ராமநாயக்கன் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமநாயக்கன் ஏரி
Ramanayakan eari.jpg
ராமநாயக்கன் ஏரியும் அதன் நீரோடி மண்டபமும்
அமைவிடம்தமிழ்நாடு, ஒசூர்
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு156 ஏக்கர்
குடியேற்றங்கள்ஒசூர்
ராமநாயக்கன் ஏரி நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபம்
ராமநாயக்கன் ஏரி நடையாதையின் நூழைவு வாயில்

ராமநாயக்கன் ஏரி (Ramanaicken Lake) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் நகரில் உள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 156 ஏக்கர் பரப்பளவில் ஒசூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரியைக் கட்டியவர் பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கனாவார், எனவே இவர் பெயராலேயே இந்த ஏரி அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் வடக்குப் பகுதியில் அகழியுடன் கூடிய ஒசூர் கோட்டை இருந்தது. இக்கோட்டை அகழிக்கு இந்த ஏரியில் இருந்துதான் தண்ணீர் சென்றது. இப்போது கோட்டை இல்லை என்றாலும் அகழி உள்ளது. 1980களின் துவக்கம்வரை இந்த ஏரி நீரின் பாசனத்தை நம்பி வேளாண்மை நடைபெற்று வந்தது. ஏரியில் இருந்து பாசணத்துக்கு நீர் செல்லும் குமிழித் தூம்பு மதகு மேல் அழகிய கல்மண்டபம் உள்ளது. இந்த ஏரிக்கு மேலே பூனப்பள்ளி ஏரி, ஜீகூர் ஏரி, தாசரப்பள்ளி ஏரி, கல்லேரி, கர்னூல் ஏரி, அந்திவாடி ஏரி ஆகியவை உள்ளன இந்த ஏரிகள் நிரம்பும்பொழுது உபரிநீர் ஒவ்வொரு ஏரிக்கும் சென்று ராமநாயக்கன் ஏரியை வந்தடையும் வகையில் உபரிநீர்க் கால்வாய்கள் இருந்தன. நகரமயமாக்கலின் காரணமாக ஏரியில் இருந்து பாசன வசதிபெற்ற நிலப்பகுதிகள் குடியிருப்புகளாகவும், வணிக வளாகமாகவும் மாறின. இதனால் உபரிநீர்க் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. மேலும் ராமநாயக்கன் ஏரி நிரம்பினால் நீர் வெளியேறக்கூடிய இராஜகால்வாய் ஒசூர் மையத்தில் அமைந்திருந்தது இக்கால்வாயை நகரின் பெரும்பகுதியில் காண இயலாத நிலையுள்ளது. இக்கால்வாய் நிலத்தில் பட்டாபெற்று அரசியல்வாதிகள் போன்றோர் ஆக்கிரமித்து கட்டங்கள் கட்டியுள்ளனர். இதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது.[2]

அழகுபடுத்துதல்[தொகு]

இரமநாயக்கன் ஏரியை ஒட்டி 1987 ஆம் ஆண்டு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, நடைபாதைகள் அமைத்து, படகுசவாரி விட மாவட்ட நிர்வாகம் இரண்டு கோடியில் திட்டம் வகுத்தது. ஏரியின் மேற்குப் பகுதியில் பசுமைப் பூங்கா, நடைபாதை போன்றவற்றை இருபத்தெட்டு இலட்சம் செலவில் அமைத்தது அழகுபடுத்தி, 2015 செப்டம்பர் 23 அன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கப்பட்டது. மேலும் சிறுவர் பூங்காவை ஒட்டியவாறு 49 இலட்சம் செலவில் தியான மண்டபம் கட்டப்பட்டு 2017 ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சாக்கடை குட்டையாக மாறிவரும் ஒசூர் ராமநாயக்கன் ஏரி". தினச்சுடர். 6 பெப்ரவரி 2016. 2016-05-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "கழிவுநீர்க் குட்டையாக மாறிவரும் ஒசூர் ராமநாயக்கன் ஏரி". தினமணி. 6 பெப்ரவரி 2016. 12 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமநாயக்கன்_ஏரி&oldid=3613410" இருந்து மீள்விக்கப்பட்டது