ என்றும் சத்யா இசுடூடியோ என்றும் பெயர்மாறி தற்போது சத்தியபாமா எம்ஜியார் மாளிகை என்று வழங்கப்படுகிறது. இவ்வளாகத்திலேயே டாக்டர் எம்ஜியார் ஜானகி கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமைவழிச்_சாலை&oldid=3359851" இலிருந்து மீள்விக்கப்பட்டது