பாடி (சென்னை)
பாடி இந்திய மாநகரம் சென்னையின் சுற்றுப்பகுதிகளில் ஒன்றாகும். திருவாய்ப்பாடி என்று பெயர் பெற்ற இவ்வூர் இன்று பாடி என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையே செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பாடி என வழங்கும் இவ்வூர், அம்பத்தூர் காவல் உதவிக் கண்காணிப்பாளரின் கீழ்வரும் கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதாகும். பாடிக்கெனத் தனி அஞ்சலகம் உண்டு. இதன் அஞ்சலக எண்: 600 050. அருகில் கொரட்டூர் தொடர்வண்டி நிலையம் உள்ளது. அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட இவ்வூர், அம்பத்தூர் நகராட்சியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது; எனினும், இன்றும் பல அரசுத் துறை செயல்பாடுகள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தே நடைபெறுகிறது. தமிழகத் தேர்தல் தொகுதிப் பிரிவின்படி இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தின் முதல் தொகுதியாக உள்ள அம்பத்தூர் தொகுதியில் அடங்கியுள்ளது.
தொழிற்சாலைகள்
[தொகு]பாடியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. லூகாசு டிவிஎசு, வீல்சு இந்தியா, சுந்தரம் ஃபாசுனர்சு, சுந்தரம் கிளேட்டன், பிரேக்சு இந்தியா போன்ற தொழிலகங்கள் சிலவாகும். இங்கிருந்த மிகப் பிரபலமான பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி மூடப்பட்டது. இப்பகுதி மக்களுக்கும் அண்மையிலுள்ள கொரட்டூர், மண்ணூர்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், திருமங்கலம், வில்லிவாக்கம், கொளத்தூர், ஐசிஎஃப் பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பதில் இத்தொழிற்சாலைகள் பெரும் பங்காற்றுகின்றன.
ஆலயங்கள்
[தொகு]இங்குள்ள அருள்மிகு திருவலிதாயம் கோவில் சென்னைக்கருகில் உள்ள குரு பகவான் தலமாகும். இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார். தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது.
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படவட்டம்மன் கோவில் மற்றுமொரு புகழ்பெற்ற கோவிலாகும்.