அய்யனார் அருவி

ஐயனார் அருவி (Ayyanar Falls) என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கி.மீ. (6.2 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இது வடகிழக்கு பருவ கால மழையில் நீர் பெறுகிறது. இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்கிறது.
இந்த அருவி இராஜபாளையம் பகுதியின் முதன்மை சுற்றுலா ஈர்ப்பு பகுதியாக உள்ளது. இது விருதுநகர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்களின் குறிப்பாக திருவில்லிபுத்தூர், சிவகாசி மக்களின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு உள்ள வனப்பகுதி மலை ஏற்றத்தை விரும்புவர்களுக்கு நல்ல இடமாக உள்ளது. அருவிக்கு போகும் வழியில் உள்ள அணை நகரத்திற்கு தேவையான நீரை வழங்குகிறது.
இந்த அருவியைச் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியானது காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டும் இடமாக உள்ளது. இந்த அருவியானது இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றிர்கும் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு ஐயனார் பெயர் வந்ததற்கு காரணம் இங்கு உள்ள சிறிய காட்டு ஐயனார் கோயிலாகும்.
நீர்காத்த ஐயனார் கோயில்
[தொகு]இந்த அருவிக்கு பெயர் வரக்காரணமான நீர்காத்த ஐயனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இரண்டு ஆறுகளான பழையாறு, நீராறு ஆகியன சேருமிடத்தில் அமைந்துள்ளது.[1] இந்தக் கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.[2] பக்தர்கள் தங்கள் குடும்பத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அய்யனாரை அணுகி வணங்குகின்றனர்.. பக்தர்கள் அய்யனாருக்கு அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்கின்றனர்.[3]
ஐயனார் அருவியில் வெள்ளம்
[தொகு]ஐயனார் அருவிக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். மழைக் காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கால் மக்கள் கோயிலினுள் மாட்டிக் கொள்கின்றனர்.[4] அந்தச் சமயங்களில் இராஜபாளையத்தில் உள்ள தீயணைப்பு மீட்டுபுத் துறையினர் வந்து பயணிகளை மீட்டு ஆற்றைக் கடக்க உதவுகின்றனர். பெருமழைக் காலத்தில் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.
நீர்த்தேக்கம்
[தொகு]
ஐயனார் அருவிக்கு செல்லும் வழியில் ஆறாவது மைல் அணை என்று அழைக்கப்படும் ஒரு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இராஜபாளையம் நகரில் இருந்து ஆறு மைல் தொலைவில் உள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த நீர்தேக்கத்தின் முதன்மை நீர் ஆதாரமாக ஐயனார் அருவி உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் ராஜபாளையம் நகரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியின் பாசனத் தேவைக்கும், ராஜபாளையத்தில் வாழும் மக்களின் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும் உள்ளது. இந்த நீர்தேக்கத்தில் ஒரு நீர்சுத்திகரிப்பு நிலையமும் அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் குட்டிப்புலி போன்ற பல திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்தது.
சுற்றுலா
[தொகு]ஐயனார் அருவிக்கு அருகில் உள்ள வானூர்தி நிலையம் மதுரை வானூர்தி நிலையமாகும். ஐயனார் அருவியைச் சுற்றி மற்ற சுற்றுலாத்தளங்களாக ஐயனார் கோவில், அருவி அருகே உள்ள அணை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஐயனார் கோயில் வனப் பகுதி, ஸ்ரீவல்லக்காட்டு கருப்பசாமி கோவில், சஞ்சீவி மலை, சென்பகத்தோப்பு நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் போன்றவை உள்ளன.[5] ஐயனார் அருவியை ஒட்டி வாழும் மக்களின் வாழ்க்கைக்கு இங்கு நடைபெறும் சுற்றுலா உதவிகரமாக உள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.valaitamil.com/ayyanar-temple-arulmigu-neer-katha-aiyyanar-thirukoyil-t751.html
- ↑ http://temple.dinamalar.com/en/new_en.php?id=816
- ↑ http://timesofhindu.com/sri-neer-katha-aiyyanar-temple-rajapalayam/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-08-28.
- ↑ http://www.tripadvisor.in/Attraction_Review-g2289072-d4089228-Reviews-Ayyanar_Falls-Sivakasi_Tamil_Nadu.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-27. Retrieved 2016-08-28.