அசோக் லேலண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் லேலண்ட்
வகைபொது
நிறுவுகை7 செப்டம்பர் 1948
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைஊர்தித் தொழில்துறை
உற்பத்திகள்தானுந்து
இயக்கி
வருமானம்99.43 பில்லியன் (US$1.3 பில்லியன்)
(2014)
நிகர வருமானம்0.29 பில்லியன் (US$3.8 மில்லியன்)
(2014)
பணியாளர்15,812 (2011)
தாய் நிறுவனம்இந்துஜா

அசோக் லேலண்ட் (Ashok Leyland)என்பது, இந்தியாவில், சென்னையை மையமாகக் கொண்ட, வியாபார ரீதியான வாகனம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். 1948 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுமையுந்து மற்றும் பேருந்துகள் , நோயாளர் ஊர்தி மற்றும் ராணுவ வாகனங்களைத் தயாரிப்பதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கின்றது. ஆறு தொழிற்பகுதிகளைக் கொண்ட அசோக் லேலண்ட், தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்பதுடன் கப்பல் போக்குவரத்துக்கான இயந்திரங்களையும் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஒரு வருடத்திற்கு 60,000 வாகனங்கள் மற்றும் 7000 இயந்திரங்களையும் விற்பனை செய்கின்றது. விற்பனை சந்தையில் 28%(2007-08) விற்பனை விகிதத்தை அடைந்த, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். பயணிகள் போக்குவரத்தில் 19 முதல் 80 வரையிலான பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை தயாரிப்பதில் அசோக் லேலண்ட் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. இந்தியா முழுவதும் இந்நிறுவனம் தயாரித்த பேருந்துகள் நாளொன்றிற்கு 6 கோடி மக்களை சுமந்து செல்கிறது. இது மொத்த இந்திய ரயில்வே கட்டமைப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். அசோக் லேலண்ட் நிறுவனம் சரக்கு போக்குவரத்து துறையில், ஆரம்பத்தில் 16 டன் எடை முதல் 25 டன் வரை கொண்டுசெல்லும் சுமையுந்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டது வந்தது.[1]

இருப்பினும், அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது ஜப்பான் நாட்டைச் சார்ந்த நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 7.5 டன் முதல் 49 டன் வரையிலான அனைத்து வகை சுமையுந்து வாகனங்களையும் தயாரித்து வருகிறது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கும் அசோக் லேலண்ட் பேருந்துகள்.
ஈராக் ராணுவத்தில் அசோக் லேலண்ட் வாகனங்கள்
இந்தியாவின் தீயணைப்புத்துறையில் அசோக் லேலண்ட் தயாரித்த வண்டி

வரலாறு[தொகு]

  • அசோக் லேலண்ட்டின் துவக்கம், சுதந்திர இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக திகழ வேண்டும் என்ற அடிப்படை தாக்கத்தை ஈடு செய்தது. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தொழில் அதிபரான திரு.ரகுநந்தன் சரணை வாகன தயாரிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.
  • இந்நிறுவனம் 1948 இல் அசோக் மோட்டார்ஸ் என்ற பெயரில், ஆஸ்டின் (Austin) கார்களின் பாகங்களை பொருத்தும் பணிகளை மேற்கொண்டது. பிரிட்டிஷ் லேலண்ட் நிறுவனம் இந்நிறுவனத்தில் பங்குகள் முதலீடு செய்ததுடன், இந்நிறுவனத்தின் பெயர் அசோக் லேலண்ட் என வழங்கப் பெற்றது.
  • மேலும் 1955 ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியில் வாகனங்களை தயாரிக்கத் தொடங்கியது. தற்போழு இந்நிறுவனம் பிரித்தானிய நாட்டை அடிப்படையாகக் கொண்ட, இந்தியாவை சார்ந்த, புகழ்பெற்ற ஹிந்துஜா குழுமத்தின் மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.
  • முதலில் சரக்கு வாகன கட்டமைப்பின் மீது பயணிகளுக்கான இட வசதிகள் அமைந்த லேலண்டு காமத் என்ற பெயரில் வழங்கிய பேருந்துகள் பரவலாக நாடெங்கிலும் மிக அதிக அளவில் விற்பனை ஆனது. இவற்றை ஐதராபாத் சாலைப் போக்குவரத்துக் கழகம், அகமதாபாத் நகராட்சி, திருவாங்கூர் மாநிலப் போக்குவரத்துத் துறை, பம்பாய் மாநிலப் போக்குவரத்துத் துறை மற்றும் தில்லி சாலைப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை பெருமளவில் இயக்கின.
  • பின்பு 1963 முதல் அனைத்து மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களிலும் 8000த்திற்கும் மேற்பட்ட காமத் பேருந்துகள் சேவையாற்றி வருகின்றன. காமத், வெகு விரைவிலேயே லேலண்ட் டைகர் என்ற பெயர் கொண்ட வாகனங்களும் காமத் பேருந்துகளுடன் இணைந்து தயாரிக்கப் பெற்றன.
  • 1968 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் லேலந்து டைகர் தயாரிப்பதை நிறுத்தி வைத்து, அதை இந்தியாவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்கள். டைட்டன் பிடி3 வாகனத்தின் கட்டமைப்பை மாற்றி அமைத்து, ஐந்து வகையான வேகமாற்றிகளை கொண்ட அதிகமான உழைப்பை தரும் கியர் பெட்டியை, அசோக் லேலண்ட் இன் 0.680 என்ஜினுடன் பொருத்தி தயாரிக்கத் தொடங்கினார்கள். அசோக் லேலண்ட் டைட்டான் வெற்றியடைந்ததுடன், பல வருடங்களாக தொடர்ந்து தயாரிப்பில் இருந்துவருகின்றது.
  • பல வருடங்களாக அசோக் லேலண்ட் வாகனங்கள் கடின உழைப்பிற்கும், நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்றவையாகத் திகழ்கின்றன. இதன் முக்கிய காரணம், பிரிட்டிஷ் லேலண்ட் கடைபிடித்த உற்பத்தி மாதிரியை அப்படியே பின்பற்றியதாகும்.
  • உலகத்தின் முன்னோடி தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து செயல்படுவதும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வழிமுறைகள் உடனான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறமைகள் ஆகியவற்றுடன் அசோக் லேலண்ட் நிறுவனம் பலரும் விரும்பக்கூடிய வகையில், பலவிதமான வாகனங்களை தயாரித்து வழங்குகிறது.
  • ஜப்பானின் ஹினோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் அசோக் லேலண்ட், கூட்டு ஒப்பந்தத்துடன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந் நிறுவனத்திடமிருந்தே ஹெச்-வகை இயந்திரங்களுக்கான தொழில் நுட்பத்தை பெற்றுள்ளது. பிஎஸ்2 மற்றும் பிஎஸ்3 உள் நாட்டு மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்றவாறு ஹெச்-வகை எஞ்சின்கள், 4 மற்றும் 6 சிலிண்டர்களைக் கொண்ட பல வடிவங்களில் மாற்றியமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த எஞ்சின்கள், எரிபொருள் சிக்கனத்திற்காக உபயோகிப்பாளர்களிடையே மிகப் பிரபலம் அடைந்ததின் மூலம் அதன் தரத்தை நிரூபித்தன. அசோக் லேலண்டின் பெரும்பாலான அண்மைக் கால எஞ்சின்கள் அனைத்தும் ஹெச்-வகை எஞ்சின்களாகவே தயாரிக்கப்படுகின்றன.
  • 1987 இல் பன்னாட்டு நிறுவன ஒப்பந்தங்களாக லான்ட் ரோவர் லேலண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் லிமிட்டெட்(LRLIH) நிறுவனம், வெளிநாட்டு நிறுவனமான ஹிந்துஜா குழுமம் மற்றும் ஐவிஈசிஒ (இவீக்கோ)(IVECO) பியட் எஸ்பிஎ, பியட் குழுமத்தின் ஒரு பகுதி மற்றும் ஐரோப்பிய முன்னோடி வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அசோக் லேலண்டின் நீண்டகாலத் திட்டமான, தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் உலகின் முதல் இடத்தை பிடிப்பது என்பது சமீப காலத்தில் நிறைவேறியது. உலக தொழில்நுட்ப நுணுக்கத்தைக் கொண்டதும் மற்றும் உற்பத்தி வரைகலைக்காக 200 மில்லியன் முதலீடு ஆகியவை உலகத்தின் மற்ற புகழ் பெற்ற உற்பத்திகளை பின்னுக்கு தள்ளியது. இது அசோக் லேலண்டை 'கார்கோ' வகையிலான வாகனங்கள் தயாரிப்பு வரை கொண்டு சென்றது. இந்த வாகனங்கள் இவிகோ எஞ்சின்கள் பொருத்தப்பட்டதாகவும் மற்றும் முதன் முறையாக இதன் காபின்கள் தொழிற்சாலையிலேயே கட்டப்பட்டதாகவும் அமைந்தன. இருப்பினும் கார்கோ வாகனங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படவில்லை. இதன் காபின்கள் 'இகாமத்' வகை வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
  • உலகத்தரத்தை நோக்கிய பயணத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக தானியங்கு ஊர்தி துறையில் 1993 இல் ஐஎஸ்ஒ 9002 சான்றிதழை பெற்றதன் மூலம், அசோக் லேலண்ட் குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைந்தது. மிகப் பிரபலமான ஐஎஸ்ஒ 9001 சான்றிதழை 1994 இல் பெற்றது, க்யுஎஸ் 9000 ஐ 1998 லும் மற்றும் அனைத்து வாகனத்தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கான ஐஎஸ்ஒ 14001 ஐ 2002 லும் பெற்றது. 2006 இல் அசோக் லேலண்ட் நிறுவனம் டிஎஸ்ஐ694 ஐ பெற்றதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முதலாக இவ்விருதை பெற்ற தானியங்கி ஊர்தி நிறுவனம் என்ற பெயர் பெற்றது.

தற்கால நிலைமை[தொகு]

அசோக் லேலண்ட், வியாபார ரீதியான வாகனங்களை தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்தே பலவிதமான தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை தன்னுடைய சரித்திரமாக கொண்டுள்ளது. இரண்டு அச்சுக்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தியதும், முழுமையான காற்றழுத்த தடைகள்(Air Breaks), பின்பகுதியில் அமைந்த எஞ்சின்கள் மற்றும் முற்றிலும் குளிர்சாதன வசதியை கொண்ட பேருந்துகளையும் முதன் முதலாக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 1997 ஆம் ஆண்டில் இந்நிறுவனம், நாட்டின் முதன் முதல் சிஎன்ஜி பேருந்துகளை அறிமுகப்படுத்தியது, மற்றும் 2002 ஆம் ஆண்டில் இரு வேறுபட்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்ட மின்வண்டிகளையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகின்றது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம், 2008-09 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2008-09 இல் 54,431 லகு ரக வாகனங்கள் மற்றும் கன ரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அசோக் லேலண்ட் இந்தியாவின், இலகு ரக மற்றும் கனரக வாகனங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஆகும். இது இந்தியா முழுவதும் தனது 6 தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ள மிகப் பெரிய தனியார் நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்நிறுவனம், வருடத்திற்கு 105,000 வாகனங்கள் தயாரிக்கும் அளவுக்கு திறனை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் முதலீட்டு திட்டங்களாக, வட இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையும், பேருந்து வடிவமைப்பு தொழிற்சாலையை மத்திய கிழக்கு ஆசியாவில் ஒன்றும் என இரண்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, எகிப்து மற்றும் தென் அமெரிக்காவிலும் போதுமான அளவுக்கு தடம் பதித்துள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனம் உலகமயமாக்கல் வாய்ப்புக்களை பயன்படுத்தி வியாபார அபிவிருத்திக்காக குறிப்பிடத்தக்க நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இயக்கூர்தி துறை தகவல் தொழில்நுட்பங்களுக்காக காண்டினெண்டல் கார்போரஷன் நிறுவனத்துடனும் சமீபத்தில் அதிக அழுத்த அச்சு பாக தயாரிப்பிற்காக பின்லாந்து நாட்டின் ஆல்டீம்ஸ் நிறுவனத்துடனும், கட்டுமான உபகரன தயாரிப்புக்களுக்காக ஜான் தீர் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த உலக மயமாக்கல் நிலையில், இந்நிறுவனம் செக் குடியரசை அடிப்படையாகக்கொண்டு எவியா சரக்கு வாகன வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தால் புதியதாக தொடங்கப்பட்ட அவியா அசோக் லேலண்ட் எஸ்.ஆர்.ஓ.என்ற பெயர்கொண்ட நிறுவனமானது, அசோக் லேலண்ட் நிறுவனத்தை மிக அதிகமான வாகன வியாபார போட்டியுள்ள ஐரோப்பிய சந்தையில் தடம்பதிக்க செய்துள்ளது.

ஹிந்துஜா குழுமம் ஏற்கனவே வாங்கியிருந்த ஐவிஈகோ இன் பங்குகளை 2007 இல் வாங்கியதன் மூலம் அதன் மறைமுக பங்குதாரராக அசோக் லேலண்ட் விளங்குகின்றது. தற்போது அதன் பங்கு முதலீடு 51% ஆகும்.

நிசான் அசோக் லேலண்ட்[தொகு]

2007 இல் இந்நிறுவனம் ஜப்பானின் பிரபல நிறுவனமான நிசான் ரெனால்ட் நிசான் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் சென்னையில் பொதுவான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. பங்கு முதலீட்டுடன் கூடிய மூன்று கூட்டு நிறுவனங்கள் :

  • அசோக் லேலண்ட் நிஸ்ஸான் வெஹிகிள்ஸ் பி.லிமி. என்கின்ற வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் 51% பங்குகள் அசோக் லேலண்ட் நிறுவனத்துடைய பங்குகளாகவும் மற்றும் 49% பங்குகள் நிஸ்ஸான் கம்பெனி உடையதாகவும் உள்ளன.
  • நிஸ்ஸான் அசோக் லேலண்ட் பவர் ட்ரைன் பி.லிடேட். பவர் ட்ரைன் தயாரிப்பு நிறுவனத்தின் 51% பங்குகள் நிசான் உடையதாகவும், 49% பங்குகள் அசோக் லேலண்டுடையதாகவும் உள்ளன.
  • நிஸ்ஸான் அசோக் லேலண்ட் டெக்னாலஜீஸ் பி.லிடெட், தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனம் 50:50 பங்குகளை கொண்ட இரு பங்குதாரர்களைக் கொண்டதாக உள்ளது.

டாக்டர்.சுமந்த்ரன், ஹிந்துஜா ஆட்டோமோட்டிவ் லி.டெட்டின் செயற்குழுவின் துணைத்தலைவராகவும் மற்றும் அசோக் லேலண்ட் வாரியத்தில் இயக்குனராகவும் பவர்ட்ரைன் நிறுவனத்தின் தலைவராகவும் மற்ற ஜேவி நிறுவனங்களின் இரண்டு வாரியத்திலும் உள்ளார். ஒரு சாகச முயற்சியின் காரணமாக, நாட்டின் இயக்க ஊர்தி துறையில் மிகபெரிய முதலீட்டு நிறுவனமாக திகழ்கின்றது.

ஐபஸ்[தொகு]

நாட்டின் பெரு நகரங்களில் அதிகரித்துவரும் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த வருட ஆரம்பத்தில் ஐபஸ் ஐ அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற இயந்திர கண்காட்சியில் கருத்துருவாக்கம் பெற்ற வாகனங்கள் வெள்ளோட்டதிற்காக இந்த வருட இறுதியில் தயாராகிவிடும் என்று எதிபார்க்கப்படுகிறது. இதன் முழுமையான தயாரிப்பினை 2009 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடுள்ளது. இந்த பேருந்து நெப்டியூன் குடும்ப எஞ்சினைக் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை எஞ்சின்கள் அசோக் லேலண்ட் ஆல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிஎஸ்4/யுரோ 4 மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டவை மற்றும் இதன் திறனை யுரோ 5 ற்கு ஏற்றவாறு மேம்படுத்திக்கொள்ளவும் முடியும்.[2]

தொழிலகங்கள்[தொகு]

  • இந்நிறுவனம் இந்தியாவில் ஆறு உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
  • அசோக் லேலண்டின் தொழில் நுட்பமையம், சென்னையை அடுத்த வெள்ளிவயல்சாவடியில் அமைந்துள்ளது. இது புதிய தயாரிப்புக்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஆய்வுக்கூடமாக அமைந்துள்ளது. நவீன சோதனை முறைகளையும், சோதனைக் கூடங்களையும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒரே ஒரு சிக்ஸ் போஸ்டர் என்கிற சோதனை உபகரணத்தையும் கொண்டுள்ளது.
  • இந்நிறுவனம், என்ஜின்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஓசூரில் அமைத்துள்ளது.
  • இந்நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில், வட இந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பான்ட் நகர் இல் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இத் தொழிற்சாலை 2010 இல் தனது உற்பத்தியை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலை 40,000 வணிக ரீதியிலான வாகனங்களை தயாரிக்கக் கூடிய திறன் கொண்டுள்ளது, மற்றும் முக்கியமாக இது சுங்க வரி மற்றும் இதர சலுகைகளைப் பயன்படுத்தி வட இந்திய சந்தையைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்நிறுவனம், போக்குவரத்து வாகன கட்டமைப்பு தொழிற் சாலையை மத்திய கிழக்கு நாடான யுஎஇ இல் அமைப்பதற்காக ரஸ் அல் கஹிமா முதலீட்டு நிறுவத்துடன்(RAKIA) ஒப்பந்தம் செய்துள்ளது.

தலைமைத்துவம்[தொகு]

அசோக் லேலண்ட் நிறுவனம், 1998 முதல் நிர்வாக இயக்குனராக இருக்கும் திரு.சேஷசாயி என்பவரது தலைமையில் செயல்படுகிறது. இத் தலைமையின் கீழ் இந்நிறுவனம் இந்தியாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. திரு. சேஷசாயி அவர்கள், ஏற்கனவே சிஐஐ (இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின்) தலைவராகவும் உள்ளார். இந்திய தொழிற்சாலைகளின் 2006-2007 ம் ஆண்டின் பிரதிநிதியாகவும் இந்த உயர் மட்ட அமைப்பு செயல்பட்டது.

அசோக் லேலண்டில் கீழ்கண்ட நபர்கள் வகிக்கும் முக்கிய பதவிகள்

  1. திரு.வினோத் தாசரி - முழு நேர இயக்குனர்.
  2. திரு.கே.ஸ்ரீதரன் - தலைமை நிதி அலுவலர்
  3. திரு.ஜே.என்.அம்ரோலியா, மேல் நிலை இயக்குனர் - கட்டுமானம் மற்றும் தொடர்புடைய வியாபாரம்
  4. திரு.அனுப் பாட், மேல் நிலை அதிகாரி - திறன் வளர்ச்சி
  5. திரு.எஸ்.பாலசுப்ரமணியன், மேல் நிலை இயக்குனர் - திட்டங்கள்
  6. திரு.எ.கே.ஜெயின், மேல் நிலை இயக்குனர் - திட்டமிடல்
  7. திரு.பி.ஆர்.ஜி.மேனன், மேல்நிலை இயக்குனர் - உற்பத்தி மேம்பாடு.
  8. திரு.என்.மோகனகிருஷ்ணன், மேல்நிலை இயக்குனர் - உட் தணிக்கை
  9. திரு.நடராஜ், மேல் நிலை இயக்குனர் - சர்வதேச பேருந்து நிலைப்பாடு
  10. திரு.ராஜிந்தர் மல்ஹான், மேல்நிலை இயக்குனர் - சர்வதேச செயல்முறைகள்
  11. திரு.ராஜீவ் சகாரிய, மேல்நிலை இயக்குனர் - சந்தைப்படுத்துதல்
  12. திரு.சேகர் அரோரா, மேல்நிலை இயக்குனர் - மனித வளம்
  13. திரு.பி.எம்.உதயஷங்கர், மேல்நிலை இயக்குனர் - தயாரிப்பு
  14. திரு.ஏ.ஆர்.சந்திரசேகரன், மேல்நிலை இயக்குனர் - செயலகம் மற்றும் நிறுவன செயலாளர்

சாதனைகள்[தொகு]

  • இந்திய ரயில்வே கட்டமைப்பைவிட அதிகமாக, அசோக் லேலண்ட் பேருந்துகள் 60 மில்லியன் மக்களை சுமந்து செல்கின்றன
  • அசோக் லேலண்ட் நிறுவனம் இந்திய கப்பல் டீசல் இயந்திரங்களின் சந்தையில் 85% பங்கு கொண்டுள்ளது
  • 2002 இல், இதன் அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளும் சுற்றுப்புறத் தூய்மை காத்தலுக்காக ஐஎஸ்ஒ 14001 தர சான்றிதழை பெற்றது. இந்தியாவில் வியாபார ரீதியான வாகனத் தொழிலில் முதன் முதலாக ஈடுபட்ட நிறுவனம்
  • 2005 இல், இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு நிர்வாக முறைக்காக உலகப்புகழ் பெற்ற பிஎஸ்7799 சான்றிதழை பெற்ற முதல் இந்திய நிறுவனம்
  • 2006 இல் ஐஎஸ்ஒ/டிஎஸ் 16949 கார்பொரேட் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய நிறுவனம்
  • இது உலகிலேயே ராணுவத்துக்கு பாதுகாப்பு வாகனங்களை வழங்குவதில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது மற்றும் இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்பு வாகனங்களை வழங்குவதிலும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

தயாரிப்புகள்[தொகு]

(not exhaustive) (முழுமை ஆகாதவை)

  • லக்சுர
  • வைகிங் பிஎஸ்-I - சிடி பஸ்
  • வைகிங் பிஎஸ்-II - சிடி பஸ்
  • வைகிங் பிஎஸ்-III - சிடி பஸ்
  • சீத்தா பிஎஸ்-I
  • சீத்தா பிஎஸ் -II
  • பாந்தர்
  • 12எம் பஸ்
  • ஸ்டாக் மினி
  • ஸ்டாக் சிஎன்ஜி
  • 222 சிஎன்ஜி
  • லின்க்ஸ்
  • டபுள் டெக்கர்
  • வெச்டிப்ல் பஸ்
  • ஏர்போர்ட் டார்மாக் கோச்
  • ஜெனரேட்டர்கள்

சரக்கு வாகனப் பிரிவு[தொகு]

  • பைசன் ஹோவ்லாக்
  • டஸ்கர் சூப்பர் 1616
  • காமத் சிஒ 1611
  • 1613 ஹெச்
  • காமத் கோல்ட் 1613
  • காமத் டிப்பர் (4x2)
  • டாரஸ் 2516- 6 X 4

டிப்பர்

  • 2214
  • பைசன் டிப்பர்
  • டஸ்கர் சூப்பர் 2214 - 6 X 2
  • டஸ்கர் கோல்ட் 2214 (6X2)
  • டாரஸ் 2516 - 6X4
  • 2516 H (6X2)
  • டாரஸ் 2516 - 6 X 2
  • 4018 ட்ராக்டர்
  • ஆர்டிக் 30.14 ட்ராக்டர்
  • டஸ்கர் டர்போ ட்ராக்டர் 3516
  • ஈகாமெட் 912
  • ஈகாமெட் 111i
  • 4921

குறிப்புதவிகள்[தொகு]

  1. http://www.thehindubusinessline.com/companies/article3480448.ece
  2. "அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ரூ.60 லட்சம் ஐபஸ்". 2010-04-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-03 அன்று பார்க்கப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-04-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-03 அன்று பார்க்கப்பட்டது.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ashok hicles
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_லேலண்ட்&oldid=3540638" இருந்து மீள்விக்கப்பட்டது