மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்
எம். எஸ். சுவாமிநாதன் | |
---|---|
2013 இல் சுவாமிநாதன் | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 2007 –2013 | |
தொகுதி | பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா | 7 ஆகத்து 1925
இறப்பு | 28 செப்டம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு | (அகவை 98)
தேசியம் | இந்தியர் |
துணைவர்(கள்) | மீனா சுவாமிநாதன் (தி. 1955; இறப்பு 2022) |
பிள்ளைகள் | 3; (சௌமியா உட்பட) |
அறிவியல் பணி | |
துறை | தாவரவியல், தாவர மரபியல், மரபியல், கலப்பிறப்புரிமையியல், உயிர்ச்சூழற் பொருளியல், தாவர வளர்ப்பு, உயிர்ச்சூழல் தொழினுட்பம் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
விருதுகள் | • பத்மசிறீ (1967) • ரமோன் மக்சேசே விருது (1971) • பத்ம பூசண் (1972) • உலக உணவுப் பரிசு (1987) • பத்ம விபூசண் (1989) |
எம். எஸ். சுவாமிநாதன் என அறியப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (Mankombu Sambasivan Swaminathan, 7 ஆகத்து 1925 – 28 செப்டம்பர் 2023) என்பவர் இந்திய வேளாண் அறிவியலாளரும், தாவர மரபியலாளரும், நிர்வாகியும், மனிதாபிமானவாதியும் ஆவார்.[1] சுவாமிநாதன் பசுமைப் புரட்சியின் உலகளாவிய தலைவராக இருந்தார். கோதுமை மற்றும் அரிசியின் உயர் விளைச்சல் வகைகளை அறிமுகப்படுத்தி மேலும் மேம்படுத்துவதில் இவரது தலைமை மற்றும் பங்கிற்காக இந்தியாவில் இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். நார்மன் போர்லாக்குடன் சுவாமிநாதனின் கூட்டு அறிவியல் முயற்சிகள், விவசாயிகள் மற்றும் பிற அறிவியலாளர்களுடன் ஒரு வெகுஜன இயக்கத்தை முன்னெடுத்து, பொதுக் கொள்கைகளின் ஆதரவுடன், இந்தியாவையும் பாக்கித்தானையும் 1960களில் பஞ்சம் போன்ற நிலைமைகளில் இருந்து காப்பாற்றியது இவரது சாதனைகளாகும்.
இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் என்னும் நிறுவனத்தின் அமைப்பாளரும் இவரே.[2]
வாழ்க்கையும், கல்வியும்
[தொகு]சுவாமிநாதன் 1925 ஆகத்து 7 அன்று தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தார்.[3] இவர் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மா. கொ. சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். சுவாமிநாதனுக்கு 11 வயது இருக்கும்போது இவரது தந்தை இறந்தார். இதன் பிறகு, சுவாமிநாதனை அவரது தந்தையின் சகோதரர் கவனித்துக் கொண்டார்.[4]
சுவாமிநாதன் கும்பகோணத்தில் உள்ள நேட்டிவ் உயர்நிலைப் பள்ளி (தற்போது நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி) மற்றும் சிறுமலர் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார்.[5][6] சிறுவயதிலிருந்தே, இவர் விவசாயம் மற்றும் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இவரது குடும்பம் நெல், மாம்பழம் மற்றும் தென்னை பயிரிட்டது.[7] பயிர்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வானிலை மற்றும் பூச்சிகள் பயிர்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய அழிவு உட்பட, இவரது குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை இவர் கண்டார்.[8]
சுவாமிநாதன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று இவரது பெற்றோர் விரும்பினர். இதை மனதில் கொண்டு, இவரை விலங்கியல் பிரிவில் சேர்ந்து உயர் கல்வியைத் தொடங்கினர்.[9] ஆனால், 1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது வங்காளப் பஞ்சம் மற்றும் துணைக் கண்டம் முழுவதும் அரிசி பற்றாக்குறையின் தாக்கங்களைக் கண்டபோது, இந்தியாவுக்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதில் இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.[10] இவரது குடும்பப் பின்னணி, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவை மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார்.[11]
சுவாமிநாதன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் விலங்கியல் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார் (தற்போது கேரளா பல்கலைக்கழகத்தில் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி என்று அழைக்கப்படுகிறது).[6] பின்னர் இவர் 1940 முதல் 1944 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் (மெட்ராஸ் வேளாண்மைக் கல்லூரி, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) படித்தார் மற்றும் வேளாண் அறிவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.[12] இக்காலத்தில் வேளாண்மைப் பேராசிரியரான கோட்டா ராமசுவாமி அவர்களால் ஈர்க்கப்பட்டார்.[13]
1947-ல் சுவாமிநாதன் மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார்.[14] இவர் 1949-ல் உயிரணு மரபியலில் உயர் தனித்துவத்துடன் முதுநிலை பட்டம் பெற்றார். உருளைக்கிழங்கில் குறிப்பிட்ட கவனம் செலுத்திய இவரது ஆராய்ச்சி சோலனம் பேரினத்தில் கவனம் செலுத்தினார்.[15] சமூக அழுத்தங்களால் இவர் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் இவர் இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், இதே நேரத்தில், நெதர்லாந்தில் மரபியலில் ஆய்வு செய்ய யுனெஸ்கோ ஆய்வுநிதி கிடைத்ததால், விவசாயத் துறையில் இவரது கவனம் சென்றது.[16]
மண வாழ்க்கை
[தொகு]சுவாமிநாதன் மீனாவினை மணந்தார். இவர் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது 1951-ல் மீனாவினைச் சந்தித்தார்.[17] திருமணத்திற்கு பின்னர் இந்த இணையர் தமிழ்நாட்டில் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சௌமியா சுவாமிநாதன் ஓர் குழந்தை மருத்துவர் ஆவார். மதுரா சுவாமிநாதன் ஓர் பொருளாதார நிபுணர் ஆவார். இளைய மகள் நித்யா சுவாமிநாதன் பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து பணியாற்றுகின்றார்.[18]
மகாத்மா காந்தி மற்றும் இரமண மகாரிசியால் ஈர்க்கப்பட்ட சுவாமிநாதன், தமது சொந்த நிலத்தின் ஒரு பகுதியினை வினோபாபாவின் சமூகச் செயல்பாட்டிற்காக வழங்கினார்.[19] 2011ல் சுவாமிநாதன் அளித்த பேட்டி ஒன்றில், தான் இளமையாக இருந்தபோது, சுவாமி விவேகானந்தரை பின்பற்றியதாக கூறினார்.
பணிகள்
[தொகு]இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.
அறிவியல் வெளியீடுகள்
[தொகு]சுவாமிநாதன் 1950 மற்றும் 1980க்கு இடையில் 46 ஆய்வுக் கட்டுரைகளை தனியாக எழுதி வெளியிட்டுள்ளார். மொத்தத்தில் இவர் 254 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் 155 கட்டுரைகளில் முதல் ஆசிரியராக உள்ளார். இவரது அறிவியல் கட்டுரைகள் பயிர் முன்னேற்றம், உயிரணு மரபியல் (சைட்டோஜெனெடிக்ஸ்) மற்றும் மரபியல் மற்றும் இனத்தொகுதி வரலாறு (பைலோஜெனெடிக்ஸ்)(72) ஆகிய துறைகளில் வெளிவந்துள்ளன. இந்திய மரபியல் ஆராய்ச்சி இதழ், நடப்பு அறிவியல் நேச்சர் மற்றும் கதிர்வீச்சு தாவரவியல் ஆகிய ஆய்விதழ்களில் இவர் அடிக்கடி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[20]
பிற வெளியீடுகள்
[தொகு]- Swaminathan, M.S. (1951). "Notes on induced polyploids in the tuber-bearing Solanum species and their crossability with Solanum tuberosum.". American Potato Journal 28: 472–489. doi:10.1007/BF02854980.
- Howard, H. W.; Swaminathan, M. S. (1953). "The cytology of haploid plants of Solanum demissum" (in en). Genetica 26 (1): 381–391. doi:10.1007/BF01690622. பன்னாட்டுத் தர தொடர் எண்:0016-6707. பப்மெட்:13142313. http://link.springer.com/10.1007/BF01690622.
- Swaminathan, M. S.; Hougas, R. W. (1954). "Cytogenetic Studies in Solanum verrucosum Variety Spectabilis". American Journal of Botany 41 (8): 645–651. doi:10.2307/2438291. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9122.
- Swaminathan, M. S. (1954-01-01). "Nature of Polyploidy in Some 48-Chromosome Species of the Genus Solanum, Section Tuberarium" (in en). Genetics 39 (1): 59–76. doi:10.1093/genetics/39.1.59. பன்னாட்டுத் தர தொடர் எண்:0016-6731. பப்மெட்:17247468. பப்மெட் சென்ட்ரல்:1209637. https://www.genetics.org/content/39/1/59.
- Swaminathan, M. S. (November 1955). "Overcoming Cross-Incompatibility among some Mexican Diploid Species of Solanum" (in en). Nature 176 (4488): 887–888. doi:10.1038/176887b0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. Bibcode: 1955Natur.176..887S. https://www.nature.com/articles/176887b0.
- Swaminathan, M. S. (September 1956). "Disomic and Tetrasomic Inheritance in a Solanum Hybrid" (in en). Nature 178 (4533): 599–600. doi:10.1038/178599b0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. Bibcode: 1956Natur.178..599S. https://www.nature.com/articles/178599b0.
- Swaminathan, M. S.; Murty, B. R. (1959-11-01). "Aspects of Asynapsis in Plants. I. Random and Non Random Chromosome Associations" (in en). Genetics 44 (6): 1271–1280. doi:10.1093/genetics/44.6.1271. பன்னாட்டுத் தர தொடர் எண்:0016-6731. பப்மெட்:17247892. பப்மெட் சென்ட்ரல்:1224432. https://www.genetics.org/content/44/6/1271.
விருதுகள்
[தொகு]- சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 1961
- இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன
- தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர்.
- பெருமைமிகு மகசேசே விருது
- கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது[21]
- எச். கே. பைரோதியா விருதுகள். 2005
- லால் பகதூர் சாசுதிரி தேசிய விருது 2006
- தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது. 2013[22]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் -தினமணி 03 June 2013
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
- ↑ Gopalkrishnan 2002, ப. 14.
- ↑ Gopalkrishnan 2002, ப. 18-19.
- ↑ Gopalkrishnan 2002, ப. 17.
- ↑ 6.0 6.1 Gopalkrishnan 2002, ப. 22.
- ↑ Gopalkrishnan 2002, ப. 9, 11, 12, 13.
- ↑ Gopalkrishnan 2002, ப. 13.
- ↑ Yadugiri 2011, ப. 996.
- ↑ Gopalkrishnan 2002, ப. 24.
- ↑ Gopalkrishnan 2002, ப. 25-26.
- ↑ Gopalkrishnan 2002, ப. 25.
- ↑ Gopalkrishnan 2002, ப. 26.
- ↑ Gopalkrishnan 2002, ப. 28.
- ↑ Gopalkrishnan 2002, ப. 28-29.
- ↑ Gopalkrishnan 2002, ப. 30-31.
- ↑ Gopalkrishnan 2002, ப. 84.
- ↑ Gopalkrishnan 2002, ப. 84, 86.
- ↑ Gopalkrishnan 2002, ப. 89.
- ↑ Kalyane, V. L.; Kalyane, S. V. (1994). "Scientometric portrait of M. S. Swaminathan". Library Science 31 (1): 31–46. http://eprints.rclis.org/4785/.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36
- ↑ "M.S Swaminathan gets Indira Gandhi National Integration Award". The Hindu Businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- எம். எஸ். சுவாமினாதன் ஆய்வு நிறுவனம்
- நோபல் பரிசு நக்கீரன் பரணிடப்பட்டது 2011-11-05 at the வந்தவழி இயந்திரம்
- பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
- இந்திய உயிரியலாளர்கள்
- தமிழ் அறிவியலாளர்கள்
- தமிழ் வேளாண் அறிவியலாளர்கள்
- 1925 பிறப்புகள்
- தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
- ரமோன் மக்சேசே விருது பெற்றோர்
- தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
- இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்
- பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்
- 2023 இறப்புகள்